தமிழின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சியை நான் விரும்பி பார்ப்பதுண்டு.
அங்ஙனமே..கடந்த ஞாயிறு (10.02.2013) மதியம் ஒரு நிகழ்ச்சி. பாமக-அன்புமணி ராமதாசின் மனைவி பேசிக்கொண்டு இருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது.அதற்கு மேல் எனது பொறுமை எல்லை கடந்து தொலைக்காட்சியை அணைத்து விட்டு படுக்க சென்றுவிட்டேன். அவர் பேசியதின் சாராம்சம்-
நமது சமுதாய (வன்னிய சமுதாய) இளைஞர்களின் கணினி பயன்பாடு என்பது திரைப்படங்களை இணையதளங்களில் பார்க்கும் அளவில் மட்டுமே உள்ளது. நமது சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு சிறிது கூட இல்லை. சென்னையில் பயிலும் நமது சமுதாய இளைஞர்களுக்கு தாங்கள் என்ன சாதி என்றே தெரியவில்லை. நாமாக அவர்களுக்கு நாம் இந்த சாதியில் பிறந்துள்ளோம்,நமது சாதியை நாம் போற்றவேண்டும்.....தான் எந்த சாதி என்று தெரியாமலேயே இன்றைய இளைய தலைமுறை உள்ளது.இவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கமுடியும்? இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
இவ்வாறாக அந்த அம்மணி பிதற்றிக் கொண்டு இருந்தார். தனது சாதி,தனது தோழன் சாதி,பாடம் புகட்டும் ஆசிரியர் இந்த சாதி என அறிய விழையாது சமத்துவ சமுதாயமாக இருக்கும் கல்லூரியில் சாதிவெறி பற்றி எரிய வேண்டும்;அதில் இவர்கள் குளிர் காய்ந்து வாக்கு அரசியல் நடத்தவேண்டும் என் பேரவா கொண்டிருப்பதும் அதை சிறிதும் வெக்கம் இல்லாது பறை சாற்றுவதும் நா கூச வைக்கிறது.
பாமகவின் வன்னியர் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தர்மபுரி வெறியாட்டத்திற்கு பிறகு சாதி வெறியர்களுக்கு வெளிப்படையாக குரல் கொடுத்து நாடக காதல் என்ற கற்பனை வளம் சேர்த்து (நாடக காதல் எனக் கூறி தமிழ் பெண்களைத் தான் இவர்கள் கொச்சை படுத்துகிறார்கள்) தங்கள் வாக்கு அரசியலில் காய் நகர்த்துகிறது. இப்படியாக வெளிப்படையாக வெறியாட்டம் நடத்தினால் தான்,"பிழைக்க" முடியும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள்.
2009-நாடாளுமன்ற தேர்தல்,2011-சட்டமன்ற தேர்தலில் இவர்கள் பச்சோந்திதனத்திற்கு மக்கள் போட்ட சூட்டை மறந்து இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை எடுத்து வீசுகிறார்கள் கண்களை இருக்கக் கட்டிக் கொண்டு.
தான் செய்த தொழில் ரீதியாக உருவான வர்ண பேதங்களை திரும்பவும் தூசு தட்டி புத்துயிர் அளித்து அப்பாவி மக்களை அவர்களுக்காக போராட வந்த இறைதூதர் போல நாடகம் ஆடி கிளம்பிவிட்டனர் பாமக, யாதவர் கூட்டமைப்பு,கொங்கு முன்னேற்ற கட்சி,பேரவை, போர்வர்ட் ப்ளாக்,சமத்துவ மக்கள் கட்சி என புற்றீசல் போல கிளம்பிவிட்டனர்.
இதுவரை திராவிடம் என்கிற பெயரில் தமிழ் மக்களை ஆட்டு மந்தை கூட்டங்களாக வைத்து வாரிசு,குடும்ப அரசியல் நடத்தி வந்தனர். இப்போது சாதிவாரி கட்சிகள் புற்றீசல்களாய்....
மக்களே விழித்தெழுங்கள்...நாம் அனைவரும் தமிழர்கள். நமது இனம் இந்திய தேசியத்தால் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறோம் ஒட்டுமொத்தமாக.
சாதிக் கட்டுக்களை அறுத்தெறிந்து மூத்த குடி தமிழ்க்குடியாக ஒன்று கூடுவோம்; சாதி வெறியர்களை புறந்தள்ளுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக