சனி, 30 ஏப்ரல், 2022

மூன்று சக்கர சைக்கிள் பெற்றுத் தந்து உதவ முடியுமா இப்பெரியவருக்கு?


நாகப்பட்டினம்- நாகூர் முதன்மைச் சாலையில் வெளிப்பாளையம்- ஏழைப் பிள்ளையார் கோயிலை கடந்து செல்பவர்கள் இவரை பார்க்காமல் கடந்து சென்றிருக்க முடியாது.

கால்கள் செயல் இழந்த, நடமாட முடியாத உறவினர்கள் யாருமற்ற இந்த பெரியவர் வெயிலிலும் மழையிலும் போக்குவரத்து மிகுந்த சாலையில் கைகளை ஊன்றி தவழ்ந்து யாசகம் பெற்று வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருகிறார் 

சமீபமாக தான் இந்த கட்டைவண்டி. அதில் அமர்ந்து கரடு முரடான சாலையில், தெருவில்   பசிக் கொடுமையோடு உடல் தளர்ந்த அவர் கைகளை ஊன்றி இந்த  வண்டியை தள்ளி இடம்பெயர்வது என்பது பெரும்பாலும் கடினமான ஒன்று. இந்த சாலை வழியாகத் தான் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தினமும் போகிறார்கள். அருகிலேயேதான் போக்குவரத்து காவலர்கள் நிற்கிறார்கள். யாராவது ஒருவர் இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவருக்கு உதவ மாட்டார்களா என்று நினைத்துள்ளேன்

ஓராண்டு காலமாக இவரை பார்க்கிறேன். இவரை அணுகி இவருடைய பிரச்சனையை கேட்க நானும் பல நாள் நினைத்துள்ளேன். ஆனால் இவர் பெரும்பாலும் சாலையின் ஒட்டிலேயே அமர்ந்து இருப்பதால் வண்டியை நிறுத்தி அவரை அணுகுவது இயலாததாக இருந்தது. இன்று தான் மூடிக்கிடந்த  கடையின் வாசலில் படுத்துக்கொண்டு இருந்தார்.

மூன்று சக்கர சைக்கிள் இருந்தால் உங்களுக்கு போக வர வசதியா இருக்குமல்லவா என்று கேட்டேன். ஆமாய்யா.. இப்ப ஒண்ணுக்கோ வேறு எதுக்குமோ ஒதுங்க கூட முடியலய்யா...யாருமில்லாத சாக வழியில்லாம அனாதையா கிடக்கேன் என கண்ணீர் மல்க அவர் சொன்னது நெஞ்சை பிழிந்தது. 

அந்த மாதிரி வண்டி உங்களால ஓட்ட முடியுமா என்று கேட்டேன். முடியும் என்றார். யாரும் உங்களுக்கு உதவ வந்தார்களா என்று கேட்டதற்கு "நாலாயிரம் கேட்டாங்கய்யா..என்னால அவ்வளவு பெரிய தொகை எப்படிய்யா பொறட்ட முடியும்?" என்றார்.

நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கேட்போம். ஏதும் அடையாள அட்டை இருக்கா என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்றார். 

ஆட்சியரை அணுகி பார்ப்போம். இயலாத பட்சத்தில் பணம் கொடுத்தாவது மூணு சக்கரவண்டியை வாங்கிடுவோம் என்று அவருக்கு நம்பிக்கை அளித்து விட்டு வந்தேன். கண் கலங்க கைகளை தூக்கி கும்பிட்டு அடுத்த புதன் கிழமை போலாமாய்யா என்று கேட்டார். நான் விசாரித்து விட்டு வந்து அழைத்துப் போகிறேன் என்று நம்பிக்கை அளித்தேன். 

தோழர்களே... உங்களால் எதுவும் அவருக்கு உதவ முடிந்தால் அவரை சந்தித்து உதவியை பெற்றுத் தாருங்கள். என்னால் முடிந்ததை நானும் முயல்கிறேன் 

2 கருத்துகள்: