புதன், 27 மே, 2015

வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியும்... சகித்துக் கொள்ளும் ஈகிகளும்

பார்த்து பயந்து விடாதீர்கள். இதற்குப் பெயர் தான் இட்லி. இதனுடன் 40 பேருக்கு ஒரே தேங்காயில் ஒரே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொழுப்பு நீக்கப்பட்ட சட்னி.

இது  சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியின் இரவு உணவு.

குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பாலியல் சமூக விரோதிகளுக்கு அஞ்சியும் விடுதியில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெரும்பாலான சகோதரிகளுக்கு. மாதம் ரூ.4600 ஐயும் கொடுத்து விட்டு இது போன்ற நஞ்சுக்களை சாப்பிட வேண்டிய கட்டாயம் விடுதிப் பெண்களுக்கு. 

இது இங்கு மட்டும் அல்ல. பெரும்பாலான பெண்கள் விடுதியின் நிலை இதுதான். காலையில் சுட்ட இட்லி..நேற்று அரைத்த சட்னி, புளித்துப் போன தோசை, கழுவாத கழிவறை, அனலை கக்கும் அறைகள்... இதை விட்டால் வேறு போக்கிடம் இப்பெண்களுக்கு இல்லை; எதையும் சகித்துக் கொள்ளும் அப்பிராணிகள் இவர்கள் என்கிற மன தைரியம் விடுதி காப்பாளர்களுக்கு.

சிறைக்கு சென்றவர்களை தியாகிகள் (ஈகிகள்) என்போம். என்னைக் கேட்டால் குடும்ப நலனுக்காக இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளும் இந்த சகோதரிகள் தான் உண்மையான ஈகிகள்

ஞாயிறு, 24 மே, 2015

கைப்பேசி இணைய செறிவூட்டலை (3G/2G மொபைல் டேட்டா) சேமிப்பது&பகிர்ந்து கொள்வது எப்படி?

கைப்பேசியில் இணைய தள செறிவூட்டல் செய்து கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதை பயன்படுத்தி ஏர்டல், வோடபோன் நிறுவங்களின் கட்டணம் என்கிற பெயரில் வாடிக்கையாளர்களை வழிப்பறி செய்கிறார்கள். 

இதில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகள்:

  1. மூன்றாம் கட்ட அலைவரிசை 3G செறிவூட்டல் மிக வேகமாக செயல்படுவது மகிழ்வாக இருந்தாலும் இயக்கத்தில் வைத்து சட்டைப்பையில் போட்டு சந்து திரும்புவதற்குள் சங்கதி தீர்ந்து விடுகிறது. காரணம் பின்புலங்களில் செயல்படும் தேவையற்ற செயலிகள் மிக விரைவில் வெகு வேகமாக உங்கள் டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்வது. இதை சமாளிக்க அமைப்பில் (செட்டிங்க்ஸ்)
    WIRELESS& NETWORKS சென்று  Data usage இல் Restrict background data வை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் தற்போது எந்த செயலியை நீங்கள் உபயோக்கிறீர்களோ அது மட்டுமே உங்கள் கைப்பேசி டேட்டாவை பயன்படுத்தும். நீங்கள் யுவ்டூபில் இருந்தால் அது மட்டுமே டேட்டாவை பயன்படுத்தும். அதில் இருந்து முகநூல் சென்றால் யுவ்டூப் உங்கள் செறிவூட்டலை பயன்படுத்துவது நின்று முகநூல் மட்டுமே பயன்படுத்தும். கைப்பேசி தானாக மூடிக்கொண்டால் ( sleep) உங்கள் கைப்பேசி டேட்டா பயன்பாடு தானாக நின்றுவிடும்.
  2. Data usage சென்று  Set mobile data limit பிரயோகிப்பதன் மூலமாக 2G/3G செறிவூட்டப்பட்ட அளவினை தாண்டி உங்கள் கைப்பேசி செறிவூட்டல் (top up balance) சுரண்டப்படுவதை தடுக்கலாம்.
  3. நீங்கள் 2G/3G ஒரு கைப்பேசியில் செறிவூட்டி உள்ளீர்கள். உங்கள் நண்பர் செறிவூட்டல் தீர்ந்துவிட்டது அல்லது மொபைல் டேட்டா போடவில்லை என வைத்துக் கொள்வோம். உங்கள் மொபைல் டேட்டாவை அவர் கைப்பேசியில் எப்படி பயன்படுத்திக் கொள்வது? அதற்கும் வழி உள்ளது.
    • முதலில் இருவரும் ப்ளூடூத்தை இயக்கதில் கொண்டுவந்து சோடி (pairing) செய்து கொள்ளவும்
    • உங்கள் கைப்பேசியில் மொபைல் டேட்டாவை இயக்கத்தில் கொண்டுவரவும் 
    • உங்கள் கைப்பேசியில் Settings>WIRELESS&NETWORKS>More..சென்று Tethering & portable hotspot சென்று  Bluetooth tethering ஐ அழுத்தவும்.
      Sharing this tablet(உங்கள் கைப்பேசி)'s internet connection இயக்கத்தில் வரும் 
    • பின்பு உங்கள் நண்பரின் கைப்பேசியில் ப்ளூடூத்தில் உங்கள் கைப்பேசியை தேர்ந்தெடுத்து அழுத்தவும். உங்கள் கைப்பேசிக்கு
      Accept Network Access points authorize request வரும். அதை நீங்கள் அனுமதிக்கவும்.
    • Bluetoothu Network access point connected என்ற செய்தி வரும்.இருவரின் ப்ளூடூத் செயலி iconகளும் நீல நிறத்தில் மாறும்.இனி ப்ளுடூத் இயக்கத்தில் இருக்கும் வரை உங்கள் நண்பர் உங்கள் 2G/3G டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
    • ஏதாவது ஒரு செயலி உங்கள் தகவல் செறிவூட்டலை (மொபைல் டேட்டா) அதிகம் திருடுகிறது. அதை எப்படி தடுப்பது? உதாரணமாக நீங்கள் கைப்பேசி இணையத்தை செயலாக்கும்போது  தானாக வாட்ஸ்அப் செய்திகள் தரவிறக்கம் செய்யும். அதை எப்படி தடை செய்வது?
      Settings> Applicatiion manager>Whatsapp இங்கு Force Stop என இருக்கும் பித்தானை அழுத்தினால் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாது. வாட்ஸ் அப் செய்திகளை தரவிறக்கம் செய்யாது.
      திரும்ப வாட்ஸ் அப் செய்திகளை பெற/செயலியை இயக்கத்தில் கொண்டுவர...நீங்கள் வாட்ஸ் அப் செயலியை வழக்கம்போல அழுத்தினால் போதும். பழைய நிலைக்கு வந்துவிடும். தொல்லையை தோளில் போட்டுக் கொள்ளலாம்.

  

புறம்போக்காய் போன பொதுவுடைமை

தோழர் பாலு மகேந்திரா, கௌதமன், புகழேந்தி தங்கராஜ், மணிவண்ணன்  என திரையுலகில் தமிழ் இன உரிமை பற்றி சிந்திக்கும் இயக்குனர்களில் தோழர் ஜனநாதனும் ஒருவர்.

இந்தியத்தை வருடிக் கொடுப்பது போல சில இடங்களில் சென்சாரை சாந்தப்படுத்தி, செங்கொடியையும் ஈகையை போற்றியும், பேரறிவாளனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் எதிர்த்தும், தமிழ் மொழி,வர்க்க விடுதலைப் பற்றியும் மிகத் தைரியமாக, தந்திரமாக காட்சிகள் அமைத்துள்ளார். 

விடுதலைப் புலிகள், நக்சலைட்களின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைத்து உள்ளார். பாராட்டுக்கள். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளி விடுதலைப் போராளி, தூக்கு போடும் தொழிலாளி, இந்தியத்திற்கு கங்காணி வேலை செய்யும் காவல் அதிகாரி, தற்கொலை குண்டுதாரியான குயிலி என ஒரு புது கதைக்களம்;கதையோடு ஒன்றிய காட்சி தள அமைப்புகள் ...இது உண்மையில் ஒரு வெற்றிப்படம்.

பேராண்மையில் கத்திரியால் காயப்பட்ட இயக்குனர் பின்வாங்காமல் திரும்பவும் கத்தியை தீட்டி உள்ளார் புத்தி சாதுரியத்தோடு. 

இன விடுதலையை ஆதரிக்காது வர்க்க விடுதலையை பெற முடியாது, உலகத் தொழிலார்கள் ஒன்று கூடுவதற்குப் பதில் உலக முதலாளிகள் ஒன்று கூடி உலகை ஒரு குப்பைத் தொட்டியாக ஆக்கி உள்ளனர் என்று பரவலாக தமிழ் தேசியம், இன விடுதலை,வர்க்க விடுதலை பற்றி பேசி உள்ளார்-அதே சமயம் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல்.

இன உணர்வை பேச பல இயக்குனர்கள் போராடி இந்திய தரக் கட்டுப்பாட்டை மீறி திரைக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டுள்ள நிலையில் ஜனநாதனின் சாணக்கியத்தனம் பாராட்டுக்குரியது.

ஆரியா வேடத்தில் அஜீத் நடித்திருந்தால் இது மிகப்பெரிய ஒரு மக்கள் படமாக வசூலில் சாதனைப் படைத்திருக்கும்.

கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் திரை அரங்கு சென்று கண்டு ஜனநாதன் போன்ற இயக்குனர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இன உணர்வு;இன விடுதலை நோக்கி தமிழ் தேசியம் நகரட்டும்!!!!