ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வளர்ச்சியா...வீழ்ச்சியா?

நாகப்பட்டிணத்தில் வழியாக தஞ்சாவூர் ௮௯ (89)கி.மீ தூரம் தான் என்றாலும் வளைந்து நெளிந்து செல்லும் பாதை என்பதால் இரண்டரை மணி நேரம் பிடிக்கும். இருந்தாலும் களைப்பு தெரியாது..காரணம் இருபக்கமும் வரிசையாக இருக்கும் மரங்கள்..அது தந்த குளிர்ச்சி. மகிளுந்துகளில் செல்பவர்கள் கூட ஆங்காங்கே நின்று இளைப்பாறி பயணத்தை தொடர வழியெங்கும் புளிய மரம், அரசமரம், வேப்பமரம், வாய்க்கால், ஆறு என ஓரளவு பசுமையாக இருக்கும்.  

இனி அப்படி ஏதும் காணக்கிடைக்காது. காரணம் சாலியமங்கலம் அருகே புதிய சுங்கச் சாவடி எனும் வழிப்பறி கொள்ளை சாவடி அமைய போகிறது. அதற்காக பழைய மரங்கள் சகட்டு மேனிக்கு வெட்டப்படுகிறது. இருபுறமும் இருக்கும் வயல்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய்கள் மண்மூடி அடைக்கப்படுகிறது. 

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில்  மழை பொழிய மாட்டேன் என்கிறது மழைக்காலத்தில் கூட. ஒரு பக்கம் தூய்மை இந்தியா..பசுமை இந்தியா என்று வெற்றுக் கூப்பாடு.மறுபக்கம் சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் மரங்கள்..காடுகள் அழிப்பு..மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு என நிலங்கள் அபகரிப்பு..என நடுவண் அரசின் சர்வாதிகாரப் போக்கு. 

இந்த மரங்களை வெட்டுவது தேசிய நெடுஞ்சாலை என்ற நடுவண் அரசு நிறுவனம். அந்த மரங்களை அறுக்க வெட்ட மின்சாரம் எடுப்பது மாநில அரசின் மின் கம்பங்களில் இருந்து. இப்படி மின்சாரம் திருட போதிய அனுமதி பெற்று இருக்கிறார்களா? தெரிந்தா தெரியாமலா?


உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இதே போன்ற சாலை குறுக்கே அம்பானி வீடோ, குழுமமோ இருந்தால் இப்படி இடித்து தரை மட்டம் ஆக்கும் தைரியம் அரசுக்கு உண்டா?

கேட்க ஆளில்லை என்றால் ரிஸ்வான் போன்ற அப்பாவிகளை  பிடரியில் கை வைத்து இழுத்துப் போகும் காவல் துறை கே என் நேருவிடமும் யுவராசுகளிடமும்  கூனி குறுகி நடந்து கொள்கிறது தங்கள் எஜமான் திராவிட ஆரிய அரசர்களைப் போலவே. 



வியாழன், 30 ஜூலை, 2015

கவிதை: தீர்ப்பு

ஆட்சி அதிகாரத்தின்
வாக்கியங்கள்...
நீதி அரசர்களின்
உதட்டசைவில் ..

செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாம் என்ற இந்தியர் காலமானார்.


  • பேரறிவாளனின் கருணை மனுவை கடைசி வரை பரிசீலிக்காமலே பதவியை தக்கவைத்துக் கொண்ட திறனும், 
  • ஈழத்திற்கு சென்று வாய்ப்பு கிடைத்தும் இனப்படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத உங்கள் அமைதியும், 
  • பார்ப்பன கும்பலின் அரசியல் காய் நகர்த்துதலில் நல்வாய்ப்பாக அமைந்த பதவியை வைத்து பிறந்த இனத்தை பற்றிக் சிறிதும் சிந்திக்காமல் இறுதி வரை இந்தியனாய் இருந்ததும் 
  • தமிழ்க் குழந்தைளை இந்திய அடிமைகளாய் மாற்றிய மாபெரும் உங்கள் சாதனைகளும் 
  • இந்தியத்தின் கழிவை தமிழகத்தில் இருந்து நீக்க  பாமர மக்கள் போராடிய பொது "அணுவுலை ஆபத்து இல்லை" என்று இந்தியனுக்கு காவடி தூக்கி எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கு சமாதி கட்டியதையும் 
மறந்து அவரை இழந்து வாடும் இந்தியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!

புதன், 10 ஜூன், 2015

தேசியத் தலைவர் சிலை அகற்றம்- கைது நடவடிக்கை ஏன்?




நாகப்பட்டிணம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூரில் தமிழினத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு 2015 சூன் திங்கள் 6ம் தியதி அன்று கோயில் ஒன்றில் சிலை வைக்கப்பட்டது. இதை உடனே அறிந்த நமது சீர்மிகு செயல்வீரர்கள் நிறைந்த தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்தது. இறுதியில் அவர்களாகவே சூன் 8 அன்று சிலையை அகற்றினார்கள் என்று மனு தர்மம் கக்கும் தமிழக பத்திரிக்கைகள் செய்தி போட்டனர்

இருவது பேரை கொன்றவர்கள் மீது ஒரு நடவைக்கையும் இல்லை; தருமபுரி வங்கியில் கொள்ளை அடித்த வடநாட்டு போக்கிலிகளை துப்பு துலக்க வக்கில்லை; நாள்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு என்ற செய்திகள்..ஆனால் ஒருவனையும் இதுவரை பிடித்தது இல்லை. ஆனால் தமிழினத்திற்கு ஆதரவாக ஒரு நிகழ்வு நடந்தால் போதும்..இரவோடு இரவாக அதிரடி நடவைக்கை எடுத்து இடித்து தள்ளுவதில் மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுகிறது தமிழக அரசும் அதன் ஏவல் துறையும் ...முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செயல்பட்டதைப் போல.

இதைக் கண்டித்து நாகையில் நேற்று காலை மதிமுக ஆர்பாட்டம் செய்தது. அனைவரையும் கைது செய்தது காவல் துறை .

மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் முறையாக அனுமதி பெற்று தெரு முனை பிரச்சார முறையில் அமைதியாக தங்கள்  எதிர்ப்பை தெரிவிக்க கூடி இருந்தனர், கூடி இருந்த தோழர்களை விட அங்கு இருந்த காவல் துறையினரே அதிகம். அவ்வளவு காவல் துறையினருக்கு அங்கு ஒரு வேலையும் இல்லை.அது ஒரு பிரச்சாரக் கூட்டம்,அவ்வளவே.  ஒலி பெருக்கி கூடாது என்றது காவல். அதையும் கேட்டு நடந்து கொண்டனர் தோழர்கள்.

முறையாக அனுமதி பெற்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த தோழர்களை கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? போர்க்களம் போல காவல் துறையினரை குவித்து மக்களுக்கு பீதியூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஒன்றும் புரியவில்லை. இறுதியில் அனைவரையும் கைது செய்தது காவல் துறை. சிறிதும் கலங்காமல் காவலர்கள் கட்டுப்பாடையும் மீறி தேசியத் தலைவர் வாழ்க; தமிழீழம் வெல்வோம் என உரக்க கூவினர் தோழர்கள்.

நாளொரு ஆர்ப்பாட்டம்; பொழுதொரு  ஆர்ப்பாட்டம் என இந்த நடுவண் மற்றும் மாநில அரசும்  தமிழர்களை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருப்பது ஏன்? நாம் எந்த ஆயுதத்தை எடுக்கிறோம் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்று தலைவர் சொன்னது முற்றிலும் சரி.










புதன், 27 மே, 2015

வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியும்... சகித்துக் கொள்ளும் ஈகிகளும்

பார்த்து பயந்து விடாதீர்கள். இதற்குப் பெயர் தான் இட்லி. இதனுடன் 40 பேருக்கு ஒரே தேங்காயில் ஒரே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொழுப்பு நீக்கப்பட்ட சட்னி.

இது  சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதியின் இரவு உணவு.

குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பாலியல் சமூக விரோதிகளுக்கு அஞ்சியும் விடுதியில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெரும்பாலான சகோதரிகளுக்கு. மாதம் ரூ.4600 ஐயும் கொடுத்து விட்டு இது போன்ற நஞ்சுக்களை சாப்பிட வேண்டிய கட்டாயம் விடுதிப் பெண்களுக்கு. 

இது இங்கு மட்டும் அல்ல. பெரும்பாலான பெண்கள் விடுதியின் நிலை இதுதான். காலையில் சுட்ட இட்லி..நேற்று அரைத்த சட்னி, புளித்துப் போன தோசை, கழுவாத கழிவறை, அனலை கக்கும் அறைகள்... இதை விட்டால் வேறு போக்கிடம் இப்பெண்களுக்கு இல்லை; எதையும் சகித்துக் கொள்ளும் அப்பிராணிகள் இவர்கள் என்கிற மன தைரியம் விடுதி காப்பாளர்களுக்கு.

சிறைக்கு சென்றவர்களை தியாகிகள் (ஈகிகள்) என்போம். என்னைக் கேட்டால் குடும்ப நலனுக்காக இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளும் இந்த சகோதரிகள் தான் உண்மையான ஈகிகள்