தமிழனிற்கு ஒன்றுக்கும் உதவாத விடுதலை நாள் கொடி ஏற்றத்தின்போது கூட காவல்துறை இயக்குனர் அவர்களே, காவல்துறையினரே என்று அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு தான் தன்னை வாழ வைக்கும் இதய தெய்வங்களை கூட நினைவு கூறுகிறார். காவல்துறையில் வேலை பார்க்கும் கடைக்கோடி ஊழியர் இறந்தால் கூட பணமுடிப்பு அளித்து அரசாணையில் வெளியிட்டு அதை சிறப்பு செய்தியாக ஒவ்வொரு ஞாயிறும் ஜெயா தொ.கா.வில் இரங்கல் செய்தியும் வெளியிடுகிறார்கள்.
அப்படி என்ன சிறப்பாக ஊழியம் செய்கிறார்கள் காவல் துறை தோழர்கள் மற்ற துறையினரை விட? வாரத்திற்கு இரண்டு நாட்களாவது வேலை செய்யும் ஆசிரியர்கள் இவர் கண்ணுக்கு புலப்படவில்லையா? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ஐநூறு என கையூட்டு வாங்கினாலும் ஏதோ வேலை செய்யும் உணவு பொருள் வழங்கு துறை, வருவாய் துறை ஊழியர்கள்,தமிழகத்தின் நிதிச் சுமையை ஒற்றை ஆளாக சுமக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் இவர்களை விட அப்படி என்ன பெரிதாக கிழிக்கிறார்கள் காவலர்கள்?
கற்பழிப்பு கொலை கொள்ளை என நாட்டில் குற்றங்கள் குறைய வேலை செய்தததாகவும் தெரியவில்லை. மாறாக தேக்கு மரத்திட்டம்,ஈமு கோழி, இணைய வேலை வைப்பகம் என நூதன கொள்ளைகளில் கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் கும்பல், ஆள் கடத்தலில் ஈடுபடும் ஓவர்நைட் ஒபமாக்கள் எண்ணிக்கை தான் பெருகி உள்ளன.
எங்கோ கடைக்கோடியில் இருக்கும் படிக்காத பாமரன் கூட புதிதாக நூதன கொள்ளையில் ஈடுபடும் குழுமத்தை கண்டுபிடித்து தனது மொத்த சேமிப்பையும் அடகு வைத்து ஏமாந்து போகிறான். அவனுக்கே தெரிகின்ற போது, நாடு முழுவதும் விரிந்து பரவி உள்ள,புலனாய்வு அமைப்புகள்,சிறப்பு குற்றப் பிரிவு,பொருளாதார குற்றப் பிரிவு,மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கொண்ட இவர்களால் அப்படி நூதன கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை ஏன் ஆரம்பத்திலேயே கண்டு "பிடிக்க" முடியாமல் போகிறது?
முகநூலில் மீனவனை நக்கல் செய்த சின்மயிக்கு எதிராக பின்னூட்டம் போடுபவர்களையும், திராவிட அரசை விமர்சிப்பவர்களையும் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்த அரசு,பட்டவர்த்தமாக விளம்பரம் செய்து நகரின் நடுவில் பிரமாண்டமாய் அலுவலகம் வைத்து வெளிப்படையாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் இவர்களை பிடிக்க என்ன செய்தது? இப்பொழுது தான் சிறப்பு பிரிவு ஆரம்பித்து உள்ளார்கள்?அப்படி என்றால் இதற்கு முன்பு இருந்த பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்?இறந்த போன உடலிற்கு உடற்கூறு பரிசோதனை செய்ததை தவிர?
சர்வாதிகாரி தான் காவல் துறைக்கு முக்கியத்துவம் தருவார்கள். அப்படி என்றால் தமிழகத்தில் நடப்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக