கூடங்குளம் அணு உலை-வேண்டாம்

கூடங்குளம் அணு உலை-வேண்டவே வேண்டாம்-காணொளிகள்&கட்டுரைகள்கூடங்குளம் அணு உலை வேண்டுமா? 

வேண்டாமா?


கூடங்குளம் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று ஒரு புறமும்; அவசியம் வேண்டும் என்று மற்றொரு புறமும் குரல்கள் எழுப்பப்படுகின்றன. வேண்டும் வேண்டாம் என்ற விவாதத்தில் ஒவ்வொரு அணியும் பல கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கின்றன. பொது மக்களாகிய நாம் இவற்றின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்வது தேவை. இவ்விவாதத்தில் எழுப்பப்படும் சில முக்கியமான கேள்விகளை தொகுத்துக் கொள்வோம்.
எண் 
ஏன் அணு உலை வேண்டும்? 
ஏன் அணு உலை வேண்டாம்? 
01
நமது மின் பற்றாகுறையைப் போக்க அணு சக்தி மூலம் பெறப்படும் மின்னாற்றல் மிக மிக அவசியம்.
மின் பற்றாகுறையைப் போக்க பாதுகாப்பான பிற மின் உற்பத்தி முறைகளை கையாளலாம். மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கலாம்.

02
இது மிகவும் சுத்தமானதும் சுகாதாரமானதுமாகும். அதன் பாதுகாப்பை அறிவியல் ரீதியாக உறுதி செய்து கொள்ளலாம்.
அணு உலைகள் பிறப்பிலேயே ஆபத்தானவை. அதில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தலைமுறை தலைமுறையாய் பாதிக்கக்கூடியவை; அழிக்கக்கூடியவை; முடமாக்கக்கூடியவை. இதற்கு தீர்வே இல்லை.

03
அணுமின் உற்பத்திச் செலவு பிற மின் உற்பத்தி முறைகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
அணுமின் உற்பத்திச் செலவை, உற்பத்திக்கான காலம், உலை பராமரிப்பு, உற்பத்திக்காலத்திற்குப் பிறகு உள்ள பாதுகாப்பு பராமரிப்பு, அணுக்கழிவுகளை பாதுகாத்தல் ஆகியவைகளுக்கான செலவினங்களையும் கணக்கிட்டால் மிக மிக அதிகம்.

04
விபத்து என்பது எல்லா சூழ்நிலைகளிலும் நிகழக்கூடியது. விபத்து நடக்கிறது என்பதற்காக ரயில் பயணத்தை நாம் தவிர்ப்பதில்லை.
பாதுகாப்பான அணு உலை என்பதில்லை. அணு உலை விபத்தின் விளைவுகள் சாதாரண விபத்துகள் போல் சம்பவ இடத்திலேயே முடிவதல்ல. இதன் கடும் பாதிப்பு தலைமுறை தலைமுறையாய் சந்திக்கவேண்டும்.

05
கூடங்குளம் அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ள இடத்தைப் பற்றிய சர்ச்சை தேவையற்றது.
கூடங்குளம் நிறுவப்பட்டுள்ள இடம் நில அதிர்வுக்கும் சுனாமிக்கும் இலக்காக கூடிய இடமாகும். இது சிறிய அளவிலான எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவை ஏற்படுத்தும் வண்டல் குவியல் மற்றும் பிதுங்கு எரிமலைப்பாறைகள் உள்ளப் பகுதியாகும். இத்தகையப் பகுதியில் இயற்கைச் சீற்றத்திலிருந்து அணு உலையை பாதுகாப்பது இயலாது.

06
பாதுகாப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்களிடம் உள்ள அச்சம் தேவையற்றது.

அணு உலைகளால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பற்றிய ஆய்வு பற்றி மக்கள் கருத்துக் கேட்பு நடத்தப்படவில்லை.
07
பேரிடர் வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் தலைமையில் இயங்கும் பேரிடர் மேலாண்மை கண்காணிப்பகம் கூடங்குளத்தை பூகம்பமோ சுனாமியோ தாக்காது என்று உறுதி கூற இயலாது என்று கூறியிருக்கிறது.

08
பயம் நம்மை ஆட்கொண்டால் வளர்ச்சியைக் காண இயலாது.
பயப்பட வேண்டியமைக்கு பயப்படுவதும், அது தொடர்பான எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும்தான் அறிவுடைமை.

09
விஞ்ஞானியும் முன்னாள் அதிபருமான அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பாதுகாப்பானது என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அணுசக்தி தேவை என்றும் கூறியிருக்கிறார்.
அணு சக்தி ஆய்வில முதல் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் எம்.பி. பரமேஸ்வரன் அணு சக்தி மின்னாற்றலுக்கான மாற்றை காண்பதுதான் புத்திசாலித் தனமானது என்கிறார். ஆனால், அப்துல் கலாம் வானவியல் வல்லுனரான அப்துல் கலாம் அணு குண்டை வெடித்து பரவசம் அடைந்தவர். அணுசக்தியை அவர் வரவேற்று பேசுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. அண்மையில் அணுமின் அதிகாரிகளை பார்த்த அவர் போராடுகின்ற மக்களை சந்திக்காமல் கருத்து வெளியிட்டு அவர் யாருக்கு விசுவாசமாக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.

10
அணு ஆற்றல்தான் உலக முன்னேற்றத்தின், வளர்ச்சியின் எதிர்காலம். அறிவியல் அதில் உள்ள சிக்கல்களை காலப்போக்கில் தீர்த்துக் கொள்ளும்.

அணு ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி வந்த முன்னேறிய நாடுகளே அணு உலைகளை படிப்படியாக மூடுவதென முடிவெடுத்துள்ளன.
11
ஃபுகிஷீமா போன்ற ஆபத்து கூடங்குளத்தில் ஏற்பட வாய்ப்பேயில்லை
நில அதிர்வு வரவே வராது என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட அண்மைக்காலமாக நில அதிர்வுகள் வந்துள்ளன. (எ.க: தாராபுரம்).

12
கூடங்குளத்தில் உருவாகும் அணுக்கழிவுகள் பற்றி கவலையே வேண்டாம். கழிவுகள் அணு உலை வளாகத்திற்கு வெளியே போகாது. குறிப்பாக கடலில் கலக்க மாட்டாது. ஆகவே அணு உலையைச் சுற்றியிருக்கும் மக்கள் அணுக் கழிவு தொடர்பான பாதிப்புகள் பற்றி கவலைப்பட தேவையில்லை.
அணுக் கழிவுகள் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பதைப் பற்றி வெளிப்படையான தகவல்கள் இல்லை. அணுக்கழிவுகளை ருசியா தம் நாட்டுக்கு எடுத்து செல்லும் என்று முதலில் கூறப்பட்ட்து. அவற்றை தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே புதைப்பதாக இருந்தாலும் சரி அல்லது கடலுக்கடியில் புதைப்பதானாலும் சரி அதைப் பற்றிய விவரமோ, சூழலியல் பாதிப்புப் பற்றிய தகவல்களோ இல்லை. நாட்டு ரகசியம் என்னும் பெயரில் இவை மறைக்கப்படுகின்றன.

13
அணுக் கழிவுகளை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகள் சிறப்பாக கையாண்டு வருகின்றன. அந்நாடுகளின் அனுபவங்கள் நமக்கு வழிக்காட்டும்.
உண்மைதான். அமெரிக்காவில் உற்பத்தியான அணு உலைக் கழிவுகளை யூக்கா மலைப்பள்ளத்தாக்கில் 2002 முதல் புதைத்து வந்தது. இப்பகுதியிலிருந்து வெளியேறும் கதிர் இயக்கம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அமெரிக்க அரசு அப்பகுதியில் 100 மைல் சுற்றளவில் 10 லட்சம் ஆண்டுகள் மனித நடமாற்றத்திற்கு தடைவிதித்தது. பின்னர் 2011 முதல் இதனை கைவிட்டது. பரவலாக கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளிலும் பூர்வீக மக்கள் வாழும் பகுதிகளிலும், அறிவிக்கப்படாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் அமெரிக்க அணுக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

15
அணு உலை குளிர்விப்பதற்கான நீர் பேச்சிப்பாறை நீர் தேக்கத்திலிருந்து பயன்படுத்தப்பட மாட்டாது. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
அணு உலையை குளிர்விப்பதற்கு ஒரு நாளுக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாம். இதற்கு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இயற்கை சீற்றத்தாலோ தொழில் நுட்ப காரணங்களாலோ சுத்திகரிப்பு தடைப்பட்டால் சேமிக்கப்பட்ட தண்ணீர் ஒன்றரை நாட்களுக்குத்தான் தாங்கும். இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்களைக் கொண்டுதான் சீர்படுத்த வேண்டும். இது சாத்தியமா? அணு உலைகள் குளிர்விக்கப்படவில்லை என்றால் வெடிக்கும் வாய்ப்பு உண்டு. இதற்கு மாற்று ஏற்பாடு பற்றிய அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இல்லை. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அணு உலைச் சுற்றியுள்ள பகுதிகள் உச்ச நிலைப் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுடைய மீன் பிடித் தொழில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

16
கூடங்குளம் பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்கள் கலாம் அவர்கள் முன்மொழிந்துள்ளார். இவை பகுதி மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை தீர்க்கும்.
கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் குதித்தப்பிறகு அதனை மழுங்கடிப்பதற்கு  லஞ்சமாகத்தான் இத்திட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. இதில் ஒரு சதம்கூட கல்பாக்கத்தில் செயல்படுத்தப்படவில்லையே! ஏன்?

17
வளர்ச்சிக்காக சில இழப்புகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
தற்கால “வளர்ச்சிக்கு” எதிர்கால சந்ததியினரையும் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் அழிப்பது எந்த வகையில் நியாயம்?

18
இழப்பீடுகளுக்கு சட்ட வரையறை கொண்டு வரப்பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் வரை இழப்பீடு தர வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
போபால் விஷக் கசிவினால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கான இழப்பீடு 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. இழப்பீடு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள உச்சவரம்பு உலக அணு உலை வியாபாரிகளுக்கு சாதகமானது. பாதிக்கப்படும் மக்களுக்கு அல்ல.

19
அணு உலை எதிர்ப்பாளர்கள் நாட்டு முன்னேற்றத்தின் எதிரிகள்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் தேச பக்தர்கள். மக்கள் நலனே தேச நலன்.

20
கூடங்குளம் அணு உலை தமிழ் நாட்டின் மின் பற்றாகுறையை தீர்க்கும்.
தமிழ் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின் உற்பத்தி என்பது ஒரு சதத்திற்கும் குறைவானதே. அணு சக்தி மின்சாரம் அறவே நிறுத்தப்பட்டாலும் மின் இழப்பு பெரிதாக இல்லை.

21
தமிழ் நாட்டிற்கு கிடைத்த வளர்ச்சி வாய்ப்புதான் கூடங்குளம் அணு மின் நிலையம். இதை நாம் இழந்துவிடக்கூடாது.
கருநாடகத்திலும் கேரளாவிலும் மக்கள் வேண்டாம் என மறுத்து வெளியேற்றப்பட்ட அணு உலையை தமிழ் நாட்டு மக்கள் மீது திணிப்பது ஏன்? தென் தமிழ்நாட்டை இராணுவ மயமாக்கவும் கொலைக் களமாகவும் மாற்றும் திட்டத்திற்கு நாம் பலியாக வேண்டுமா?

22
பிரான்சு நாட்டில் 75% அணு மின் சக்தியை நம்பித்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் மின் உற்பத்தியில் 20% அணு மின் சக்தியிலிருந்துப் பெருகிறார்கள்.
1979இல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணு உலை வெடிப்பிற்கு பிறகும், 1986இல் ருசியாவில் செர்னோபில் அணு உலை வெடிப்பிற்குப் பிறகும் புதிய அணு உலைகள் அந்நாடுகளில் நிறுவப்படவில்லையே? ஏன்? பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை ஜெர்மனி ஏற்க மறுத்துவிட்டதற்கான காரணம் என்ன?

23
1988இல் தொடங்கப்பட்ட கூடங்குளம் திட்டத்தை அப்பகுதியில் சிலர் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ப்பதன் நோக்கம் என்ன?
1988 இலிருந்தே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சோவியத் யூனியனில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்க அணுகுமுறையில் இருந்த மாற்றங்கள் காரணமாக கட்டமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டம் தற்போது ஃபுக்குஷீமாவிற்குப் பிறகு வீரியமடைந்திருக்கிறது.

24
அணு ஆயுதம் அபாயகரமானதாக இருந்தாலும் நமது தற்காப்பிற்கு அணு ஆயுதம் தேவை. அணு சக்தி தொழில் நுட்பமின்றி அணு ஆயுதம் சாத்தியமில்லை.
ஓவ்வொரு அணு உலையும் பொதிந்த அணுகுண்டுதான். அணு ஆயுதப் போர் மனித குலத்தையே அழிக்கும். அணு உலைகள் எதிரிகளின் கையில் அணுகுண்டுகளாக மாறும் அபாயம் உள்ளது
.
25
ஏறக்குறைய 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தொடங்கப்பட்டுள்ள இத்திட்ட்த்தை தற்போது நிறுத்துவதினால் ஏற்படவுள்ள இழப்பிற்கு யார் பொறுப்பு?
திட்டமிட்ட 7ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இல்லாவிட்டாலும் செலவு செய்யப்பட்டுள்ள வரையில் 2ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை மட்டுமாவது செய்வது நன்மை பயக்கும்
இத்திட்டத்தை அணு மின்னாற்றலாக அல்லாமல் வேறு வகையில் செயலாக்கத் தக்க மின் உற்பத்திக்கு அல்லது பிற பயன்பாட்டிற்கோ மாற்றமுடியுமா என்று சிந்திக்கவேண்டும். அணு உலையினால ஏற்படும் கேடுகளை கணக்கில் கொள்ளாமல், அப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் நிறுவப்பட்டுள்ள இத்திட்டத்தினை செயல்படுத்தியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். நாம் ரூ 1.7 லட்சம் கோடி ஊழலில் இழந்த செல்வத்தைவிட இது பெரிய தொகையல்ல.

26
இது நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது. அணு உலை வேண்டாம் என்பவர்கள் தேச வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
ஆம். எத்தகைய வளர்ச்சியை, வளர்ச்சிப் பாணியை காணவிழைகிறோம் என்பதே கேள்வி? உள்நாட்டுத் தேவைகளுக்கான உற்பத்தியா? ஏற்றுமதிக்கான உற்பத்தியா? நீடித்த வளர்ச்சியா அல்லது குறுகியகால வீக்கமா?

27
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? வெளி நாட்டு பண உதவியுடன் கிருத்துவ அமைப்புகளும் தன்னார்வக் குழுக்களும் இப்போராட்டத்தை நடத்துகின்றன.
இது மக்களின் பிரச்சனை. இது விவசாயிகளின் பிரச்சனை. மீனவர்களின் பிரச்சனை. பெரும்பான்மையான மீனவர்கள் கிருத்து வழிப்பாட்டினர். அதன் காரணத்தினாலேயே கிருத்துவ அமைப்புகளும் போராடும் மக்களோடு நிற்கின்றனர். ஆனால் இது கிருத்துவர்கள் மட்டுமே நடத்தும் போராட்டம் அல்ல. அது சரி, போராடும் கிருத்தவர்கள் இந்திய குடிமக்கள் அல்லவா? அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?

28
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இந்திய-ருசிய நலனுக்கு எதிரானது. அமெரிக்கச் சதி இதன் பின்னணியில் உள்ளது.
தாராப்பூர் அணு உலை அமெரிக்க உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. ஜய்தாப்பூரில் நிறுவப்படவுள்ள பிரண்டாமான அணு உலை பிரான்ஸ் நாட்டு உதவியுடன் நிறுவப்படவுள்ளது. அணு உலை எதிர்ப்பாளர்கள் இவற்றையும் எதிர்க்கின்றனர். அணு உலை எதிர்ப்பு மக்கள் நலன் சார்ந்த்து.

29
இறுதியில் இதன் முடிவு அறிவியல் சம்மந்தப்பட்டது.  அறிவியல் அறிஞர்களின், நிபுணர்களின் முடிவே இறுதியானது.
மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அன்று. அறிவியல் அறிஞர்கள் அதிகாரத்தின் எடுபிடிகளாகவும், சுயநலமிகளாகவும் மாறிவிடும் சூழ்நிலையில் உண்மை செத்துவிடுகிறது.

30
மக்களுக்கும் நாட்டிற்கும் தேவையான இத்திட்டத்தை சில தேசத் துரோக சக்திகள்/விஷமிகள் திசைதிருப்ப்ப் பார்க்கிறார்கள்
இது இறுதியில் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது. குறிப்பாக வேர்மட்ட மக்களின் வாழ்வாதார உரிமைப் பற்றியது. தங்களுக்கு தேவையான வளர்ச்சிப் பாதையை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமைப் பற்றியது. உண்மையான மக்கள் அதிகாரம் பற்றியது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது என்ற நீதிபற்றியது.
31
மக்களிடையே உள்ள அறியாமையைப் போக்கி நாட்டின் முன்னேற்றத்திற்காக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆம், இத்திட்டத்தின் அறிவியல், அரசியல் மற்றும் அறவியல் (நீதி) சார்ந்த அடிப்படைகளை ஓரு திறந்த விவாதத்திற்கு உட்படுத்த அணு உலை எதிர்ப்பாளர்கள் தயார். அணு உலை ஆதரவாளர்கள் இதற்கு தயாரா?
தொடர்புக்கு: அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு,  கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
மின்னஞ்சல்: antinuke.kovai@gmail.com; வலைத்தளம்: http://antinukekovai.blogspot.com
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன்(9443822056);
பொன்.சந்திரன். (9443039630)

அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1
தலைவர் தோழர் பெ.மணியரசன்  கண்டன அறிக்கை!


தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் செயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத் தொழில் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு மின்சாரம் மிகவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகவுள்ள 2000 மெகாவாட் மின்சாரத்தில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அணுஉலைத் திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத்தின் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் ’வேதனை’ப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் திடீரென்று இவ்வளவு அக்கறை ஏற்பட்டது பெரும் புதிராக உள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன்சிங்கிற்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும். நெய்வேலி மின்சாரம் ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் கர்நாடகத்திற்கும், ஒன்பது கோடி யூனிட் கேரளத்திற்கும், ஆறு கோடி யூனிட் ஆந்திரப் பிரதேசத்திற்கும் தரப்படுகிறது. இம்மாநிலங்கள் முறையே காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, பாலாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள உரிமைகளை மறுத்து, வேளாண்மை, குடிநீர் மற்றும் நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம் இராம குண்டத்திலிருந்து 3 கோடி யூனிட் மின்சாரம் ஒருநாளைக்குத் தமிழகத்திற்கு வருகிறது. தமிழக நெய்வேலியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு நாளைக்கு ஒன்பது கோடி யூனிட் போகிறது. 6 கோடி யூனிட் கூடுதலாகத் தமிழகம்தான் தருகிறது.

தமிழ்நாட்டிற்கு இப்பொழுது மின்சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் ஆகும். கர்நாடக, கேரள, ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 26 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போகிறது. நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குக் கொடுத்தால் இப்பொழுதே, மின் உற்பத்தியில் தமிழ்நாடு உபரி மாநிலமாக இருக்கும்.

தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலியம், எரிவளி முழுவதையும் இந்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைத்தால், தமிழ் மக்கள் பெட்ரோல், டீசல், எரிவளி ஆகியவற்றிற்கு அன்றாடம் உயரும் அதிக விலை கொடுக்க வேண்டிய தேவை எழாது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை உச்சநீதிமன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகியவை உறுதி செய்துத் தீர்ப்பளித்த பின்னும் அத்தீர்ப்புகளைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, தமிழகத்திற்குரிய தண்ணீரை, அம்மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன. உச்சநீதிமன்ற – தீர்ப்பாயத் தீர்ப்புகளைச் செயல்படுத்த நடுவணரசுக்கு அதிகாரம் இருந்தும் சுட்டு விரலைக் கூட அசைக்காத பிரதமர் மன்மோகன்சிங் இப்பொழுது, கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிட்டால், தமிழ்நாட்டுத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று ’வேதனை’ப்படுவது முதலைக் கண்ணீர் வடிப்பது தவிர வேறல்ல.

உண்மையில் கூடங்குளம் பெருந்திட்ட அணுமின் நிலைய உற்பத்தியானது தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வர உள்ள பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காகத்தான்! தமிழக மக்களுக்கும், தமிழகச் சிறு தொழில் முனைவோருக்கும் தருவதற்காகக் கூடங்குளம் அணுமின் திட்டம் உருவாக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் உயிருக்கு உலை வைத்து, சாதாரண காலங்களில் கூட கதிர்வீச்சால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கூடங்குளம் அணுமின் உலைகள் உண்டாக்கும் அத்தனை இழப்புகளையும் தமிழர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.  ஆனால் கூடங்குளம் அணுமின்சாரம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குப் பயன்படவேண்டும்.  இதுதான் இந்திய அரசின் திட்டம்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ஓர் உறுதியான எதிர்நிலை முடிவுக்கு வரவேண்டும். கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் ஆதரவு, அதே வேளை கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கும் ஆதரவு என்ற இரட்டை நிலைபாட்டை நீண்ட காலம் அவர் எடுக்க முடியாது.

தமிழக மின்சாரத் தேவைக்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்குமாறு தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.  காற்று, கதிரவன் ஒளி, கடல் அலை, கழிவுப் பொருட்கள் போன்றவற்றின் மூலம் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைத் தான் நாட வேண்டும்.  சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மிக மிக முகாமையானது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை மூட வலியுறுத்திப் போராடும் மக்களுடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து கொள்கிறது. கூடங்குளம் அணு மின்திட்டத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், ஓசூர், திருத்துறைப்பூண்டி, திருச்செந்தூர், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள்: 14.10.2011(கூடன் குளம் அணு உலை வேண்டவே வேண்டாம். Say No to Koodangulam Nuclear Plant Documentry Documentries article against KOODANGULAM NUCLEAR PLANT)