==============================
தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 7 )
==============================
தமிழ் இந்து கருத்தியல்
ஏன் தேவைப்பட்டது?
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
======================================
கடைசியில் பெரியார் கற்றுக் கொண்டது!
பெரியார் இந்து மத ஒழிப்புப் போர்ப் பிரகடனங்கள் பலவற்றை வெளியிட்டவர். “இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளாதே” என்று முழங்கியவர்! கடைசியில் நடைமுறை உண்மையைக் கற்றுக் கொண்டதாகச் சொன்னார்.
பெரியார் 1973 டிசம்பரில் காலமனார். அதற்கு முன்வந்த அவரது பிறந்தநாள் 1973 செப்டம்பர் 17. ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாள் மலர், விடுதலை இதழில் வெளியிடுவார்கள். பெரியார் கடைசியாக எழுதிய தமது பிறந்தநாள் மலர்க் கட்டுரை மிக முக்கியமானது.
”வழமைபோல் இந்த ஆண்டு (1973) பிறந்தநாள் விடுதலை மலருக்குக் கட்டுரை கேட்டார்கள். அடுத்த ஆண்டு பிறந்தநாள் மலருக்கு என்னால் கட்டுரை எழுத முடியுமோ முடியாதோ தெரியவில்லை. நான் இப்படிச் சொல்வது, அடுத்த ஆண்டு உயிரோடிருப்பேனா மாட்டேனா என்பது பற்றி மட்டுமல்ல; நான் உயிரோடிருந்தாலும் எழுதும்படிக்கு வெளியில் இருப்பேனா அல்லது சிறையில் இருப்பேனா என்ற கேள்வி உள்ளது” என்று தொடங்குகிறார்.
பெரியார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏன் வரும்? ”தனித்தமிழ்நாடு விடுதலைக்குப் போராட வேண்டும்” என்கிறார். அதைக் குறிப்பிடுவதற்கு முன் தன்திறனாய்வு ஒன்றையும் செய்து கொள்கிறார்.
இந்து மதத்தை ஒழித்தால்தான் மற்ற பார்ப்பனியம், மூடநம்பிக்கைகள், வர்ணசாதி ஆதிக்கம் போன்றவற்றை ஒழிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், நம் மக்கள் அவ்வாறு எளிதில் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலையானால்தான் இந்து மதம், பார்ப்பன ஆதிக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்தியா தான் இந்து மதத்திற்குப் பாதுகாப்பு அதிகாரம் என்று அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
- ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பாளர் ஐயா ஆவ. ஆனைமுத்து.
மனித உளவியலில் மதத்திற்கு உள்ள வலிமையான பாத்திரத்தைப் பற்றி கடைசிக் காலத்தில் தான் பெரியார் உணர்ந்தார் என்று புரிந்து கொள்ளலாம்.
மனித உளவியலில் கடவுளுக்கும் மதத்திற்கும் உள்ள வலிமையான இடம் பற்றி நான் மார்க்சிய வழியில் 1970களில் தெரிந்து கொண்டேன். எங்கெல்ஸ், காரல் மார்க்ஸ் கட்டுரைகள் மட்டுமின்றி, தோழர் ஜீவாவின் “மதமும் மனித வாழ்வும்” நூல் பெருமளவு எனக்குக் கண்திறந்து விட்டது.
இந்திய ஏகாதிபத்தியத்தின் மதமாக உள்ளது இந்து மதம். இந்தியம், இந்தியத்தேசியம் என்ற கற்பனைக் கட்டமைப்புகள் இந்துமத அடிப்படையில் ஆரிய பிராமண – ஆரிய வைசிய ஆற்றல்களால் உருவாக்கப்பட்டன.
ஆனால், கடந்த 150 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு ஆரிய பிராமண அறிவுத் துறையினர் பின்னர் இந்தியத்தேசியக் காங்கிரசார், “இந்து” என்பதை ஒரு மதமாக சிவநெறியாளர்கள், மாலிய நெறியாளர்கள், வைதிகச் சமயங்களைச் சேர்ந்தவர்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், குல தெய்வங்கள் ஆகியவற்றை வணங்குவோர் அனைவரையும் ஏற்கச் செய்து விட்டார்கள். 1947 ஆகத்து 15இல் மேற்படி ஆற்றல்கள் கைகளில் இந்திய அரசு அதிகாரம், மாநில அரசுகளின் அதிகாரங்கள் வந்தபின் கூடுதலாக இந்து மதத் திணிப்பு நடந்தது.
அத்துடன் முசுலிம், கிறித்துவ மதங்களைப் பார்த்து, தங்களுக்கும் அவைபோல் கட்டுக் கோப்பான மதம் வேண்டும் என்ற ஆர்வம் “இந்துக்களிடையே” உருவானது. இந்த உணர்வை மிகைப்படுத்தி வளர்த்து, முசுலிம் – கிறித்துவ மதங்களைப் போட்டி மதங்களாகக் காட்டி, இந்து மத ஒருங்கிணைப்பை – இந்துமதத் தீவிரவாதத்தை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற பல்வேறு அமைப்புகள் வளர்த்தன.
“இந்து” என்ற சொல் – சமற்கிருதத்தில் நிலவுக்கான பெயராக உள்ளது. வேத – உபநிடதங்கள் – சமற்கிருத இதிகாசங்கள் – புராணங்கள் எதிலும், மதம் – கடவுள் நம்பிக்கை என்ற பொருளில் “இந்து” என்ற சொல் வழங்கப்படவில்லை.
இந்தியத் துணைக் கண்டம் என்று பிற்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு, அப்பெயர் இல்லாத காலத்தில் வணிகம், போர் போன்ற வேலைகளில் ஈடுபட மேற்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள் குறுக்கே ஓடிய சிந்து ஆற்றைக் கடந்து வந்தார்கள். ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் செழித்திருந்த சிந்துவெளி நகர நாகரிகம், வணிகம் போன்றவை மேலை நாட்டினரை ஈர்த்தன. அங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள்!
அரப்பா, மொகஞ்சோதாரோ நகரங்கள் தமிழர்களின் நகரங்கள். அவர்கள் தங்கள் ஆற்றுக்குச் சூட்டிய தமிழ்ப் பெயர் – “சிந்து”!
வந்த மேலையரில் கிரேக்கத்தினர் மொழியில் “ச” ஒலியும் எழுத்தும் இல்லையாம். அவர்கள் “சிந்து” ஆற்றை இண்டி என்று அழைத்தனர். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியில் அதிகாரியாய் இருந்தவர் கிரேக்கர் மெகஸ்தனிஸ். அவர் அன்றாடம் எழுதிய நாட்குறிப்பு நூலுக்கு சூட்டிய பெயர் இண்டிகா. சிந்துப் பகுதி வரலாறு என்ற பொருளில் இப்பெயர் வைக்கப்பட்டது.
பின்னர் வந்த ஈரானியர் ஹிண்டு, ஹிண்டுஸ்தான் ஹிந்த் (HIND) என்று அழைத்தனர். சிந்துவுக்கு இப்பால் வாழும் பலமொழி பேசும் பல இன மக்களை Hindoos – ஹிண்டூஸ் என்று பின்னர் வந்த ஆங்கிலேயர் போன்ற மேலையர் குறிப்பிட்டனர். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இப்பெருமண்டல மக்களை எல்லாம் முதலில் ஹி்ண்டூஸ் என்றே அழைத்தனர். அவர்களின் கம்பெனி பெயரிலேயே இந்தியா (India) இருக்கிறது.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியார் பஞ்சாபிலிருந்து கன்னியாகுமரி வரையில் பீரங்கி முனையில் உருவாக்கிய மண்டலத்துக்கு “இந்தியா” (India) என்று பெயர் சூட்டினர். இந்த மண்டலத்தைப் பிடித்த பின் அக்கம்பெனி 1773இல் பிறப்பித்த ஒழுங்குமுறைச் சட்டத்தை India Regulating Act – இந்திய ஒழுங்குமுறைச் சட்டம் என்றது.
19ஆம் நூற்றாண்டில் 1871இல் ஆங்கிலே அரசு முதல் முதலாக மக்கள் தொகைக் கணக்குப் பதிவு செய்யும்போது, முசுலிம் – கிறித்துவர் அல்லாத சிவவணக்கம், திருமால் வணக்கம், நாட்டுப்புற – குலதெய்வ வணக்கம் கொண்டோர்க்கு மதப்பெயர் என்ன என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஏற்கெனவே இப்பகுதியை – இப்பகுதி மக்களை அழைக்க அவர்கள் பயன்படுத்திய இந்து (HINDU) என்ற சொல்லைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தனர். இப்படி உருவானதுதான் ”இந்து” மதம் என்ற பெயர்!
இந்து என்பதில் எந்த மதப் பொருளோ, கடவுள் பெயரோ மறைந்திருக்கவில்லை. தமிழர்களின் “சிந்து” ஆறுதான் மறைந்திருக்கிறது. அசல் தமிழ்ப் பெயர் அது!
அதற்கு முன் ஆரியப் பிராமணர்கள், வைதிக மதம் என்றும் சனாதன மதம் என்றும் பிராமண மதம் என்றும் பல பெயர்களில் தங்கள் மதப்பெயரை வைத்திருந்தனர்.
“இந்து” வருவதற்கு முன்பே தமிழில் சாதி - தீண்டாமை
தமிழர்கள் – தமிழ்நாட்டில் தங்களுக்கு சிவநெறியாளர்கள் என்றும் திருமால் (வைணவ) நெறியாளர்கள் என்றும் சமயப்பெயர் சூட்டிக் கொண்டனர். 1871 – மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இவ்விரு பெரும் பிரிவுகளும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் “இந்து” என்ற ஒற்றைத் தலைப்பின்கீழ் அழைக்கப்பட்டன.
பல நாடுகளாக இருந்த பெருமண்டலத்தை இந்தியா என்ற ஒற்றை ஆட்சியின்கீழ் கொண்டு வந்து, ஆரிய பிராமண, ஆரிய வைசியர்களுக்கு (ஆரிய முதலாளிகளுக்கு) பெரும் பரிசு கொடுத்தான் வெள்ளையன். அவனே பல பிரிவுகளாக இந்துவில் விளங்கிய சிவநெறியாளர், திருமால் நெறியாளர் மற்றும் பல்வேறு பிரிவினரை ஒருங்கிணைத்து “இந்து” என்ற ஒற்றைத் தலைப்பு கொடுத்தான்.
பிராமணர்கள் பூரித்துப் போனார்கள். இந்தியா முழுவதும் “இந்துக்கள்” மீது ஆதிக்கம் செலுத்தும் அரியவாய்ப்பு என்று களிப்பெய்தினர். ஆரிய பிராமணர்கள் “இந்து” மதம் என்ற பெயரை வெள்ளையர் கொடுக்கும் முன்பே இந்தியா முழுவதும் சிவனை, திருமாலை, குலதெய்வங்களை, நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடுவோரிடம் ஆரிய வேத உபரிடத – புராணக் கருத்துக்களைப் பரப்பி ஏற்கச் செய்து விட்டனர்.
காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர், நாம் பல தெய்வங்களை வணங்கிப் பிரிந்து கிடந்தோம். ஆங்கிலேயன் நம்மை எல்லாம் ஒன்றாக்கி இந்து என்றான் நாம் பிழைத்துக் கொண்டோம் என்றார். (”தெய்வத்தின் குரல்” – சந்திரசேகரேந்திரர், முதல் தொகுப்பு, பக்கம் 267).
1960களில் கூட நில விற்பனைப் பத்திரங்கள் எழுதும்போது அக்கால கர்ணீகர்கள் விற்று, வாங்குவோர் பெயர்களுக்குப் பின்னால் விஷ்ணுமதம், சிவமதம் என்று குறிப்பிடுவார்கள். (கர்ணீகர் என்பவரும் பட்டாமணியக்காரர் என்பவரும் கிராம வருவாய்த்துறை அதிகாரிகள். அப்பதவிகளை ஒழித்து கிராம நிர்வாக அதிகாரி (VAO) என்ற அலுவலரை எம்.ஜி.ஆர். ஆட்சியில் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் செயல்படுத்தினார்).
எங்கள் ஊர் ஆச்சாம்பட்டி கணக்குப்பிள்ளை பஞ்சாபகேசய்யர் 1960களில் நில விற்பனைப் பத்திரம் எழுதும்போது கிருட்டிணசாமி என்ற பெயர் வந்தால் விஷ்ணுமதம் என்று எழுதுவார். சிவசாமி என்று பெயர் வந்தால் உடனே சிவமதம் என்று எழுதுவார். தொடர்புடையவர்களை அவர்கள் சமயம் பற்றி விசாரிக்கவே மாட்டார். அதைப் பற்றி யாரும் அவரிடம் எதிர்வாதம் செய்ததும் இல்லை!
ஆனால், காலப்போக்கில் சிவநெறியாளர், திருமால்நெறியாளர் அனைவரும் தாங்கள் “இந்து” என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஆரியப் பிராமண ஆதிக்கவாதிகளுக்கு மேலும் வசதியாய்ப் போயிற்று!
பிராமண மேலாதிக்கம், வர்ணசாதி ஏற்றத்தாழ்வு, சமற்கிருத மேலாதிக்கம் முதலியவை “இந்து மதப்பெயர்” உருவாவதற்கு முன்பே இங்கு சிவநெறியிலும், திருமால் நெறியிலும் புகுத்தப்பட்டுவிட்டன என்பது வரலாறு. அதற்குக் காரணம் பிராமணிய வர்ணாசிரம தர்மம் புகுந்ததுதான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சைவ நெறியிலும், தமிழ் வைண நெறியிலும் பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பித்துக் கொள்ளும் மேல் சாதி – கீழ் சாதி நடைமுறை, தீண்டாமை ஆகியவை வழக்கத்திற்கு வந்துவிட்டன. அதனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் “சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் – கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்தீர்” என்று கேட்டார். “சிவனுக்கு அன்பராகில், ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் அவர் கண்டீர் நான் வணங்கும் தெய்வம்” என்றார்.
வைணவத்திலும் வர்ணசாதி வேறுபாடுகளை எதிர்த்தனர். எல்லாச் சாதியாரும் ஆண்டாள் என்ற பெண்ணும் ஆழ்வார்களாக முடிந்தது அக்காலத்தில்! பின்னர், சீர்திருத்தம் செய்த இராமாநுசர் தீண்டதார் என்று யாரையும் அழைக்கக்கூடாது என்றார். அவர்கள், “திருக்குலத்தார்” என்றார். அவர்களுக்குப் பூணூல் அணிவித்தார்.
சிதம்பரத்தில் நந்தனை எரித்தவர்கள் தீட்சிதர்கள் மட்டுமா? அதில் தமிழ்ச் சைவர் இல்லையா?
வள்ளல்பெருமான் 1850 - 1860களில் அதிகாரப்படி, “இந்துமதம்” அறிவிக்கப்படாத காலத்தில் “சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சழக்குகளில் கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே” என்றார்.
ஆனால், சிவநெறியிலும் திருமால்நெறியிலும் சாதி வேறுபாடு வளர்ந்ததே தவிர குறையவில்லை. சாதிப் பிளவைக் கண்டித்து “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்” என்ற நூல் எழுதினார் மறைமலையடிகளார்.
தமிழ்ச் சமயப் பெயர்கள் வைக்கக்கூடாதா?
இந்து மதம் என்ற பெயரை ஏற்காத நம் தமிழ்ச் சமயச் சான்றோர்கள், சிவநெறி, திருமால்நெறி என்று தனித்தனியே அழைத்துக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்த தமிழ் மக்கள்தாம் பழக்கத்தில், அரசு நெறிப்படுத்தலில் – தங்களை இந்துக்கள் என்று எண்ணி, பேசிப் பழகிவிட்டனர். இந்து மதத்தின் இருபெரும் கிளைகள் போல் தமிழ்நாட்டில் சிவனியமும் மாலியமும் வெகுமக்களால் உணரப்பட்டன. இவ்விரு தலைமைப் பீடங்களும் அவ்வாறே இருக்கின்றன.
மேலும், சிவநெறி, திருமால்நெறி என்பவை தனிப்பெரும் சமயத் தலைப்புகளாகிவிட்டால் – இவ்விரு பிரிவினர்க்கு இடையே இப்போதுள்ள ஒற்றுமை இருக்காது. உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளலும், மூத்த சமயம் எது என்று முரண் தர்க்கம் செய்து கொள்வதிலும் கவனம் கூர்மையடையும் என்று ஆன்மிகச் சான்றோர்கள் கருதுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக – இந்து மதம் என்பதைக் கைவிட இப்போதுள்ள சிவநெறி, திருமால்நெறி வெகுமக்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
சிவநெறிப் பிரிவினர் என்பதை வளர்க்க மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை, திரு.வி.க. போன்ற எவ்வளவோ பேரறிஞர்கள் முயன்றும் வெகுமக்களிடையே – தனித்த சமயப் பிரிவாக அது வளரவில்லை. இந்து மதத்தில் தங்களின் சிவநெறி மூத்தது என்ற உணர்வே, கற்றறிந்த சிவநெறியாளர்கள் பெரும்பாலோரிடம் இருக்கிறது. சிவநெறி ஆதினங்களில் பெரும்பாலானவை – பெரியவை – ஆரியப் பிராமணர்களையும் – சமற்கிருதச் சடங்குகளையும் ஏற்கின்றன. அதேபோல், திருமால் (வைணவ) நெறியாளர்களும், ஜீயர்களும் இந்து மதத்தில் தாங்கள் தனித்தன்மையுள்ள வைணவர்கள் என்ற உணர்வே கொண்டுள்ளனர்.
அடுத்து, சிவநெறியாளர்கள், வைணவ நெறியாளர்கள் தனித்தனி சமயப் பிரிவினர் போல் பிளவு கொள்வதும் நல்லதன்று. இவ்விரு பிரிவாரும் ஒருங்கிணைவதே பல காரணங்களால் தேவையானது.
திருவள்ளுவர் மதம், தமிழர் சமயம், தமிழ்ச் சமயம் என்று பல புதிய பெயர்கள் சூட்டி, அதற்குள் சிவநெறி – வைணவ நெறிப் பிரிவுகளையும், நாட்டுப்புற – குலதெய்வ வழிபாடுகளையும் இணைத்துக் கொள்ளலாம் என்று சான்றோர்கள் சிலர் பல்லாண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தனர். அது வெகுமக்களிடையே எடுபடவில்லை.
ஒரு மதத்தை – ஒரு சமயப் பிரிவை அழிப்பது எப்படி இயலாதோ, அதுபோல், புதிதாக – செயற்கையாக ஒரு மதப் பெயரை – ஒரு சமயப் பிரிவை முன்மொழிவது அல்லது திணிப்பது வெகுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான மனித உளவியலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
“இந்து” என்ற புதுப்பெயரை – பொதுப் பெயராக வெகுமக்கள் ஏற்றுக் கொண்டதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவரவர் தனிச்சமய – தனிப்பிரிவு ஆன்மிக நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. இரண்டு, அரசு செயல்படுத்தியது. என்பது மூன்று, முசுலிம் - கிறித்துவ மதங்களைவிட, மிகப்பெரும்பான்மை கொண்டுள்ள இந்து மதம் அந்தந்தப் பிரிவாக சிறுத்துவிடும் என்ற உளவியல்!
அதனால் தான் வெகுமக்கள் ஏற்றுக் கொண்டுவிட்ட “இந்து” என்ற பெயரை மாற்ற மீண்டும் முயன்று தோற்க வேண்டியதில்லை. இந்து என்பது நமது சிந்து ஆற்றை அடையாளமாகக் கொண்டு மேற்கத்தியர்களால் வைக்கப்பட்டது. அதில் வர்ணாசிரமப் பொருளோ, வைதிகப் பொருளோ, ஆரிய அடையாளமோ எதுவுமில்லை. இவற்றையெல்லாம் பின்னர் புதிய இந்து மதப் பெயருக்குள் ஆரியப் பிராமணர்கள் – வர்ணாசிரமவாதிகள் திணித்துக் கொண்டனர். எதுவந்தாலும் அதற்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவது ஆரியத் தந்திரம்!
இந்தியாவை வெள்ளைக்கார பீரங்கிகள் உருவாக்கியபின், பழைய அகண்ட பாரத தேசம் தான் இந்தியத்தேசம் என்று ஆரியப் பிராமணர்கள் கதைகட்டினார்கள் அல்லவா!
எனவே, இந்த ஆரியப் பிராமண ஆதிக்கத்தை – உத்தியை வீழ்த்தப் புது உத்தியைக் கைக்கொள்ளுவோம். வெகுமக்கள் ஏற்றுப் பழகிவிட்ட இந்து என்ற பெயரை ஒரு மாற்றத்துடன் வைத்துக் கொள்வோம். ஆரிய பிராமண ஆதிக்கம், சமற்கிருத ஆதிக்கம் கொண்ட வடநாட்டு இந்து மதத்திற்கு “ஆரிய இந்து” என்றும், தமிழ்ச் சிவநெறி – தமிழ் மாலிய நெறிகளைக் கொண்ட தமிழ்நாட்டு இந்து மதத்திற்குத் “தமிழ் இந்து” என்றும் மாற்றிக் கொள்வோம் என்ற முன்மொழிவை அண்மையில் மலேசியத் தமிழர்கள் இதுகுறித்து நடத்திய காணொலி விவாதத்தில் கலந்து கொண்டு நான் வைத்தேன். வடவர்கள் ஆரிய இந்து என்பதை ஏற்காவிட்டாலும், நாம் தனிப் பிரித்து தமிழ் இந்து என்று அடையாளம் காட்டுவோம் என்பது எமது நிலைபாடு! அதைக்கேட்ட திராவிடவாதிகளும், பெரியாரியர்களும் திராவிடத்தை எதிர்க்கும் மணியரசனைத் தாக்கக் கிடைத்தது “சாக்கு” என்று கருதி, அவதூறு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.
நாங்கள் முன்வைக்கும் இந்தப் புதிய கருத்துரு பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவர்கள் இதை விமர்சித்து எதிர்க்கலாம். தவறில்லை. ஆனால், ஆரிய பிராமண ஆதிக்கத்தை – மணியரசன் ஏற்றுக் கொண்டு விட்டார்; தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பது அவதூறு! இந்துத்துவ வாதிகளாக மாறி விட்டார்கள் என்று பொய் பேசக்கூடாது.
தமிழ் இந்துவுக்கு நாங்கள் முன்வைக்கும் முதன்மை நிபந்தனையே ஆரிய பிராமண சமற்கிருத ஆதிக்கம் அறவே அற்றி – சமற்கிருத வேதங்களை – பகவத் கீதையைத் தங்கள் புனித நூலாக ஏற்றுக் கொள்ளாத – “தமிழ் இந்து” என்பதாகும்!
தமிழ் இந்துக்கள் – தமிழ்ச் சிவநெறி, தமிழ் வைணவ தெய்வங்களை வணங்குவோர். சிவநெறி என்றால் சைவ சித்தாந்தம்! இதன் புனித நூல்கள் தேவாரம், திருமந்திரம், திருவாசகம் போன்றவை! தமிழ் வைணவ நெறி என்றால், சமற்கிருத வேதங்களை – பகவத் கீதையைப் புனித நூல்களாக ஏற்காமல் – ஆழ்வார் பாசுரங்களைத் தங்கள் புனித நூல்களாக ஏற்றுக் கொண்டது என்ற விளக்கமும் தந்துள்ளேன். அத்துடன், வைகுண்டர் வழி, கருவூர் சித்தர் வழி, ஆசீவகம், வள்ளலார் வழி, பாம்பன் சுவாமிகள் வழி ஆகியவையும், தமிழ் இந்துவின் உட்பிரிவுகளே!
சமற்கிருத வைதிகச் சடங்குகள், சமற்கிருதப் புனித நூல்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள், தமிழ் இந்து அல்லர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். அவர்கள் “ஆரிய இந்து” என்றும் கூறியுள்ளேன்.
வர்ணசாதிப் பாகுபாடு, தீண்டாமைக் கொடுமை இல்லாத சமத்துவ சமூகமாக தமிழ் இந்து மக்கள் மறுமலர்ச்சி பெற வேண்டும்.
நாங்கள் முன்வைக்கும் இந்தத் தமிழ் “இந்து”வை வெகுமக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், எங்களை அரசு “இந்து” என்று பொதுவாகக் குறிப்பிடக்கூடாது; “தமிழ் இந்து” என்று அரசு ஆவணங்களில் குறிக்க வேண்டும், தமிழ்நாட்டில் தமிழ் இந்துவுக்குத் தனிச் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசிடம் வைத்துக் காலப்போக்கில் ஏற்கச் செய்வோம் என்பதுதான் எங்கள் முன்மொழிவு!
கர்நாடகத்தில் லிங்காயத்துகளை இந்து என்று குறிப்பிடக்கூடாது, தனி மதமாகக் குறிப்பிட வேண்டும் என்று நீண்டகாலம் கோரிக்கை வைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக அரசு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, ஆணை பிறப்பித்தது அல்லவா! அவ்வாறு நாம், நம் வெகுமக்கள் ஆதரவு இருந்தால், “தமிழ் இந்து” என்ற தனிப்பிரிவு உரிமையை வாங்கலாம் என்பது எங்கள் முன்மொழிவு!
இம்முன்மொழிவைப் பற்றி சிந்தியுங்கள்; அவரவர் விமர்சனத்தை வெளிப்படுத்துங்கள். ஏற்போர் ஏற்றுக் கொள்ளுங்கள். மறுப்போர் மறுத்துக் கொள்ளுங்கள். இம்முன்மொழிவு, செயலுக்கு வருவதும் வராமல் போவதும் வெகுமக்கள் கையில் உள்ளது!
ஆரிய பிராமண ஆதிக்கத்தை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன?
சங்க காலத்தின் முடிவில் கர்நாடகப் பகுதியிலிருந்து படையெடுத்து வந்த களப்பிரர்கள் என்ற அயல் இனத்தார் – அயல் மொழியார் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைப் பிடித்து சற்றொப்ப 350 ஆண்டுகள் ஆண்டார்கள். அவர்கள் காலத்தில்தான் பிராமணர்களுக்கு இறையிலி (வரியில்லாமல் இலவசமாக) நிலங்கள் கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. (சான்று பூலாங்குறிச்சி கல்வெட்டு). அவர்கள் தமிழைப் புறக்கணித்த அயல் மொழியார். தமிழ் நூல்கள் பல அக்காலத்தில் தமிழறிஞர்களால் எழுதப்பட்டன. அவை அந்த அறிஞர்களின் முயற்சிகள். அதே களப்பிரர் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டதுதான் ஆசாரக்கோவை! வர்ண – சாதி வரையறுப்புகளையும் தீண்டாமையையும் அக்காலத்தில் வலியுறுத்தி எழுதப்பட்ட நூல். “எச்சிலார்” என்ற மக்கள் பிரிவை வர்ணிக்கிறது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறது. மனுதர்ம நூலின் சாரத்தைக் கொண்டது ஆசாரக்கோவை!
அடுத்து, ஆந்திரப் பகுதியிலிருந்து வந்து தமிழ்நாட்டைக் கைப்பற்றிய தெலுங்கு பேசும் – ஆரியமயப்பட்ட பல்லவர்கள்! அவர்கள் தங்களை ஆரியப் பரத்துவாக கோத்திரம் என்றுக் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆட்சியில் பிராக்கிருதம், பின்னர் சமற்கிருதம், தெலுங்கு முதலிய அயல் மொழிகள் ஆட்சி மொழிகளாய் இருந்தன. இவர்கள் சற்றொப்ப 500 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டார்கள். என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்!
பிராமணர்களுக்கு இறையிலி நிலங்கள் ஏராளமாக வழங்கினர். முழுகிராமங்களே பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட காலம் பல்லவர் காலம்! சமண மதத்தை அரச மதமாகக் கொண்டிருந்தனர். சமணம் பிராகிருதத்தைப் புனித மொழியாகக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டுச் சமணத்தில் ஆரியர்களே கோலோச்சினர். வஜரநந்தி என்ற ஆரியச் சமண ஆன்மிகர் – தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் திரமிள சங்கம் என்ற சமண சங்கத்தை – பிராகிருதம் – சமற்கிருதம் கோலோச்சிய சங்கத்தை உருவாக்கினார். தமிழ் புறக்கணிக்க பட்டது. திரமிள – என்பதுதான் திராவிடத்தின் மூலப்பெயர்.
களப்பிரர் காலம் ஆரியப் பிராமணர்களின் ஆதிக்கத்திற்குக் கால்கோள் நடத்தியது. ஆரிய ஆதிக்கக் கோட்டையை எழுப்பியது பல்லவர் ஆட்சி, சமணத்திலும் அதுதான்! சைவத்திற்கு மகேந்திர பல்லவன் மாறிய பிறகு ஆரிய – பிராமண ஆதிக்கம் அதிகமானது பிராமணர்களுக்குக் கிராமங்களையே தானமாக வழங்குவது அதிகமானது.
பல்லவர் ஆட்சிக்குப்பிறகு வந்த பாண்டிய, சோழர்கள் ஆட்சியில் பிராமண ஆதிக்கம் தொடர்ந்தது. ஏற்கெனவே எழு நூறு ஆண்டு வளர்ச்சி பெற்றிருந்தது. ஆரியப் பிராமணியம்! அதை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது.
தமிழ் வெகுமக்கள் பிராமணர்களைக் கடவுளின் தூதுவர்களாக – முகவர்காளகக் கருதிய காலம் பல்லவர் காலம்! தமிழுக்குக் கூடுதல் வாய்ப்பு, தமிழர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு என்ற செயல்பாடுகள் மூலமாகவும் வேறு சில நடவடிக்கைகள் மூலமாகவும் பிராமண ஆதிக்க ஏகபோகத்திற்கு சோழர்கள் ஆட்சியில் சிற்சில தடைகற்களைப் போட முடிந்தது. பிராமண – சமற்கிருத ஆதிக்கத்தை முழுவதும் தடுக்க முடியவில்லை.
இராசராசன், இராசேந்திர சோழனுக்குப் பிறகு, இந்தச் சிறு தடைகளையும் பிராமணர்களுக்குப் போட முடியவில்லை.
பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு வந்த தெலுங்கு விசயநகரத் தளபதிகள் – நாயக்க ஆட்சி கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் – தமிழ்நாடு முழுவதும் நடந்தது. தமிழ் மன்னர்களான பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர், புதுக்கோட்டை மன்னர் முதலியவர்கள் எல்லாம் மதுரை நாயக்கர் பேரரசின் கீழ் இருந்த பாளையபட்டுகளின் மன்னர்களே!
ஆனால், ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து விடுதலைக் களம் கண்டவர்கள் பூலித்தேவன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற தமிழ் வீரர்கள், வீராங்கனைகள்!
இவ்வளவு நீண்ட நெடிய காலம் தமிழர்கள் அயல் இனத்தார்க்கு அடிமையாய்ப் போனதால், நமது உளவியலில் தற்சார்பின்மை, அச்சம், அண்டிப்பிழைத்தல் போன்ற பலவீனங்கள் பல தலைமுறைகளாக வளர்ந்து விட்டன.
ஆரியர் பிராமணர்கள் அரசர்களின் துணை கொண்டு தங்களின் மேலாதிக்கத்தை, வர்ண சாதிப் பிளவுகளை – சமற்கிருத ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டனர். அத்துடன் ஆரியத்துவ தெய்வ பக்தியும் – தெய்வத்தின் தூதுவர்கள் பிராமணர்கள் என்ற பிரமைகளும் நம் தமிழரிடையே பரவலாக வளர்ந்தன.
“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் திருவள்ளுவப் பெருந்தகை!
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும், இன்றும் பிராமணர்கள் தமிழ்நாட்டில் மிக மிகச் சிறுபான்மையினரே! அவர்கள் வடக்கே இருந்து தமிழ்நாட்டில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் வாளேந்தி போராடித் தமிழர்களை வெல்லவில்லை. நூலேந்தி, தங்களுக்கும் சமற்கிருதத்திற்கும் “புனிதம்” கற்பித்துக் கொண்டு ஆட்சியாளர்களின் துணையோடு தங்களை உயர்வாகவும் தமிழர்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுப்படுத்தினர். தமிழர்களின் கோயில்களையும் ஆன்மிகத்தையும் தங்களுடையதாக கவர்ந்து கொண்டனர்.
புதிய செயல்பாடுகளோ, சட்டங்களோ வந்தால் அவற்றை தங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாக மாற்றிகொள்வர். அப்படித்தான் ஆங்கிலேய அரசு “இந்து” என்ற புதிய மதப்பெயரை அறிவித்தபோது அதற்குள் புகுந்து கொண்டு, தங்கள் வழியில் புதுப்புது விளக்கங்கள் கொடுத்து சமற்கிருத வேதங்களில் புராணங்களில் இந்து மதம் பற்றி கூறப்பட்டுள்ளது போல் சோடனைகள் செய்து கொண்டு இந்துமத ஆதிக்கத்தை எடுத்து கொண்டனர். பிராமணர்கள் சிவநெறிக்கும், வைணவ நெறிக்கும் வெளியே உள்ள ஸ்மார்த்தர்கள். காஞ்சி சங்கர மடம் சிவ நெறிக்கும் வைணவ நெறிக்கும் வெளியே உள்ளது. ஆனால் அந்த மடம்தான் சிவநெறிக்கும், வைணவ நெறிக்கும் ஒட்டு மொத்த இந்து மதத்திற்கும் தலைமைபீடம் போல் நடைமுறையில் செயல்படுகிறது. இந்திய அரசும் அவ்வகையில் அம்மடத்தை ஆதரிக்கிறது.
இந்த ஆரிய சூழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை வீழ்த்த புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டும். வெறும் இந்து மத எதிர்ப்பு அவர்களை வீழ்த்தி விடாது. மாற்றுச் செயல் திட்டங்கள் தேவை! அந்த வழிகளில் ஒன்றுதான் “தமிழ் இந்து” செயல்திட்டம்!
இன்றைக்கும் தமிழர்களிடையே உள்ள உளவியல் பலவீனங்கள். 1. முன் முயற்சி எடுக்கத் தயக்கம்! 2. களச் செயல்பாடுகளில் அச்சம்! எல்லாத் தமிழர்களுக்கும் இப்பலவீனங்கள் இல்லை. ஆனால் கணிசமான பேர்களிடம் இருக்கிறன. தமிழர்களின் அடிமைத் தளைகளைப் புரிந்து கொண்ட, விவரம் தெரிந்த தமிழர்களில் கணிசமானவர்களிடம் உள்ள பலவீனங்கள் இவை!
வெகுமக்களை – ஆரிய – பிராமண – சமற்கிருத ஆதிக்கத்திற்கு எதிராகத் திரட்ட அறப்போராட்டங்களே சிறந்த வடிவம். தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் வெகுமக்களுக்கு சற்று முன்னால் சென்று கொண்டு வழிகாட்ட வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால் ஓடிக் கொண்டு வழிகாட்ட முடியாது.
எனவேதான் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்து மதப்பெயரை முற்றிலும் மாற்றாமல் அதில் ஆரிய – பிராமண – சமற்கிருத ஆதிக்க மற்ற தமிழ் இந்து மதத்தை உங்கள் முன் வைக்கிறோம்.
பட்டம் சூட்டிக் கொண்ட தலைவர்கள் இப்பணிக்கு பொருத்தமற்றவர்கள்; பாடம் கற்றுக் கொண்டு வழிகாட்டும் முன்னணி வீரர்கள் தேவை!
சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!
(முற்றும்)(22.11.2021 அன்று சேர்க்கப்பட்டது)