வியாழன், 23 டிசம்பர், 2010

வாய் பேசமுடியாத, காது கேட்காத பிள்ளையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் - ஒரு இளம் விதவைத் தாயின் புலம்பல்-கிளிநொச்சி


கணவனை பறிகொடுத்து, வாய்பேச முடியாத, காது கேட்காத என்னுடைய பிள்ளையுடன் நிர்க்கதியாக நிற்கிறேன்  என ஒரு இளம் விதவைத் தாய் புலம்புகிறாள். “வன்னி ஆனந்தபுரம் யுத்தத்தில் 2009ம் ஆண்டு 3ம் மாதம் 5ம் திகதி நடந்த சண்டையில் என்னுடைய கணவர் கொல்லப்பட்டார். அவருடைய சடலத்தை பார்த்தோம். வீட்டிற்கு கொண்டு வரக்கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது வாய்பேச முடியாத, காது கேட்காத என்னுடைய பிள்ளையுடன் நிர்க்கதியாக நிற்கிறேன். என ஒரு இளம் விதவைத் தாய் புலம்புகிறாள்.


என்னுடைய கணவர் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தார். அவருடைய இயற்பெயர் பிரபாகரன். இயக்கப்பெயர் லக்ஸ்மன். என்னுடைய பெயர் கலாரஞ்சினி எனக்கு 34 வயதாகின்றது. எங்களுடைய பிள்ளை தமிழ் அன்பன் தற்போது 4வயது. அவருக்கு காது கேட்காது. வாய்பேச மாட்டார். இது பிறப்பிலேயே வந்தது என சிலர் கூறுகின்றார்கள். இன்னும் சிலர் இடையிட்டு 
வந்தது என்கிறார்கள்.

முடிந்த வரைக்கும் வைத்தியம் பார்த்தாயிற்று ஒன்றும் முடியவில்லை. கணவரும் இல்லை அன்றாட வாழ்க்கைச் செலவிற்கே பெரும் கஸ்டமாக இருக்கின்றது. மேற்கொண்டு எந்த வைத்தியமும் பார்;க்க முடியவில்லை. தற்காலிகமாக கேட்கும் இயந்திரம் ஒன்றை நன்கொடையாளர் ஒருவரின் உதவியுடன் பொருத்தியிருக்கின்றோம். அதுவும் வேலை செய்கின்றதா என்பது கூடத்தெரியாமல் இருக்கின்றது.

என்னுடைய சொந்த இடம் கொக்குத்தொடுவாய், கருணாற்றுக்கேணி. அங்கே இப்போது இராணுவம் நிலைகொண்டுள்ளது. அங்கே போக முடியாது. யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி நகரில் எனது தாயாருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

எனது மூத்த சகோதரி மற்றும் இளைய சகோதரி ஆகியோரும் என்னுடன்தான் இருக்கின்றார்கள். மூத்த சகோதரியின் கணவர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். இளைய சகோதரியின் கணவர் யுத்தத்தில் காணாமல் போய்விட்டார். என அப்பாவித்தனமாக தன் துயரம் நிறைந்த வாழ்க்கைப் பக்கங்களை கூறிக்கொள்கிறார்.

யுத்தம் கொடுத்திருக்கின்ற மாறாத வடுக்களை சுமந்து கொண்டிருக்கின்றார்கள் இப்படி எத்தனையோ பெண்கள். இவர்கள் கருணை உள்ளங்களின் நிழலைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தாய் தன் பிஞ்சுக் குழந்தையுடன் அபயம் கொடுப்பவர்களின் வருகைக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார். மனமுள்ள மனிதர்கள் நிழல் கொடுங்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக