செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

நந்தினி படுகொலை-நீதி கிடைக்குமா? நேரடி தள அறிக்கை

முகநூலில் பதிவு இட்டபடி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, செந்துறை வட்டம் சிறுகடம்பனூர் சென்றேன் 19.2.2017 அன்று.

சிறுகடம்பனூர் சென்றதும் நந்தினி வீட்டை கேட்டதும் அது காலனி பக்கம் இருக்கு என்று என்னை வழிநடத்திச் சென்றான் சிறுவன் ஒருவன்




இந்து முன்னணியை சேர்ந்த மணிகண்டன் என்கிற அரக்கன், ராசக்கிளி என்கிற கைம்பெண்ணின் இரண்டாவது மகளான நந்தினி என்கிற பச்சிளம் குருத்தை காதல் என்கிற புனிதமான ஆயுதத்தால் பாழ்படுத்தி பின்பு மணிவண்ணன், திருமுருகன் மற்றும் வெற்றிச்செல்வன் ஆகியோருடன் இணைந்து வன்புணர்வு செய்து அந்த பாவப்பட்ட சிறுமி அணிந்திருந்த உள்ளாடையை அவள் வாயில் திணித்து சுடிதார் துப்பட்டாவால் வாயை கட்டி வயிற்றுக்கு கீழே ஆறு அங்குலம் வரை கிழித்து அவள் வயிற்றில் இருந்த கருவை எடுக்க முயற்சி செய்துள்ளனர். எவ்வளவு வலியை அந்த இளம்பிஞ்சு அனுபவித்து இருப்பாள் என்பதை நினைக்கும்போதே நெஞ்சு வெடிக்கிறது.

டிசம்பர் 29 காணாமல் போன அன்றே காவல் துறை நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்படிப்பட்ட கொடூர மரணத்தை தடுத்து இருக்கலாமே. ஆனால் இந்த கேடுகெட்ட நாட்டில் நீதி, பாதுகாப்பு எல்லாம் பணக்கார,அதிகார வர்க்கத்திற்கு மட்டும்தானே?! விஷ்ணுபிரியாவிற்கோ நந்தினிக்கோ இறந்த பிறகு கூட கிடைக்காது இந்த சனநாயக நாட்டில்.

சனவரி 15ஆம் தேதி தான் நந்தினி உடலை கிணற்றில் இருந்து கைப்பற்றி இருக்கிறது காவல்துறை. முதல் தகவல் அறிக்கையில் ராஜசேகரன் பெயர் சேர்க்கப்படவில்லை. மணிகண்டனும்,மணிவண்ணனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததாக முதல் தகவல் அறிக்கையில் பொய்யாக புனையப்பட்டுள்ளது (அப்போது தான் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும், வழக்கு நிலைக்கும் என்று ஏவல் துறை யாருக்கோ பயந்து சப்பைக்கட்டு சொல்லி சமாளித்து அனுப்பி உள்ளது நந்தினி குடும்பத்தாரை). கொலைகாரர்கள் என நந்தினி குடும்பத்தாரால் குற்றம் சாட்டப்பட்ட திருமுருகன் மற்றும் வெற்றிசெல்வன் இன்னும் கைது செய்யப்படவில்லை.

நந்தினியின் தமக்கை சிவரஞ்சனி, நந்தினி உடலை கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை என்னிடம் காட்டிய போது  அந்த கணத்தில் அவர்கள் எப்படி துடித்துப் போயிருப்பார்கள் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. ஈழத்தில் இசைப்பிரியாவிற்கு சிங்கள காடையர்களால் நடந்த கொடுமைக்கு சிறிதும் குறைவில்லாமல் நடந்தேறி உள்ளது நந்தினி படுகொலை. ஏன்..இப்படி ஒரு கோரமான முடிவு இந்த சகோதரிகளுக்கு? பெண் என்பதாலா...இல்லை..தட்டிக் கேட்க ஆளில்லாத அனாதைகள் ஆகிவிட்டோம் என்றா? 

நான் சென்ற அன்று பொதுவுடைமை கட்சியின் ஒரு பிரிவான தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தோழர்கள் அங்கு வருகை தந்து முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றை குறிப்பெடுத்துக் கொண்டார்கள். 

இந்த வழக்கு அரியலூர் மாவட்ட  குற்றவியல் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிறப்பு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று நீதிமன்றத்தின் அனுமதி கோரி உள்ளார் ராசக்கிளி அவர்கள். வழக்கை CBCIDக்கு மாற்றச் சொல்லிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது.







தற்போதைக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணம் மட்டுமே வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான நிவாரணத்தொகையை குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்,குற்றவாளிகள் மிகக் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும்..அவர்களுக்கு மரண தண்டனயை கொடுத்து உடனே உயிரை பறித்துவிடக்கூடாது; ஒவ்வொரு நொடியும் அவர்கள் செய்த பாவத்தின் சம்பளத்தை பெற்றுக் கொண்டே இருக்கக்கூடிய வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.

இறந்து போன அந்த சிறுமியின் தாயாரிடம் முகநூல் அன்பர்கள், நண்பர்கள் சார்பாக ஒரு சிறு தொகையை அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க, வற்புறுத்தி கொடுத்து விட்டு கனத்த இதயத்தோடு விடைபெற்றேன்..வழக்கறிஞர் மற்றும் பல நல்லிதயங்கள் அவர்களுடன் இருக்கிறார்கள் என்கிற ஒரு மனநிறைவு கிடைத்தது கள ஆய்வில்.



ஆதரவற்ற அந்த தாய்க்கு உதவ நினைப்பவர்கள் கீழ்க்கண்ட அவரது வங்கிக் கணக்கிற்கு தங்களால் இயன்றதை அனுப்புங்கள். தொகை அனுப்பியதற்கான தகவல் இங்கு கீழ்க்கண்ட பின்னூட்டத்தில் இட்டால் அவர்களிடம் தொடர்பு கொண்டு பணம் கிடைக்கபெற்றதை உறுதி செய்கிறேன்,


நந்தினி தாயார் திருமதி ராஜகிளி வங்கிக்கணக்கு விவரம்

பெயர்: RAJAKILI R
சேமிப்பு கணக்கு எண் : 36478637982
 STATE BANK OF INDIA, IRUMBULIKURICHI
IFSC : SBIN0007585