வெள்ளி, 16 செப்டம்பர், 2016

தமிழ்நாட்டில் முழு கடை அடைப்பு-கன்னடனுக்கு நன்றி

இன்றைய தினம் செப்டம்பர் 16.2016 காவிரி உரிமை மீட்கவும், கன்னட வன்முறை ஆட்டத்தை கண்டித்தும்  வேலை நிறுத்தம்  நடைபெற்று வருகிறது. 

பனங்குடி  சென்னை எரிவளி  சுத்திகரிப்பு  குழுமம்  முன்பு  ஆர்ப்பாட்டம்  என்று தமிழ் தேச பேரியக்கத் தோழர் சொன்னதால்  சென்றேன்.

பெரிய அளவில் ஒன்றும் ஆர்ப்பாட்டம்  இல்லை. காலையிலேயே செய்து இருக்க வேண்டும்  என்று சொல்லி கூடியிருந்த  தோழர்கள் கலைந்து சென்றனர்.

அவ்வளவு தானா  நம் உணர்வு என்று வெறுப்போடு  நாகூர் நாகை  சாலை  வழியாக  வந்து கொண்டிருந்தேன். 99 % முழுமையான கடையடைப்பை  காண  முடிந்தது. வணிகர் சங்கத்திற்கு நன்றி. ஒரு  சில பெட்டிக் கடைகள் மட்டும்  திறந்திருந்தன. "கன்னடர்கள் எவ்வளவு உணர்வோடு  இருக்கிறார்கள்..கடையை  மூடுங்கள்  தோழரே"  என்று சொன்னேன்..இதோ  ஐந்து  நிமிடத்தில்  மூடி  விடுகிறேன்  என்றனர்.



கடைகள், தானி,தனியார் பேருந்து,பெட்ரோல் நிலையங்கள் என அனைத்தும்  மூடப்பட்டு இருந்தன. இது  போன்ற  முழுமையான எதிர்ப்புணர்வு 2009 இனப்படுகொலையின் போது வெளிப்பட  முடியாமல் அந்த  ஆட்சி செய்த  சதி,அடக்குமுறை  மனதின் ஓரத்தில்  ஓடியது.

பேருந்து நிலையம் வழியாக  வரும்போது சில தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தார்கள்..யார்  என்று  அருகில் சென்று பார்த்தேன். வணிகர் சங்கம்!!!. கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையை கண்டித்தும். அதைக் கண்டு கொள்ளாத  கர்நாடக  அரசு, நடுவண் அரசை எச்சரித்தும். தனித் தமிழ்நாட்டிற்கான  தேவை ஏற்படுவதை உணர்த்தியும் பேசினார்கள்.

இப்படி ஒரு  உணர்வை,ஒற்றுமையை  ஏற்படுத்தியதில்  வணிகர் சங்கத்திற்கு பாதி பங்கும், தூங்கிய தமிழனை தட்டி  எழுப்பிய  கன்னட வெறியர்கள்  மீதி பங்கையும்  ஆற்றி இருக்கிறார்கள்  என்பது உண்மை.

மக்களுக்காக  போராடும் நாம் பயந்து அச்ச உணர்வோடு  போராடுகிறோம். ஆனால் மக்களை கொள்ளை அடித்து கொலை செய்பவர்கள்,ஊழல்வாதிகள் எல்லாம்  சர்வ உரிமைகளோடு காவல் துறை மரியாதையோடு  வலம் வருகிறார்கள்.

போராட்டங்களுக்கு முடிவில்லை. தமிழனுக்கு விடிவில்லை.இழந்த நமது உரிமைகளை மீட்க மீண்டும் வேறு ஒரு களத்தில் சந்திப்போம்..நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக