ஞாயிறு, 12 டிசம்பர், 2010

சீமான் விடுதலை: நீதி பிழைத்தது

‘தமிழக மீனவன் சிங்கள கடற்படையால் தாக்கப்பட்டால் இனி இங்கிருக்கும் ஒரு சிங்களவன்கூட உயிரோடு திரும்ப முடியாது’ என்று பேசியதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியது கலைஞர் அரசு. வழக்கமாக தமிழனுக்கு அவர் செய்யும் சேவையைப் போல் சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் சீமான். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பேரில் அவர் கைது செய்யப்ட்டது செல்லாது.அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அன்றிலிருந்து நேற்று வரை அந்த வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞர் நேர்நிற்க பயந்து ஓடியது, 16-முறை வாய்தா வாங்கியது, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொன்னது ஆகியவற்றை காரணம்காட்டி கடந்த வாரம் வேறு நீதிபதி பெஞ்சுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதியிடம் சீமான் தரப்பினர் முறையிட்டார்கள். அதன் பேரில் நீதிபதிகள் பிலிப்பி தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகிய இருவர் அடங்கிய பெஞ்சுக்கு நேற்று வழக்கு வந்தது. வழக்கம் போலவே வழக்கை ஒத்தி வைக்க முடியுமா, வாய்தா வாங்க முடியுமா என்று பார்த்தது அரசு தரப்பு. ஆனால் அது நடக்கவில்லை. நீதிபதிகள் அரசு தரப்பை பிடி பிடித்தார்கள். ‘தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை அடைத்தது செல்லாது. விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது’ என்று தீர்ப்பளித்தார்கள்.” என்றவாறு சித்தன் பரபரப்பிற்குள் நுழைந்தார்.

“இன்னொரு விஷயம் தெரியுமா?” என்று கேட்ட சுவருமுட்டி, ” ‘இசைப்பிரியா படுகொலையை வீடியோவில் நீங்கள் பார்த்தீர்களா? அவங்க எப்படி கொலை செய்யப்பட்டிருக்காங்கன்னு தெரியுமா? அந்த மாதிரி-யெல்லாம் பார்க்கிறப்ப சராசரி மனுஷக்கு கூட கோபம்,ஆதங்கம் வருமே…’ என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரை பார்த்து கேட்டிருக்கிறார் நீதிபதி பிலிப்பி தர்மாராவ். இது அங்கே பலரையும் உணர்ச்சிவசப்பட வெச்சுருக்கு.ஒரு மாற்று மொழிக்காரரான அந்த நீதிபதி,தமிழ் பெண்போராளியின் அந்த கொடூர படுகொலையைப் பத்தி..அதுவும் நீதிபதியின் சீட்டில் இருந்து பேசுகிற விஷயம்…அவருக்கு ஒரு சல்யூட் வைக்கணும்பா”- என்றார்

“அப்படி போடு. எதுக்கும் ஒரு முடிவு இருக்கில்ல. என்னதான் அரசு எந்திரத்தை தடைகல்லா போட்டாலும் முடிவுகட்ட ஒருவர் வருவாரில்ல. பிறவு என்ன ஆச்சுது”- கோபாலு

”பிறகு என்ன? உயர் நீதிமன்ற பகுதி பரபரப்பானது. மீடியாக்கள் எல்லாம் சீமான்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரை சுற்றிக்கொண்டு பேட்டி கண்டார்கள். ‘பொருந்தாத ஒரு பிரிவில் பொய் வழக்கு போட்டு கடந்த ஐந்து மாதங்களாக சீமானை முடக்கி வைத்ததற்கு நஷ்டஈடு கேட்டு அரசு மீது வழக்குப்போட இருக்கின்றோம்’ என்று அவர் கூறியதை, அங்கிருந்த உளவு பட்சிகள் மேலிடத்திற்கு கூறின. அதனை தொடர்ந்து வேற ஏதாவது புது வழக்கை போட்டு அப்படியே முடக்கி வைக்க முடியுமா என்ற ஆலோசனை நள்ளிரவு வரை நடந்ததாக சொல்கிறார்கள்.” -சித்தன்

“ச்சே ச்சே, அரசு அப்படியெல்லாம் நடந்து கொள்ளாதுப்பா. எம்புட்டு நல்ல கவர்மெண்ட் தெரியுமா. இப்படி வீணா பழியைச் சொல்றீங்க”- அன்வர் பாய்.

”அதுசரி, ரொம்ப நல்ல கவர்மெண்ட்தான். நாடே அப்படித்தான் பேசிகிட்டு இருக்கு.! நான் விஷயத்துக்கு வர்றேன். இங்கேயும் ஒரு தப்புக் கணக்கு நடந்ததாம். அதாவது இன்னைக்கு வெள்ளிக்கிழமை விட்டா, அடுத்த சனி, ஞாயிறு விடுமுறை நாள்.சீமான் சிறையிலேயேதான் இருந்தாக வேண்டும்.திங்கள் கிழமை வேறு ஏதாவது ‘வழி’ செய்து சீமானை சிறையிலேயே இருக்கும்படி செய்யவும் ஏற்பாடு நடந்தது.

அந்தளவிற்கு காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் அழுத்தம் இருந்ததாம்.

இதற்கிடையில் சீமான் விடுதலைக்காக வேண்டி கட்சியோட தலைமை நிலைய பொறுப்பாளர் தடா ராஜா தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் ஏராளமான தொண்டர்களோடு ஆயிரத்துக்கும் மேல வேலூர் சிறைக்கு காலையிலேயே வந்து குவிந்துவிட்டார்கள். நேரம் ஆக ஆக பெரும் கூட்டம்.இதுல மேள தாள ஆட்டம் வேற.சும்மா பட்டைய கிளப்பிகிட்டு இருந்தாங்க. கூடவே பேராசிரியர் தீரன், திருச்சி வேலுசாமி, கொளத்தூர் மணி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், இயக்குனர் கௌதமன், ஷாகுல் அமீது உள்ளிட்ட பிரமுகர்களும் சிறை வாசலுக்கு முன்பாக வந்து சேர்ந்துட்டாங்க. ஆனால் சென்னையில் இருந்து கோர்ட் உத்தரவு வர தாமதமாகிட்டே இருந்தது.தொண்டர்களின் கொதிப்பும் அதிகமாயிட்டே இருந்தது.’அரசு ஏதோ உள்நோக்கத்தோட தாமதப்படுத்த பார்க்குது. இரண்டு மணி வரைக்கும் பார்க்கலாம். அதற்கு மேலும் தாமதமானால், மொத்த கூட்டமும் பெரும் திரளாக போய் சாலை மறியல் போராட்டத்தில் குதிப்பது’ என்று முடிவு எடுத்தார்கள். இதற்கு அங்கிருந்த தலைவர்களும் ‘சரியான முடிவு’ என்று ஒப்புதல் கொடுத்தார்கள். இந்த தகவலும் அங்கே கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்த உளவு பிரிவு போலீஸ் மூலம் மேலிடத்திற்கு தகவல் போனது..” -சித்தன்.

“அடடே, கேட்கவே திரில்லா இருக்குது. பிறவு என்னதான் நடந்தது? விடுதலை விஷயத்துக்கு சீக்கிரம் வா” என்று பரபரத்தார் கோபாலு

”அந்த விறுவிறுப்பை நான் சொல்றம்பா. சித்தனுக்கு சரியா தெரியாது. முறைப்படி கோர்ட் உத்தரவு ஸ்பீடு போஸ்டில் ரயில் மூலமா வரணும். சென்னையில் இருந்து புறப்படும் அந்த ரயில் மதியம் ஒரு மணிக்கு வேலூர் வரும். ‘நாம் தமிழர்’ இயக்கத்தை சேர்ந்தவங்க அங்கேயும் ஆள் போட்டு கவனித்தார்கள்.அதற்கு பிறகு நடந்த சில வேலைகளை வெளியில் சொல்ல முடியாது. ஒரு வழியாக கோர்ட் உத்தரவு மதியம் ஒன்றரை மணிக்கு உள்ளே போனது. சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் உள்ளே சென்று அடுத்தகட்ட வேலைகளை செய்தார்.இப்படியும் அப்படியுமாக நேரம் இழுத்தடிப்பு நடந்தது.ஒரு வழியாக மதியம் 2.30 மணிக்கு ஐந்து மாத சிறைக் கதவை திறந்துகொண்டு சீமான் என்ற பறவை வெளியே சிறகை விரித்தது.மொத்த கூட்டமும் கரகோஷம். வாழ்த்து குரல்கள் என அந்த இடமே திமிலோகப்பட்டது.எராளமான போலீஸ் காவலை போட்டும் நிலமையை கட்டுப்படுத்த முடியவில்லை. மெயின் கேட்டிற்கு வெளியே பறையாட்ட குழுக்களின் ஆட்டம் பாட்டம் என்று தூள் கிளப்பினார்கள்.நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து அழைத்து வர சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு வந்து சேர இரவு சுமார் எட்டு மணியானது. வழி நெடுகிலும் பொது மக்கள், மற்றும் கட்சி தொண்டர்கள் ஆங்காங்கே வழி மறித்து ஆரத்தி எடுத்து வாழ்த்தியதிலேயே நேரம் கடந்து போனது.முடிவா சொல்லணும்னா காங்கிரஸ் கட்சியும்,திமுக-வும் சேர்ந்து போட்ட திட்டம் பலிக்காம போனதுதான் மிச்சம். வரும் சட்டமன்ற தேர்தல் வரைக்குமாவது அவரை முடக்கி வைக்கலாம்னு பார்த்தார்கள்.இப்போ கனவு கலைந்துபோய் பார்க்கிறார்கள்.”-சுவருமுட்டி.

“அப்படியெல்லாம் ஒன்றும் கவலைப்பட மாட்டார்கள். சீமானின் அடுத்தடுத்த கூட்டத்தை கவனமா டேப் எடுப்பாங்க. ஏதாவது பேசுவார். திரும்பவும் ஒரு வழக்கு போட்டுட்டா போச்சுன்னு தெம்பா இருப்பாங்க”- கோபாலு

“இந்த முறை அது நடக்காதுடி. நீங்க அப்படி ஒரு நினைப்புல இருக்கிறீர்களோ.! டவுசர கழட்டாம விடப்போறதில்லைன்னு அவரும் கவர்மெண்ட் காசுல ஐந்து மாசமா ரூம்போட்டு யோசிச்சுதான் வெளியே வர்றாரு.பொறுத்திருந்து பாருங்க” என்றபடியே காந்தி சிலையை பார்த்தார். மீண்டும் ஒரு முறை ‘பாவம் காந்தி’ என்ற சுவருமுட்டி ‘காகித ஓடம் கடலலைமீது போவது போலே மூவரும் போவோம்’ என்று பாட, “கொஞ்சம் நிறுத்து. இப்ப எதுக்கு அந்த பாட்டை பாடுறே” என்றார் கோட்டை கோபாலு.

”நம்ப முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதின பாட்டுதாம்பா அது. காலத்தின் கோலம் இப்போ அவருக்கே சரியா பொருந்துதேன்னு பாடுறேன்”- சுவருமுட்டி

“அப்படி போடு! ஆரம்பிச்சுட்டான்யா கச்சேரியை. என்னத்தையோ வம்புக்கு இழுத்துகிட்டு வரப்போறாங்கிறது மட்டும் தெரியும். சரி சொல்ல வர்றதை முதலில் சொல்லு”- கோபாலு

”இது கதையல்லப்பா நிஜம். அவ்வளவும் ரத்தமும் சதையுமா செத்து விழுந்த ஈழத்து உறவுகளின் சாபம்.தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.இப்போவெல்லாம் ஊடகத்தில சும்மா பரபரப்பா நடந்துகிட்டே கொல்லுது.ஈழத்துல கொத்துக் கொத்தா செத்து விழுந்த பிஞ்சுகள் எத்தனை ஆயிரம் பேர் இருக்கும். பெண்கள், ஆண்கள், வயதானவர்கள்னு செத்தவங்க எத்தனை ஆயிரம் பேர் இருக்கும். கைய, கண்ணை கட்டி நிர்வாணமா சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம் பேர் இருக்கும்.அம்புட்டு பேரும் ‘இந்தியா வந்து காப்பாத்தும்னு ஏங்கிகிட்டே, எதிர்பார்த்துகிட்டே இல்ல செத்தாங்க. நம்ப வச்சே இல்ல கழுத்தறுத்தாங்க அன்னை சோனியா. அதே போல நம்ப கலைஞர் தாத்தாவையும் இல்ல அந்த மக்கள் கடவுளா நம்பிகிட்டு இருந்தாங்க. தமிழுணர்வை அதிகமா சாப்பிட்டு வளர்ந்தவரு. எப்படியாவது மத்திய அரசை எதிர்த்து நமக்காக எதாவது நல்லதை செய்வாருன்னு இல்ல நம்பினாங்க. அவரும் ‘கடிதம் எழுதியே’ தமிழுணர்வை காட்டினாரு இல்ல.! இந்த ரெண்டு பேராலேயும்தான் ராஜபக்சே அப்படி ஒரு ரத்த வெறியாட்டம் போட்டு இன அழிப்பையே செஞ்சாரு…”

சுவருமுட்டி கூறிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட சித்தன் “அதான் எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சே. நாட்டுக்கே தெரிந்த விஷயமாச்சே. புதுசா என்ன இருக்கு” என்று வெறுப்போடு கேட்டார் சித்தன்.



”பாவம், சும்மா விடாதுய்யா. சோனியா, கலைஞர், ராஜபக்சேன்னு அந்த மூன்று பேரும் இப்போ படுற பாட்டை யோசிச்சுப் பார்த்தீங்களா.ஒரு விஷயம் நேர்கோட்டுல வந்து நிக்குது.பாவத்தின் தொடக்கத்தை அந்த மூன்று பேரும் ஒரே நேரத்துல அனுபவிக்க தொடங்கியிருக்காங்க பார்த்தீங்களா. இதுவெல்லாம் சொல்லியா நடந்தது.”.-சுவருமுட்டி

“யோவ் என்னய்யா பாவம்ஸ யாரு அனுபவிக்கிறாய்ங்க. விளக்கமா சொல்லேன்”- அன்வர்பாய்.

”சொல்றன் கேளுங்க. ஸ்பெக்ட்ரம் ஊழல் எப்ப வெளியாச்சு. 2007-ல் இருந்து பேசிகிட்டு வர்றாங்க. அப்படி ஒண்ணுமே நடக்கலைன்னு ஊத்தி மூடுற வேலையிலதான் இருந்தாங்க. இப்போ என்ன ஆச்சு. பெரிசா வெடிச்சுருக்கு. பாராளுமன்ற கூட்டத்தை இருபது நாளா தொடர்ந்து நடத்த முடியல. வரலாற்று சாதனையா முடக்கி வச்சுருக்காய்ங்க. நீரா ராடியா டேப் வேற நாறடிக்குது.உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடுன்னு சொல்லிக்குற இந்தியாவில்,மந்திரி பதவிய வாங்க புரோக்கர் வேலை-யெல்லாம் நடக்குதுன்னு அமெரிக்காவில் இருக்கிற பேப்பர் எல்லாம் எழுதி ‘புகழ் பாடுது’.பல வெளிநாட்டு சேனல் எல்லாம் காய்ச்சி எடுக்கிறாய்ங்க. காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கிற மூத்த தலைவருங்க எல்லாம் இப்படி ஒரு சோதனையை கட்சி சந்திச்சதே இல்ல. வேல்டு அளவில் கட்சியோட இமேஜ் டோட்டலி டேமேஜ் என்று புலம்புறாய்ங்க. சோனியாவோட சகோதரி ரெண்டு பேருக்கும் இதுல தரகு பணம் போய் சேர்ந்திருக்கென்று சுப்ரமணிய சுவாமி வேற குடைச்சல் கொடுக்கிறாரு. நாடே சிரிக்குது. கேள்வியா கேட்குது. எதுக்கு பதில் சொல்றது? எதுக்கு பதில் சொல்லாம இருக்கிறதுன்னு சோனியாவுக்கு தெரியல. புடவை துணியில மலைய மறைக்க பார்க்கறாய்ங்க. அது நடக்குமா.? சோனியா முகம் மாறிப் போச்சு. பார்த்தீங்களா.? இத்தனை வருஷத்துல இப்படி ஒரு சோதனைய அவிங்க சந்திச்சிருக்க மாட்டாங்க. எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு தவியா தவிக்கிறாய்ங்க.சொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருங்க…

அதே மாதிரி நம்ப கலைஞர் தாத்தாவும்,கடப்பாறைய விழுங்கின கணக்கா இருக்காரு.! தவிப்புன்னா அப்படி ஒரு தவிப்பு.!! நீரா ராடியாவோட கனிமொழி பேசினது, ராசாத்தி அம்மாள் பேசினது, ஆ.ராசா பேசினதுன்னு சந்தி சிரிக்குது. இதுவரைக்கும் ஒரு பதிலையும் அவரால சொல்ல முடியல. என்ன நடந்தாலும் ராசாவோட பதவிய விட்டுக் கொடுக்க முடியாது. கட்சியோட இமேஜ் பாதிக்கும்னு சவால் விட்டாரு. அந்த சவாலும் சரிந்து போச்சுது. பிறவு, சி.பி.ஐ. ரெய்டு எல்லாம் நடத்த முடியாதுன்னு தெம்பா இருந்தாரு. அதுவும் நடந்துடுச்சு. எத்தனை கோடியையாவது கொட்டி இந்த நெருப்பை அணைச்சுடலாம்னு நினைச்சாரு. அதுவும் முடியல. பத்தாக் குறைக்கு ‘தயாநிதிக்கு மந்திரி பதவி கிடைக்க கூடாது. அதுவும் டெலிகாம் துறை கிடைக்க கூடாது’ன்னு பேசினது வெளியாகி குடும்பத்துக்குள்ளேயே ‘இந்தியா- பாகிஸ்தான்’ பிரச்சனைய உண்டாக்கிடுச்சு.வடநாட்டு மீடியா எப்படியெல்லாம் எழுதணுமோ அப்படியெல்லாம் எழுதி ‘புகழ் பாடியிருக்கு’! அவருடைய வாழ்க்கையிலேயே இதுதான் ‘வனவாசப் பகுதி’ன்னு சீனியர் ஆட்கள் சொல்றாய்ங்க. இதுக்கு முன்னாடி சோதனைகளை சந்தித்தவன் இந்த கருணாநிதின்னு பேசித்தான் இருக்காரு. ஆனால் உண்மையில இப்பத்தான் அனுபவிக்கிறாரு. குடும்பத்துக்குள்ளேயும் குழப்பம். கட்சிக்கும் டேமேஜ். அடுத்து என்ன பண்றதுன்னு இருக்கிறாரு. கவிஞர் கண்ணதாசன் எழுதின வனவாசத்தைவிட,நீரா ராடியா டேப்தான் இப்போ உண்மையான வனவாசமா குடையுது. இதுவெல்லாம் எப்பவோ நடந்திருக்க வேண்டியது. ஆனால் இழுத்தடிச்சுகிட்டே வந்து இப்பதான் நிம்மதியிழக்க வச்சிருக்கு.அவரோட முகத்தை நல்லா பாருங்க தெரியும்…

அடுத்தவரான ராஜபக்சேவின் சோதனைய கேளுங்க. ரெண்டு மாதத்திற்கு முன்னமேயே லண்டன் போகவேண்டியதா இருந்தார். முன்னேற்பாடுன்னு ஏதேதோ காரணம் சொல்லி இப்பதான் லண்டன் போக வேண்டியதாச்சு. அங்க என்ன நடந்ததுன்னு ஊர், உலகம் எல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். மனுஷன் என்னமா நெஞ்ச நிமிர்த்திகிட்டு போனார். இப்போ பார். தலை குனிஞ்சு திரும்பியிருக்காரு. அது மட்டுமில்லே, பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி படுகொலை செய்த விஷயம் சர்வதேசத்தையும் திரும்பி பார்க்க வச்சிருக்கு. ராஜபக்சேவை ‘இப்படி ஒரு மனுஷனா’ன்னு கேட்க ஆரம்பிச்சிருக்கு. இசைப்பிரியா ஆயுதப் பயிற்சி எடுக்காதவர். அவர் ஊடகக் பிரிவில்தான் இருந்தார்னு ஒரு சாட்சி வெளிச்சத்திற்கு வந்திருக்கு.போர் முடிந்து மக்கள் ராணுவத்தின் பக்கம் வந்து சரணடைந்-தப்போ இசைப்பிரியவும் வந்திருக்கிறார்.முகாமில் இருந்தவரை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று இப்படி யுத்தத்தில் இறந்துவிட்டார் என்று கதை கட்டியதெல்லாம் பொய் என்று சாட்சி மூலம் அம்மபலப்பட்டிருக்கு. பல நூறு இளைஞர் இளைஞிகளோட மரணமும் இப்படித்தான் கயமத்தனமா நடந்திருக்கு.’எல்லாமும் பொய். இட்டுக்-கட்டியது’என்று சொல்லிவந்த ராஜபக்சேவால் இப்போது வாய் திறக்க முடியவில்லை.இனிமே எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாடு மரியாதையா நடத்துமான்னு வேற அவருக்கு பெரும் கவலை. இப்போ ராஜபக்சேவின் முகத்தையும் நல்லா பாருங்க…

இந்த மூன்று பேருக்கும் சோதனை ஒரே சமயத்தில் வந்திருக்கிறது. யார் சொல்லி இதெல்லாம் நடந்தது?. ஒவ்வொண்ணும் எப்பவே நடந்திருக்க வேண்டிய வாய்ப்பு இருந்தும், ஏன் இப்ப ஒரே காலகட்டத்தில் ‘சோதனை’ வரணும். நல்லா யோசிச்சு பாருங்க. ஈழ தமிழ் மக்கள் விட்ட கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்திருக்கா இல்லையா.? சோனியா, கலைஞர், ராஜபக்சே மூன்று பேருக்கும் கலைஞர் எழுதின ‘காகித ஓடம், கடலலை மீது’ என்ற பாட்டு நல்லா பொருந்தி வருகிறதா இல்லையா…”

“அட ஆமாண்ணே. படகுல நம்ப சோனியா உட்கார்ந்துகிட்டு, கூடவே கலைஞர்,ராஜபக்சேவையும் வச்சுகிட்டு பாடுற மாதிரியில்ல பொருந்தி வருது” என்ற கோட்டை கோபாலு ‘காகித ஓடம், கடலலை மீது, போவது போலே மூவரும் போவோம். ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்- அதுபோல் ஒன்றாய் மூழ்குதல் நன்றோ’ என்று சத்தம் போட்டு பாடினார்.

“அப்படியே ஒரு துண்டை விரிச்சு போடு. போறவங்க வர்றவங்க ‘நல்லா பாடுறாய்ங்கப்பான்னு சில்ற காசு போட்டுட்டு போவாங்க” என்று சிரித்த சித்தன் “கூட்டம் கலைந்தது” என்று எழுந்தார். கடைசியாக ஒரு முறை அந்த பாட்டை பாடிகிட்டே “அந்த மூன்று பேரின் முகத்தையும் ஒரு முறை மனசுல கொண்டு வந்து யோசிங்க,சொன்னதுல உண்மையிருக்கா, இல்லையான்னு தெரியும்”என்ற சுவருமுட்டி பையில் இருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்தார்.”இது கலைஞரின் கனவுத் திட்டம்.இந்த திட்டத்துக்கு நம்பள மாதிரி குடிமகன்கள் ஆதரவு கொடுக்காம விட்டா சாமி குத்தமாயிடுமில்ல” என்று தள்ளாடியபடியே நகர்ந்தார்.

- பா.ஏகலைவன்.
http://www.tamilthai.com/?p=6577
போர்க்குற்ற ஆதாரங்ககளை அனுப்பிவையுங்கள்.
http://www.yarl.com/...showtopic=77243

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக