Sunday, February 24, 2013

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல;அவசியம்

நாகப்பட்டிணத்தில் இன்று (24/02/2013) நாம் தமிழர் கட்சி சார்பாக நாகை நகர அமைப்பாளர்கள் தங்கம் நிறை செல்வம்,ராஜேசு,மணி செந்தில்  மற்றும் விஜயன் முன்னேற்பாட்டால் பொதுக்கூட்டம் அவசரகதியில்  விளம்பரங்கள் அறிவிப்புகள் இல்லாமல் கூட்டப்பட்டதாக இருந்தாலும் ஓரளவு திரளான மக்களோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு  தோழர் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்,திருச்சி திரு.வேலுச்சாமி, நாம் தமிழர் சாகுல் ஹமீது,கல்யாண சுந்தரம்  அவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழினத் தாய்க்கு மருத்துவம் தராமல் திருப்பி அனுப்பிய, மருந்துப் பொருள்கள் ஏற்றிய கப்பலை ஈழத்திற்கு அனுப்ப இயலாத, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்து பொங்கி எழுந்த புரட்சியை அடக்கிய கருணாநிதியின் டெசோ நாடகத்தை தோலுரித்துக் காட்ட நடந்த கூட்டம்.

"கெட்டிக்காரனின் புளுகு ஏழு நாள்கள் தான்.ஆனால் இங்கு ஒருவர் எழுபது வருடங்களாக பொய்களை மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறார். முத்துக்குமரன் சனவரி 29 அன்று இறந்து மறுநாள் அழகிரியின் பிறந்தநாளின் போது கேக் வெட்டி கொண்டாடிய கருணாநிதி, விடுதலைப் புலிகளை கைகளை கட்டி முதுகில் சுட்டுக் கொன்ற புகைப்படங்களை காட்டி கருத்துக் கேட்டபோது,இந்த புகைப்படங்கள் எவ்வளவு தூரம் உண்மையோ என தெரியாது என்று கூறி விட்டு,இன்று பாலகன் பாலச்சந்திரன் புகைப்படத்தை பார்த்து விட்டு நெஞ்சு பதறுவதாக நாடகம் ஆடுகிறார்" என தோழர் கல்யாணசுந்தரம் தெலுங்கனின் தோலுரித்துக் காட்டினார்.

பாலகன் பாலச்சந்திரனையும் தீவிரவாதி என்ற ராஜீவ் கொலையாளி சுப்ரமணியசாமி தொ.கா.பேட்டியின் போது ஜெயின் கமிசன் உங்களை குற்றவாளி எனக் கூறி உள்ளதே என சுபவீ கேட்டபோது புறமுதுகு காட்டி ஓடியதை ஞாபகம் கூர்ந்த கல்யாணசுந்தரம் டெசோ மாநாட்டு அறிக்கையை ஐநாவில் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் தாக்கல் செய்த ஸ்டாலினின் தில்லுமுல்லு ஆட்டத்தையும் தோலுரித்துக் காட்டினார்.

மகனோ சிறையில்;தண்டனை அனுபவிப்பதோ தாய். ஒற்றை மகனை பெற்றெடுத்து  கார்த்திகேயன், ரகோத்தமன் இவர்களால் பொய்யாக புனையப்பெற்ற வழக்கில் 22 வருடங்களாக ஒரு தவறும் செய்யாது தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் குமுறிய போது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரின் இதயமும் குலுங்கியது உண்மை. "தவறே செய்யாவிட்டாலும் பழியை தன் மீது போட்டுக் கொள்கிற தமிழனாய் பிறந்துவிட்டோம். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டு இன உணர்வோடு வாழ்ந்தோம்,இதைத் தவிர வேறு தவறு எதுவும் செய்யவில்லை" என அந்த தாய் சிந்திய கண்ணீர் இன்னும் ஈரம மறையாமல் எங்கள் மண்ணில்.

தூக்குக் கயிற்றின் கீழே காலம் தள்ளும் மூவரை "ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கொலையாளிகள்" எனக் கூறாதீர்கள். யாராவது அப்படி பேசும்போது அவர்கள் முன்னே சென்று எனது மகன் கொலையாளி அல்ல என்று உரக்கக் கத்தவேண்டும் போல தோன்றும் எனக் கூறிய போது உன்னத மகனை பெற்றெடுத்த அந்த தாயின் வேதனை புரிந்தது. அவர்களுக்கு சார்பாக பேசும் நாம் கூட அந்த வார்த்தைகளைத் தானே இன்றும் பயன்படுத்துகிறோம். இனியாவது தவிர்ப்போம் அப்படி கூறுவதை.

"ராஜீவ் படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்" எழுதிய மானமிகுந்த ஒரே காங்கிரசுக்காரர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் தனது உரையில் ராஜீவ் காந்தி கொலையான உடனே,விசாரணை ஆரம்பிக்கும் முன்பே விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என சொன்ன அப்போதைய சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமியை இழுத்து வந்து விசாரிக்கத் தவறிய கார்த்திகேயனை சாடினார். 

1973இல் எம்ஜியாரால் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வென்ற போது,முரசொலி மாறன் "எங்கே போற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சர் ஆகி விடுவார் போல" எனக் கூறியதை நினைவு கூர்ந்தார். ஸ்டாலினைப் பற்றி அழகிரியோ,அழகிரியைப் பற்றி கனிமொழியோ பேச பயப்படுகிற காலகட்டத்தில் அனைவரையும் பற்றி தைரியமாக பேசுகிற குஷ்பு அடுத்த  முதல்வராகக் கூடிய வாய்ப்பு உள்ளது என ஆரூடம் கூறினார். மான உணர்வு அற்ற தமிழர்கள் இருக்கும் வரையில் இவர் கூறியது பலிப்பதர்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.


சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக  1500 பிரதிகளுக்கு மேலாக தனது நூல் "ராஜீவ் காந்தி படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்" விற்கப்பட்டதை வேலுச்சாமி கூறிய போது மக்களுக்கு உண்மையை அறிவதில் உள்ள ஆர்வம புரிந்தது. அந்த ஆர்வம்,உணர்வு உண்மையை உரிமையை நிலை நாட்டவும் தயங்காது முன்னெடுக்கப்படும் விரைவில்.

பஞ்சாபில் முதல்வர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவரின் தூக்கு தண்டனை அந்த மண்ணின் மக்களின் வீறுகொண்ட போராட்டத்தால் நடுவண் அரசு அடிபணிந்து நிறுத்தி வைத்தது. ஆகவே அரசாங்கத்தை நாம் குறை கூறி பலன் இல்லை;மக்கள் எப்படியோ அப்படித் தான் அரசன். எனவே மக்களின் புரட்சியே மன்னனின் நிலையை நிலைப்பாட்டை மாற்றும் சக்தி. புரட்சியை முன்னெடுப்போம்; தமிழ் தேசியம் காண்போம்.

கூட்டத்தின் முடிவில் மிக மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இறுதியில் வேலுச்சாமி பேசும்போது..."மூவர் விடுதலை பெற்று வரும்போது "அவன்" வருவான். அவன் வரும்போது இந்த துரோகிகள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள்" என்ற அவரது வார்த்தை. 

வருவான்டா பிரபாகரன்...