Saturday, May 17, 2014

அறிமுகமில்லாத அன்பர்களுக்கு ஓர் அக்கறை மடல்-த.தே.பொ.கட்சிஅன்புடையீர்,
வணக்கம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையே அறிமுகம் இல்லை; ஆனால் இருவரும் ஒருவர் போலவே சிந்திக்கிறோம்.
தமிழினம் - தமிழ்மொழி, தமிழகம் குறித்து நீங்களும் நாங்களும் ஒரே மாதிரிதான் கவலைபடுகிறோம்.
பத்துகோடிபேர்க்கு மேல் தமிழர்கள் உலகில் வாழ்ந்தாலும், நாதியற்ற இனமாகவே சீரழிகிறோம். 2008 - 2009 இல் பத்துமாதங்கள் தொடர்ந்து வான் வழியாகவும், தரைவழியாகவும், கடல் வழியாகவும் இலங்கை அரசு இந்தியாவின் பங்களிப்போடு, சீனா, ரசியா போன்ற நாடுகளின் துணையோடு ஈழத்தில் குண்டு மழை பொழிந்து இலட்சக் கணக்கணக்கில் தமிழர்களை அழித்தது.
இந்த மனித அழிவை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது; தடுக்கவில்லை. தடைசெய்யப் பட்ட ஆயுதங்களை சிங்கள அரசு பயன்படுத்தியது. ஐ.நா.மன்றம் தடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஒதுங்கிக் கொண்டது.
இப்போது இனப்படுகொலைக் குற்றவாளிக ளாக இராசபட்சே கும்பலை விசாரிக்க வேண்டும் என்பதற்கும் உலகம் முன் வரவில்லை. ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரி மையைப் பாதுகாக்க அவர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உலகம் முன் வரவில்லை. கண்துடைப் பாக சில நடவடிக்கைகள் ஜெனிவாவில் முன் மொழி யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இனப்படுகொலை நடைபெற வில்லையே தவிர மற்ற எல்லாம் நடக்கின்றன. சுரண்ட வந்த வெள்ளையன் பாதுகாத்துத் தந்த காவேரி ஆற்று நீர் உரிமை சுதந்திர இந்தியாவில் பறிக்கப்பட்டு விட்டது. வெள்ளையன் கட்டிக் கொடுத்த மேட்டூர் அணை நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. வெள்ளையன் கட்டிக் கொடுத்த முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உயரத்துக்குத் தண்ணீர் தேக்க முடிய வில்லை. பாலாற்றை அடைத்துக் கொண்டது ஆந்திரப் பிரதேசம்.
சற்றொப்ப முப்பது இலட்சம் ஏக்கர் நிலம், பாசனமின்றி பாலை நிலமாய் மாறி வருகிறது. தமிழகத்தின் முக்கால் பாகத்திற்குக் குடிநீர் வழங்கும் ஆறுகள் மலடாக்கப் பட்டுவிட்டன.
குடிநீருக்காகத் தமிழர்களுக்குள்ளேயே குத்து வெட்டு நடக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஏழுகோடித் தமிழக மக்கள் இடப்பெயர்வுக்குத் தள்ளப்படுவர். எங்கே போவர்?
தமிழக மீனவர்கள் தங்கள் கடலில் மீன் பிடிக்க முடியவில்லை. இதுவரை அறு நூறு பேர்க்கு மேல் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது சிங்கள அரசு.
இந்திய அரசு, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் எதுவுமே தமிழ் மக்களின் மரபுரிமையை, வாழ்வுரி மையைக் காப்பாற்றவில்லை. நாதியற்றவர்களாகத் தமிழர்கள் தத்தளிக்கிறார்கள்.
இந்த அவலம் உங்களையும் எங்களையும் ஒரே அளவில் வாட்டி வதைக்கின்றன. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை; இது பற்றி உரையாடிக் கொள்ளவில்லை!
மார்வாரி, குசராத்தி சேட்டுகளும், மலையாளி களும் தமிழகத் தொழில், வணிகங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறார்கள். தடுக்க முடியவில்லை. தடுக்க வேண்டும் என்று பேசினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்காதே, உள்ளே தள்ளி விடுவோம் என்று உருட்டுகிறார்கள்; மிரட்டு கிறார்கள்.
தமிழகமெங்கும், பட்டணத்திலிருந்து பட்டிக் காடு வரை, கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரிமுனை வரை, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், எல்லா வகை வேலைகளிலும் நிறைகிறார்கள்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் அயல் இனத்தார் அன்றாடம் இலட்சம் இலட்சமாய் சேர்கி றார்கள். இது எங்கே கொண்டு போய்விடும்? எதிர் காலத்தில் தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு இருக்குமா? கலப்பினங்களின் தாயகமாகத் தமிழகம் மாறி விடுமா?
தமிழ்நாடு முழுக்க தெலுங்கர்கள், கன்னடர் கள், மலையாளிகள், மார்வாடி, குசராத்தி சேட்டுகள் நிலம் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வெளிநாட்டு முதலாளிகள், நூற்றுக் கணக்கான ஏக்கர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலம் வாங்குகிறார்கள். இது எங்கே கொண்டு போய் விடும்?
கடையெழு வள்ளல்களும், சேர சோழ பாண்டி யரும் ஆண்ட தமிழ் மண், தொல்காப்பியரும், திருவள்ளுவரும், அவ்வையாரும், இளங்கோவடி களும் நாயன்மார்களும், ஆழ்வார்களும், கம்பரும், வள்ளலாரும், பாரதியும், பாரதிதாசனும் வாழ்ந்த தமிழ் மண், எதிர் காலத்தில் யாருக்கு உரிமை யாகும்?
எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. நீங்களும் நாங்களும் ஒருவர் போலவே கலங்குகி றோம்! ஆனால் நாம் சந்தித்துக் கொண்டு கருத்து களைப் பரிமாறிக் கொள்ளவில்லை; கவலை களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் தலைவர்களுக்குப் பஞ்சமில்லை; புரட்சித்தலைவி இருக்கிறார், தமிழினத்தலைவர் இருக்கிறார். தானைத் தளபதிகள் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளிடம் “போர்ப்படைகள்’’ இருக் கின்றன; “புரட்சி வீரர்கள்’’ இருக்கிறார்கள். ஆனாலும் தமிழக உரிமைகளைக் காக்க நாதி யில்லை.
நடுக்காட்டில், தொடர்வண்டி விபத்துக் குள்ளாகி பயணிகள் படுகாய முற்று, உதவி கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் போட்டுட்டுள்ள நகைகளை அவர்கள் வைத்துள்ள பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்போல் தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நடந்துகொள் கின்றன. அவர்களின் வாக்குகளைப் பிடுங்குவதில் மட்டுமே அவை குறியாக இருக்கின்றன.
இவ்வளவு இழப்புகளுக்கு உள்ளாகியுள்ள மக் களிடம் சாதி வெறியைத் தூண்டி மோத விடுவது, மதவெறியைத் தூண்டி மோத விடுவது, தலைவர் களின் தன்னலப் பதவிப் போட்டி அரசியலை இலட்சியப் போட்டி அரசியல் போல் செயற்கை யாய் சித்தரித்து, தமிழ் மக்களை நிரந்தரமாகப் பிளவுப்படுத்தி அவர்களை மோத விடுவது போன்ற குற்றச் செயல்களில் இத்தலைவர்கள் ஈடுபடு கிறார்கள்.
இந்தத் தலைவர்கள் வாழ்நாள் தண்டனைப் பெறத்தக்க அளவில், தமிழ்த் தேசத்தின் கருவூ லத்தை, மக்கள் பணத்தை கையூட்டு, ஊழல் வழி களில் கொள்ளையடித் திருக்கிறார்கள்.
இந்த அறச்சீற்றம் உங்களுக்கும் இருக்கிறது; எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளாமல் தனித் தனியே சிந்தித்துக் கொதிக்கிறோம்; கொந்தளிக் கிறோம்!
ஒத்த கருத்துள்ள நாம் ஒன்று சேர்ந்து நமது நல்ல நோக்கங்களுக்கான வலிமையை உண்டாக்கிக் கொள்ளாமல், நாம் எதைச் சாதிக்க முடியும்? நமது சமூக அக்கறை களும் கவலைகளும் செயலுக்கு வராத ஆசைகளாய், புலம்பல்களாய் போய்விடக் கூடாதல்லவா ! அல்லவா?
உங்களை அடையாளம் காண நாங்கள் முயற்சி செய்யாமல், எங்களை அடையாளம் காண நீங்கள் செய்யாமல், ஆனால் ஒத்த கருத்தோடு தனித் தனியே இருந்து என்ன பயன்? காலம் விரையமாகும். கனவுகள் மட்டும் மிஞ்சும்; மூப்பை நோக்கி முன்னேறுவோம்; பின்னர் கனவுகளும் கலைந்து போகும்.
நாங்கள் ஏற்கெனவே, ஒத்த கருத்துள்ளவர்களை ஓர் அமைப்பாக்கியுள்ளோம். “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி’’ அதன் பெயர்! மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், கலைஇலக்கிய ஆர்வலர்கள், அறிவாளர்கள் முதலிய, அனைவருக்கும் அவரவருக்குரிய உள் அமைப்புகள் இருக்கின் றன. மாதம் இருமுறை இதழாகத் தமிழர் கண்ணோட்டம் வந்து கொண்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் த.தே.பொ.க. அமைப்பு செயல்படுகிறது. சென்னை யில் தலைமை அலுவலகம் இரு செயல்படுகிறது !
இது என்ன, இன்னொரு அரசியல் கட்சியா? தேர்தல், பதவி அரசியல் ஆகியவற்றை மூடி மறைத் துக் கொண்டு புதிய ஒப்பனைகளோடு வருகிறதோ, என்று நீங்கள் ஐயப்படலாம்; ஐயப்படுவது தேவை! ஆனால் ஐயப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
பணம் - பதவி - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களைக் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி நடத்தப்படுகிறது. இக்கட்சி சட்ட மன்ற - நாடாளுமன்ற - உள்ளாட்சித் தேர்தல் எதிலும் போட்டியிடாது. இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற இலட்சியத்தை அடையும் வரை த.தே.பொ.க. எந்தத் தேர்தலிலும் போட்டியிடாது. எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது மில்லை.
த.தே.பொ.க. வளர்ந்தால் தன்னல அமைப்பாக மாறிவிடுமோ என்று ஐயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
தேர்தலில் நிற்காது என்பதால் த.தே.பொ.க. தீவிரவாத இயக்கமல்ல; ஆயுதப் புரட்சி அமைப் பல்ல. மக்கள் எழுச்சி இயக்கம்! இதன் செயற்களம் மக்கள்தான்!
த.தே.பொ.க.வின் இலட்சியம் துல்லியமாக வரையறுக்கப்பட்ட - குழப்பமில்லாத தமிழ்த் தேசியம்! எமது தேசிய இனம் தமிழர் - எமது தேசிய மொழி தமிழ் - எமது தேசம் தமிழ்த் தேசம் - இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு. இதுவே நாங்கள் முன்வைக்கும் இலட்சியம்!
வளர்ந்தால் கெட்டுப்போகுமோ - என்று ஐயப்பட்டு ஒதுங்கி நின்றால், உண்மையான இயக்கம் எதுவுமே வளராமல் தமிழினம் கெட்டுப் போகும்!
“தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” என்றார் திருவள்ளுவப் பெருந்தகை! ஒரு செய்தியை அலசி ஆராயாமல் ஏற்பது தவறு; அலசி ஆராய்ந்து ஏற்றபின் ஐயப்பட்டுக் கொண்டே இருப்பதும் தவறு என்றார்.
”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்றார் அவர். இன்னின்ன காரணங்களால் இச்செயலைச் செய்ய இவன் வல்லவன் என்று முடிவு செய்து அதனைச் செய்யும் பொறுப்பை அவனிடம் விட வேண்டும் என்றார் திருவள்ளுவர்!
தமிழ்நாடு - தமிழ்ச் சமூகம், தமிழ் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் அன்பிற்குரியவர்களே,
இனியாவது நாம் ஒருவரை ஒருவர் அடை யாளம் கண்டு கொள்வோம்; ஒன்று சேர்வோம்!
உங்களால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பங்காற்றினால் போதும்! முதலில் உங்கள் அறிமுகம் தேவை. உங்கள் நட்பு தேவை! அதன் பிறகு கலந்து பேசுவோம்! கடமையாற்றுவோம்!
அன்புடன்
பெ. மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
=================================
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
=================================