வியாழன், 30 டிசம்பர், 2010

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் படுகொலை


சிங்கள மொழி தேசிய கீதத்தை எதிர்த்த தமிழ் கல்விப் பணியாளர் மார்க்கண்டு சிவலிங்கம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கொல்லபட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் எனஇலங்கை இராணுவத்தினரால் வலியுறுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் அந்த வேண்டுகோளை எதிர்த்து மார்க்கண்டு சிவலிங்கம், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை மாணவர்களினால் பாட வைக்க அதி தீவிரமாக செயற்பட்டதாகவும், தேசிய கீதம் குறித்து எதிர்க்கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்தே இலங்கை அர்சாங்கத்தின் புலனாய்வு பிரிவினரால் மார்க்கண்டு சிவலிங்கம் கொள்ளை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


*********************************************************************************************************
தேசிய கீதத்தின் மொழி?BBCTamil.com

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினார். 
*****************************************************

சிங்கள மொழியில் தேசியகீதம் பாட மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்! – சுரேஷ் பிரேமசந்திரன்

அரசியல் சாசனந்தின் பிரகாரம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழில் தேசிய பாடப்படலாம். ஆனால் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், சிங்கள அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள் மொழியில் தேசிய கீதம் பாடியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைக்கு துணைபோகும் தமிழ் அரசியல்வாதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது போன்ற செயற்பாடுகளால் தமிழ் மாணவர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய நிகழ்வுகளில் பிரதமர் உரையாற்றும் போது இனங்களுக்கிடையே ஐக்கியத்தை பற்றி உரையாற்றினார். இவ்வாறு ஐக்கியத்தை பற்றி உரையாற்றுபவர்களுக்கு ஏன் தமிழில் தேசிய கீதத்தை கேட்கமுடியாது எனவும் இனங்களுக்கிடையேயான புரிதல் இவ்வாறன செயற்பாடுகளின் மூலம் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது போன்ற விடயங்களுக்கு துணைபோவது, தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளதாகவும், இலங்கை அரசு அரசியல் சாசனத்திற்கு முரணாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்ததுடன் ஊடக அமைச்சர் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என அறிவித்தது பொய்யாகி போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக