சனி, 27 நவம்பர், 2021

ஈழ விடுதலை - இந்திய விடுதலைப் போராட்டம் - ஓர் ஒப்பீடு

 


ஈழப் போராட்டம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமே. இந்திய விடுதலைப் போராட்டமும் கொரில்லாப் போராட்டம், தற்கொலைப்படை தாக்குதல் இவைகளை கடந்தே வந்துள்ளது

திங்கள், 22 நவம்பர், 2021

சமவாய்ப்பு - இன்றியமையாததா ? ஏன்?

 சமவாய்ப்பு என்பது என்ன?



ஒரு சமூகமோ அல்லது ஒரு தனி மனிதனோ ஒரு குறிப்பிட்ட தகுதி பெற்றிருந்தாலும் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். வாய்ப்புகள் வழங்காமலே அவர்கள் தகுதிகளை நீங்கள் தரம் பார்ப்பீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு சார்பினரே. இது தான் ஏற்றத் தாழ்வின் பிறப்பிடம் 

ஒரு நிறுவனத்திலோ இயக்கத்திலோ பாடசாலையிலோ ஒரு பொறுப்பை ஒருவருக்கு அளிக்கிறோம் என்றால் அது அதற்கான திறமை வாய்ந்தவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். அதன் மூலம் அந்த நிறுவனம் முன்னேறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த திறமையை  கண்டுணர்வது  என்பது அவரது முந்தைய வரலாறு, சந்தர்ப்பங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தியது, தனக்கும் தன்னை சார்ந்த நிறுவனத்தையும் முன்னெடுத்துச் சென்றது இவைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது. 

சரி..இங்கு எந்த இடத்தில சம வாய்ப்பிற்கான முக்கியத்துவம் வருகிறது? பிறருக்கு வாய்ப்புகளே அளிக்காமல் அந்த ஒருவரையே அல்லது அந்த ஒரு சமூகத்தையே தொடர்ந்து  தேர்ந்தெடுப்பது என்பது பிறருக்கான வாய்ப்புகளை பறிப்பது ஆகும். அந்த ஒருவரையே தொடர்ந்து தேர்ந்தெடுத்து பிரதிநிதியாக கொண்டு செல்வது என்பது நாமக்கல் கல்வி கோழிப் பண்ணைகளில் நன்றாக படிக்கக் கூடிய, மனப்பாடம் செய்யக்கூடிய இயந்திரங்களை மட்டும் தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து தங்கள் நிறுவனத்தின் திறமைகளை உலகறியச் செய்கின்ற ஓடுகின்ற குதிரைகளில் பணம் கட்டுவதற்கு சமம். 

திறமையானவர்களை உருவாக்க இயலாத சோம்பேறிகள், நிர்வாகிகள் தங்கள் பொறுப்புககளை, இலக்குகளை தொடர்ந்து வெற்றி பெரும் அந்த குதிரையின் மீது சுமத்துவது  ஒரு வகையில் கையாலாகாத தனம்.


வெள்ளி, 19 நவம்பர், 2021

உண்டாலம்ம இவ்வுலகம்

நான் இனி உனக்கு

பயனில்லை என

உதிர்ந்த 

இலை 

உரமானது

மரத்திற்கு

-தமிழ்மது


வியாழன், 11 நவம்பர், 2021

வங்கிக் கணக்கு திறக்கப்போகிறீர்களா?. கண்டிப்பாக இவைகளை தெரிந்து கொள்ளுங்கள்

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளருக்கான நடைமுறை விதிகள், அங்கு கிடைக்கக்கூடிய  சேமிப்பு வழிகள், அடிப்படை கணக்கு (zero balance account. No frills account). மாத ஊதியம் பெறுவோருக்கான Salary SB, Payroll Account, ஏடிஎம், சராசரி இருப்பு, மாணவர் சேமிப்பு கணக்கு, கூட்டு கணக்கு, வாரிசுதாரர் நியமனம், அடல் பென்சன். புதிய பென்சன் திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், PMJJBY(ரூ.330 காப்பீடு திட்டம்), PMSBY (ரூ.12 காப்பீடு திட்டம்), பொதுமக்களுக்கான‌ வருங்கால வைப்பு நிதி, தங்க சேமிப்பு பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம். ஏபிஒய்(APY) & என்பிஎஸ்NPS) வேறுபாடு, வைப்பு நிதி கணக்குகள், தொடர் வைப்பு நிதி, கடன் அட்டை, 15G படிவம், தவணை முறையில் பொருள்  வாங்கி ECS இல் திருப்பி செலுத்தும்   வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், வட்டி விகிதங்கள்  என்பது பற்றி அடிப்படையாக எழக்கூடிய ஐயங்களுக்கு  "இணைய தென்றல்" குழுவினருக்கு விடை அளிக்கிறார் அரசுடைமை வங்கியில் கால் நூற்றாண்டாக பணிபுரியும் ஊழியர்

பகுதி 1

பகுதி 2

புதன், 10 நவம்பர், 2021

தமிழ் இந்து! - ஏன்? - பேராசான் பெ மணியரசன், தலைவர்-தமிழ்த் தேசியப் பேரியக்கம்




தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 1 )
========================================
இந்து மதஒழிப்பு பேசுவோர்
இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல்
இரட்டை வேடம் போடலாமா?
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================

நான், ஆரிய இந்து – தமிழ் இந்து என்று பிரித்துப் பேசுவதற்குக் காரணம் – ஆரிய, பிராமண – சமற்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழ் இந்துக்களை விடுவித்து, தமிழரின் சமத்துவ ஆன்மிக நெறிகளான சிவநெறி, திருமால் நெறி ஆகியவற்றிற்குத் தனித் தலைமை கொடுக்கத்தான்.

தமிழ்நாட்டுக் கிறித்துவர்கள், முசுலிம்கள் தங்கள் மதத்திற்கு முன் “தமிழ்” என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அப்படித், “தமிழ்” என்ற முன்னொட்டு சேர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டுக் கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும், ஆரிய பிராமண சமற்கிருத ஆதிக்கமோ, அவாள் வழிகாட்டலோ சிறிதும் இல்லை!

மதம் என்பதற்கும் இனம் என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இனம் என்பது வரலாற்று மரபுவழி – குருதிவழி உறவுடன் உருவாகக் கூடியது. மதம் என்பது ஆன்மிகக் கொள்கை அடிப்படையில், “ஏற்றுக் கொள்ளப்படுவது!”.

ஒருவர் ஒரு மதத்தைக் கைவிட்டு இன்னொரு மதத்தை ஏற்றுக் கொள்ளலாம்; “இனத்தை” அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாது. இனம், மரபு வழியில், பிறப்பு வழியில் மற்றும் வாழ்வியல் வழியில் வருவது!

ஓர் இனத்தில் பல மதத்தவர் இருக்கலாம்; அவர்கள் அனைவரும் ஓர் இனத்தவரே! தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள், முசுலிம்கள், இந்துக்கள் அனைவரும் தமிழர்களே! இவர்கள் விரும்பினால் மதத்தை மாற்றிக் கொள்ளலாம். இனத்தை மாற்றிக் கொள்ள முடியாது.

இந்து மத ஒழிப்பிற்கு என்ன செய்தார்கள்?
===========================================
நான் “தமிழ் இந்து” என்ற மாற்றுப் பெயரை முன்மொழிந்ததும், இந்து என்றால் வர்ணாசிரமம் – பார்ப்பன ஆதிக்கம் – சமற்கிருத ஆதிக்கம் – இவற்றையெல்லாம் மணியரசன் ஏற்றுக் கொள்கிறார் என்று பெரியாரியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். நான் உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு எனது மறுமொழியை உடனடியாகக் கூற முடியவில்லை.

“இந்து மத ஒழிப்பாளர்” என்று பெரியார் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்து மதத்தை ஒழித்தால்தான் வர்ணபேதம், சாதி பேதம், பிராமண ஆதிக்கம் முதலியவற்றை ஒழிக்க முடியும் என்று பெரியார் கூறினார்.

தமது இந்து மத ஒழிப்பு அறிவிப்பிற்குப் பெரியார் உண்மையாக நடந்து கொண்டாரா? இல்லை! அவர் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை; இந்துத் தமிழர்களை அம்மதத்திலிருந்து வெளியேற்றும் மாற்றுத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இந்து மதத்தில் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்க முடியாது; பிராமண ஆதிக்கத்தை – வர்ணாசிரமத்தை ஒழிக்க முடியாது என்று அறிவித்த அண்ணல் அம்பேத்கர், இந்து மதத்தைவிட்டு ஐந்து இலட்சம் மக்களுடன் வெளியேறி புத்த மதத்தில் சேர்ந்தார். அம்பேத்கர் தமது இந்து மத எதிர்ப்பில் உண்மையாக நடந்து கொண்டார். பெரியாரும் அவரின் வாரிசுகளும் தங்களது இந்துமத ஒழிப்புக் கொள்கைக்கு உண்மையாக நடந்து கொண்டார்களா? இன்றைக்காவது பெரியாரியர்கள் இந்துமத ஒழிப்புக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்களா? இல்லை! இந்து மதத்திலேயே இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இந்து மத அடையாளத்தை ஆவணங்களில் சேர்க்கிறார்கள்.

பெரியாரியர்கள் தங்களின் இந்துமத ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு உண்மையாக – நேர்மையாக நடந்து கொண்டிருந்தால், அவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும்.

பெரியாரும் அவருடைய வாரிசுகளும் கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமில்ல, கடவுள் ஒழிப்பாளர்கள். “கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்” என்பவை பெரியாரின் பகுத்தறிவுப் பொன்மொழிகள்! அவர் சிலைகளின் கீழ் இன்றைக்கும் இவ்வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கடவுள் ஒழிப்பு, இந்துமத ஒழிப்பு ஆகிய பெரியாரது கொள்கைகளுக்குப் பெரியாரும், பெரியாரியர்களும் உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் அனைவரும் இந்து மதத்தைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கையற்ற – மத நம்பிக்கை அற்ற ஒரு சமூகப் பிரிவை உருவாக்கி இருக்க வேண்டும். பெரியார் தம்மைப் பின்பற்றிய இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் இந்து மதத்தைவிட்டு வெளியேறி கடவுளற்ற – மதமற்ற – சாதியற்ற ஒரு முற்போக்கு “சமூகப் பிரிவை”த் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்க முடியும். அதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது. வளர்ச்சிப் போக்கில் அச்சமூகப் பிரிவுக்கு இடஒதுக்கீடும் வாங்கியிருக்க முடியும். பெரியார் தொண்டர்கள்தாம் 1967லிருந்து தமிழ்நாட்டு மாநில ஆட்சியை நடத்துகிறார்கள். இம்மாநிலக் கட்சிகள் இந்திய அரசில் கூட்டணி அமைச்சரவையிலும் அவ்வப்போது இடம் பெறுகின்றன.

ஏன் பெரியார், இந்து மத ஒழிப்பிற்கு மாற்றுச் செயல்திட்டம் ஒன்றை வைக்கவில்லை? கடைசிவரை இந்து மதத்திலேயே இருந்தது ஏன்? இன்றையப் பெரியாரியர்களும் அதே “இந்து ஒழிப்புத் திட்டத்தைப்” பேசுகிறார்கள். மாற்றுத் திட்டத்தை முன்வைத்து செயல்பட மறுக்கிறார்கள். ஏன்?

சமூகக் கெடுதல்கள் என்று தாம் உணர்பவற்றைப் பெரியார் ஒழிக்கப் பரப்புரை செய்வார். மாறறுத் திட்டத்தை முன்வைக்க மாட்டார். மாற்றுத் திட்டம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்திருந்தாலும் மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்திடப் பொறுப்பெடுக்கப் பெரியாருக்குத் தயக்கமோ, அச்சமோ இருந்திருக்க வேண்டும்.

பெரியார் தம்மைப் பற்றிப் பெருமையாக என்ன வர்ணித்துக் கொண்டார்? “நான் அழிவு வேலைக்காரன்!” என்றார். இவ்வாறு அடிக்கடி தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டார். பெரியாரியர்கள் இப்பொன்மொழியை இப்போதும் சொல்லிக் கொண்டுள்ளார்கள். “ஆக்க வேலைத் திட்டம்” துல்லியமாகப் பெரியாரிடம் இல்லை. அவர் முன்வைத்த முன்மாதிரிச் சமூகம் அவர் காலத்திய ஐரோப்பியச் சமூகம்; ஆங்கிலேயச் சமூகம்!

பெரியாரைப் பொறுத்தவரை, ஆங்கிலம் முற்போக்கான மொழி – பகுத்தறிவு மொழி; உண்மையான பயன்பாட்டு மொழி! அக்கருத்து அடிப்படையில்தான் “ஆங்கிலம் படியுங்கள்; வீட்டில் மனைவியுடன், வேலைக்காரியிடம் ஆங்கிலத்திலேயே பேசக் கற்றுக் கொள்ளுங்கள்; தமிழை விட்டொழியுங்கள்” என்று 1968 வாக்கில்கூட எழுதினார். மீண்டும் 1972 டிசம்பரில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே என்றும் பெரியார் சொன்னார். தமிழைப் படிக்காதே, வீட்டில் தமிழில் பேசாதே, ஆங்கிலத்தில் பேசிப் பழகு என்றார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 2, பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, 1974).

மேற்கண்டவாறு 1972 டிசம்பரில் பெரியார் கூறினார். அதாவது அவர் வாழ்வின் கடைசிக் கட்டத்தில்சுகூடத் தமிழ் ஒழிப்புக் கருத்தை வலியுறுத்தி வந்தார். 1973 டிசம்பரில் பெரியார் காலமானார்.

கடைசிக் காலம் வரை தமிழ்மொழி ஒழிப்பில் கவனமாக இருந்த பெரியார், “விடுதலை” ஏட்டின் முழக்கமாய்க் கடைசிவரை “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று போட்டுக் கொண்டது தமிழர்களை ஈர்க்க அவர் கையாண்ட போலி உத்தி தானே!

   

 தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 2 )
========================================
“பெரியாரியம்” என்பது என்ன?
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================


தமிழின எதிர்ப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு, திராவிடத் திணிப்பு போன்ற பெரியார் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முற்போக்கான கருத்துகள் அவரிடம் இருக்கின்றன. 

பிராமணியம், வர்ணாசிரமம், ஆரியம், சமற்கிருதம், சாதி முதலியவற்றைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இவற்றை நீக்கிவிட்ட – மாற்று சமூக இயங்கியலைப் பெரியார் முன்வைக்கவில்லை. அவரால், மாற்று சமூகவியலை சொந்தமாகச் சிந்திக்க முடியவில்லை. அதனால் பல கேடுகள் நிறைந்த ஆங்கிலேய சமூகத்தை மாற்றுச் சமூக அமைப்பாகப் பெரியார் முன்வைத்தார். ஐரோப்பிய சமூகம் அறிவியல் கண்டுபிடிப்பில் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்த்து 50 ஆண்டுகளுக்குப் பின் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னென்ன வரும் என்று நூல் எழுதினார். மாற்றுச் சமூக அமைப்பை அவர் முன்வைக்கவில்லை. அவரே சொல்லிக் கொண்டபடி அவர் அழிவு வேலைக்காரரே தவிர, ஆக்க வேலைக்காரர் அல்லர்!

காரல் மார்க்ஸ், முதலாளிய ஒழிப்பை முன்வைத்தார்; மாற்றாக நிகரமைச் சமூக அமைப்பை (Socialist Society) முன்வைத்தார். கம்யூனிஸ்ட்டுகளின் முதற்பெரும் இலக்கு நிகரமைச் சமூகம் அமைப்பதுதான். உழவன் நெல் சாகுபடிக்கு உழும்போது களைகள் அழிக்கப்படுவதுபோல், முதலாளிய சமூக அமைப்பு ஒழிப்பு என்பது அவர்களின் நிகரமை (சோசலிச) திட்டத்தின் ஒரு பகுதி.

பல நாடுகளில் நிகரமைப் புரட்சிகள் வென்றன. செயல்பட்டன. 72 ஆண்டு கழித்து சோவியத் ஒன்றியம் வீழ்ந்தது. ஆனால் இன்றும் பொதுத்துறைத் தொழிற்சாலைகள் பல நாடுகளில் முகாமையான பங்கு வகிக்கின்றன. சீனம், கியூபா, வியட்நாம் நாடுகளில் நீண்டகாலமாக கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஆட்சியே தொடர்கிறது.

காந்தியடிகள் மேற்கத்திய ஏகபோக முதலாளிய உற்பத்தி முறையை எதிர்த்தார். ஆனால், அவர் முதன்மைப்படுத்தியது, சிறுசிறு தற்சார்புப் பொருள் உற்பத்தி, மரபுவழி வேளாண் முறை, கைத் தொழில்கள், கதர் உற்பத்தி போன்றவை.

காந்தியடிகள் தொடங்கி வைத்த சிறு ஊரகக் கைத்தொழில்கள், சிறு உற்பத்தி முறைகள் இன்றும் செயல்படுகின்றன. சர்வோதயம் என்ற பெயர் உள்ளிட்ட பெயர்களில் காந்தியடிகளைப் பின்பற்றும் பொருள் உற்பத்தியும், விற்பனையும் வணிக இலாபத்தோடு நடக்கின்றன. இன்றும் கதர் உற்பத்தியும் கதராடை அணிதலும் தொடர்கின்றன. நம்மாழ்வார் வலியுறுத்திய, கொணர்ந்த மரபுவழி வேளாண் முறைக் காப்பிற்கும் மூலவராகக் காந்தியே விளங்குகிறார்.

மார்க்சியத்தில் இன்றும் காலத்துக்கேற்ற புதுப்புது சிந்தனைகளும் வளர்ச்சிகளும் அறிஞர் பெருமக்களால் தொடர்கின்றன. அதேபோல் காந்தியடிகளின் ஊரக – ஆதாரப் பொருளியல் கொள்கையைப் பலபேர் ஜே.சி. குமரப்பா தொடங்கி இன்றைக்கும் ஆய்வு செய்கின்றனர். புதுப்புது கருத்தியல்களை உருவாக்குகின்றனர்.

பெரியாரியச் சிந்தனைகளின் அடிப்படையில் புதிய வடிவில் சமூகச் செயல்திட்டங்கள் பெரியார் காலத்திலும் இல்லை. இப்போதும் இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் பிராமணப் புரோகிதரும், சமற்கிருதமும் நீக்கப்பட்ட சீர்திருத்தத் திருமணங்கள், நீத்தார் நினைவு நாட்கள் ஆகியவற்றைப் பெரியார் சிந்தனைகளின் பங்களிப்பாகப் பாராட்டலாம். அப்போக்கின் விகிதம், சமூகச் செயல்பாடுகளில் குறைந்து வந்தாலும், அவற்றிற்கான பெருமை பெரியாருக்கும், தொடக்ககாலத் தி.மு.க.வினருக்கும் உரியவை.

பெரியார் சிந்தனைகள் ஒரு தத்துவமாக இருந்தால், அதில் வளர்ச்சிகளும், புதிய புதிய சிந்தனைப் பிரிவுகளும் அடுத்த தலைமுறை அறிவாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும். மார்க்சியத்தில் புதிய மார்க்சியம் (Neo Marxism) என்ற சிந்தனைப் பள்ளி வளர்ந்து கொண்டுள்ளது. காந்தியத்தில் காந்திய நிகரமை (Gandhian Socialism) என்ற சிந்தனைப் பள்ளி வளர்ந்து கொண்டுள்ளது. ஜே.சி. குமரப்பா தொடங்கி இன்றைய காந்திய ஆய்வாளர் பேராசிரியர் பழனிதுரை வரை காந்தியத்தை மேலும் மேலும் சமகாலப்படுத்தினர்.

மதங்களில் கூட புதிய புதிய வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. புத்தத்தில் மகாயானம், ஹீனயானம் என்பவை பழைய பிரிவுகள். இப்போது, சப்பானிய புத்தத்திற்கும் தாய்லாந்து புத்தத்திற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. புத்த சிந்தனைகளைக் காலத்திற்கேற்ப வளர்த்துக் கொண்டுள்ளார்கள். சிவனியம், மாலியம் ஆகிய சமயச் சிந்தனைகள் புதிய புதிய விளக்கங்களுடன் வளர்கின்றன. கிறித்தவத்தில் பழைய காலத்தில் ஆர்.சி, புராட்டஸ்ட்டண்டு பிரிவுகள் தோன்றின. இசுலாத்தில் சன்னி, சியா பிரிவுகள் மட்டுமல்ல மற்றும் பல சிந்தனைப் பள்ளிகளும் உருவாகியுள்ளன.

பெரியாரியத்தில் எந்தப் புதிய வளர்ச்சியும் ஏற்படவில்லை. காரணம், அது எதிர்ப்பு வேலைத் திட்டங்களையே முதன்மைப்படுத்தியது. ஆக்க வழிப்பட்ட மாற்றுச் சமூகத் திட்டங்களைச் சொந்தமாக முன்வைக்கவில்லை.

இடஒதுக்கீடு, சமூகநீதி பெரியாரால்தான் கொண்டு வரப்பட்டன என்று பிழையான பிம்பத்தைக் கட்டமைத்துள்ளனர் திராவிடவாதிகள். ஆங்கிலேய அதிகாரிகளால் தொடங்கப்பட்டது அச்சிந்தனை!

பனகல் அரசரின் நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி ஒதுக்கீடு ஆணை போட்டார்கள். செயல்படுத்தவில்லை. புதிய வகுப்புவாரி ஆணை பிறப்பித்து முதல் முதலாக 1927இல் இடஒதுக்கீட்டை செயல்படுத்தியது தமிழர் சுப்பராயன் அமைச்சரவை. அப்போது செயல்படுத்திய துறையின் அமைச்சர் தமிழர் முத்தையா முதலியார். பின்னர் காங்கிரசு முதல்வர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் இடஒதுக்கீட்டு விகிதத்தை மேம்படுத்தினார்.

இவ்வளவையும் நான் பேசுவதற்குக் காரணம், இந்து மத ஒழிப்பை முன்வைத்த பெரியார், அதற்கு மாற்றாக வேறொரு பண்பாட்டுத் திட்டத்தை முன்வைத்துச் செயல்படுத்தவில்லை. அதற்கு முதல் தேவை இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாகும். பெரியாரும் இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லை; பெரியாரியர்களும் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை.

இந்து மதத்தைவிட்டு வெளியேறாததற்குப் பெரியார் சொன்ன காரணம் மிகவும் விந்தையானது. “இந்து மதத்திற்குள் நான் இருந்தால்தான், அதைக் கண்டித்து, எதிர்த்து என்னால் பேச முடியும். வெளியேறிவிட்டால் இப்போதுபோல் பேச முடியாது”. இந்து மதத்தை எதிர்த்துப் பேசுவதுதான் அவரது வேலைத் திட்டம்; இந்து மதத்திற்கு மாற்றாக – புதிய சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது அவரது வேலை அல்ல என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்றால், என்ன பொருள்? மாமூல் நிலையைத் (Status quo) தொடர்பவர் என்று பொருள்!

எதுவும் அப்படியே இருக்காது; வளரும் அல்லது தேயும் என்பது இயற்கையின் இயக்க விதி! சமூகவியல் விதியும் அதுவே!

இப்பொழுதுள்ள இந்து சமூகத்தின் மாமூல் நிலை அப்படியே இல்லை. பெரியார் காலத்தைவிட இந்து மதப்பற்று தமிழர்களிடையே அதிகம் வளர்ந்துள்ளது. கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவோர் விகிதம் பெரியார் காலத்தைவிட மிக அதிகமாகியுள்ளது.

திராவிடர் கழகத்தார் வீடுகளில் 100க்கு 90 வீடுகளில் வீட்டுக்குள் சாமி கும்பிடுகிறார்கள். திராவிடர் கழகச் செயல்பாட்டாளர்கள் ஆணோ, பெண்ணோ சாமி கும்பிடாமல் இருக்கலாம். இதரக் குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிடுகிறார்கள்.

திராவிடத்தின் இன்றைய அசல் வாரிசாக வலம் வரும் திரு. மு.க. ஸ்டாலின் அண்மையில் சொன்னார் : “தி.மு.க.வில் 100க்கு 90 பேர் இந்துக்கள்!”. திராவிடத்தின் – பெரியாரின் இந்து மத ஒழிப்பு என்னாயிற்று?

தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 3 )
========================================
மதத்தை ஒழிக்க முடியுமா?
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================


பத்தொன்பதாம் நூற்றாண்டில், கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு சாரார், மத ஒழிப்பு பற்றிப் பேசினார்கள். அவர்களுக்கு விடையளித்த பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியவை கவனத்துக்கு உரியவை : “மதத்தை ஒழிக்கத் தொடங்கினால் அது புத்துயிர் பெறும்; மதம் தேவைப்படாத சமூக அமைப்பை உருவாக்கினால் காலப்போக்கில் மதத்தின் செல்வாக்கு சரியும். மதத்தின் வழியாக வரும் கொடுங்கோன்மையையும் எதேச்சாதிகாரத்தையும் தடுக்கப் போராடுவது தேவை. ரோமாபுரியின் போப்பரசர்கள் செய்த சர்வாதிகாரம், கொடுமைகள் தாங்க முடியாமல்தான் 16ஆம் நூற்றாண்டில் கிறித்துவத்தில் புரொட்டஸ்ட்டண்ட் பிரிவு பாதிரியார் மார்ட்டீன் லூதரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் எங்கெல்சு சுட்டிக்காட்டி, அதே மதத்திலிருந்தே கூட சீர்திருத்தங்கள் எழ வாய்ப்புண்டு என்றார்.
பெரியாரும் அவர்வழி வந்தோரும் இந்துக் கடவுள்களை எதிர்த்துக் கொச்சையாகவும், கடுமையாகவும் பேசப்பேச, பிராமணரல்லாத பக்தர்களிடையே பெரியார் மீது ஏற்பட்ட சீற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவா பேசும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. அமைப்புகள், பிராமணரல்லாதாரிடையே வேகமாக வளர்ந்தன.
கடவுள், மத நம்பிக்கை மக்களிடம் எப்படி இருக்கிறது என்பதை காரல் மார்க்ஸ் விளக்கினார்.

கொடுங்கோன்மையும் எதேச்சாதிகாரமும் நிலவிய காலத்தில் மக்கள் தங்கள் வறுமையை – உரிமைப் பறிப்பை – துன்ப துயரங்களைச் சொல்லி முறையிட அரசியல் கட்சிகள் இல்லை. வேறு சமூக சனநாயக இயக்கங்கள் இல்லை. கோயிலில் போய் முறையிட்டுக் கோரிக்கை வைத்தார்கள். கோயில் பூசாரிகள் அல்லது பாதிரியார்கள் இறைவன் உன் துன்ப துயரத்தை நீக்குவேன் என்று கூறி, கோயில் பிரசாதம் கொடுத்தார். (தமிழ்நாட்டில் பிராசதமும் திருநீறும் கொடுத்தனர் – பெ.ம.).

அப்போது துயரப்பட்டு வந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ஆறுதலைக் காரல் மார்க்ஸ் விரிவாகக் கூறியுள்ளார்.

குரலற்றவர்களின் குரலைக் கேட்கும் இடமாக, இதயமற்ற உலகத்தில் இதயமுள்ள பீடமாக, மக்களின் மனக் காயங்களுக்கு ஆறுதல்களால் மருந்து தடவும் இடமாகக் கோயில்கள் விளங்கின. நீங்கள் இறந்த பின் இவ்வுலகத் துன்பங்களுக்குப் பதிலாக சுகம் பெறுவீர்கள்; மேன்மை அடைவீர்கள் எனக் கோயில் பூசாரிகள் ஆறுதல் கூறினர். காயங்கள் வலிக்காமல் இருக்க அபின் பயன்படுவதுபோல், மத பீடங்கள் துன்பப்பட்ட மக்களின் மனக் காயங்களை மரத்துப் போகச் செய்தன என்றார் மார்க்ஸ்.

சனநாயக இயக்கங்கள் அற்ற காலத்தில் மட்டுமல்ல, இன்றும் மக்களின் உளவியல் தேவையாக கடவுள் உணர்வும், மதமும் செயல்படுகின்றன.

இவ்வாறான சமூக – உளவியல் பகுப்பாய்வுகள் எல்லாம் பெரியாரிடமும் இல்லை; பெரியாரியர்களிடமும் இல்லை. கடவுள் உணர்வு, மதம் ஆகியவை மனித உளவியலில் இருக்கிறது. அதன் புறவடிவங்கள்தாம் கோயில்கள்!

நாம் பெரியாரியர்களைக் கேட்டுக் கொள்வது இரட்டை வேடம் போடாதீர்கள் என்பதுதான்! இந்து மதத்தை ஒழித்துவிட முடியம் என்று இன்றும் நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? முதலில், பெரியாரியர்களாகிய நீங்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லை? அதற்கு சட்டத்தடை எதுவும் இல்லையே!

இரட்டை வேடம் போட்டு, இந்து மதம் – சிவனியம் – மாலியம் முதலிய சமயப்பிரிவுகளில் பிராமண ஆதிக்கத்திற்கு, பிராமண ஏகபோகத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டீர்கள்! பிராமண ஆதிக்கத்திற்கு மறைமுகமாகத் துணை போகிறீர்கள்! உங்களைக் காட்டித்தான், இந்து மதம் காக்க எங்களோடு வாருங்கள் என்று தமிழர்களை அழைத்துக் கொள்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ச.க.வும்!

தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 4 )
========================================
இந்திய அரசு –
ஆரியப் பிராமணிய – ஆரிய வைசிய அரசு
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================


இந்திய அரசின் தலைமையானது சாரத்தில் ஆரியப் பிராமண – ஆரிய வைசியத் தலைமை கொண்டது என்பதுதான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வரையறுப்பு. பெரியார், இந்திய அரசைப் பார்ப்பன பனியா அரசு என்று சரியாகவே கணித்துப் பேசினார். ஆனால், 1954 முதல் 1967 வரை அதே இந்திய அரசின் மக்களவைக்கும், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் ஆளும் பார்ப்பன – பனியா கட்சியான காங்கிரசுக்கு வாக்கு கேட்டார். தேர்தல் பரப்புரை செய்து, காமராசரால் ஆளும் வர்க்க குணத்தை மாற்றிவிட முடியுமா? காமராசர்தான் அப்படிப்பட்ட புரட்சியாளரா?

பெரியார் காமராசரை முன்னிட்டு, காங்கிரசை ஆதரிக்கிறேன் என்பதெல்லாம் திசை மாற்றும் வாதம்!

இரண்டு காரணங்களால் காங்கிரசை அவர் ஆதரித்தார். அப்போது அவரின் முதன்மை வேலை – தி.மு.க. ஒழிப்புதான்! அதற்காகவே காங்கிரசை ஆதரித்தார். அடுத்து, ஆட்சியாளரை ஆதரிப்பது அவரது வாடிக்கை!

ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தார். 1947இல் ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைவிட்டுப் போகக் கூடாது என்றார். இந்திய விடுதலை நாளான 15.08.1947-ஐ துக்க நாளாகக் கடைபிடித்தார். அதேவேளை, அப்போது தி.க.வின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா 15.08.1947 “விடுதலை நாள் – இன்ப நாள்” என்று அறிக்கை வெளியிட்டார்.

அடுத்து, 1947 – 1953 வரை காங்கிரசு ஆட்சி எதிர்ப்பு. 1954 முதல் 1967இல் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படும் வரை காங்கிரசை ஆதரித்தார் பெரியார். 1967இலிருந்து தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அதை ஆதரித்தார்.

ஆரியப் பிராமண – ஆரிய வைசிய (அம்பானி, அதானி, பிர்லா வகையறா) ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டுமானால் தமிழ்நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் வேண்டும் என்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம். இன்றும் காங்கிரசும், பா.ச.க.வும் தமிழ் இனத்தின் முதன்மைப் பகை ஆற்றல்கள் என்கிறோம். ஏன்? இவ்விரண்டும் ஆரிய பிராமண – ஆரிய வைசிய வர்ணங்களின் – வர்க்கங்களின் முதன்மைப் பிரதிநிதிகள்!

பிராமண ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டளவில் விலக்கிக் கொள்ள, கட்டுப்படுத்த சில வேலைத் திட்டங்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது.

தமிழர் ஆன்மிகத்திலிருந்து பிராமண – சமற்கிருத ஆதிக்கத்தை நீக்குவதற்கு தமிழ்ச் சிவநெறி, சித்தர் பீடங்கள், ஆசீவக அமைப்பினர், வள்ளலார் அமைப்புகள், சிவநெறியாளர்கள், மாலிய நெறியாளர்கள் ஆகியோரைக் கொண்ட “தெய்வத்தமிழ்ப் பேரவை” என்ற ஆன்மிக அமைப்பை உருவாக்கியது. அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை அமர்த்தினார்கள். அதற்கென்று தலைமைச் செயற்குழு உள்ளது.

நாங்கள் எடுத்த முயற்சியின் பயனாய் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முதலாகத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் 05.02.2020 அன்று கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றி, தமிழ் மந்திரம் ஒலிக்கும் குரல் கேட்டது. பிராமணர்கள் மட்டுமே கோபுரக் கலசத்தில் புனித நீர் ஊற்றி, சமற்கிருதம் ஓதி குடமுழுக்கு நடந்துவந்த வழக்கத்திற்கு மாறாகப் பிராமணர்கள் அவர்கள் வழக்கம்போல் குடமுழுக்கு நீருற்றி சமற்கிருத மந்திரம் சொன்னதும், தமிழ்ச் சிவநெறியாளர்கள் இருவர் கலசத்தில் நீரூற்றித் தமிழ் மந்திரம் சொன்னார்கள். ஒலிபெருக்கி வைத்திருந்தார்கள். சரிபாதி நேரம் சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. கோபுரத்தின் கீழே நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழ் மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு கைதட்டி, ஆரவாரம் செய்தது கண்கொள்ளாக் காட்சி!

தஞ்சைப் பெரிய கோயில் – பெருவுடையார் குடமுழுக்கை தமிழர்களைக் கொண்டு, தமிழ்வழியில் நடத்த பலரும் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் எடுத்தோம். தஞ்சையில் கோரிக்கை மாநாடு போட்டோம்; மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். மூத்த வழக்கறிஞர்கள் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த திருச்சி முத்துகிருட்டிணன், சென்னை சிகரம் செந்தில்நாதன், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், இளம் வழக்கறிஞர் திருமுருகன் எனப் பலரும் வாதிட்டனர். சமற்கிருதம் – தமிழ் இரண்டிரும் குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஒப்புதல் தெரிவித்து அதையே தீர்ப்பாக்கியது உயர் நீதிமன்றம்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இந்திய சனநாயகக் கட்சி, தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகம், கருவூறார் சித்தர் பீடம் - மூங்கிலடியார், வடகுரு இராசயோக பீடம் – குச்சனூர்க் கிழார், சத்தியபாமா அறக்கட்டளை – சத்தியபாமா அம்மையார், குடந்தை இறைநெறி இமயவன், தமிழ்ப் பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குநர் வ. கௌதமன், தமிழர் கட்சி தலைவர் தீரன் திருமுருகன், முதலிய பலரும் தஞ்சைத் தமிழ்க் குடமுழுக்கு இயக்கத்தில் பங்காற்றினர்.

அதன்பிறகு, கரூர் பசுபதி ஈசுவரர் கோயில், விராலிமலை முருகன் கோயில் என மேலும் சில கோயில் குடமுழுக்குகளில் தமிழின ஓதுவார்களைக் கொண்டு தமிழ் மந்திரம் ஓதச் செய்தோம்!

தி.மு.க. ஆட்சி வந்தவுடன் கோயில்களில் அனைத்துச் சாதியினரை அர்ச்சகராக்குவோம்; தமிழில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்வோம் என்றது. இவ்வாறான அறிவிப்புகள் – தொடக்க நிலைச் செயல்பாட்டோடு தொடராமல் போனதுதான் கடந்த பல்லாண்டுப் பட்டறிவு!

அதுபோல் இப்போதும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, வீடுவீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து, கோயிலுக்குப் போகும்போது தமிழில் அர்ச்சனை செய்யக் கேளுங்கள் என்று வேண்டுகோள் வைத்தோம். பல மாவட்டங்களில் – பல கிராமங்களில் பல நகரங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் இக்களப் பணியில் வீடு வீடாகச் சென்றார்கள்; வீதி வீதியாகச் சென்றார்கள். அதே துண்டறிக்கையில் அனைத்துச் சாதியினர் அர்ச்சகராவதை ஆதரித்தும், அதை முழுமையாகச் செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்தோம்.

தெய்வத் தமிழ்ப் பேரவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆண்கள் – பெண்கள் 50 பேர்க்கு மேல் 24.08.2021 அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று தமிழ்வழியில் அர்ச்சனை கோரினோம். முன்கூட்டியே இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன், தூத்துக்குடி இணை ஆணையர் திரு. அன்புமணி ஆகியோரைச் சந்தித்து மனுக் கொடுத்து, தமிழ்வழி அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரினோம். இணை ஆணையரும் மற்ற அதிகாரிகளும் திருச்செந்தூர் முருகன் கோயில் கருவறையில் தமிழ் அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வழிபடச் சென்றால், யாராய் இருந்தாலும் ஆண்கள் மேல் சட்டையைக் கழிற்றி வைத்துவிட்டுத்தான் போக வேண்டும். நானும் மற்ற பெருமக்களும் மேல் சட்டை இல்லாமல் தான் சென்றோம்.

தமிழ் மந்திரம் சொல்லக்கூடிய பிராமண அர்ச்சகர்கள் இருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் கருவறையில் தமிழ் மந்திரங்கள் சொல்லி படையல் செய்து, பிரசாதம் – திருநீறு வழங்கினார்கள். இதில் யார் தலைமை என்று கேட்டார்கள். என்னைச் சுட்டிக் காட்டினார்கள், தெய்வத்தமிழ்ப் பேரவைப் பொறுப்பாளர்கள். நானோ எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு செந்தில்வேலன் கருவறையில் தமிழ் மந்திரம் ஒலிக்கிறதே என்று எண்ணி, கண்களில் நீர் சுரக்க அழாத குறையாக நின்று கொண்டிருந்தேன்.

அர்ச்சகாகள் என்னிடம் தீபாரதனை காட்டி திருநீறு பூசினார்கள். என்னிடம் கொடுத்தார்கள். நானும் வாங்கிப் பூசிக் கொண்டேன்.

நாங்கள் இந்துமதக் கோயில் வழிபாட்டில் சமற்கிருதத்தை நீக்கி, பிராமணப் புரோகிதர்களை நீக்கும் முயற்சிகளில் இவ்வாறு களச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். இத்திசையில் எவ்வளவோ தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், அத்திசையில் செயல்பட்டு சில அடிகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நிகழ்வுகளை ஆன்மிக முறைப்படி நடத்த விரும்புவோர்க்கு, தமிழர் ஆன்மிக முறைப்படி தமிழ் மந்திரங்கள் – திருப்பாடல்கள் முழங்கி சடங்குகள் செய்யும் தமிழர் ஆன்மிக நெறியாளர்களை ஏற்பாடு செய்து, பிராமணப் புரோகிதர்களையும் சமற்கிருதத்தையும் புறக்கணிக்கச் செய்து வருகிறோம்.

இவ்வாறான பணிகளில் ஈடுபட்டு வரும்போதுதான், பிராமணர்களையும் சமற்கிருதத்தையும் தமிழர் ஆன்மிக நிகழ்வுகளிலிருந்தும், குடும்பச் சடங்குகளிலிருந்தும், சமூகச் சட்டாம்பிள்ளைத் தனத்திலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்கும் திட்டம் பற்றிச் சிந்தித்தோம்.

ஆரிய இந்து வேறு; தமிழ் இந்து வேறு; தமிழ் இந்துக்களுக்கு பகவத் கீதை புனித நூல் அல்ல; பிராமணாகள் பூசாரிகள் அல்லர்; சமற்கிருதம் புனித மொழி அன்று. திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள், கருவூரார் உள்ளிட்ட சித்தர்கள் பாடல்கள், வள்ளலார் பாடல்கள், பாம்பன்சுவாமி பாடல்கள், வைகுண்டர் மந்திரங்கள் போன்றவையே தமிழ் இந்துவின் புனித நூல்கள் என்று வரையறுத்தோம்.

இத்திட்டத்தை எங்கள் அமைப்பில் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்) நான்தான் முன்மொழிந்தேன். எங்கள் அமைப்பு இக்கொள்கையை முன்வைத்து வருகிறது. இதுகுறித்து எமது தமிழர் கண்ணோட்டம் இதழில் 2002 திசம்பர், 2003 சனவரி இதழ்களில் “மதமும் தமிழ்த்தேசியமும்” என்ற தலைப்பில் இரு கட்டுரைகள் எழுதினேன்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், கடவுளை ஏற்போர் – மறுப்போர் இருவர்க்கும் உரியது; பொதுவானது. ஒருவரை ஒருவர் இழிவு செய்து கொள்ளாமல், ஆத்திகரும் நாத்திகரும் அவரவர் கொள்கையை வெளிப்படுத்தித் தருக்கம் செய்து கொள்ளலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்து வருகிறோம்.

தமிழ் ஆத்திகர் – நாத்திகர் இருதரப்பாருக்கும் பொது எதிரிகள் ஆரியப் பிராமண ஆதிக்கவாதிகள் – சமற்கிருதம் - அதன் வேத நூல்கள்!

இப்பின்னணியில்தான் நான் திருச்செந்தூரில் திருநீறு பூசிக் கொண்டேன். இதை மறைக்கத் தேவை இல்லை என்றுதான் மேல் சட்டை இல்லாமல் நானும் மற்ற சான்றோர்களும் திருநீறு பூசிக் கொண்டு நிற்கும் காட்சிப்படத்தைத் தமிழர் கண்ணோட்டம் அட்டைப் படத்தில் 2021 செப்டம்பர் இதழில் வெளியிட்டோம்! மேல் சட்டையின்றி, திருநீறு பூசிக் கொண்டதை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

இதையும் பெரியாரியர்கள் நையாண்டி செய்கிறார்கள். அவர்களின் நிலையில் அக்கேலி இயல்பானதே! அதை இயல்பாக எடுத்துக் கொள்கிறேன்.

தெய்வத்தமிழ்ப் பேரவை அமைப்பின் தலைமைச் செயற்குழுவில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க – சித்தர் பீடத் தலைவர் ஐயா மூங்கிலடியார், தேனி மாவட்டம் – குச்சனூர் வடகுரு இராசயோக பீடம் ஆதினத் தலைவர் ஐயா குச்சனூர்க் கிழார், குடந்தை தெய்வத்தமிழ்க் கூடல் - ஐயா இறைநெறி இமயவன், மேச்சேரி – சத்தியபாமா அறக்கட்டளை சித்தர் பீடத் தலைவர் சத்தியபாமா அம்மையார், சென்னை சிவநெறியாளர் சிவவடிவேலனார், திருவில்லிப்புத்தூர் சிவநெறியாளர் மோகனசுந்தரனார், பழைய வத்தலகுண்டு ஐயா பொன்னுச்சாமி, ஆசீவகம் சமய நிறுவனர் திரு. சுடரொளியார், சிதம்பரம் வள்ளலார் ஆய்வாளர் – முனைவர் சுப்பிரமணிய சிவா, சென்னை சிவநெறியாளர் செயராஜ், புதுச்சேரி வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ், திருச்சி வே.பூ. இராமராசு, பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி, கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள். இவர்களில் சிலரைத் தவிர மற்றெல்லோரும் திருச்செந்தூர் தமிழ் வழிபாட்டிற்கு வந்திருந்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் குரும்பூர் மு. தமிழ்மணி, குடந்தை விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் தோழர் அருணா, பொதுக்குழு தோழர்கள் மதுரை கதிர்நிலவன், சிவா, க. தீந்தமிழன், பிரபு மற்றும் குரும்பூர்ப் பகுதி ஆண்கள் - பெண்கள் – சிறுவர்கள் உள்ளிட்ட குடும்பங்கள் எனப் பலரும் திருச்செந்தூர் தமிழ் வழிபாட்டில் பங்கேற்றோம். மற்ற கோயில்களிலும் இவ்வாறான தமிழ் வழிபாட்டை முன்னெடுக்க உள்ளோம்.

தமிழர் ஆன்மிகத்தில் ஆரியப் பிராமண சமற்கிருத ஆதிக்கத்தை நீக்குவதற்கு இவ்வாறு களப்பணி ஆற்றி வருகிறோம். திராவிடவாதிகள் – பெரியாரியவாதிகள் எங்களைப் போல் ஆரியப் பிராமண – சமற்கிருத நீக்கத்திற்குக் களப்பணி எதுவும் ஆற்றுகிறார்களா? இல்லை! அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் எங்களைப் போல் அவர்களால் பணியாற்ற முடியாது. ஆனால், அவர்கள் இந்து மதத்தை விட்டு விலகிவிடலாம் அல்லவா? அதை ஏன் செய்யவில்லை? இந்திய அரசமைப்புச் சட்டம் – மதம் மாறுவதற்கும் மதமற்று – கடவுள் நம்பிக்கையற்று இருப்பதற்கும் அனுமதி அளிக்கிறது. ஏன் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி, மறைமுகமாக ஆரிய பிராமண சமற்கிருத ஆதிக்கத்திற்குத் துணை போகிறார்கள்?

ஏன் என்றால் அவர்கள் வந்தவழி அது! பெரியாரியர்களாகிய அவர்களுக்கென்று – திராவிட இனத்திற்கென்று – சொந்த வரலாறு எதுவும் கிடையாது. திராவிடத் தத்துவம் எதையும் யாரும் படைத்திடவும் இல்லை! பெரியாரும் திராவிடத் தத்துவம் எதையும் படைக்கவில்லை. அவரின் கருத்துகள் – எதிர்ப்புச் சிந்தனைகளின் தொகுப்பு! அவ்வளவே!

(தொடரும்)



தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 5 )
========================================
தோழர் விடுதலை இராசேந்திரன்
அவர்களின் கட்டுக் கதைகள்
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================
நான் திராவிடம், பெரியாரின் தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை முற்றிலும் எதிர்த்தாலும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஐயா வே. ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கோவை இராமகிருட்டிணன், தி.வி.க. பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் போன்றோர் மீது மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டவன்.
அதற்கு முதல் காரணம், இவர்கள் பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் தமிழ்நாட்டில் இயங்கி வரும் சமூகப் போராளிகள் என்பதே! அடுத்து, இவர்கள் தமிழ் இன, தமிழ் மொழிப் பற்றாளர்கள்.
அவர்களோடு, எங்களது தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல கூட்டுப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ் ஈழம், தமிழ்மொழிக் கல்வி போன்ற அரங்குகளில் தொடர்ந்து கூட்டமைப்பாக இயங்கியுள்ளோம்.
நான் ஆரிய இந்து – தமிழ் இந்து என்று பிரித்து, ஆரியப் பிராமண – சமற்கிருதக் கலப்பையும், ஆதிக்கத்தையும் விலக்கும் வகையில் வரம்பு கட்டினேன். எனது இக்கருதுகோளை எதிர்க்கலாம். அதனால் ஏற்படும் “பாதகங்கள்” என்று அவர் கருதுபவற்றை வெளிப்படுத்தலாம். அதில் எல்லாம் தவறில்லை. அது திறனாய்வுத் தருக்கம்! திறனாய்வாளர்களின் எதிர்க்கருத்துகள் இல்லாமல் ஒரு புதிய கோட்பாடு செழுமை பெறாது.
ஆனால், நம்முடைய தோழர் விடுதலை இராசேந்திரன், நான் கூறாதவற்றையெல்லாம், மேற்கோள் குறியின்றி பொய்கூறி, நான் கூறியதாகக் கண்டிக்கிறார். இதோ சிலவற்றைப் பார்க்கலாம்.
“தமிழையும், இந்துவையும் இணைக்கும் மணியரசனின் குழப்பங்கள்” என்பது தோழர் விடுதலை இராசேந்திரனின் கட்டுரைத் தலைப்பு. இதனை 16.10.2021 அன்று நான் வலைத்தளத்தில் படித்தேன். உடல்நலக் குறைவோடுதான் இருந்தேன். அன்று மாலையில் இருந்து உடல்நலக்குறைவால் படுக்கையாகிவிட்டேன். எனவே, காலம் தாழ்ந்து எதிர்வினை ஆற்றுகிறேன்.
“தமிழர்களை இனி ‘தமிழ் இந்து’ என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிவித்திருக்கிறார்” என்பது அக்கட்டுரையில் முதல் சொற்றொடர்.
நான் எங்கே, எதிலே, தமிழர்கள் அனைவரும் தமிழ் இந்துக்கள் என்று கூறினேன். சான்று காட்ட வேண்டுமல்லவா!
தமிழர்களில் இந்துக்கள், முசுலிம்கள், கிறித்துவர்கள் எனப் பல மதத்தவர் இருக்கிறார்கள். தமிழர்கள் அனைவரையும் தமிழ் இந்துக்கள் என்று எப்படிக் கூற முடியும்?
நான் அப்படிக் கூறவில்லை. என் பெயரைப் போட்டு பொய் உரைக்கிறார் தோழர் இராசேந்திரன்.
தமிழர்களில் இப்போது இந்து மதத்தில் உள்ளவர்களைத் தமிழ் இந்து – ஆரிய இந்து என்று பிரிக்க வேண்டும். பிராமணத் தலையீடோ, சமற்கிருத ஆதிக்கமோ தமிழ் இந்துவில் கூடாது. அவற்றை அவர்கள் ஆரிய இந்துவில் பார்த்துக் கொள்ளட்டும் என்பதுதான் எனது கருத்து!
அடுத்து, சில பத்திகளுக்குக் கீழே கேட்கிறார் :
“சரி, ‘தமிழ் இந்து’ அடையாளத்தோடு உருவாகும் தமிழ்த்தேசியத்தின் குடிமக்கள் யார்?”
ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகளில் மதம் ஒருபோதும் வராது. இதையெல்லாம் 1985 வாக்கிலேயே விளக்கி “இந்தியாவில் தேசிய இனங்கள்” என்ற நூலை எழுதியுள்ளேன். தாயகம், பொதுமொழி, வரலாற்று வழியில் உருவான பொதுப் பண்பாடு, பொதுப் பொருளியல் வாழ்வு போன்றவைதாம் ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகள்.
ஒரு தேசிய இனத்தில் பல மதங்கள் இருக்கலாம். தமிழ்த்தேசிய இனத்தில் இந்து, முசுலிம், கிறித்துவம் உள்ளிட்ட பல மதங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள். கடவுள் மறுப்பு, மத மறுப்பு, நாத்திகர்களும் தேசிய இனத்திற்குள் இருப்பார்கள்.
அதே பத்தியில் தோழர் இராசேந்திரன் கேட்கிறார், “இந்து அடையாளம் வேண்டாம்; சுயமரியாதை – சமத்துவம் – பெண்ணுரிமை என்ற அடையாளமே வேண்டும் என்ற கருத்துடைய பெரியாரிஸ்ட்டுகள், பொதுவுடைமையாளர்கள், தமிழ்த்தேசிய அடையாளத்துக்குள் வர முடியாதா? பல தலைமுறைக்கு முன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு வெளியேறிய இஸ்லாமிய, கிறித்துவர், பவுத்தர் (ஆகியோர்) இந்து அடையாளத்தை ஏற்க வேண்டுமா? தமிழ்த்தேசிய மக்களுக்கான “புதிய குடியுரிமைப் பதிவேடு” ஒன்றை உருவாக்கப் போகிறார்களா? இப்படிப் பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன” என்கிறார் விடுதலையார்!
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளையும் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளையும் விடுதலை இராசேந்திரனுக்குச் சொல்லித் தரவில்லை என்று தெரிகிறது. நான் 1970களிலேயே மார்க்சியப் பள்ளியில், பழங்குடி (Tribe), மரபினம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை குறித்தும் அவற்றிற்கிடையே உள் வேறுபாடுகள் குறித்தும் படித்தேன். அதேபோல் “மதம்” பற்றியும் மார்க்சியப் பள்ளியில் தெளிவாகப் படித்தேன்.
பொதுவாக மதம் ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறு இல்லை என்பதையும், மிகச்சிறு விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதையும் படித்தேன்.
பௌத்தம், கிறித்துவம், இசுலாம் மதங்கள் மரபு இனம் கடந்து, தேசிய இனம் கடந்து, தேசம் கடந்து பரவியுள்ளதை தோழர் இராசேந்திரன் பார்க்கவில்லையா? ஒரே கிறித்துவத்தைப் பின்பற்றும் நாடுகள் தங்களுக்கிடையே முதல் உலகப் போரையும் இரண்டாவது உலகப் போரையும் எதன் அடிப்படையில் நடந்திக் கொண்டன? தேசிய இன அடிப்படையில்!
ஒரே அல்லாவை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஈரானும் ஈராக்கும் நம் காலத்தில் எட்டாண்டுகள் போரிட்டுக் கொண்டனவே. வேறு பல இசுலாமிய நாடுகளும் போரிட்டுக் கொள்கின்றனவே!
ஒரே புத்த மதத்தைச் சேர்ந்த சீனாவும், சப்பானும் கடந்த காலங்களில் போரிட்டது போக – இன்றைக்கும் எலியும் பூனையுமாக இருக்கின்றனவே!
தோழர் இராசேந்திரன் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவருடைய பேராசான் பெரியார், நான்கு இனப் பகுதிகளும் சேர்ந்திருந்த “திராவிட நாட்டு”க்கு விடுதலை கேட்டார். கடைசியில் 1956இல் தமிழ்நாடு அமைந்தவுடன் அதுவே சரி என்றார். அதன்பிறகு, கன்னியாகுமரி அளவே இருந்தாலும் எனக்குத் தனித்தமிழ்நாடு வேண்டும் என்றார். அந்தப் பல்கலையில் படித்தவர்க்கு தேசிய இனம், மதம் இவற்றிற்கிடையே வேறுபாடு தெரியாமல் போனதில் வியப்பில்லை.
ஒரு தேசிய இனத்தில் பல மதங்கள் இருக்க வாய்ப்புள்ளதுபோல், பல கொள்கையாளர்கள் இருப்பார்கள. முதலாளியப் போக்கு, பொதுவுடைமைச் சிந்தனை, பெண்ணடிமையாளர், பெண் விடுதலையாளர் எனப் பலரும் இருப்பார்கள். மூட நம்பிக்கைகள் இருக்கும். முற்போக்கு அறிவியல் கருத்துகள் இருக்கும். இவற்றில் எவற்றை நாம் வளர்க்கிறோம், எவற்றை எதிர்க்கிறோம்; அல்லது புதிய கருத்தியலை உருவாக்கிச் செயல்படுகிறோம் என்ற பல வாய்ப்புகள் இருக்கின்றன. நம் கருத்தை பெரும்பான்மை மக்களை ஏற்கச் செய்கிறோமா என்பதைப் பொறுத்து அச்சமூகத்தின் திசைவழியும் வளர்ச்சியும் அமையும்.
“தேசியம்” என்றாலே வடிகட்டின அயோக்கியத்தனம் என்று வரையறை கொடுத்தவர் பெரியார்.
“நாம் மாத்திரமல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்ற ஒரு மேதாவி தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று அதாவது பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழிபிழைப்பிற்கு மார்க்கமானது என்று கூறியிருக்கிறார்”.
“நான் இந்திய சுயராஜ்யம், இந்தியத்தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகில் உள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும், சுயராஜ்ஜியங்களையும் கண்டும் தெரிந்தும் தான் பேசுகிறேனேயொழிய, கிணற்றுத் தவளையாக இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேசபக்தனாக இருந்தோ நான் பேசவில்லை”.
- பெரியார், 1934, 1935 ஆண்டுகளில் இக்கருத்துகளைப் பேசியுள்ளார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 1, பக்கம் 380 – 385 – வே. ஆனைமுத்து ஐயா தொகுப்பு).
இத்தாலியின் தேசப்பற்றைப் பேசிய மாஜினி, துருக்கியின் தேசப்பற்றைப் பேசிய கமால் பாட்சா, சீனத்தின் தேசப்பற்றைப் பேசிய மாசேதுங், வியட்நாம் தேசப்பற்றைப் பேசிய ஹோச்சிமின், பாலத்தீனத்தின் தேசப்பற்றைப் பேசிய யாசர் அராபத், தமிழீழத்தேசப் பற்றைப் பேசிய பிரபாகரன் எல்லாருமே பெரியார் வரையறைப்பின்படி வடிகட்டின அயோக்கியர்கள்; பிழைப்பிற்கு வழி இல்லாதவர்கள். இழிபிழைப்பிற்காகத் தேசியத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்! என்னே “ஆராய்ச்சி அறிவியல்”!
பெரும்பாலான திறனாய்வுகளில் பெரியார் எதிர்த்தரப்பினரை, பிழைப்புக்கு வழியில்லாதவர்கள், வயிற்றுச் சோற்று ஜீவனத்துக்குப் பேசுகிறவர்கள் என்பார். புதிய தமிழகம் கோரிப் போராடிய ம.பொ.சி.யையும் அப்படித்தான் திட்டினார். அதாவது ஈரோட்டு வணிகப் பணக்கார ஆணவ உளவியலில் இருந்து, பொதுத் தொண்டுக்கு வந்த பின்னரும் அவரால் விடுபட முடியவில்லை.
தேசிய இன ஆதிக்கவாதிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் தோன்றுவார்கள். இட்லர், முசோலினி போன்றோரை எடுத்துக் காட்டலாம். ஆனால், தங்கள் தேசிய இன உரிமை மீட்புக்குப் போராடிய, செயல்பட்ட அனைவரும் இட்லர்களோ, முசோலினிகளோ அல்லர். இந்தப் பகுப்பாய்வெல்லாம் பெரியார் பல்கலையில் விடுதலையார் படிக்கவில்லை போலும்! அதனால்தான் தமிழ்த்தேசியத்தில் புதிய குடியுரிமைப் பதிவேடு ஒன்றை உருவாக்கப் போகிறார்களா என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
“தமிழ்த்தேசியமும் தமிழ் இந்துவும் ஒன்றுதான் என்று பெ. மணியரசன் கூறுகிறார்” என்கிறார் விடுதலை இராசேந்திரன். எந்த உரையில் அல்லது எந்தக் கட்டுரையில் நான் அவ்வாறு கூறியுள்ளேன்? சான்று காட்டாமல் தமது எதிர்வாத வசதிக்காக எதிரியின் கூற்றுகள் என்று பொய்யை இட்டுக்கட்டிக் கொள்வது நேர்மையா? தருக்க அறமா?
நான் மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறேன் என்பதை உரிய சான்றுடன் விடுதலை இராசேந்திரன் மெய்ப்பிக்க வேண்டும் என்று அறைகூவல் (சவால்) விடுகிறேன். அவர் கட்டுரை முழுக்க நான் சொன்னதாக அவராக இட்டுக்கட்டிக் கொண்டு விமர்சிப்பது என்ன ஞாயம்? என்ன நாகரிகம்?
என்னைத் தாலிபான் என்ற பொருளில் தமிழ்நாடு மற்றொரு ஆப்கானிஸ்தான் ஆக முடியாது என்கிறார். சாவர்க்கர் போல் – தமிழ் இந்து தேசத்தை உருவாக்க முயலும் மணியரசன் இன்னொரு சாவர்க்கர் போன்றவர் என்று எச்சரிக்கிறார்.
நாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தில் தமிழ் இந்து, கிறித்துவர், முசுலிம், புத்தம், கடவுள் மறுப்பாளர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டென்று திரும்பத்திரும்ப சொல்லி வருகிறோம். எந்த மதவெறியும் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் கடவுள் மறுப்பாளர்களுக்கும் சம உரிமை உண்டு என்கிறோம். இதில் தமிழ் இந்து தாலிபன்கள் எப்படி உருவாவர்?
ஆரிய இந்துவில் தாலிபான்கள் உருவாக மாட்டார்கள்; ஆனால், ஆரிய பிராமணியத்தை விலக்கி வைக்கும் தமிழ் இந்துவில் தாலிபான்கள் உருவாவர் என்று புரளியும், பீதியும் கிளப்பினால் என்ன பொருள்? ஆரிய இந்துத்துவா பரவாயில்லை, தமிழ் இந்துவைத் தடுப்போம் என்று பெரியாரியர்கள் கச்சைகட்டுவதாகத்தானே பொருள்!
எனது திராவிட மறுப்பு மற்றும் பெரியார் சிந்தனைகளில் உள்ள தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை நான் எதிர்ப்பது விடுதலை இராசேந்திரன் போன்றவர்களுக்கு என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியிருக்கலாம். அதற்காக நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகக் கட்டமைத்துக் கொண்டு என்னைச் சாடினால் – அந்தப் பொய் எத்தனை நாளைக்கு அல்ல எத்தனை மணித் துளிகளுககுத் தாக்குப் பிடிக்கும்? கதிரவன் எழுந்தவுடன் காலை மூடுபனி காணாமல் போவதுபோல் விடுதலை இராசேந்திரன் பொய்கள் காணாமல் போகும்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளமைப்பு சனநாயகம் மிக்க ஒரு சனநாயகக் கட்டமைப்பு கொண்டது. அதன் கொள்கை அறிக்கையும், அமைப்பு விதிகளும் ஒரே நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசத்திற்கு இறையாண்மை உரிமை கிடைத்ததும் எப்படிப்பட்ட சனநாயகக் கட்டமைப்பு அரசில் – அரசியலில் செயல்பட வேண்டும் என்று அந்நூலில் வெளியிட்டுள்ளோம்.
தமிழ்நாடே ஒரு கூட்டாட்சியாய் – ஊராட்சியிலிருந்து – தமிழ்நாடு அரசு வரையான மக்களாட்சி கொண்ட கூட்டாட்சியாய் – முழு சனநாயக ஆட்சியாய் மாற்றப்படும். மக்கள் தங்கள் விருப்பத் தேர்வுக்கேற்ப ஆட்சியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். பல கட்சி சனநாயகம் செழிப்பாக்கப்படும் என்பவற்றைச் சாரமாகத் தெரிவித்துள்ளோம்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தையெல்லாம் ஒரு பொருட்டாக மதித்து அவர்களின் கொள்கை அறிக்கையைப் படிக்க வேண்டுமா என்று விடுதலையார் புறக்கணித்திருந்தால் அதில் தவறொன்றுமில்லை. அது அவர் உரிமை. ஆனால், ஓர் அமைப்பைப் பற்றி அதன் செயல்முறையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி “தீர்ப்பெழுதுவது” தவறு என்று கருதுகிறேன்.

(22.11.2021 அன்று சேர்க்கப்பட்டது)


தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 6 )
========================================
பிராமண ஆதிக்க எதிர்ப்பில்
நீதிக்கட்சியின் பாத்திரம்!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================
தமிழர்களின் தொன்மைமிக்க ஆன்மிகத்தை ஆரிய ஆக்கிரமிப்பிலிருந்து திராவிடம் காக்குமா? அதற்கான வேலைத்திட்டம் பெரியாருக்கோ, திராவிட இயக்கத்திற்கோ என்றைக்காவது இருந்தது உண்டா? இல்லை!
தி.மு.க.வை ஆளுங்கட்சியாகத் தேர்ந்தெடுத்தால் – இந்து அறநிலையத்துறை அமைச்சரை அமர்த்துவார்கள். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற பிராமண ஆதிக்கத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் என்றெல்லாம் அறிவிப்பார்கள். அடையாளத்துக்குச் சிலவற்றைச் செய்துவிட்டு பிராமண ஆதிக்கத்திற்குச் சேதாரம் இல்லாமல் ஆட்சி செய்து முடிப்பார்கள்.
தி.மு.க.வினரும், தி.க.வினரும் தங்களின் தாய்க்கட்சி நீதிக்கட்சி என்று பெருமையாகப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அந்த நீதிக்கட்சியினர் அரசியலில், அரசு வேலைகளில் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்தார்களே அன்றி, சமுதாயத்தில் நிலவும் பிராமண ஆதிக்கத்தையும் சமற்கிருத ஆதிக்கத்தையும் எதிர்க்கவில்லை.
எடுத்துக்காட்டாக, பனகல் அரசர் என்று அழைக்கப்படும் இராமராய நிங்கர் 1920களில் முதலமைச்சராக இருந்தபோது, திருவரங்கம் நகராட்சியில் பிராமணர்கள் கொடுத்த வரவேற்பு விழாவை ஏற்றுக் கொண்டார். அதில் பிராமணர்கள் சமற்கிருதத்தில் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசிய பனகல் அரசர், சமற்கிருதத்திலேயே பேசியது வேதனை அளிக்கிறது என்றார் பெரியார். அத்துடன் பனகல் அரசர் பூணூலைக்கூட அகற்ற மறுக்கிறார் என்று குறைபட்டுக் கொண்டார் பெரியார்.
நீதிக்கட்சித் தலைவர்கள் சமூகத்துறையில் உள்ள பிராமண ஆதிக்கத்தோடு இணக்கம் கண்டார்கள்; அரசு அலுவல்களில் அரசியலில் உள்ள பிராமண ஆதிக்கத்தையே எதிர்த்துப் பங்கு கேட்டார்கள் என்பதை அண்ணா அவர்கள் 1944ஆம் ஆண்டே பொதுக்கூட்டமொன்றில் பேசினார். நீதிக்கட்சித் தலைவர்களில் – செல்வாக்குமிக்கவர்கள் – பெரும்பாலோர் ஆந்திரத் தெலுங்கர்களே!
நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சர்கள் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் என்கிற இராமராய நிங்கர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் போன்ற தெலுங்கர்களே! நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழரான டாக்டர் சி. நடேசனாரை ஒதுக்கினார்கள்.
நீதிக்கட்சித் தலைவர்களைப் பற்றி அண்ணா 1944இல் பொதுக்கூட்டங்களில் பேசியவை கவனத்திற்குரியவை.
“… திராவிடர் என்ற முழக்கத்தை மக்கள் மன்றத்திலே தமது கடைசி மூச்சு இருக்கும்வரை செய்து வந்தவர் டாக்டர் சி. நடேச முதலியார். (அவர் தமிழர் – பெ.ம.). அவர் தொடங்கிய அந்த அரிய இயக்கத்தினால் உண்டான வேகத்தை, உண்மையான விடுதலைக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், அரண்மனைகளிலே வீற்றுக் கொண்டு அரசியலை நடத்தி வந்த சீமான்கள், பட்டம் பதவிகளுக்கு இந்த வேகத்தைப் பயன்படுத்திக் கொண்டதுடன், தங்ளுடைய முழுத் திறமையும், காங்கிரசைக் குறைகூறவும், அதே நேரத்தில் பிரிட்டிஷாருக்கு துதிபாடவுமே உபயோகப்பட வேண்டுமென்று நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே, திராவிடர் என்ற உரிமைச் சொல் திராவிட அரசு அமைக்கும் பரணியாகாமல் சர்க்கார் காரியாலயக் கதவைத் தட்டும் சுயநலச் சத்தமாகிவிட்டது. டாக்டர் நடேச முதலியார் உள்ளம் உடைந்தே மாண்டார். இருந்தவரை அவர் திராவிடன் என்று பேசத் தவறியதில்லை”.
… …
“அவர்கள், தங்கள் ஆற்றலையெல்லாம் அரசியல் அதிகாரம் என்னும் மாயமானைப் பிடிக்கவே செலவிட்டார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு நகரிலும், பிரமுகர்களைச் சந்திக்கும்போது, தேர்தலைப் பற்றிப் பேசி வந்தனரே தவிர உத்தியோகத் துறையில் ஐயர்களுக்கு ஆதிக்கம் இருக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனரேயொழியச் சமுதாயத்தில் படிந்து கிடந்த ஆரியத்தை அகற்ற, திராவிட உணர்ச்சியை ஊட்ட, பணி புரியவில்லை”.
“சமுதாயத் துறையிலே பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்தல்ல; அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள பார்ப்பனர்களாலேயே நமக்கு ஆபத்து என்று வெளிப்படையாகவே அந்த நாள் தலைவர்கள் பேசி வந்தனர். தலைவர்களின் பேச்சு அவ்விதம் இருந்தது. டாக்டர் நடேச முதலியார் போன்ற ஓரிருவர் தவிர!
“திராவிட இன உணர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது….. சமுதாயத்தில் தலையிடுவதைத் தவறு என்று (தலைவர்கள்) எண்ணியதால், ஒரு இருபதாண்டுகள் மாயமான் வேட்டையில், மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு, அதன் விளைவாக, சதியாலோசனைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே, மாளிகைகள் – சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள்தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகள் ஆயினர்! பதவி தேடுவோர் அரங்கமேறினர்! பரங்கிக்குக் கொண்டாட்டம்! மக்கள், இந்தக் காரியங்கள் தங்களுக்கல்ல என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டு கட்சியைக் கண்டிக்கத் தொடங்கினர். மாளிகைகளிலே சதிச் செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று, ஒரு தலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக் கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர்”.
- 27.08.1944 அன்று அண்ணா நிகழ்த்திய சொற்பொழிவு, நூல் : “பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள் – 1”, பக்கம் 117 – 120, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
எப்போது அண்ணா பேசினார்? நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றிய மாநாடு1944 ஆகத்து 27இல் சேலத்தில் நடந்தது. அந்த மாநாட்டில்தான் அண்ணா மேற்படி சொற்பொழிவை ஆற்றியிருக்கிறார். நீதிக்கட்சிக்கும், திராவிடர் கழகத்திற்கும் தொடர்பில்லை என்று காட்டுவதற்கான வேறு சில தீர்மானங்களையும் அம்மாநாட்டில் நிறைவேற்றினார்கள். ஆங்கிலேய அரசு கொடுத்த ராஜா சர், ராவ் பகதூர் பட்டங்களை திராவிடர் கழகத்திலுள்ளவர்கள் துறந்துவிட வேண்டும் என்றும், ஆங்கிலேய அரசுப் பதவிகளில் இருந்தும் தி.க.வினர் விலகிவிட வேண்டும் என்றும் அம்மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள். அந்த மாநாட்டிற்குப் பெயர் – நீதிக்கட்சியின் பதினாராவது வருடாந்திர மாநாடு! அதில்தான், நீதிக்கட்சி மரபிலிருந்து நாங்கள் விலகி செயல்படுகிறோம் என்று, இந்தத் தீர்மானங்களைப் போட்டார்கள்.
ஆனால், நீதிக்கட்சிதானே எங்கள் தாய்க்கட்சி என்று பெருமையாக இன்றும் தி.க.வினரும், தி.மு.க.வினரும் கூறிக் கொள்கிறார்கள். அந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பெரியாரும், பொதுச்செயலாளராக அண்ணாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த மாநாட்டில் பேசிய அண்ணாதான் மேற்படி திறனாய்வுகளைச் செய்தார். நீதிக்கட்சி பற்றி இன்னும் பல திறனாய்வுகள் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள்” நூலில் உள்ளன. டாக்டர் பரிமளம் தொகுத்த அண்ணாவின் தன் வரலாற்று நூலிலும் நீதிக்கட்சி பற்றிய அண்ணாவின் திறனாய்வுகள் இருக்கின்றன.
“சமதர்மப் பொருளாதாரம் என்பதைக் கனவில் கூட நினையாதவர்கள் நீதிக்கட்சி சீமான்கள். ஏழைகள் உயர்வு பற்றிப் பேசினால் மேடையில் உட்கார்ந்திருக்கும் தலைவர்கள் முகத்தில் எள்ளும் வெடிக்கும்” என்பதும் அண்ணாவின் சொற்பொழிவுகளில் இருக்கின்றன. (அதே நூல்).
இந்த நீதிக்கட்சியைத்தான் தி.மு.க. தலைவர்கள் தங்கள் தாய்க்கட்சி என்று கூறிக் கொள்கின்றனர். அதிலும் மு.க. ஸ்டாலின் திரும்பத்திரும்பக் கூறிக் கொள்கிறார். உண்மைதான்! கலைஞர் தலைமை, ஸ்டாலின் தலைமையில் உள்ள இக்கால நீதிக்கட்சிதான் தி.மு.க. அண்ணாவின் திறனாய்வே சான்று!
நீதிக்கட்சியைத் தங்கள் தாய்க்கட்சியென்று தி.க.வும், தி.மு.க.வும் சொல்லிக் கொள்வதில் இருந்தே அவற்றின் இரட்டைவேடம் அம்பலமாகி விடும்!
1937 – 1944 காலத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பை ஒட்டி, தமிழறிஞர்கள் வீறு கொண்டு எழுந்ததையும், தமிழ் இன உணர்ச்சி பீறிட்டதையும் தமது சொற்பொழிவில் அண்ணா சுட்டிக்காட்டிப் பாராட்டுகிறார்.
“இந்தி எதிர்ப்புப் போராட்டம் தக்க சமயமாயிற்று. நாடு எங்கும் காங்கிரஸ் மீது கோபம் மட்டுமல்ல அந்த அளவு குறைவுதான் – தமிழ்ப்பற்று பரவிய காலம். எங்கும் சங்க நூற்களைப் படிக்க ஆரம்பித்த காலம். தமிழனுக்குத் தனியாக ஓர் மொழி உண்டு என்ற பெருமையைப் பேசலாயினர். ஐம்பெருங்காப்பியத்தைப் பற்றிய பேச்சு பொது மேடைக்கு வந்துவிட்டது! ஆர்வம் தமிழ் மீது அதிகமானதும், இடையே புராணீகர்களும் புகுந்து கொண்டனர்.
ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளர முடியாதபடி தமிழ் ஆர்வம் கொண்டவர்கள், தமிழ் மொழி தாழ்வுற்ற காரணமென்ன, தமிழ்ப் பண்பு மறைந்த காரணம், தமிழ்ச் சிறப்பு தேய்ந்த காரணம் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி அவர்களை விட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அதாவது டாக்டர் நடேச முதலியாரின் கல்லறைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்திற்று. பழைய நினைவுகள், பழைய பரணிகள் மீண்டும் உலவலாயின”.
“தமிழ் மொழியைக் காப்பாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறைசென்ற காட்சி தமிழரின் உள்ளத்திலே ஓர் புது உணர்ச்சியை உண்டாக்கிவிட்டது.
- பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள் – 1, பக்கம் 117 – 120, பூம்புகார் பதிப்பகம்.
இவ்வாறு, மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகளார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், அண்ணல் தங்கோ முதலிய பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் மூட்டிய இந்தி எதிர்ப்புத் தீயில் தமிழின உணர்ச்சி கொழுந்துவிட்டெரிந்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இடையில் சேர்ந்தவர் பெரியார். 1937இல் திருச்சி தேவர் மன்றத்தில் நாவலர் பாரதியார் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் “தமிழ்நாடு தமிழருக்கே” தீர்மானம் போட்டார்கள். மறைமலை அடிகளார், பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அம்மாநாட்டில் பேசினர்.
அம்மாநாட்டில் “தமிழ்நாடு தமிழர்க்கே” தீர்மானம் போட்டார்கள். “தமிழ்நாடு தமிழர்க்கே” தீர்மானத்திற்கும் நீதிக்கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போதுள்ள நீதிக்கட்சியின் வாரிசான மு.க. ஸ்டாலின் அவர்கள், 1956 நவம்பர் 1-ஐ – இன்றைய தமிழ்நாடு அமைந்த நாளை “தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடாமல், “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானத்தை இந்திய அரசை நோக்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1968 சூலை 18 அன்று அன்றைய முதல்வர் அண்ணா முன்மொழிந்து நிறைவேற்றிய நாள்தான் இனி “தமிழ்நாடு நாள்” என்று அறிவித்துள்ளார், இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின்! இதுதான் நீதிக்கட்சிப் பார்வை!
தமிழ்நாட்டில் தமிழர் என்ற இன அடையாளம் வளர்ந்துவிடக் கூடாது என்பது பழைய நீதிக்கட்சித் தலைவர்களின் திட்டம்! அதே நீதிக்கட்சித் தலைவர்கள் ஆந்திரத்தில் “தெலுங்கர்” என்ற அடையாளத்தை பரப்பினர்.
1922இல் நீதிக்கட்சி ஆட்சியில் ஓர் அரசாணை போட்டார்கள். பறையர் – பஞ்சமர் ஆகியோரை அப்பெயர் கொண்டு அடையாளப்படுத்தி அழைக்காமல், புதிய பெயர் சூட்டி அழைக்கும் அரசாணை அது! அன்றைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் மாவட்டங்களில் வாழும் பறையர், பஞ்சமர்களை ஆதிஆந்திரர் என்றும், தமிழ் பேசும் மாவட்டங்களில் வாழும் பறையர் – பஞ்சமர்களை ஆதிதிராவிடர் என்றும் அந்த அரசாணை கூறியது.
நீதிக்கட்சி தொடங்கியதும், கட்சியின் செலவில் மூன்று இதழ்கள் தொடங்கினார்கள். மையப்படுத்தப்பட்ட தலைமையகம் வெளியிட்ட ஆங்கில இதழின் பெயர் “நீதி” (ஜஸ்டிஸ்), தெலுங்கில் வெளியிட்ட இதழின் பெயர் “ஆந்திரப்பிரகாசிகா”! தமிழில் வெளியிட்ட இதழின் பெயர் “திராவிடன்”!
தமிழ்நாட்டிலே திராவிடத் திணிப்பு – ஆந்திரத்திலே தெலுங்கின ஆளுமை! இதுதான் நீதிக்கட்சியின் வரலாறு! இந்த நீதிக்கட்சியின் இன்றைய வாரிசு என்று கூறி பெருமைப்படுகின்றன தி.மு.க.வும், தி.க.வும்!
அதனால்தான், தமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், ம.பொ.சி.யாலும் பின்னர் அண்ணாவாலும் கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழாவை, கடந்த சில ஆண்டுகளாகத் “திராவிடர்” திருநாள் என்று தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொண்டாடி வருகிறார்.
தமிழ்ப் பேரரசன் கரிகாற்சோழனை “திராவிடப் பேரரசன்” என்று இன்றும் தி.க.வினர் எழுதுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பரப்புரை அணி நடத்துவதற்கு தி.க.வினர் வெளியிட்ட துண்டறிக்கையில், அப்பரப்புரை அணி கல்லணையில் “திராவிடப் பேரரசன்” கரிகாற்சோழன் சிலையிலிருந்து புறப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இன்றைய தி.மு.க.வும், தி.க.வும் தமிழ் மொழி அடையாள மறைப்பில் – நீதிக்கட்சியாகவே செயல்படுகின்றன.
(தொடரும்)

(22.11.2021 அன்று சேர்க்கப்பட்டது)


==============================
தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 7 )
==============================
தமிழ் இந்து கருத்தியல்
ஏன் தேவைப்பட்டது?
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
======================================
கடைசியில் பெரியார் கற்றுக் கொண்டது!
பெரியார் இந்து மத ஒழிப்புப் போர்ப் பிரகடனங்கள் பலவற்றை வெளியிட்டவர். “இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளாதே” என்று முழங்கியவர்! கடைசியில் நடைமுறை உண்மையைக் கற்றுக் கொண்டதாகச் சொன்னார்.
பெரியார் 1973 டிசம்பரில் காலமனார். அதற்கு முன்வந்த அவரது பிறந்தநாள் 1973 செப்டம்பர் 17. ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாள் மலர், விடுதலை இதழில் வெளியிடுவார்கள். பெரியார் கடைசியாக எழுதிய தமது பிறந்தநாள் மலர்க் கட்டுரை மிக முக்கியமானது.
”வழமைபோல் இந்த ஆண்டு (1973) பிறந்தநாள் விடுதலை மலருக்குக் கட்டுரை கேட்டார்கள். அடுத்த ஆண்டு பிறந்தநாள் மலருக்கு என்னால் கட்டுரை எழுத முடியுமோ முடியாதோ தெரியவில்லை. நான் இப்படிச் சொல்வது, அடுத்த ஆண்டு உயிரோடிருப்பேனா மாட்டேனா என்பது பற்றி மட்டுமல்ல; நான் உயிரோடிருந்தாலும் எழுதும்படிக்கு வெளியில் இருப்பேனா அல்லது சிறையில் இருப்பேனா என்ற கேள்வி உள்ளது” என்று தொடங்குகிறார்.
பெரியார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏன் வரும்? ”தனித்தமிழ்நாடு விடுதலைக்குப் போராட வேண்டும்” என்கிறார். அதைக் குறிப்பிடுவதற்கு முன் தன்திறனாய்வு ஒன்றையும் செய்து கொள்கிறார்.
இந்து மதத்தை ஒழித்தால்தான் மற்ற பார்ப்பனியம், மூடநம்பிக்கைகள், வர்ணசாதி ஆதிக்கம் போன்றவற்றை ஒழிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், நம் மக்கள் அவ்வாறு எளிதில் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலையானால்தான் இந்து மதம், பார்ப்பன ஆதிக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்தியா தான் இந்து மதத்திற்குப் பாதுகாப்பு அதிகாரம் என்று அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
- ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பாளர் ஐயா ஆவ. ஆனைமுத்து.
மனித உளவியலில் மதத்திற்கு உள்ள வலிமையான பாத்திரத்தைப் பற்றி கடைசிக் காலத்தில் தான் பெரியார் உணர்ந்தார் என்று புரிந்து கொள்ளலாம்.
மனித உளவியலில் கடவுளுக்கும் மதத்திற்கும் உள்ள வலிமையான இடம் பற்றி நான் மார்க்சிய வழியில் 1970களில் தெரிந்து கொண்டேன். எங்கெல்ஸ், காரல் மார்க்ஸ் கட்டுரைகள் மட்டுமின்றி, தோழர் ஜீவாவின் “மதமும் மனித வாழ்வும்” நூல் பெருமளவு எனக்குக் கண்திறந்து விட்டது.
இந்திய ஏகாதிபத்தியத்தின் மதமாக உள்ளது இந்து மதம். இந்தியம், இந்தியத்தேசியம் என்ற கற்பனைக் கட்டமைப்புகள் இந்துமத அடிப்படையில் ஆரிய பிராமண – ஆரிய வைசிய ஆற்றல்களால் உருவாக்கப்பட்டன.
ஆனால், கடந்த 150 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு ஆரிய பிராமண அறிவுத் துறையினர் பின்னர் இந்தியத்தேசியக் காங்கிரசார், “இந்து” என்பதை ஒரு மதமாக சிவநெறியாளர்கள், மாலிய நெறியாளர்கள், வைதிகச் சமயங்களைச் சேர்ந்தவர்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், குல தெய்வங்கள் ஆகியவற்றை வணங்குவோர் அனைவரையும் ஏற்கச் செய்து விட்டார்கள். 1947 ஆகத்து 15இல் மேற்படி ஆற்றல்கள் கைகளில் இந்திய அரசு அதிகாரம், மாநில அரசுகளின் அதிகாரங்கள் வந்தபின் கூடுதலாக இந்து மதத் திணிப்பு நடந்தது.
அத்துடன் முசுலிம், கிறித்துவ மதங்களைப் பார்த்து, தங்களுக்கும் அவைபோல் கட்டுக் கோப்பான மதம் வேண்டும் என்ற ஆர்வம் “இந்துக்களிடையே” உருவானது. இந்த உணர்வை மிகைப்படுத்தி வளர்த்து, முசுலிம் – கிறித்துவ மதங்களைப் போட்டி மதங்களாகக் காட்டி, இந்து மத ஒருங்கிணைப்பை – இந்துமதத் தீவிரவாதத்தை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற பல்வேறு அமைப்புகள் வளர்த்தன.
“இந்து” என்ற சொல் – சமற்கிருதத்தில் நிலவுக்கான பெயராக உள்ளது. வேத – உபநிடதங்கள் – சமற்கிருத இதிகாசங்கள் – புராணங்கள் எதிலும், மதம் – கடவுள் நம்பிக்கை என்ற பொருளில் “இந்து” என்ற சொல் வழங்கப்படவில்லை.
இந்தியத் துணைக் கண்டம் என்று பிற்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு, அப்பெயர் இல்லாத காலத்தில் வணிகம், போர் போன்ற வேலைகளில் ஈடுபட மேற்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள் குறுக்கே ஓடிய சிந்து ஆற்றைக் கடந்து வந்தார்கள். ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் செழித்திருந்த சிந்துவெளி நகர நாகரிகம், வணிகம் போன்றவை மேலை நாட்டினரை ஈர்த்தன. அங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள்!
அரப்பா, மொகஞ்சோதாரோ நகரங்கள் தமிழர்களின் நகரங்கள். அவர்கள் தங்கள் ஆற்றுக்குச் சூட்டிய தமிழ்ப் பெயர் – “சிந்து”!
வந்த மேலையரில் கிரேக்கத்தினர் மொழியில் “ச” ஒலியும் எழுத்தும் இல்லையாம். அவர்கள் “சிந்து” ஆற்றை இண்டி என்று அழைத்தனர். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியில் அதிகாரியாய் இருந்தவர் கிரேக்கர் மெகஸ்தனிஸ். அவர் அன்றாடம் எழுதிய நாட்குறிப்பு நூலுக்கு சூட்டிய பெயர் இண்டிகா. சிந்துப் பகுதி வரலாறு என்ற பொருளில் இப்பெயர் வைக்கப்பட்டது.
பின்னர் வந்த ஈரானியர் ஹிண்டு, ஹிண்டுஸ்தான் ஹிந்த் (HIND) என்று அழைத்தனர். சிந்துவுக்கு இப்பால் வாழும் பலமொழி பேசும் பல இன மக்களை Hindoos – ஹிண்டூஸ் என்று பின்னர் வந்த ஆங்கிலேயர் போன்ற மேலையர் குறிப்பிட்டனர். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இப்பெருமண்டல மக்களை எல்லாம் முதலில் ஹி்ண்டூஸ் என்றே அழைத்தனர். அவர்களின் கம்பெனி பெயரிலேயே இந்தியா (India) இருக்கிறது.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியார் பஞ்சாபிலிருந்து கன்னியாகுமரி வரையில் பீரங்கி முனையில் உருவாக்கிய மண்டலத்துக்கு “இந்தியா” (India) என்று பெயர் சூட்டினர். இந்த மண்டலத்தைப் பிடித்த பின் அக்கம்பெனி 1773இல் பிறப்பித்த ஒழுங்குமுறைச் சட்டத்தை India Regulating Act – இந்திய ஒழுங்குமுறைச் சட்டம் என்றது.
19ஆம் நூற்றாண்டில் 1871இல் ஆங்கிலே அரசு முதல் முதலாக மக்கள் தொகைக் கணக்குப் பதிவு செய்யும்போது, முசுலிம் – கிறித்துவர் அல்லாத சிவவணக்கம், திருமால் வணக்கம், நாட்டுப்புற – குலதெய்வ வணக்கம் கொண்டோர்க்கு மதப்பெயர் என்ன என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஏற்கெனவே இப்பகுதியை – இப்பகுதி மக்களை அழைக்க அவர்கள் பயன்படுத்திய இந்து (HINDU) என்ற சொல்லைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தனர். இப்படி உருவானதுதான் ”இந்து” மதம் என்ற பெயர்!
இந்து என்பதில் எந்த மதப் பொருளோ, கடவுள் பெயரோ மறைந்திருக்கவில்லை. தமிழர்களின் “சிந்து” ஆறுதான் மறைந்திருக்கிறது. அசல் தமிழ்ப் பெயர் அது!
அதற்கு முன் ஆரியப் பிராமணர்கள், வைதிக மதம் என்றும் சனாதன மதம் என்றும் பிராமண மதம் என்றும் பல பெயர்களில் தங்கள் மதப்பெயரை வைத்திருந்தனர்.
“இந்து” வருவதற்கு முன்பே தமிழில் சாதி - தீண்டாமை
தமிழர்கள் – தமிழ்நாட்டில் தங்களுக்கு சிவநெறியாளர்கள் என்றும் திருமால் (வைணவ) நெறியாளர்கள் என்றும் சமயப்பெயர் சூட்டிக் கொண்டனர். 1871 – மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இவ்விரு பெரும் பிரிவுகளும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் “இந்து” என்ற ஒற்றைத் தலைப்பின்கீழ் அழைக்கப்பட்டன.
பல நாடுகளாக இருந்த பெருமண்டலத்தை இந்தியா என்ற ஒற்றை ஆட்சியின்கீழ் கொண்டு வந்து, ஆரிய பிராமண, ஆரிய வைசியர்களுக்கு (ஆரிய முதலாளிகளுக்கு) பெரும் பரிசு கொடுத்தான் வெள்ளையன். அவனே பல பிரிவுகளாக இந்துவில் விளங்கிய சிவநெறியாளர், திருமால் நெறியாளர் மற்றும் பல்வேறு பிரிவினரை ஒருங்கிணைத்து “இந்து” என்ற ஒற்றைத் தலைப்பு கொடுத்தான்.
பிராமணர்கள் பூரித்துப் போனார்கள். இந்தியா முழுவதும் “இந்துக்கள்” மீது ஆதிக்கம் செலுத்தும் அரியவாய்ப்பு என்று களிப்பெய்தினர். ஆரிய பிராமணர்கள் “இந்து” மதம் என்ற பெயரை வெள்ளையர் கொடுக்கும் முன்பே இந்தியா முழுவதும் சிவனை, திருமாலை, குலதெய்வங்களை, நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடுவோரிடம் ஆரிய வேத உபரிடத – புராணக் கருத்துக்களைப் பரப்பி ஏற்கச் செய்து விட்டனர்.
காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர், நாம் பல தெய்வங்களை வணங்கிப் பிரிந்து கிடந்தோம். ஆங்கிலேயன் நம்மை எல்லாம் ஒன்றாக்கி இந்து என்றான் நாம் பிழைத்துக் கொண்டோம் என்றார். (”தெய்வத்தின் குரல்” – சந்திரசேகரேந்திரர், முதல் தொகுப்பு, பக்கம் 267).
1960களில் கூட நில விற்பனைப் பத்திரங்கள் எழுதும்போது அக்கால கர்ணீகர்கள் விற்று, வாங்குவோர் பெயர்களுக்குப் பின்னால் விஷ்ணுமதம், சிவமதம் என்று குறிப்பிடுவார்கள். (கர்ணீகர் என்பவரும் பட்டாமணியக்காரர் என்பவரும் கிராம வருவாய்த்துறை அதிகாரிகள். அப்பதவிகளை ஒழித்து கிராம நிர்வாக அதிகாரி (VAO) என்ற அலுவலரை எம்.ஜி.ஆர். ஆட்சியில் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் செயல்படுத்தினார்).
எங்கள் ஊர் ஆச்சாம்பட்டி கணக்குப்பிள்ளை பஞ்சாபகேசய்யர் 1960களில் நில விற்பனைப் பத்திரம் எழுதும்போது கிருட்டிணசாமி என்ற பெயர் வந்தால் விஷ்ணுமதம் என்று எழுதுவார். சிவசாமி என்று பெயர் வந்தால் உடனே சிவமதம் என்று எழுதுவார். தொடர்புடையவர்களை அவர்கள் சமயம் பற்றி விசாரிக்கவே மாட்டார். அதைப் பற்றி யாரும் அவரிடம் எதிர்வாதம் செய்ததும் இல்லை!
ஆனால், காலப்போக்கில் சிவநெறியாளர், திருமால்நெறியாளர் அனைவரும் தாங்கள் “இந்து” என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஆரியப் பிராமண ஆதிக்கவாதிகளுக்கு மேலும் வசதியாய்ப் போயிற்று!
பிராமண மேலாதிக்கம், வர்ணசாதி ஏற்றத்தாழ்வு, சமற்கிருத மேலாதிக்கம் முதலியவை “இந்து மதப்பெயர்” உருவாவதற்கு முன்பே இங்கு சிவநெறியிலும், திருமால் நெறியிலும் புகுத்தப்பட்டுவிட்டன என்பது வரலாறு. அதற்குக் காரணம் பிராமணிய வர்ணாசிரம தர்மம் புகுந்ததுதான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சைவ நெறியிலும், தமிழ் வைண நெறியிலும் பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பித்துக் கொள்ளும் மேல் சாதி – கீழ் சாதி நடைமுறை, தீண்டாமை ஆகியவை வழக்கத்திற்கு வந்துவிட்டன. அதனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் “சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் – கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்தீர்” என்று கேட்டார். “சிவனுக்கு அன்பராகில், ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் அவர் கண்டீர் நான் வணங்கும் தெய்வம்” என்றார்.
வைணவத்திலும் வர்ணசாதி வேறுபாடுகளை எதிர்த்தனர். எல்லாச் சாதியாரும் ஆண்டாள் என்ற பெண்ணும் ஆழ்வார்களாக முடிந்தது அக்காலத்தில்! பின்னர், சீர்திருத்தம் செய்த இராமாநுசர் தீண்டதார் என்று யாரையும் அழைக்கக்கூடாது என்றார். அவர்கள், “திருக்குலத்தார்” என்றார். அவர்களுக்குப் பூணூல் அணிவித்தார்.
சிதம்பரத்தில் நந்தனை எரித்தவர்கள் தீட்சிதர்கள் மட்டுமா? அதில் தமிழ்ச் சைவர் இல்லையா?
வள்ளல்பெருமான் 1850 - 1860களில் அதிகாரப்படி, “இந்துமதம்” அறிவிக்கப்படாத காலத்தில் “சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சழக்குகளில் கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே” என்றார்.
ஆனால், சிவநெறியிலும் திருமால்நெறியிலும் சாதி வேறுபாடு வளர்ந்ததே தவிர குறையவில்லை. சாதிப் பிளவைக் கண்டித்து “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்” என்ற நூல் எழுதினார் மறைமலையடிகளார்.
தமிழ்ச் சமயப் பெயர்கள் வைக்கக்கூடாதா?
இந்து மதம் என்ற பெயரை ஏற்காத நம் தமிழ்ச் சமயச் சான்றோர்கள், சிவநெறி, திருமால்நெறி என்று தனித்தனியே அழைத்துக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்த தமிழ் மக்கள்தாம் பழக்கத்தில், அரசு நெறிப்படுத்தலில் – தங்களை இந்துக்கள் என்று எண்ணி, பேசிப் பழகிவிட்டனர். இந்து மதத்தின் இருபெரும் கிளைகள் போல் தமிழ்நாட்டில் சிவனியமும் மாலியமும் வெகுமக்களால் உணரப்பட்டன. இவ்விரு தலைமைப் பீடங்களும் அவ்வாறே இருக்கின்றன.
மேலும், சிவநெறி, திருமால்நெறி என்பவை தனிப்பெரும் சமயத் தலைப்புகளாகிவிட்டால் – இவ்விரு பிரிவினர்க்கு இடையே இப்போதுள்ள ஒற்றுமை இருக்காது. உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளலும், மூத்த சமயம் எது என்று முரண் தர்க்கம் செய்து கொள்வதிலும் கவனம் கூர்மையடையும் என்று ஆன்மிகச் சான்றோர்கள் கருதுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக – இந்து மதம் என்பதைக் கைவிட இப்போதுள்ள சிவநெறி, திருமால்நெறி வெகுமக்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
சிவநெறிப் பிரிவினர் என்பதை வளர்க்க மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை, திரு.வி.க. போன்ற எவ்வளவோ பேரறிஞர்கள் முயன்றும் வெகுமக்களிடையே – தனித்த சமயப் பிரிவாக அது வளரவில்லை. இந்து மதத்தில் தங்களின் சிவநெறி மூத்தது என்ற உணர்வே, கற்றறிந்த சிவநெறியாளர்கள் பெரும்பாலோரிடம் இருக்கிறது. சிவநெறி ஆதினங்களில் பெரும்பாலானவை – பெரியவை – ஆரியப் பிராமணர்களையும் – சமற்கிருதச் சடங்குகளையும் ஏற்கின்றன. அதேபோல், திருமால் (வைணவ) நெறியாளர்களும், ஜீயர்களும் இந்து மதத்தில் தாங்கள் தனித்தன்மையுள்ள வைணவர்கள் என்ற உணர்வே கொண்டுள்ளனர்.
அடுத்து, சிவநெறியாளர்கள், வைணவ நெறியாளர்கள் தனித்தனி சமயப் பிரிவினர் போல் பிளவு கொள்வதும் நல்லதன்று. இவ்விரு பிரிவாரும் ஒருங்கிணைவதே பல காரணங்களால் தேவையானது.
திருவள்ளுவர் மதம், தமிழர் சமயம், தமிழ்ச் சமயம் என்று பல புதிய பெயர்கள் சூட்டி, அதற்குள் சிவநெறி – வைணவ நெறிப் பிரிவுகளையும், நாட்டுப்புற – குலதெய்வ வழிபாடுகளையும் இணைத்துக் கொள்ளலாம் என்று சான்றோர்கள் சிலர் பல்லாண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தனர். அது வெகுமக்களிடையே எடுபடவில்லை.
ஒரு மதத்தை – ஒரு சமயப் பிரிவை அழிப்பது எப்படி இயலாதோ, அதுபோல், புதிதாக – செயற்கையாக ஒரு மதப் பெயரை – ஒரு சமயப் பிரிவை முன்மொழிவது அல்லது திணிப்பது வெகுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான மனித உளவியலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
“இந்து” என்ற புதுப்பெயரை – பொதுப் பெயராக வெகுமக்கள் ஏற்றுக் கொண்டதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவரவர் தனிச்சமய – தனிப்பிரிவு ஆன்மிக நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. இரண்டு, அரசு செயல்படுத்தியது. என்பது மூன்று, முசுலிம் - கிறித்துவ மதங்களைவிட, மிகப்பெரும்பான்மை கொண்டுள்ள இந்து மதம் அந்தந்தப் பிரிவாக சிறுத்துவிடும் என்ற உளவியல்!
அதனால் தான் வெகுமக்கள் ஏற்றுக் கொண்டுவிட்ட “இந்து” என்ற பெயரை மாற்ற மீண்டும் முயன்று தோற்க வேண்டியதில்லை. இந்து என்பது நமது சிந்து ஆற்றை அடையாளமாகக் கொண்டு மேற்கத்தியர்களால் வைக்கப்பட்டது. அதில் வர்ணாசிரமப் பொருளோ, வைதிகப் பொருளோ, ஆரிய அடையாளமோ எதுவுமில்லை. இவற்றையெல்லாம் பின்னர் புதிய இந்து மதப் பெயருக்குள் ஆரியப் பிராமணர்கள் – வர்ணாசிரமவாதிகள் திணித்துக் கொண்டனர். எதுவந்தாலும் அதற்குள் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவது ஆரியத் தந்திரம்!
இந்தியாவை வெள்ளைக்கார பீரங்கிகள் உருவாக்கியபின், பழைய அகண்ட பாரத தேசம் தான் இந்தியத்தேசம் என்று ஆரியப் பிராமணர்கள் கதைகட்டினார்கள் அல்லவா!
எனவே, இந்த ஆரியப் பிராமண ஆதிக்கத்தை – உத்தியை வீழ்த்தப் புது உத்தியைக் கைக்கொள்ளுவோம். வெகுமக்கள் ஏற்றுப் பழகிவிட்ட இந்து என்ற பெயரை ஒரு மாற்றத்துடன் வைத்துக் கொள்வோம். ஆரிய பிராமண ஆதிக்கம், சமற்கிருத ஆதிக்கம் கொண்ட வடநாட்டு இந்து மதத்திற்கு “ஆரிய இந்து” என்றும், தமிழ்ச் சிவநெறி – தமிழ் மாலிய நெறிகளைக் கொண்ட தமிழ்நாட்டு இந்து மதத்திற்குத் “தமிழ் இந்து” என்றும் மாற்றிக் கொள்வோம் என்ற முன்மொழிவை அண்மையில் மலேசியத் தமிழர்கள் இதுகுறித்து நடத்திய காணொலி விவாதத்தில் கலந்து கொண்டு நான் வைத்தேன். வடவர்கள் ஆரிய இந்து என்பதை ஏற்காவிட்டாலும், நாம் தனிப் பிரித்து தமிழ் இந்து என்று அடையாளம் காட்டுவோம் என்பது எமது நிலைபாடு! அதைக்கேட்ட திராவிடவாதிகளும், பெரியாரியர்களும் திராவிடத்தை எதிர்க்கும் மணியரசனைத் தாக்கக் கிடைத்தது “சாக்கு” என்று கருதி, அவதூறு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.
நாங்கள் முன்வைக்கும் இந்தப் புதிய கருத்துரு பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவர்கள் இதை விமர்சித்து எதிர்க்கலாம். தவறில்லை. ஆனால், ஆரிய பிராமண ஆதிக்கத்தை – மணியரசன் ஏற்றுக் கொண்டு விட்டார்; தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பது அவதூறு! இந்துத்துவ வாதிகளாக மாறி விட்டார்கள் என்று பொய் பேசக்கூடாது.
தமிழ் இந்துவுக்கு நாங்கள் முன்வைக்கும் முதன்மை நிபந்தனையே ஆரிய பிராமண சமற்கிருத ஆதிக்கம் அறவே அற்றி – சமற்கிருத வேதங்களை – பகவத் கீதையைத் தங்கள் புனித நூலாக ஏற்றுக் கொள்ளாத – “தமிழ் இந்து” என்பதாகும்!
தமிழ் இந்துக்கள் – தமிழ்ச் சிவநெறி, தமிழ் வைணவ தெய்வங்களை வணங்குவோர். சிவநெறி என்றால் சைவ சித்தாந்தம்! இதன் புனித நூல்கள் தேவாரம், திருமந்திரம், திருவாசகம் போன்றவை! தமிழ் வைணவ நெறி என்றால், சமற்கிருத வேதங்களை – பகவத் கீதையைப் புனித நூல்களாக ஏற்காமல் – ஆழ்வார் பாசுரங்களைத் தங்கள் புனித நூல்களாக ஏற்றுக் கொண்டது என்ற விளக்கமும் தந்துள்ளேன். அத்துடன், வைகுண்டர் வழி, கருவூர் சித்தர் வழி, ஆசீவகம், வள்ளலார் வழி, பாம்பன் சுவாமிகள் வழி ஆகியவையும், தமிழ் இந்துவின் உட்பிரிவுகளே!
சமற்கிருத வைதிகச் சடங்குகள், சமற்கிருதப் புனித நூல்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள், தமிழ் இந்து அல்லர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். அவர்கள் “ஆரிய இந்து” என்றும் கூறியுள்ளேன்.
வர்ணசாதிப் பாகுபாடு, தீண்டாமைக் கொடுமை இல்லாத சமத்துவ சமூகமாக தமிழ் இந்து மக்கள் மறுமலர்ச்சி பெற வேண்டும்.
நாங்கள் முன்வைக்கும் இந்தத் தமிழ் “இந்து”வை வெகுமக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், எங்களை அரசு “இந்து” என்று பொதுவாகக் குறிப்பிடக்கூடாது; “தமிழ் இந்து” என்று அரசு ஆவணங்களில் குறிக்க வேண்டும், தமிழ்நாட்டில் தமிழ் இந்துவுக்குத் தனிச் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசிடம் வைத்துக் காலப்போக்கில் ஏற்கச் செய்வோம் என்பதுதான் எங்கள் முன்மொழிவு!
கர்நாடகத்தில் லிங்காயத்துகளை இந்து என்று குறிப்பிடக்கூடாது, தனி மதமாகக் குறிப்பிட வேண்டும் என்று நீண்டகாலம் கோரிக்கை வைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக அரசு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, ஆணை பிறப்பித்தது அல்லவா! அவ்வாறு நாம், நம் வெகுமக்கள் ஆதரவு இருந்தால், “தமிழ் இந்து” என்ற தனிப்பிரிவு உரிமையை வாங்கலாம் என்பது எங்கள் முன்மொழிவு!
இம்முன்மொழிவைப் பற்றி சிந்தியுங்கள்; அவரவர் விமர்சனத்தை வெளிப்படுத்துங்கள். ஏற்போர் ஏற்றுக் கொள்ளுங்கள். மறுப்போர் மறுத்துக் கொள்ளுங்கள். இம்முன்மொழிவு, செயலுக்கு வருவதும் வராமல் போவதும் வெகுமக்கள் கையில் உள்ளது!
ஆரிய பிராமண ஆதிக்கத்தை முறியடிக்க செய்ய வேண்டியது என்ன?
சங்க காலத்தின் முடிவில் கர்நாடகப் பகுதியிலிருந்து படையெடுத்து வந்த களப்பிரர்கள் என்ற அயல் இனத்தார் – அயல் மொழியார் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைப் பிடித்து சற்றொப்ப 350 ஆண்டுகள் ஆண்டார்கள். அவர்கள் காலத்தில்தான் பிராமணர்களுக்கு இறையிலி (வரியில்லாமல் இலவசமாக) நிலங்கள் கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. (சான்று பூலாங்குறிச்சி கல்வெட்டு). அவர்கள் தமிழைப் புறக்கணித்த அயல் மொழியார். தமிழ் நூல்கள் பல அக்காலத்தில் தமிழறிஞர்களால் எழுதப்பட்டன. அவை அந்த அறிஞர்களின் முயற்சிகள். அதே களப்பிரர் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டதுதான் ஆசாரக்கோவை! வர்ண – சாதி வரையறுப்புகளையும் தீண்டாமையையும் அக்காலத்தில் வலியுறுத்தி எழுதப்பட்ட நூல். “எச்சிலார்” என்ற மக்கள் பிரிவை வர்ணிக்கிறது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறது. மனுதர்ம நூலின் சாரத்தைக் கொண்டது ஆசாரக்கோவை!
அடுத்து, ஆந்திரப் பகுதியிலிருந்து வந்து தமிழ்நாட்டைக் கைப்பற்றிய தெலுங்கு பேசும் – ஆரியமயப்பட்ட பல்லவர்கள்! அவர்கள் தங்களை ஆரியப் பரத்துவாக கோத்திரம் என்றுக் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆட்சியில் பிராக்கிருதம், பின்னர் சமற்கிருதம், தெலுங்கு முதலிய அயல் மொழிகள் ஆட்சி மொழிகளாய் இருந்தன. இவர்கள் சற்றொப்ப 500 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டார்கள். என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்!
பிராமணர்களுக்கு இறையிலி நிலங்கள் ஏராளமாக வழங்கினர். முழுகிராமங்களே பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட காலம் பல்லவர் காலம்! சமண மதத்தை அரச மதமாகக் கொண்டிருந்தனர். சமணம் பிராகிருதத்தைப் புனித மொழியாகக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டுச் சமணத்தில் ஆரியர்களே கோலோச்சினர். வஜரநந்தி என்ற ஆரியச் சமண ஆன்மிகர் – தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் திரமிள சங்கம் என்ற சமண சங்கத்தை – பிராகிருதம் – சமற்கிருதம் கோலோச்சிய சங்கத்தை உருவாக்கினார். தமிழ் புறக்கணிக்க பட்டது. திரமிள – என்பதுதான் திராவிடத்தின் மூலப்பெயர்.
களப்பிரர் காலம் ஆரியப் பிராமணர்களின் ஆதிக்கத்திற்குக் கால்கோள் நடத்தியது. ஆரிய ஆதிக்கக் கோட்டையை எழுப்பியது பல்லவர் ஆட்சி, சமணத்திலும் அதுதான்! சைவத்திற்கு மகேந்திர பல்லவன் மாறிய பிறகு ஆரிய – பிராமண ஆதிக்கம் அதிகமானது பிராமணர்களுக்குக் கிராமங்களையே தானமாக வழங்குவது அதிகமானது.
பல்லவர் ஆட்சிக்குப்பிறகு வந்த பாண்டிய, சோழர்கள் ஆட்சியில் பிராமண ஆதிக்கம் தொடர்ந்தது. ஏற்கெனவே எழு நூறு ஆண்டு வளர்ச்சி பெற்றிருந்தது. ஆரியப் பிராமணியம்! அதை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது.
தமிழ் வெகுமக்கள் பிராமணர்களைக் கடவுளின் தூதுவர்களாக – முகவர்காளகக் கருதிய காலம் பல்லவர் காலம்! தமிழுக்குக் கூடுதல் வாய்ப்பு, தமிழர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு என்ற செயல்பாடுகள் மூலமாகவும் வேறு சில நடவடிக்கைகள் மூலமாகவும் பிராமண ஆதிக்க ஏகபோகத்திற்கு சோழர்கள் ஆட்சியில் சிற்சில தடைகற்களைப் போட முடிந்தது. பிராமண – சமற்கிருத ஆதிக்கத்தை முழுவதும் தடுக்க முடியவில்லை.
இராசராசன், இராசேந்திர சோழனுக்குப் பிறகு, இந்தச் சிறு தடைகளையும் பிராமணர்களுக்குப் போட முடியவில்லை.
பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு வந்த தெலுங்கு விசயநகரத் தளபதிகள் – நாயக்க ஆட்சி கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் – தமிழ்நாடு முழுவதும் நடந்தது. தமிழ் மன்னர்களான பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர், புதுக்கோட்டை மன்னர் முதலியவர்கள் எல்லாம் மதுரை நாயக்கர் பேரரசின் கீழ் இருந்த பாளையபட்டுகளின் மன்னர்களே!
ஆனால், ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து விடுதலைக் களம் கண்டவர்கள் பூலித்தேவன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற தமிழ் வீரர்கள், வீராங்கனைகள்!
இவ்வளவு நீண்ட நெடிய காலம் தமிழர்கள் அயல் இனத்தார்க்கு அடிமையாய்ப் போனதால், நமது உளவியலில் தற்சார்பின்மை, அச்சம், அண்டிப்பிழைத்தல் போன்ற பலவீனங்கள் பல தலைமுறைகளாக வளர்ந்து விட்டன.
ஆரியர் பிராமணர்கள் அரசர்களின் துணை கொண்டு தங்களின் மேலாதிக்கத்தை, வர்ண சாதிப் பிளவுகளை – சமற்கிருத ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டனர். அத்துடன் ஆரியத்துவ தெய்வ பக்தியும் – தெய்வத்தின் தூதுவர்கள் பிராமணர்கள் என்ற பிரமைகளும் நம் தமிழரிடையே பரவலாக வளர்ந்தன.
“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் திருவள்ளுவப் பெருந்தகை!
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும், இன்றும் பிராமணர்கள் தமிழ்நாட்டில் மிக மிகச் சிறுபான்மையினரே! அவர்கள் வடக்கே இருந்து தமிழ்நாட்டில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் வாளேந்தி போராடித் தமிழர்களை வெல்லவில்லை. நூலேந்தி, தங்களுக்கும் சமற்கிருதத்திற்கும் “புனிதம்” கற்பித்துக் கொண்டு ஆட்சியாளர்களின் துணையோடு தங்களை உயர்வாகவும் தமிழர்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுப்படுத்தினர். தமிழர்களின் கோயில்களையும் ஆன்மிகத்தையும் தங்களுடையதாக கவர்ந்து கொண்டனர்.
புதிய செயல்பாடுகளோ, சட்டங்களோ வந்தால் அவற்றை தங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாக மாற்றிகொள்வர். அப்படித்தான் ஆங்கிலேய அரசு “இந்து” என்ற புதிய மதப்பெயரை அறிவித்தபோது அதற்குள் புகுந்து கொண்டு, தங்கள் வழியில் புதுப்புது விளக்கங்கள் கொடுத்து சமற்கிருத வேதங்களில் புராணங்களில் இந்து மதம் பற்றி கூறப்பட்டுள்ளது போல் சோடனைகள் செய்து கொண்டு இந்துமத ஆதிக்கத்தை எடுத்து கொண்டனர். பிராமணர்கள் சிவநெறிக்கும், வைணவ நெறிக்கும் வெளியே உள்ள ஸ்மார்த்தர்கள். காஞ்சி சங்கர மடம் சிவ நெறிக்கும் வைணவ நெறிக்கும் வெளியே உள்ளது. ஆனால் அந்த மடம்தான் சிவநெறிக்கும், வைணவ நெறிக்கும் ஒட்டு மொத்த இந்து மதத்திற்கும் தலைமைபீடம் போல் நடைமுறையில் செயல்படுகிறது. இந்திய அரசும் அவ்வகையில் அம்மடத்தை ஆதரிக்கிறது.
இந்த ஆரிய சூழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றை வீழ்த்த புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டும். வெறும் இந்து மத எதிர்ப்பு அவர்களை வீழ்த்தி விடாது. மாற்றுச் செயல் திட்டங்கள் தேவை! அந்த வழிகளில் ஒன்றுதான் “தமிழ் இந்து” செயல்திட்டம்!
இன்றைக்கும் தமிழர்களிடையே உள்ள உளவியல் பலவீனங்கள். 1. முன் முயற்சி எடுக்கத் தயக்கம்! 2. களச் செயல்பாடுகளில் அச்சம்! எல்லாத் தமிழர்களுக்கும் இப்பலவீனங்கள் இல்லை. ஆனால் கணிசமான பேர்களிடம் இருக்கிறன. தமிழர்களின் அடிமைத் தளைகளைப் புரிந்து கொண்ட, விவரம் தெரிந்த தமிழர்களில் கணிசமானவர்களிடம் உள்ள பலவீனங்கள் இவை!
வெகுமக்களை – ஆரிய – பிராமண – சமற்கிருத ஆதிக்கத்திற்கு எதிராகத் திரட்ட அறப்போராட்டங்களே சிறந்த வடிவம். தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் வெகுமக்களுக்கு சற்று முன்னால் சென்று கொண்டு வழிகாட்ட வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால் ஓடிக் கொண்டு வழிகாட்ட முடியாது.
எனவேதான் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்து மதப்பெயரை முற்றிலும் மாற்றாமல் அதில் ஆரிய – பிராமண – சமற்கிருத ஆதிக்க மற்ற தமிழ் இந்து மதத்தை உங்கள் முன் வைக்கிறோம்.
பட்டம் சூட்டிக் கொண்ட தலைவர்கள் இப்பணிக்கு பொருத்தமற்றவர்கள்; பாடம் கற்றுக் கொண்டு வழிகாட்டும் முன்னணி வீரர்கள் தேவை!
சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!
(முற்றும்)(22.11.2021 அன்று சேர்க்கப்பட்டது)

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================