வட அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதுவரை 48 நோபல் அறிஞர்களை உலகிற்கு உருவாக்கித் தந்துள்ளது. உலக மொழிகள் பலவற்றிற்கும் ஆய்வு இருக்கை அமையப்பெற்ற அங்கு, தமிழுக்கு என்று ஓர் இருக்கை செயல்படவேண்டும் என்று அமெரிக்காவில் பணியாற்றும் திரு ஜானகிராமன் & திருஞான சம்பந்தம் இருபது ஆண்டுகளாக போராடி ஒப்புதலைப் பெற்றுவிட்டனர். அதற்கான செலவு $6 மில்லியன் (ரூபாய்.40 கோடி)
ஆய்வு இருக்கை செயல்பட்டால் தமிழின் தொன்மையும் புகழும் உலகறியச் செய்யலாம்.தமிழ் அன்னை நீடூழி வாழ்வாள். அதற்காக நம்மால் முடிந்த ஒரு சிறு தொகை...குறைந்த பட்சம் ஒரு டாலர் ஆவது ஒவ்வொருவரும் கொடை அளித்து தமிழை வாழவைப்போம்.. என்னால் முடிந்த சிறு தொகையை நான் அளித்துவிட்டேன். எனது கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலமாக இதை செலுத்த 3 நிமிடங்கள் தான் ஆனது.
CLICK HERE TO DONATE
இதுபற்றிய தமிழ்த் தேசியக் கண்ணோட்டம் & விகடனில் வந்த கட்டுரைகளை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்
' ஹார்வர்டில் தமிழ்இருக்கையா...அப்படின்னா?' -நிதியை நிறுத்தி வைத்த தமிழக அரசு
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 'ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும்' என போராடி அனுமதி பெற்றனர். ஆனால், தமிழ் இருக்கை அமைப்பதற்காக 45 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறிவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். தற்போது உலகத் தமிழர்களிடம் நிதி வேண்டி நிற்கின்றனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன தமிழ் அமைப்புகள். ' தேர்தல் வாக்குறுதியிலேயே ஹார்வர்டு இருக்கைக்கு உதவி செய்வதாகத் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், அதற்கான எண்ணமே தமிழக அரசுக்கு இல்லை' என வேதனைப்படுகின்றனர்.
இந்நிலையில், ' தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்கும் என தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. அதற்கான சிறு உதவியை செய்யக் கூட தமிழக அரசு தயாராக இல்லை" என ஆதங்கப்பட்டார் ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். இவர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார். பாலச்சந்திரனிடம் பேசினோம். " ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியங்களுக்கான தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். இதற்கு மொத்தமாக 6 மில்லியன் டாலர் பணத்தை பல்கலைக்கழகத்திற்கு அளிக்க வேண்டும்.
இதில், ஒரு மில்லியன் டாலர் பணத்தை மருத்துவர்கள் திருஞானசம்பந்தமும் ஜானகிராமனும் கொடுத்துத் தொடங்கி வைத்தனர். அவ்வாறு தொடங்கி வைத்து, ' இரண்டு வருடங்களுக்குள் மீதி ஐந்து மில்லியன் பணத்தை அளிக்க வேண்டும்' என்பது காலக்கெடு. பல்வேறு தமிழ் ஆர்வலர்களிடம் நிதி கேட்டு வருகிறோம். அவர்களும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி சிலர் வேறுவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள், ' 45 கோடி ரூபாயை ஹார்வர்டு இருக்கைக்குக் கொடுப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க முயற்சி எடுக்கலாமே?' என்கின்றனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம், தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவாக ஒன்றை வெளியிட்டால், உலகம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை ஏற்றுக் கொள்ளும். நம் தமிழ் மீது உள்ள உணர்வின் காரணமாக, ' கல்தோன்றி மண் தோன்றாகக் காலம்' என்று சொல்லிக் கொண்டே இருந்ததால், நம்மைப் பற்றிய உயர்வு நவிற்சி அணி நமக்குள் சேர்ந்து கொண்டது. இதனை உலக அளவில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. வடமொழியின் மீது ஆர்வம் உள்ள சிலர், ' தமிழ்மொழிக்கு எந்த அங்கீகாரமும் கிடைத்துவிடக் கூடாது' என்ற நோக்கில் தீவிரமாகச் செயல்படுகின்றனர். உலக அளவில் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, நமது பெருமைகள் உலகம் எங்கும் சென்று சேரும். இதுவரையில் 48 நோபல் பரிசாளர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. 38 புலிட்சர் விருதுகளைப் பெற்றவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்தான். இங்கு பயின்ற நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் உலகம் எங்கும் பிரதம அமைச்சர்களாகவும் அதிபர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.
1960-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒன்றை அறிவித்தது. ' யோகா என்பது அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. இதன் மூலம் மனதையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்' என்றது. அதன்பிறகு எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே யோகா மாறிவிட்டது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட், இங்கிலாந்தின் எம்.ஐ என அனைத்து உளவு அமைப்புகளில் யோகாவை கட்டாய பாடமாக வைத்துள்ளனர். நம்மிடம் திறமான புலமை இருக்கின்றது. அதை சரியான முறையில் எடுத்துக் காட்டத் தவறிவிட்டோம். இது எத்தகைய புலமை என உலகுக்கு எடுத்துக்காட்டும் வல்லமை, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு உண்டு. அதன் காரணமாகத்தான் நாங்கள் அனைவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வசதி செய்து தரப்படும்' என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். எவ்வளவு தொகை அளிக்கப்படும் என அவர்கள் குறிப்பிடவில்லை. ஆட்சிக்கு வந்ததும், ' 15 கோடி ரூபாய் அளிக்கலாம்' என தீர்மானித்தார்கள். இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள், நிதித்துறையிடம் கேட்டுள்ளனர். ' இது கூடுதல் செலவீனமாக இருக்கும்' எனப் பதில் அளித்துள்ளனர். ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான வேண்டுகோள் நிறுத்தி வைக்கப்படுகிறது' எனத் தெரிவித்துவிட்டார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய தாய்மொழிக்கு நியாயமான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வழிமுறையை தாமதப்படுத்தாமல் அரசு வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம். எங்களுடைய முயற்சிக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர். டாக்டர் ஆறுமுகம் என்பவர் ஒரு லட்சம் டாலர் வழங்க இருக்கிறார். ஒரிசா மாநிலத்தில் சேலத்தைச் சேர்ந்தவர்கள் சுரங்கத் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களும் ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம், ' ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள்' என கோரிக்கை வைத்திருக்கிறோம். நாம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடிதம் மூலம் நமக்கு பதில் அளிக்கிறது. அவர்கள் கொடுத்த இரண்டாண்டு காலக்கெடு முடிவதற்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு பணப் பற்றாக்குறை இல்லை. அவர்களுக்கு உலக அங்கீகாரம் இருக்கிறது. அதற்கேற்ற முறையில்தான் செயல்படுகிறார்கள். தமிழக அரசு முடிவெடுத்தபடியே 15 கோடியை அளித்துவிட்டால், மீதமுள்ள பணத்தை திரட்டுவதில் எங்களுக்கு பெரிய சிரமம் இருக்காது. அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என்றார் நிதானமாக.
" தலைமைச் செயலக நிதித்துறையில் கூடுதல் செலவீனங்கள் இருப்பதால்தான், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த பிறகு, 15 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.-ஆ.விஜயானந்த்