சனி, 11 ஜனவரி, 2014

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள்-தமிழர் எழுச்சி இயக்கம் அழைப்பு

அன்பார்ந்த தமிழ் சொந்தங்களுக்கு,

வணக்கம் தமிழர்களின் இன அடையாளத்தை வெளிபடுத்தும் வகையில், 1921ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் திருவள்ளுவரின் பெயரில் உருவாக்கப்பட்ட சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

இதை சட்ட நிலையில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி 1993ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மயிலை திருவள்ளுவர் சிலையில் இருந்து ஊர்வலமாக பரப்புரை செய்து வந்தோம்

அதன் தொடர்ச்சியாக 2008ஆம் ஆண்டு சுறவம் (தை) முதல் நாளை  தமிழ்ப் புத்தாண்டு தமிழக அரசு அறிவித்தது. அனால் அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பழைய நிலைக்கே தமிழ்ப் புத்தாண்டு மாற்றப்பட்டது.

இத்தகைய நிலையற்ற நிலைக்கு மாற்றாக.. சுறவம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற உணர்வை தமிழ் மக்களிடையே உணர்த்திடவும், நடைமுறை படுத்திடவும் எண்ணினோம். அதனடிப்படையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டதே சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடப்படும் தமிழ்புத்தாண்டு.

இதை சாதி, மதங்களை கடந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து கொண்டாடி வருகிறோம். நான்காம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் வருகின்ற சிலை 29, தி.பி. 2044 (13-01-14) அன்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறம் (இராணி மேரி கல்லூரி எதிரில் ) மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை நடத்திட உள்ளோம்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டுகள், கலை நிகழ்சிகள், சான்றோர்களை போற்றுதல் ஆகியவற்றில் தமிழ் குடும்பங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் வாணவேடிக்கைகள் நிகழ்த்திடவும், வண்ண விளக்குடன்  திருவள்ளுவரின் உருவப்படத்தை பறக்க விடவும் உள்ளோம். நிகழ்ச்சியின் இறுதியில் வருகை தரும் தலைவர்கள், கலைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தமிழ் குடும்ப உணர்வோடு ஒன்றுகூடி நடனம் ஆடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தமிழ் சொந்தங்களாக வருகை தந்து தமிழ் பண்பாட்டை மீட்க உறுதி ஏற்போம். நன்றி.
                                                                                                                                                             
ப.வேலுமணி
பொது செயலாளர்
தமிழர் எழுச்சி இயக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக