திங்கள், 26 அக்டோபர், 2020

பெண்கள் வேலைக்குச் செல்வதும் சமுதாயச் சிக்கலும்

        "பெண்கள் எல்லாம் வேலைக்குச் செல்வதால் தான் ஆண்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் எவள்  சங்கிலியை அறுக்கலாம், கடை எப்போ திறப்பான் மற்றும் அதற்குப் பிறகான சமூகச் சிக்கலுக்கும் அடித்தளம்; நீ போய் சம்பாத்தித்து விட்டு வாடா என்று சொல்வது தான் பெண்ணிற்கான அதிகாரம்"  என்று ஒரு தோழரிடம் சொன்னேன். "பெண் என்பவள் இல்லத்தரசி;இல்லாள். இல்லத்தை ஆள்கின்ற இந்த கடமையில் இருந்தும் ,  தன் மகனை நல்ல  குடிமகனாக கண்காணித்து வளர்ப்பதில் இருந்தும் தவறுவதால் தான் இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கும் பெண்ணே காரணம் ஆகிறாள்" என்றேன் 

                    அப்படிப் போய் சம்பாதிக்க ஆண் தவறினால்? என்று எதிர் கேள்வி கேட்டார். எந்த சட்டங்களும் விதி விலக்குளை கொண்டு உருவாவது இல்லை. வினையே ஆடவர்க்கு உயிரே என்பது தான் தமிழர் கோட்பாடு.  கணவன் கொண்டு வந்து கொடுக்கின்ற பொருளில் குடும்பம் நடத்துபவளே சிறந்த நிர்வாகி 

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

                           வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

இவள் ஒரு பெரிய கற்பனைக் கோட்டையை கட்டிக்கொண்டு அதற்கு அவனை செக்கு மாடாக மாற்றுவாள் ஆனால் அங்கு மகிழ்ச்சி தங்காது; தர்க்கத்தில் தொடங்கும் வாழ்க்கை தகராறில் தான் முடியும். 

   பெரும்பாலான மண முறிவிற்கு. நவீன நுகர்வுப் பழக்கங்களை வாழ்வியலாக மாற்றி அதற்கான முகவர்களாக பெண்களை தூண்டி கணவன்மார்களின் நச்சரிப்பு எந்திரங்களாக பெண்களை மாற்றும் பெருங்குழும சூழ்ச்சிகளும் உளவியல் காரணம். 

        ஓர் ஆண் சம்பாதிக்கத் தவறினால், அசம்பாவிதம் காரணமாக குடும்ப தலைமைப் பொறுப்பை  பெண்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வேலைக்குச் செல்வதில் தவறு இல்லை. அப்போது  படித்த பெண்கள் சும்மா இருக்க வேண்டுமா? பெண்களுக்கு படிப்பு தேவை இல்லையா என்றால் கல்வி என்பது வேலைக்கான திறவுகோல் என்பது புதிய உலகத்தின் வணிக சதி. கல்வி அறிவின் வாசல். இருண்ட வீட்டில் குடும்ப விளக்கை எற்றுவதற்கு பெண் கல்வி அவசியம்.

           பெண்கட்குக் கல்வி வேண்டும்
          கல்வியைப் பேணுதற்கே -பாரதிதாசன் 

   வேட்டையாட கற்றுக்கொள்வது காட்டில் செல்லும்போது தாக்க வரும் மிருகங்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே. அதைவிடுத்து நாட்டில் உலாவும் போதும் தான் வேட்டையாடக் கற்றுக்கொண்டேன் என வித்தை திறமையை காட்டினால்? ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதும், பக்கத்துக்கு வீட்டில் வேலையில்லாமல் திண்டாடுவதும் எப்படி ஒரு சமதர்ம சமுதாயத்திற்கு வழிகோலும்?

            ஆங்கிலேயர்களைப் போல நாம் பெண்களை வீக்கர் செக்ஸ் என அடையாளம் குத்துவதில்லை. அவர்களுக்கான அதிகாரமும் பங்களிப்பும் சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. சங்கப் புலவர்களில் கால் விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் பெண் புலவர்கள். மன்னனுக்கு அறிவுரை சொல்லவும், அவன் தவறுங்கால் இடித்துரைக்கவும், தன் ஒரே மகனை, வீட்டில் அனைவரும் போரில் மடிந்த பின்னும், போருக்கு செல்வது உன் கடமை என வீரத் திலகமிட்டு அனுப்பி வைத்த, நாடும் வீடும் வேறு வேறல்ல என்று எண்ணிய ஆளுமை உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்கள் சமுதாயம் நமது 

            அப்போ பெண்கள் பொதுத் தளந்திற்கு சமூக சேவை ஆற்றக்கூடாதா?
     வீடு உயர குடி உயரும்; குடி உயர நாடு உயரும். நற்குடிமகன்களை உருவாக்கும் தன் முதன்மைக் கடமையில் இருந்து வழுவி நீ எந்த ஒரு பணி செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீரே, அந்த கடமை செய்து நேரம் இருந்தால் சமூக சேவை ஆற்ற வா. முதன்மைக் கடமையிலே  சமூக சேவையும் அடங்கிவிடுகிறது. காலப்போக்கில் அது தேவை அற்றதாகவும் ஆகிவிடும் 

,,,இந்த பதில்களை கேட்டு மெளனமாக சென்றார் அவர், திரும்பி வந்து ஆணாதிக்கம், பிற்போக்காளன் எனத் தாக்குவோரோ எனத் தெரியவில்லை., அந்தத் தோழர் நீங்களாக இருந்தால்?


சனி, 10 அக்டோபர், 2020

பிரச்சனை குழந்தை அல்ல..

 

கேட்டதில் பிடித்தது:

இன்று கொடைக்காணல் வானொலியில் குழந்தை மன நல மருத்துவர் ஒருவர் பேசினார். நேயர்கள் அனைவரும் அருமையான கேள்வி கேட்டார்கள். அதற்கு மிகச் சிறப்பான பதில் தந்தார் அந்த அம்மையார். (பெயர் தெரியவில்லை )

அவருடைய ஆசிரியர் சொல்வாராம் "YOU ARE NOT PROBLEM; PROBLEM IS PROBLEM" என்று. குழந்தைகள்,  பிரச்சனை அல்ல. அவர்களின் பிரச்சினை தான் இடர்பாடு.. நாம் அணுகி தீரவு காணவேண்டியது குழந்தைகளின் பிரச்சினையையே. குழந்தைகளை பிரச்சனையாக பார்த்தால் ஒரு போதும் தீர்வு கிடைக்காது என்று