ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வளர்ச்சியா...வீழ்ச்சியா?

நாகப்பட்டிணத்தில் வழியாக தஞ்சாவூர் ௮௯ (89)கி.மீ தூரம் தான் என்றாலும் வளைந்து நெளிந்து செல்லும் பாதை என்பதால் இரண்டரை மணி நேரம் பிடிக்கும். இருந்தாலும் களைப்பு தெரியாது..காரணம் இருபக்கமும் வரிசையாக இருக்கும் மரங்கள்..அது தந்த குளிர்ச்சி. மகிளுந்துகளில் செல்பவர்கள் கூட ஆங்காங்கே நின்று இளைப்பாறி பயணத்தை தொடர வழியெங்கும் புளிய மரம், அரசமரம், வேப்பமரம், வாய்க்கால், ஆறு என ஓரளவு பசுமையாக இருக்கும்.  

இனி அப்படி ஏதும் காணக்கிடைக்காது. காரணம் சாலியமங்கலம் அருகே புதிய சுங்கச் சாவடி எனும் வழிப்பறி கொள்ளை சாவடி அமைய போகிறது. அதற்காக பழைய மரங்கள் சகட்டு மேனிக்கு வெட்டப்படுகிறது. இருபுறமும் இருக்கும் வயல்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய்கள் மண்மூடி அடைக்கப்படுகிறது. 

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில்  மழை பொழிய மாட்டேன் என்கிறது மழைக்காலத்தில் கூட. ஒரு பக்கம் தூய்மை இந்தியா..பசுமை இந்தியா என்று வெற்றுக் கூப்பாடு.மறுபக்கம் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் மரங்கள்..காடுகள் அழிப்பு..மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு என நிலங்கள் அபகரிப்பு..என நடுவண் அரசின் சர்வாதிகாரப் போக்கு. 

இந்த மரங்களை வெட்டுவது தேசிய நெடுஞ்சாலை என்ற நடுவண் அரசு நிறுவனம். அந்த மரங்களை அறுக்க வெட்ட மின்சாரம் எடுப்பது மாநில அரசின் மின் கம்பங்களில் இருந்து. இப்படி மின்சாரம் திருட போதிய அனுமதி பெற்று இருக்கிறார்களா? தெரிந்தா தெரியாமலா?


உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இதே போன்ற சாலை குறுக்கே அம்பானி வீடோ, குழுமமோ இருந்தால் இப்படி இடித்து தரை மட்டம் ஆக்கும் தைரியம் அரசுக்கு உண்டா?

கேட்க ஆளில்லை என்றால் ரிஸ்வான் போன்ற அப்பாவிகளை  பிடரியில் கை வைத்து இழுத்துப் போகும் காவல் துறை கே என் நேருவிடமும் யுவராசுகளிடமும்  கூனி குறுகி நடந்து கொள்கிறது தங்கள் எஜமான் திராவிட ஆரிய அரசர்களைப் போலவே.