Sunday, October 4, 2015

வளர்ச்சியா...வீழ்ச்சியா?

நாகப்பட்டிணத்தில் வழியாக தஞ்சாவூர் ௮௯ (89)கி.மீ தூரம் தான் என்றாலும் வளைந்து நெளிந்து செல்லும் பாதை என்பதால் இரண்டரை மணி நேரம் பிடிக்கும். இருந்தாலும் களைப்பு தெரியாது..காரணம் இருபக்கமும் வரிசையாக இருக்கும் மரங்கள்..அது தந்த குளிர்ச்சி. மகிளுந்துகளில் செல்பவர்கள் கூட ஆங்காங்கே நின்று இளைப்பாறி பயணத்தை தொடர வழியெங்கும் புளிய மரம், அரசமரம், வேப்பமரம், வாய்க்கால், ஆறு என ஓரளவு பசுமையாக இருக்கும்.  

இனி அப்படி ஏதும் காணக்கிடைக்காது. காரணம் சாலியமங்கலம் அருகே புதிய சுங்கச் சாவடி எனும் வழிப்பறி கொள்ளை சாவடி அமைய போகிறது. அதற்காக பழைய மரங்கள் சகட்டு மேனிக்கு வெட்டப்படுகிறது. இருபுறமும் இருக்கும் வயல்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய்கள் மண்மூடி அடைக்கப்படுகிறது. 

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில்  மழை பொழிய மாட்டேன் என்கிறது மழைக்காலத்தில் கூட. ஒரு பக்கம் தூய்மை இந்தியா..பசுமை இந்தியா என்று வெற்றுக் கூப்பாடு.மறுபக்கம் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் மரங்கள்..காடுகள் அழிப்பு..மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு என நிலங்கள் அபகரிப்பு..என நடுவண் அரசின் சர்வாதிகாரப் போக்கு. 

இந்த மரங்களை வெட்டுவது தேசிய நெடுஞ்சாலை என்ற நடுவண் அரசு நிறுவனம். அந்த மரங்களை அறுக்க வெட்ட மின்சாரம் எடுப்பது மாநில அரசின் மின் கம்பங்களில் இருந்து. இப்படி மின்சாரம் திருட போதிய அனுமதி பெற்று இருக்கிறார்களா? தெரிந்தா தெரியாமலா?


உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இதே போன்ற சாலை குறுக்கே அம்பானி வீடோ, குழுமமோ இருந்தால் இப்படி இடித்து தரை மட்டம் ஆக்கும் தைரியம் அரசுக்கு உண்டா?

கேட்க ஆளில்லை என்றால் ரிஸ்வான் போன்ற அப்பாவிகளை  பிடரியில் கை வைத்து இழுத்துப் போகும் காவல் துறை கே என் நேருவிடமும் யுவராசுகளிடமும்  கூனி குறுகி நடந்து கொள்கிறது தங்கள் எஜமான் திராவிட ஆரிய அரசர்களைப் போலவே. Thursday, July 30, 2015

கவிதை: தீர்ப்பு

ஆட்சி அதிகாரத்தின்
வாக்கியங்கள்...
நீதி அரசர்களின்
உதட்டசைவில் ..

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் என்ற இந்தியர் காலமானார்.


 • பேரறிவாளனின் கருணை மனுவை கடைசி வரை பரிசீலிக்காமலே பதவியை தக்கவைத்துக் கொண்ட திறனும், 
 • ஈழத்திற்கு சென்று வாய்ப்பு கிடைத்தும் இனப்படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத உங்கள் அமைதியும், 
 • பார்ப்பன கும்பலின் அரசியல் காய் நகர்த்துதலில் நல்வாய்ப்பாக அமைந்த பதவியை வைத்து பிறந்த இனத்தை பற்றிக் சிறிதும் சிந்திக்காமல் இறுதி வரை இந்தியனாய் இருந்ததும் 
 • தமிழ்க் குழந்தைளை இந்திய அடிமைகளாய் மாற்றிய மாபெரும் உங்கள் சாதனைகளும் 
 • இந்தியத்தின் கழிவை தமிழகத்தில் இருந்து நீக்க  பாமர மக்கள் போராடிய பொது "அணுவுலை ஆபத்து இல்லை" என்று இந்தியனுக்கு காவடி தூக்கி எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கு சமாதி கட்டியதையும் 
மறந்து அவரை இழந்து வாடும் இந்தியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!

Wednesday, June 10, 2015

தேசியத் தலைவர் சிலை அகற்றம்- கைது நடவடிக்கை ஏன்?
நாகப்பட்டிணம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூரில் தமிழினத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு 2015 சூன் திங்கள் 6ம் தியதி அன்று கோயில் ஒன்றில் சிலை வைக்கப்பட்டது. இதை உடனே அறிந்த நமது சீர்மிகு செயல்வீரர்கள் நிறைந்த தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்தது. இறுதியில் அவர்களாகவே சூன் 8 அன்று சிலையை அகற்றினார்கள் என்று மனு தர்மம் கக்கும் தமிழக பத்திரிக்கைகள் செய்தி போட்டனர்

இருவது பேரை கொன்றவர்கள் மீது ஒரு நடவைக்கையும் இல்லை; தருமபுரி வங்கியில் கொள்ளை அடித்த வடநாட்டு போக்கிலிகளை துப்பு துலக்க வக்கில்லை; நாள்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு என்ற செய்திகள்..ஆனால் ஒருவனையும் இதுவரை பிடித்தது இல்லை. ஆனால் தமிழினத்திற்கு ஆதரவாக ஒரு நிகழ்வு நடந்தால் போதும்..இரவோடு இரவாக அதிரடி நடவைக்கை எடுத்து இடித்து தள்ளுவதில் மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுகிறது தமிழக அரசும் அதன் ஏவல் துறையும் ...முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செயல்பட்டதைப் போல.

இதைக் கண்டித்து நாகையில் நேற்று காலை மதிமுக ஆர்பாட்டம் செய்தது. அனைவரையும் கைது செய்தது காவல் துறை .

மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் முறையாக அனுமதி பெற்று தெரு முனை பிரச்சார முறையில் அமைதியாக தங்கள்  எதிர்ப்பை தெரிவிக்க கூடி இருந்தனர், கூடி இருந்த தோழர்களை விட அங்கு இருந்த காவல் துறையினரே அதிகம். அவ்வளவு காவல் துறையினருக்கு அங்கு ஒரு வேலையும் இல்லை.அது ஒரு பிரச்சாரக் கூட்டம்,அவ்வளவே.  ஒலி பெருக்கி கூடாது என்றது காவல். அதையும் கேட்டு நடந்து கொண்டனர் தோழர்கள்.

முறையாக அனுமதி பெற்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? போர்க்களம் போல காவல் துறையினரை குவித்து மக்களுக்கு பீதியூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஒன்றும் புரியவில்லை. இறுதியில் அனைவரையும் கைது செய்தது காவல் துறை. சிறிதும் கலங்காமல் காவலர்கள் கட்டுப்பாடையும் மீறி தேசியத் தலைவர் வாழ்க; தமிழீழம் வெல்வோம் என உரக்க கூவினர் தோழர்கள்.

நாளொரு ஆர்ப்பாட்டம்; பொழுதொரு  ஆர்ப்பாட்டம் என இந்த நடுவண் மற்றும் மாநில அரசும்  தமிழர்களை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருப்பது ஏன்? நாம் எந்த ஆயுதத்தை எடுக்கிறோம் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்று தலைவர் சொன்னது முற்றிலும் சரி.


Wednesday, May 27, 2015

வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியும்... சகித்துக் கொள்ளும் ஈகிகளும்

பார்த்து பயந்து விடாதீர்கள். இதற்குப் பெயர் தான் இட்லி. இதனுடன் 40 பேருக்கு ஒரே தேங்காயில் ஒரே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொழுப்பு நீக்கப்பட்ட சட்னி.

இது  சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியின் இரவு உணவு.

குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பாலியல் சமூக விரோதிகளுக்கு அஞ்சியும் விடுதியில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெரும்பாலான சகோதரிகளுக்கு. மாதம் ரூ.4600 ஐயும் கொடுத்து விட்டு இது போன்ற நஞ்சுக்களை சாப்பிட வேண்டிய கட்டாயம் விடுதிப் பெண்களுக்கு. 

இது இங்கு மட்டும் அல்ல. பெரும்பாலான பெண்கள் விடுதியின் நிலை இதுதான். காலையில் சுட்ட இட்லி..நேற்று அரைத்த சட்னி, புளித்துப் போன தோசை, கழுவாத கழிவறை, அனலை கக்கும் அறைகள்... இதை விட்டால் வேறு போக்கிடம் இப்பெண்களுக்கு இல்லை; எதையும் சகித்துக் கொள்ளும் அப்பிராணிகள் இவர்கள் என்கிற மன தைரியம் விடுதி காப்பாளர்களுக்கு.

சிறைக்கு சென்றவர்களை தியாகிகள் (ஈகிகள்) என்போம். என்னைக் கேட்டால் குடும்ப நலனுக்காக இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளும் இந்த சகோதரிகள் தான் உண்மையான ஈகிகள்

Sunday, May 24, 2015

கைப்பேசி இணைய செறிவூட்டலை (3G/2G மொபைல் டேட்டா) சேமிப்பது&பகிர்ந்து கொள்வது எப்படி?

கைப்பேசியில் இணைய தள செறிவூட்டல் செய்து கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதை பயன்படுத்தி ஏர்டல், வோடபோன் நிறுவங்களின் கட்டணம் என்கிற பெயரில் வாடிக்கையாளர்களை வழிப்பறி செய்கிறார்கள். 

இதில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகள்:

 1. மூன்றாம் கட்ட அலைவரிசை 3G செறிவூட்டல் மிக வேகமாக செயல்படுவது மகிழ்வாக இருந்தாலும் இயக்கத்தில் வைத்து சட்டைப்பையில் போட்டு சந்து திரும்புவதற்குள் சங்கதி தீர்ந்து விடுகிறது. காரணம் பின்புலங்களில் செயல்படும் தேவையற்ற செயலிகள் மிக விரைவில் வெகு வேகமாக உங்கள் டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்வது. இதை சமாளிக்க அமைப்பில் (செட்டிங்க்ஸ்)
  WIRELESS& NETWORKS சென்று  Data usage இல் Restrict background data வை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் தற்போது எந்த செயலியை நீங்கள் உபயோக்கிறீர்களோ அது மட்டுமே உங்கள் கைப்பேசி டேட்டாவை பயன்படுத்தும். நீங்கள் யுவ்டூபில் இருந்தால் அது மட்டுமே டேட்டாவை பயன்படுத்தும். அதில் இருந்து முகநூல் சென்றால் யுவ்டூப் உங்கள் செறிவூட்டலை பயன்படுத்துவது நின்று முகநூல் மட்டுமே பயன்படுத்தும். கைப்பேசி தானாக மூடிக்கொண்டால் ( sleep) உங்கள் கைப்பேசி டேட்டா பயன்பாடு தானாக நின்றுவிடும்.
 2. Data usage சென்று  Set mobile data limit பிரயோகிப்பதன் மூலமாக 2G/3G செறிவூட்டப்பட்ட அளவினை தாண்டி உங்கள் கைப்பேசி செறிவூட்டல் (top up balance) சுரண்டப்படுவதை தடுக்கலாம்.
 3. நீங்கள் 2G/3G ஒரு கைப்பேசியில் செறிவூட்டி உள்ளீர்கள். உங்கள் நண்பர் செறிவூட்டல் தீர்ந்துவிட்டது அல்லது மொபைல் டேட்டா போடவில்லை என வைத்துக் கொள்வோம். உங்கள் மொபைல் டேட்டாவை அவர் கைப்பேசியில் எப்படி பயன்படுத்திக் கொள்வது? அதற்கும் வழி உள்ளது.
  • முதலில் இருவரும் ப்ளூடூத்தை இயக்கதில் கொண்டுவந்து சோடி (pairing) செய்து கொள்ளவும்
  • உங்கள் கைப்பேசியில் மொபைல் டேட்டாவை இயக்கத்தில் கொண்டுவரவும் 
  • உங்கள் கைப்பேசியில் Settings>WIRELESS&NETWORKS>More..சென்று Tethering & portable hotspot சென்று  Bluetooth tethering ஐ அழுத்தவும்.
   Sharing this tablet(உங்கள் கைப்பேசி)'s internet connection இயக்கத்தில் வரும் 
  • பின்பு உங்கள் நண்பரின் கைப்பேசியில் ப்ளூடூத்தில் உங்கள் கைப்பேசியை தேர்ந்தெடுத்து அழுத்தவும். உங்கள் கைப்பேசிக்கு
   Accept Network Access points authorize request வரும். அதை நீங்கள் அனுமதிக்கவும்.
  • Bluetoothu Network access point connected என்ற செய்தி வரும்.இருவரின் ப்ளூடூத் செயலி iconகளும் நீல நிறத்தில் மாறும்.இனி ப்ளுடூத் இயக்கத்தில் இருக்கும் வரை உங்கள் நண்பர் உங்கள் 2G/3G டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
  • ஏதாவது ஒரு செயலி உங்கள் தகவல் செறிவூட்டலை (மொபைல் டேட்டா) அதிகம் திருடுகிறது. அதை எப்படி தடுப்பது? உதாரணமாக நீங்கள் கைப்பேசி இணையத்தை செயலாக்கும்போது  தானாக வாட்ஸ்அப் செய்திகள் தரவிறக்கம் செய்யும். அதை எப்படி தடை செய்வது?
   Settings> Applicatiion manager>Whatsapp இங்கு Force Stop என இருக்கும் பித்தானை அழுத்தினால் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாது. வாட்ஸ் அப் செய்திகளை தரவிறக்கம் செய்யாது.
   திரும்ப வாட்ஸ் அப் செய்திகளை பெற/செயலியை இயக்கத்தில் கொண்டுவர...நீங்கள் வாட்ஸ் அப் செயலியை வழக்கம்போல அழுத்தினால் போதும். பழைய நிலைக்கு வந்துவிடும். தொல்லையை தோளில் போட்டுக் கொள்ளலாம்.

  

புறம்போக்காய் போன பொதுவுடைமை

தோழர் பாலு மகேந்திரா, கௌதமன், புகழேந்தி தங்கராஜ், மணிவண்ணன்  என திரையுலகில் தமிழ் இன உரிமை பற்றி சிந்திக்கும் இயக்குனர்களில் தோழர் ஜனநாதனும் ஒருவர்.

இந்தியத்தை வருடிக் கொடுப்பது போல சில இடங்களில் சென்சாரை சாந்தப்படுத்தி, செங்கொடியையும் ஈகையை போற்றியும், பேரறிவாளனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் எதிர்த்தும், தமிழ் மொழி,வர்க்க விடுதலைப் பற்றியும் மிகத் தைரியமாக, தந்திரமாக காட்சிகள் அமைத்துள்ளார். 

விடுதலைப் புலிகள், நக்சலைட்களின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைத்து உள்ளார். பாராட்டுக்கள். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளி விடுதலைப் போராளி, தூக்கு போடும் தொழிலாளி, இந்தியத்திற்கு கங்காணி வேலை செய்யும் காவல் அதிகாரி, தற்கொலை குண்டுதாரியான குயிலி என ஒரு புது கதைக்களம்;கதையோடு ஒன்றிய காட்சி தள அமைப்புகள் ...இது உண்மையில் ஒரு வெற்றிப்படம்.

பேராண்மையில் கத்திரியால் காயப்பட்ட இயக்குனர் பின்வாங்காமல் திரும்பவும் கத்தியை தீட்டி உள்ளார் புத்தி சாதுரியத்தோடு. 

இன விடுதலையை ஆதரிக்காது வர்க்க விடுதலையை பெற முடியாது, உலகத் தொழிலார்கள் ஒன்று கூடுவதற்குப் பதில் உலக முதலாளிகள் ஒன்று கூடி உலகை ஒரு குப்பைத் தொட்டியாக ஆக்கி உள்ளனர் என்று பரவலாக தமிழ் தேசியம், இன விடுதலை,வர்க்க விடுதலை பற்றி பேசி உள்ளார்-அதே சமயம் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல்.

இன உணர்வை பேச பல இயக்குனர்கள் போராடி இந்திய தரக் கட்டுப்பாட்டை மீறி திரைக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டுள்ள நிலையில் ஜனநாதனின் சாணக்கியத்தனம் பாராட்டுக்குரியது.

ஆரியா வேடத்தில் அஜீத் நடித்திருந்தால் இது மிகப்பெரிய ஒரு மக்கள் படமாக வசூலில் சாதனைப் படைத்திருக்கும்.

கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் திரை அரங்கு சென்று கண்டு ஜனநாதன் போன்ற இயக்குனர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இன உணர்வு;இன விடுதலை நோக்கி தமிழ் தேசியம் நகரட்டும்!!!!

Thursday, March 5, 2015

கவிதை:உரைகல்

காதலின் போது
தன்னிலை இழப்பதும்
பிரிவின் போது
தன்னையே இழப்பதும்...

Tuesday, February 24, 2015

கவிதை: கோரிக்கை


நீங்கா இடம் பிடித்த ஜசிகா...

முகநூல் வலைத்தளம் அனைத்திலும் ஜெசிகா ஜெசிகா என்றே பேச்சு. பர்கரும் பிசாவும் தின்று விட்டு செரிமானம் ஆக மேல்தட்டு மக்கள் பார்க்கும் தொலைகாட்சி தான் விஜய் தொ.கா. என்பதால் அதை நான் தவிர்த்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் எனக்கு ஒன்றும் புரிபடவில்லை.

நேற்று எனக்கு புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து ஒரு அழைப்பு. தமிழர் பிரச்சனை பற்றி மொழிப் பிரச்சனை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள்...ஜெசிகாவிற்கு இழக்கப்பட்ட அநீதி பற்றி ஒரு சிறு கருத்துரை கூட இல்லையே உங்களிடமிருந்து என்று ஆதங்கப்பட்டார்கள்.

   "அந்த தொ.கா வைப் பற்றி நன்கு தெரியும். தமிழினத்திற்கு என்றும் ஆதரவாக அது இருந்தது இல்லை; அப்படி இருக்கையில் உங்களை யார் அதில் கலந்து கொள்ள சொன்னார்கள்? பின்பு வஞ்சித்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள்" என்று அவர்கள் வலி உணராமல் பதிலுரைத்தேன்.

     "இந்தியா என்றால் கலைகளுக்கு முக்கியத்துவம் தரும் நாடு; பெண்களைப் போற்றும் நாடு; அங்கு தனது திறமையை நிரூபிக்க ஒரு களம் கிடைத்த மகிழ்ச்சியில் தானே அந்த குழந்தை அங்கு வந்து தனது ஒரு வருட பள்ளிப் படிப்பை விட்டு,அண்ணன் மற்றும் உறவினர்களோடு தங்கள் வேலையை விட்டுவிட்டு... தங்கி.. இவ்வளவு சிரமம் எடுத்து உழைத்து முதல் இடம் பெற அனைத்து தகுதிகள் பெற்று இருந்தும் இறுதியில் இப்படி வஞ்சித்து விட்டீர்களே ...!!!இது நாள் வரை பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றிப் பெற்றவரை அறிவித்து இருந்த நியதியை திடீரென்று மாற்றி ஏமாற்றி விட்டீர்களே" என்று குரல் தழுதழுக்க அவர் பேசிய போது தான் அந்த ஏமாற்றப்பட்ட அந்த பிஞ்சு நெஞ்சத்தின் சோகம் புரிந்தது. அவர் மேலும் சொன்னது ஆறுதலாக இருந்தது..."விஜய் தொ.கா.வை முற்றிலுமாக புறக்கனித்துவிட்டோம்..இனி பார்ப்பது இல்லை" என்று. 

புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் தொப்புள் கொடி உறவுகளே. இந்தியா என்றால் நீங்கள் ஏதோதோ கற்பனையில் இருக்கின்றீர்கள். பணத்திற்காக எதையும் செய்யும் மக்கள் நிறைந்த நாடு இது. அதில் அடிமைப்பட்டு தவிக்கும் ஒரு தேசம் தான் தமிழ் தேசம். செல்வமும் செலவாக்கும் உள்ளவர்களுக்கு தலையாட்டும் தன்னலக்கூட்டம் நிறைந்த நாடு இந்திய நாடு. இங்கு உண்மைக்கும் உரிமைக்கும் மதிப்பு கிடையாது. 

 மருத்துவ சிகிச்சை பெற வந்த 80 வயதைத் தொட்ட மூதாட்டியை தரை இறங்க கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய தேசம் இது; அதைப் பார்த்து இயலாமையில் பாதிக்கூட்டமும்;அறியாமையில் மீதிக்கூட்டமும் கலந்த கறை படிந்த தேசம் இது. AK 56 வைத்து இருந்த ஆரியன் பரோலில் வெளி வருகிறான்.ஆனால் ஒரு பாட்டரி செல் (மின்கலம்) வாங்கித் தந்ததற்காக 24 வருடங்களாக சிறைச் சுவற்றுக்குள் தன் வாழ்நாளை கழிக்கிறான் தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக. 

உனது பரிசுப்பொதி அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய அந்த உயர்ந்த உள்ளதை மிஞ்ச இங்கு யார் உளர்?

முதல் இடம் பிடித்து இருந்தால் கூட இப்படி ஒரு பேரும் புகழும் கிடைத்திருக்குமா என்பது ஐயமே. ஆரிய சூழ்ச்சி உனக்கு எந்த இடம் கொடுத்தால் என்ன..உலகத் தமிழர் அனைவர் உளத்திலும் நீ நீங்கா இடம் பிடித்து விட்டாய் தங்கையே...அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த ஒவ்வொருவர் இல்லத்திலும் நீ குடிபுகுந்துவிட்டாய் செல்லமே. 

தமிழனை தமிழன் மதிக்கும் அரசு விரைவில் வரும். அது வரை காத்திரு கண்மணியே...

விடை கொடு எங்கள் நாடே 
 கடல் வாசல் தெளிக்கும் வீடே 
 பனை மர காடே பறவைகள் கூடே 
 மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

Tuesday, January 20, 2015

தமிழ் தேசியவாதிக்கு உதவுமாறு ஒரு கோரிக்கை


தோழர் சுரேசுகுமார் மூலமாக தமிழ் தேசிய பேரியக்க தஞ்சை நகரத் துணைச் செயலாளர் இரா. தமிழ்ச் செல்வன் எனக்கு அறிமுகமானார். 

தமிழ் மொழிக்காகவும் இனத்திற்காகவும் த.தே.பேரியக்கத் தலைவர் தோழர்.பே.மணியரசன் அவர்களுக்கு உறுதுணையாக 13 ஆண்டுகளாக களமாடிய தோழர் தமிழ்ச் செல்வன் அவர்கள் களப் போராட்டத்தில் இருமுறை சிறை சென்றுள்ளார். 

முல்லைப்பெரியாறு போராட்டங்களின் போதும் கேரளா வணிக நிறுவனங்கள் முன்பு ஆக்ரோசமாக மறியல் போராட்டம் செய்த உணர்வாளர். தஞ்சை வந்த இனக்கொலை நடத்தி குருதிக் கறை படிந்த புத்த பிட்சுகளை பெருவுடையார் கோயிலில் இருந்து வெளியேற்றிய தோழர்களில் முன்னின்று செயல்பட்டு அதற்காக சிறை சென்றவர் தோழர் தமிழ்ச் செல்வன். அவர் இரண்டு மாதங்களாக உயிருக்கு போராடி ருபாய். ஆறு லட்சம் வரை செலவு செய்து சற்று நினைவு திரும்பி உள்ளார். இன்னும் அவர் திருச்சி தில்லை நகரில் உள்ள "நியூரோ சென்டர்"இல் சிகிச்சை பெற்று வருகிறார். 

பழைய நிலைக்கு திரும்ப, மேற்கொண்டு ரூ.2 லட்சம் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது அவர் குடும்பம். நிரந்தர ஊதியம் ஏதும் இல்லாது அவர் மனைவியும் பச்சிளம் குழந்தையுடன் திணறுகிறார் தன் கணவர் உயிரை மீட்க.

தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாக வைத்து சொந்த லாபம் பார்க்காது உழைத்த அவருக்கு உங்களால் ஒரு சிறு தொகை அளிக்க முன்வந்தால் கூட அது பேருதவியாக இருக்கும். 

கீழே அவரது சொந்த வங்கிக் கணக்கு விவரமும், அவருக்காக நிதி திரட்டும் சக தோழர் சுரேசு குமார் அவர்கள் வங்கிக் கணக்கும் தந்துள்ளேன். முடிந்தால் உதவுங்கள். 

தோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசி எண்:9487868812 & 9750248812 
தில்லை நகர் நியூரோ சென்டர் மருத்துவ மனை எண்:0431-2740815 &2740865


உதவிய உள்ளங்கள் தங்கள் பெயர் விவரங்களை  கருத்துரைப் பெட்டி (comment box)இல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பின்னூட்டம்-28.01.2015

மேல் சிகிச்சைக்கான மருத்துவச் செலவிற்கான தொகையை வாரி வழங்கிய தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.

Sunday, January 18, 2015

பக்கவிளைவு இல்லாத பாட்டி வைத்தியம்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 9. மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 11. வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 12. பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். 13. வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். 14. தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 15. வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 16. அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 17. இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 18. வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 19. உடம்புவலி  சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 20. ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 21. கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 22. மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.  23. கபம் வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். 24. நினைவாற்றல் வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 25. சீதபேதி சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். 26. ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். 27. பூச்சிக்கடிவலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 28. உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 29. வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 30. வயிற்றுப் போக்கு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 31. வேனல் கட்டி வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். 32. வேர்க்குரு தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். 33. உடல் தளர்ச்சி முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். 34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம். 35. தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். 37. எரிச்சல் கொப்பளம் நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. 38. பித்த நோய்கள் கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். 39. கபக்கட்டு  நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். 40. நெற்றிப்புண் நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும். 41. மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும்.மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. 42. ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். 43. மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம் 44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். 45. கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும். 46. நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். 47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம் 49. உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும். 50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..  கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். இயற்கை முறைக்கு மாறுவோம்.

Saturday, January 17, 2015

மாதொருபாகன்- பெருமாள்முருகன் - இலவச பதிவிறக்கம்mathoru baagan mathorubagan maathorubaagan mathorupaagan mathorupagan perumal murugan perumalmurugan freedownload
‪#‎மாதொருபாகன்‬

பெருமாள் முருகனை வீழ்த்திய காவிகள் ,

அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியது. குழந்தைப் பேறில்லாத தம்பதியரின் துயரங்களைக் கூறுவதாகும். வழக்கமாக நாவல் என்பது வாழ்க்கையும், கற்பனையும் கலந்த கலவை தான். 


அந்தவகையில், திருச்செங்கோடு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவை முன்வைத்து மாதொருபாகன் நாவல் எழுதப்பட்டிருந்தது 2010 எழுத பட்டது. ஆனால், அந்த நாவல் 2015ல் சர்ச்சையில் சிக்கியது. காரணம் யார் அமைதியாக இருந்தாலும் காவிகளுக்கு பிடிக்காது, எனவே கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு பிறகு அந்த நாவலில் உள்ள ஒரு சில வரிகளை வைத்து இதுபோன்று நாட்டார் வழக்கு என்று பெருமாள் முருகன் குறிப்பிடுகிறார் இது அப்பட்டமான பொய் அப்படி ஒரு வழக்கமே எங்கள் சாதியில் இல்லை என்று காவி அர்ஜுன் சம்பத் மக்களிடம் சாதிய உணர்வை தூண்டி தனது அரசியல் அறுவடையை செய்ய பார்க்கிறார் . 


மக்களை பிளவுபடுத்தி இப்போது ஆர் எஸ் எஸ் ஒரு கொலைவெறி தாக்குதலை எழுத்தாளர் பெருமாள் முருகன் மேல் நடத்த திட்டமிட்டு பெருமாள் முருகனின் வீட்டை முற்றுகையிட்டு அந்த எழுத்தாளரை ஊரை விட்டே துரத்தி அடித்து இருக்கிறது.. பதிவிட்ட நூலைகளை பெருமாள் முருகன் திரும்ப பெறவேண்டும் என்கிறது அதற்க்கு அந்த எழுத்தாளர் இன்று பலியாகி இனி நான் எழுதுவதில்லை, நான் எழுதிய அனைத்து நூல்களையும் திரும்ப பெறுகிறேன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் , இனி முருகன் மட்டுமே வாழ்வான் என்கிறார் ,, நாவலை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர் நாங்கள் இல்லை என்று ஆர் எஸ் எஸ் இதில் இருந்து தப்பித்து கொள்ளல்லாம் என்று எண்ணுகிறது ஆனால் எழுத்தாளர் முற்போக்கு கலைஞர் சங்கம் தெளிவாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறது, பெருமாள் முருகன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சமுக அவலங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டு இருக்கிறார் , சமூகத்தில் உள்ள சாதி மத ஏற்ற தாழ்வுகள் ஒழிக்க பட வேண்டும் என்று தனது எழுத்தில் சொல்லி வருகிறார் எனவே நங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று அந்த சங்கம் ஆதரவளித்தும்... 

பாஜக அர்ஜுன் சம்பத் போன்றோர் மக்களை சாதியை பற்றி குறை சொல்லி ஒரு எழுத்தாளர் சொல்லி இருக்கிறார் என்று ஐந்தாண்டுகளுக்கு பிறகு கலவரத்தை தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சித்து கொண்டு இருக்கிறது , யார் எழுத்தாளர், காவி நொன்னைங்களா ? திமிறி எழும் சமுகமாக ஒரு சமுகத்தை மாற்ற எவன் எழுத்துகள் புரட்சி செய்கிறதோ அவன் எழுத்தாளன், 
எது விமர்ச்சனம் ? 

 என்னுடை எழுத்து தவறாக இருந்தால் நீயும் அதை எதிர்த்து ஒரு நூலை வெளியிடு அதுதான் எதிர்ப்பு ,அதை விட்டு விட்டு ஒரு சமூக அக்கறை கொண்ட எழுத்தாளரை எழுத விடாமல் முடக்கம் செய்வதால் அவரின் ஒடுக்க பட்ட மக்களின் வலியும் சமுக அக்கறையும் தெரியாமலே போய்விடும் காவி அரை ட்ரவுசருங்களா. இகழ்ச்சியான இந்துமத வருணாசிரம சமுகத்தை தனது நாகரிக கருத்துக்கள் மூலமாக அடுத்த சமுதாயத்தை பண்பட்ட நாகரிக சமூகமாக மாற்றுவதே ஒரு எழுத்தாளனின் கடமை அதை செய்தால் உங்கள் காவி வெளுத்துவிடும் என்ற பயமா ?

இந்த லட்சணத்தில் திருக்குறளை தேசிய அளவில் எடுத்துகொண்டு போறானுங்க.. டேய் பகவத் கீதையின் வருணாசிரமத்தை ஒழிக்க தாண்டா திருவள்ளுவர் திருக்குறளை படைத்தார் .. எழுதுவதால் தான் இந்துமதம் சிறுமை அடைகிறது என்றால் அதன்னுள்ளே உள்ள சத்தியம் என்ன ? ஒருவன் எழுதி விட்டால் உங்கள் மதம் அதால பாதலத்திற்கு போய்விடும் என்றால் உங்கள் வருணாசிரம கருத்துகள் எவ்வளவு தரம் தாழ்ந்தது என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்..

Friday, January 16, 2015

கவிதை:புதியதோர் உலகு


Read more : http://www.ehow.com/how_5946594_make-text-invisible-html-code.html ஆரணங்கு இல்லாத
அகிலமாக மாற்றிவிடு
அதன்முன்னே 
என் அன்னையை 
ஆணாக ஆக்கிவிடு

Sunday, January 11, 2015

கவிதை: அட்டைகத்தி காதல்
மோடி மஸ்தான் கணக்கு -PMJDY

"நான்" ஆட்சிக்கு வந்து ௧௧(11) கோடி வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மன்மோகன் ஆட்சியில் ஏழைகள் வங்கிக்கு வரமுடிந்ததா?" என பெருமை பேசுகிறார் மோடி.

உண்மை என்னவென்றால் 11 கோடி கணக்கு என்பது முழுக்க முழுக்க பொய். என்ன செய்வீர்களோ எது செய்வீர்களோ,ஜனவரி 26 க்குள் அனைவருக்கும் PMJDY வங்கி கணக்கு ஆரம்பித்து விட்டோம் என்று எனக்கு கணக்கு காட்டவேண்டும் என்று கட்டளை வங்கியாளர்கள் மீது. அதனால் ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றிய புள்ளிவிவரங்களை அள்ளித்  தெளித்த அலங்கோலம் தான் இந்த 11 கோடி எண்ணிக்கை. இந்த 11 கோடியில் ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளவர்கள் 75 விழுக்காடு இருக்கும் கண்டிப்பாக.

பிரதம மந்திரி வங்கி கணக்கு என்று குறிப்பாக எந்த கணக்கும் பொதுவாக இல்லை வங்கிகளில். அதன் சிறப்பு அம்சங்கள் ஊடகங்களில் விளம்பரமாக வந்ததே தவிர வங்கிகளுக்கு தீர்மானமான வரையரை ஏதும் இல்லை. தினம் ஒரு சுற்றறிக்கை. நேற்று வந்ததை திருத்தம் செய்து மறுநாள் ஒரு சுற்றறிக்கை. முழுக்க முழுக்க குழப்பம்.

பிரதம மந்திரி வங்கிக் கணக்கின் குளறுபடி:

 • வங்கிகளுக்கு என்று சர்வீஸ் ஏரியா உள்ளது. அதில் உள்ளவர்கள் மட்டும் தான் அந்தந்த வங்கியில் கணக்கு தொடங்கலாமா இல்லை யார் வேண்டும் என்றாலும் எந்த வங்கியில் வேண்டும் என்றாலும் தொடங்கலாமா? இரண்டாவது சரி என்றால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? 
 • கணக்கு தொடங்க பணம் தேவை இல்லை. சரி... ருப்பியா அட்டை தருகிறீர்கள். அதற்கு ஆண்டு சந்தா உண்டா இல்லையா?
 • ஆதார் அட்டை இல்லாத கை எழுத்து போடாதவர்களுக்கும் ATM அட்டை உண்டு என்றீர்கள். அவர்கள் எப்படி பணம் எடுப்பார்கள்? அவர்கள் கை விரல் ரேகையை யார் பதிவு செய்து இருக்கிறார்கள்?
 • கணக்கு தொடங்கினால் காப்பீடு இலவசம் என்று பத்திரிகையில் அறிக்கை கொடுத்துவிட்டு, அது விபத்து காப்பீடு; அந்த காப்பீடும் ATM அட்டையை  45நாள்களுக்கு ஒருமுறை இயக்குபர்களுக்கு தான் அது பொருந்தும்  என்று உள்குத்து ஏன்? 
 • இந்த காப்பீடு கணக்கு தொடங்கிய உடனே நடைமுறைக்கு வருகிறதா?எந்த காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? 
 • இறுதியாக இந்த கணக்கை தொடங்கி அவர்களுக்கு என்ன லாபம்?NO FRILL ACCOUNTS என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் 2004 இல் தொடங்கப்பட்டு பெரும்பாலான கிராம மக்களுக்கு  குறைந்த பட்ச இருப்பு கிடையாது என்கிற அடிப்படையில்வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு விட்டது. அதில் இது போன்ற குழப்பங்கள் ஏதும் இல்லை.

உண்மைகள் இப்படி இருக்கும்போது நான் தான் செய்தேன்; என்னால் தான் முடிந்தது என்று அகம்பாவம் பிடித்து ஆணவம் தலைக்கேற அறைகூவல் விடுவது தனது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை மோடி உணரவேண்டும். மக்களுக்கு உண்மையில் பயன் தரக்கூடிய திட்டங்களை எந்த குழப்பமும் இல்லாமல் நடைமுறைபடுத்த வேண்டும். விளம்பரம் தேடிக்கொள்ள ஆரம்பிக்கும் திட்டங்கள் மக்கள் பணத்தை விரயமாக்குமே தவிர எந்த பலனும் யாருக்கும் தராது-ஆட்சியாளர்கள் உங்களை தவிர. இந்த பிரதம மந்திரி வங்கிக்  கணக்கிற்கு எத்தனை கோடி விளம்பரங்கள்;செலவீனகங்கள்? அதனால் அடைந்த லாபம் என்ன? விளக்கமுடியுமா?