Sunday, October 16, 2016

புவி வெப்பமயமாதல் தடுப்பு தீர்மானம் - அரசின் இரட்டை வேடம் அம்பலம்

மக்கள் இன எழுச்சி விடுதலைப் போரில் அப்பாவி மக்களை கொத்துக் குண்டுகள் போட்டு இனப்படுகொலை செய்த இலங்கையோடு கைகோர்த்துக் கொண்டு தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று தீர்மானம் போட்டது போல நகைப்புக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது-2016-கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில்
அது..புவி வெப்பமயமாதலை தடுப்பது

சாலை வசதி என்பது அரசின் அடிப்படைக் கடமை. அந்த கடமையை தனியாருக்கு தாரை வார்த்து மக்களின் மேல் சுங்க வரி சுமையை ஏற்றும் மோசமான அரசுகள் முந்தைய காங்கிரசின் ஐக்கிய முன்னணி அரசும் தற்போதைய பாசக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசும்.
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் தஞ்சை-திருச்சி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது பல்லாயிரக்கணக்கான நிழல் தரும், கனி தரும், கரியமல வாயுவை சுத்திகரிக்கும் பெரிய பெரிய மரங்களை வெட்டி வீழ்த்தியது அப்போதைய நடுவண் அரசு. சுங்க வரிச் சுமையோடு வெயிலின் கொடுமையையும் பற்றி அவ்வழிப்போக்கர்களை கேட்டால் தெரியும் இன்று.
இன்றைய பாசக அரசு தஞ்சாவூர் -நாகப்பட்டிணம் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் சாலையோர மரங்களை மனசாட்சியே இல்லாமல் வெட்டி வீழ்த்தி, கண்மாய்களை மூடி வாய்க்கால்களை அடைத்து இயற்கைக்கு பெரிய அச்சுறுத்தலை அராஜகத்தை செய்துவருவதைப் பற்றி அக்டோபர் 15,2015இல் பதிவு போட்டு இருந்தேன்.
இப்படிப்பட்ட ஓர் அரசு புவி வெப்பமயமாதலைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறுவது, தீர்மானம் நிறைவேற்றுவது நகைப்புக்குரியது; மக்களை முட்டாளாக்கும் செயல்.
தஞ்சை- நாகை சாலை விரிவாக்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்ட இயற்கைப் பேரழிவிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இரட்டைவேடத்திற்கு சாட்சி கீழ்க்கண்ட புகைப்படங்கள்...

காதல்

LONELY DOLL க்கான பட முடிவு
என் தனிமை,
உனது
கடந்த கால
அன்பிற்கான
காணிக்கை...!!!
துணையோடு
நீ  இருந்தாலும்
நான்  தனித்து இருப்பதை
மட்டுமே ஏற்கும் உன்  மனம்...

Tuesday, October 11, 2016

கீழடியில் தமிழன் காலடி
2500 ஆண்டுகளுக்கு முன் தமிழன் நாகரிகத்தின்  உச்சியில் இருந்தான் என்பதற்கான வரலாற்று சாட்சி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் கிடைத்துள்ளது.


நம் மூதாதையர் வாழ்ந்த பூமியில் என் காலடி பதிக்க வேண்டும், அவன் வாழ்ந்த சிறப்பை காணவேண்டும் என்று ஆவலில் மதுரைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டேன். கீழடி சிவகங்கை மாவட்டம் என்றாலும் மதுரையில் இருந்து ௧௨ (12)கி.மீ தொலைவில் தான் உள்ளது. மதுரை காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் கடந்தால் மதுரை -இராமேசுவரம், திருச்சி-திருநெல்வேலி சாலை  நான்காக பிரியும். அதில் இராமேசுவரம் செல்லும் சாலையில் புளியங்குளம் கடந்து சிலைமண் என்கிற ஊரில் வலப்  பக்கம் சாலை பிரியும். அதில் வழியாக ஒரு கிமீ தூரத்தில் கீழடி உள்ளது.


கீழடி அகழ்வாராய்ச்சி மிகப் பிரபல்யம் ஆகி உள்ளது என்பதற்கு சாட்சி மேலூரில் இருந்து கீழடி  வரை சிறுவர்களை கேட்டால் கூட வழி சொல்கிறார்கள் தெள்ளத் தெளிவாக. மக்கள் அனுதினமும் வந்து தமிழனின் கட்டிட வல்லமையை நாகரிகத்தின் உச்சத்தை அறிந்து உவகை பூரிக்கிறார்கள். அங்கு  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில..

அங்கு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிசங்கள் மழையிலும் வெயிலிலும் அதன் அருமை தெரியாமல் சில்லறை வர்த்தகக் காய்கறி குவியல் போல  கிடக்கிறது. நாம், தமிழர்கள் அங்கு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கான அவசியத்தை அதிகார வர்க்கத்திடமும் வலியுறுத்தி  தமிழன் தொன்மையை  மறைக்க நினைக்கும் நடுவண் அரசின் முயற்சியும் முறியடிக்க வேண்டும்.