ஞாயிறு, 26 ஜனவரி, 2014

வங்கி ஊழியர் போராட்டங்களும் மக்கள் நலனும்

"கார்ப்பரேசன் வங்கி ஊழியர் சங்க" முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், "கார்ப்பரேசன் வங்கி ஊழியர் பிரதிநிதி இயக்குனர் (Workmen direction in Coporation Bank)ஆக இருந்தவருமான, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொருளாளரும் ஆன தோழர் ரகுராமன் அவர்களின் உரை கேட்கக் கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிட்டியது.

மூலதனத்தில் வலுவாக இருந்த அமெரிக்க வங்கிகள் எல்லாம் சீட்டுக் கட்டு போல ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்த போதும் இந்திய வங்கிகள் நிலைத்து இருப்பதற்கு காரணம் வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர் போராட்டங்களும், முந்தைய, இன்றைய நடுவண் அரசின் தனியார்மயம் ஆக்கும் முயற்சிகளை வங்கி ஊழியர் சங்கங்கள் எப்படி எல்லாம் தடுத்து நிறுத்தி இந்திய வங்கிகளின் தனித் தன்மையை கட்டி காக்கிறது என்பதையும் மிகத் தெள்ளத் தெளிவாக பேசினார்.

வங்கி ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழந்தும் போராடுவது மக்களுக்காக இந்த வங்கிகள் இருக்கவேண்டும் என்றும்,எதற்காக இவைகள் தேசியமயம் ஆக்கப் பட்டதோ அதிலிருந்து சிறிதும் விலகக் கூடாது என்றும் தான். தங்கள் ஊதியத்திற்காக போராடுகிறார்கள் என்றால் இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வேலை நிறுத்தம் செய்வார்கள்.

மக்களுக்கு விரோதமாகவும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் நடுவண் அரசுகளை கண்டித்தும்;பொதுத் துறை ஆக்கப்பட்டதன் நோக்கத்தில் இருந்து வங்கிகள் சற்றும் விலகாமல் பார்த்துக் கொள்ளவும்;மக்கள் பணத்தை கடனாக பெற்று சொத்துக்கள் சேர்த்து அதனை திருப்பி செலுத்த மறுக்கும் பெரும் கடனாளிகள் பெயர் பட்டியல் வெளியிட சொல்லியும்;அத்தகைய கடனை வசூலிக்க கடுமையான சட்டம் தேவை, வசதி இருந்தும் கடனை திருப்பி செலுத்தாது இருப்போரை குற்றப் பிரிவு நடைமுறை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் போராடுகின்றன வங்கி ஊழியர் சங்கங்கள் என்பதை விளக்கினர்   அந்த கூட்டத்தில் பேசிய தோழர் அனந்தநாராயணன்,தோழர் இராமதாசு,தோழர் குமரேசன் & தோழர் சிறீதரன் ஆகியோர்.

தோழர் ரகுராமன் உரையின்  பிற்பாதி பதிவு மட்டும் பதிவேற்றம் செய்துள்ளேன்.


மக்களுடன் இணைந்த மக்கள் நலனுக்கான தொடர் போராட்டங்கள் வெல்லட்டும்!!!
(com Raghuraman bank strike government privatising public sector banks)

சனி, 11 ஜனவரி, 2014

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள்-தமிழர் எழுச்சி இயக்கம் அழைப்பு

அன்பார்ந்த தமிழ் சொந்தங்களுக்கு,

வணக்கம் தமிழர்களின் இன அடையாளத்தை வெளிபடுத்தும் வகையில், 1921ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் திருவள்ளுவரின் பெயரில் உருவாக்கப்பட்ட சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

இதை சட்ட நிலையில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி 1993ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மயிலை திருவள்ளுவர் சிலையில் இருந்து ஊர்வலமாக பரப்புரை செய்து வந்தோம்

அதன் தொடர்ச்சியாக 2008ஆம் ஆண்டு சுறவம் (தை) முதல் நாளை  தமிழ்ப் புத்தாண்டு தமிழக அரசு அறிவித்தது. அனால் அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பழைய நிலைக்கே தமிழ்ப் புத்தாண்டு மாற்றப்பட்டது.

இத்தகைய நிலையற்ற நிலைக்கு மாற்றாக.. சுறவம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற உணர்வை தமிழ் மக்களிடையே உணர்த்திடவும், நடைமுறை படுத்திடவும் எண்ணினோம். அதனடிப்படையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டதே சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடப்படும் தமிழ்புத்தாண்டு.

இதை சாதி, மதங்களை கடந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து கொண்டாடி வருகிறோம். நான்காம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் வருகின்ற சிலை 29, தி.பி. 2044 (13-01-14) அன்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறம் (இராணி மேரி கல்லூரி எதிரில் ) மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை நடத்திட உள்ளோம்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டுகள், கலை நிகழ்சிகள், சான்றோர்களை போற்றுதல் ஆகியவற்றில் தமிழ் குடும்பங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் வாணவேடிக்கைகள் நிகழ்த்திடவும், வண்ண விளக்குடன்  திருவள்ளுவரின் உருவப்படத்தை பறக்க விடவும் உள்ளோம். நிகழ்ச்சியின் இறுதியில் வருகை தரும் தலைவர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தமிழ் குடும்ப உணர்வோடு ஒன்றுகூடி நடனம் ஆடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தமிழ் சொந்தங்களாக வருகை தந்து தமிழ் பண்பாட்டை மீட்க உறுதி ஏற்போம். நன்றி.
                                                                                                                                                             
ப.வேலுமணி
பொது செயலாளர்
தமிழர் எழுச்சி இயக்கம்