ஞாயிறு, 24 மே, 2015

புறம்போக்காய் போன பொதுவுடைமை

தோழர் பாலு மகேந்திரா, கௌதமன், புகழேந்தி தங்கராஜ், மணிவண்ணன்  என திரையுலகில் தமிழ் இன உரிமை பற்றி சிந்திக்கும் இயக்குனர்களில் தோழர் ஜனநாதனும் ஒருவர்.

இந்தியத்தை வருடிக் கொடுப்பது போல சில இடங்களில் சென்சாரை சாந்தப்படுத்தி, செங்கொடியையும் ஈகையை போற்றியும், பேரறிவாளனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் எதிர்த்தும், தமிழ் மொழி,வர்க்க விடுதலைப் பற்றியும் மிகத் தைரியமாக, தந்திரமாக காட்சிகள் அமைத்துள்ளார். 

விடுதலைப் புலிகள், நக்சலைட்களின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைத்து உள்ளார். பாராட்டுக்கள். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளி விடுதலைப் போராளி, தூக்கு போடும் தொழிலாளி, இந்தியத்திற்கு கங்காணி வேலை செய்யும் காவல் அதிகாரி, தற்கொலை குண்டுதாரியான குயிலி என ஒரு புது கதைக்களம்;கதையோடு ஒன்றிய காட்சி தள அமைப்புகள் ...இது உண்மையில் ஒரு வெற்றிப்படம்.

பேராண்மையில் கத்திரியால் காயப்பட்ட இயக்குனர் பின்வாங்காமல் திரும்பவும் கத்தியை தீட்டி உள்ளார் புத்தி சாதுரியத்தோடு. 

இன விடுதலையை ஆதரிக்காது வர்க்க விடுதலையை பெற முடியாது, உலகத் தொழிலார்கள் ஒன்று கூடுவதற்குப் பதில் உலக முதலாளிகள் ஒன்று கூடி உலகை ஒரு குப்பைத் தொட்டியாக ஆக்கி உள்ளனர் என்று பரவலாக தமிழ் தேசியம், இன விடுதலை,வர்க்க விடுதலை பற்றி பேசி உள்ளார்-அதே சமயம் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல்.

இன உணர்வை பேச பல இயக்குனர்கள் போராடி இந்திய தரக் கட்டுப்பாட்டை மீறி திரைக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டுள்ள நிலையில் ஜனநாதனின் சாணக்கியத்தனம் பாராட்டுக்குரியது.

ஆரியா வேடத்தில் அஜீத் நடித்திருந்தால் இது மிகப்பெரிய ஒரு மக்கள் படமாக வசூலில் சாதனைப் படைத்திருக்கும்.

கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் திரை அரங்கு சென்று கண்டு ஜனநாதன் போன்ற இயக்குனர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இன உணர்வு;இன விடுதலை நோக்கி தமிழ் தேசியம் நகரட்டும்!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக