வியாழன், 23 டிசம்பர், 2010

'நாங்கள் தமிழ்ச் சாதி!' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி

[ செவ்வாய்க்கிழமை, 21 டிசெம்பர் 2010, 11:41.33 AM GMT +05:30 ]

பெங்களூருவில் மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை அமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி பிடித்து ஆக்ரோஷம் காட்டியவர்கள் மீண்டும் ஒரு புரட்சி செய்து தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.


கடந்த 12 ஆம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 'நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக வந்திருந்த இலங்கை கண்டி மாகாணத்தின் சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுனில் கே அமரதுங்காவுக்கு கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கறுப்பு கொடி காட்டிய 40 பேரும் பெங்களூரு போலிசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் ரம்யா தயாளன் என்ற ஒரு கன்னட பெண்ணும் அடக்கம்.


கைது செய்யப்பட்ட பின்பு என்ன நடந்தது என்பதை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று ஜாமீனில் வெளிவந்திருக்கும் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த இல.பழனி நம்மிடம் கூறுகிறார்.



டெல்லி மேலிடத்தின் உத்தரவால் எங்களை, பொய்யாக மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்தது காவல்துறை. கைது செய்யப்பட்ட 40 பேரும் வெவ்வேறு சாதி, மதம், கட்சியைச் சேர்ந்தவர்கள்.
காவல்துறை அட்மிஷன் ஷீட்டில் பதிவு செய்வதற்காக எங்களிடம், 'என்ன சாதி?' என்று எங்கள் ஒவ்வொருவரையும் கேட்டார்கள். நாங்கள், 'நாங்கள் தமிழ்ச் சாதி' என்றோம். உடனே அந்த அதிகாரி, 'தமிழில் என்ன சாதி?' என்று விடாமல் மீண்டும் கேட்க, 'நாங்கள் தமிழ்ச் சாதி' என்று மீண்டும் உரத்து கூறினோம் ஒரே குரலில், அவரும் வேறு வழியின்றி வாயடைத்துப்போய் அப்படியே பதிவு செய்தார்.


இப்படித்தான் கூற வேண்டும் என்ற எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் வந்திருந்த அத்தனை தோழர்களும் தமிழ்ச் சாதியென கூறியதை கேட்டவுடன் மெய் சிலிர்த்துவிட்டது.
சாதியையும், மதத்தையையும் சொல்லி தமிழனை பிரித்தாளும் எண்ணம் இனி எவனுக்கும் வந்திட கூடாதென்பதை கன்னட பொலிஸாருக்கு நாங்கள் உணர்த்தி விட்டோம்," என்றார் பெருமிதத்தோடு...


சாதி சட்டையை களைந்து விட்டு இனியாவது தமிழனாக வாழ பழக வேண்டும் தமிழன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக