சனி, 5 நவம்பர், 2011

பீனிக்ஸ் அகாடெமி-நாகப்பட்டிணம்-ஒரு ஏமாற்று நிறுவனம்

நாகப்பட்டிணத்தில் மேற்கண்ட கல்வி நிறுவனம் TALLY,ICWAI COACHING,
என சொல்லி பாமர மக்களை கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் கவருகின்றனர்.

எனது சொந்த கசப்பான அனுபவம் இது:-

இரு வருடங்களுக்கு முன்பு...எனது சித்தி மகன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர இருந்தான்.ஆங்கில புலமை வேண்டுமே என்று நாகப்பட்டினம் பெரிய சிட்டி என நினைத்து அவனும் வந்துவிட்டான்.நானும் அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள...தினமும் உள்ளூர் தொ.கா.வில் வரும் விளம்பரத்தை பார்த்து மேற்கண்ட நிறுவனத்திற்கு அழைத்து சென்றேன் அவனை.

உள்ளே நுழைந்தோம்...சிறிது நேரம் கழித்து உடைசலாக ஒருவர் வந்தார். என்ன படிக்கிறீங்க,எங்க வேலை பார்க்குறீங்க,வீடு எங்க என வரிசையாக கேள்வி கேட்க, "பயிற்சியில் சேர போவது அவன்,,நான் அல்ல என்று பதில் சொன்னேன்". சற்று மௌனித்து திரும்பவும் அதே கேள்வி கணைகள். எனது சகோதரனும் பொறுமையாக பதில் சொல்லி முடித்ததும்..."மேடம் வந்துடுவாங்க..பொறுங்க.."என்றான்.பின்பு ஒரு விளக்கமாற்றை எடுத்து பெருக்க ஆரம்பித்தார் அந்த நக்கீரனார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலானது...இன்னும் அவர் சொன்ன மேடம் வரவில்லை. பொறுமை இழந்து போகலாம் என்று எழுந்தோம்.."இல்லை..மேடம் இதோ கிளம்பிட்டாங்க...இன்னைக்கு உள்ளூர் தொ.கா.வில் நிகழ்ச்சி..அங்க போய்ட்டு இங்க வந்துடுவாங்க"என்று அந்த துடைப்பம் பதில் சொன்னது.

சரி என பொறுமை காத்தோம்.

இரண்டு மணித் தியாலங்கள் ஆனது. மேடம் வரவில்லை.வேறு ஒருவர் வந்தார்.
"எதற்கு வந்துருக்கீங்க"என கேட்டார்.
"SPOKEN இங்கிலீஷ் கோர்ஸ்" என தம்பி பவ்வியமாக பதில் சொன்னான்.
"ஹஹஹா..SPOKEN இங்கிலீஷ் இல்ல அது..ஸ்பீக்கிங் இங்க்லீஷ் கோர்ஸ்" என்று நக்கலாக சொன்னார்.
பின்பு..."W..A..T..E..R" என்ன,,,ஸ்பெல் பண்ணுங்க..என ஆரம்பித்து ஆப்பிள்,பனானா என அரிச்சுவடி ஆரம்பித்தார்..."சீ திஸ் பீப்ள்..என பீட்டர் விட்டு..உச்சரிப்பே சரி இல்லை பாருங்க" என என்னிடம் சொன்னார்...

"பொறியியல் கல்லூரியிலா? எங்களுக்கு சொந்தமா காரைக்கால்,பெங்களூர் எல்லா இடத்திலும் கல்லூரி உள்ளது. கோர்ஸ் முடிங்க..PLACEMENTக்கு நாங்களே வழிநடத்தி ஏற்பாடு செய்றோம்" என அவர் விட்ட பீலாவை அப்படியே நம்பினேன் வேள்ளேந்தியாய்.

ஆகா..அருமையான ஆரம்பம் என வியந்து..அங்குள்ள நான்கைந்து கணினிகள் இதெல்லாம் பார்த்து (பிறகு தான் தம்பி சொன்னான்...அந்த ஒரு கணிணி கூட இயங்கி அவன் பார்த்தது இல்லை என) "எவ்வளவு பீஸ்" என கேட்டேன்.

"ஜஸ்ட் 3800 ஒன்லி" என்றார்.

நான் அதிர்ந்து.."என்ன..வெளியில் எல்லாம் 1500 க்கே சொல்லி தருகிறார்களே"என்றதற்கு சில லேமினேட் செய்யப்பட்ட பக்கங்களுடன் கூடிய புத்தகத்தை காமித்து.."இதோ பாருங்கள்..இது UK கம்பெனி.இந்தியாவிலேயே நாங்கள் தான் லைசென்ஸ் வாங்கி நடத்தி வருகிறோம்" என அவர் வரிசையாக வண்டி வண்டியாக கட்டி அவிழ்த்த பொய் மூட்டைகளை நம்பி...

அந்த ரூ.3800/க்கு ஒரு சிறு பிட் நோட்டிஸ் கூட அவர்கள் தரவில்லை. வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை வேறு...ஆட்கள் ஒழுங்காக வருவது இல்லை. இப்படி வீணாகி போனது..நான் கொடுத்த மூன்றாயிரத்து எண்ணூறும்...

என்னை போல யாரும் சேர்ந்து ஏமாந்துடாதீங்க அப்பாவிகளே..
(avoid cheating phoenix academy,nagapattinam )

புதன், 2 நவம்பர், 2011

தமிழினம் காக்க நவம்பர் 6 கோவையில் கூடுவோம்!

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்!

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக,
 "ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு" 
கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 
மாலை 4 மணிக்கு

நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

2008 - 2009 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறி அரசு, இனப்படுகொலை செய்தது.

மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி....
  1. இனப்படுகொலைக் குற்றவாளிகளாகவும், போர்க்குற்றவாளிகளாகவும் உள்ள இராசபட்சே கும்பலை தளைப்படுத்தி, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்;
  2. போர் அழிவுக்குப் பிந்தைய காலத்தில், நடைபெற வேண்டிய துயர் துடைப்புப் பணிகள் சிங்கள வெறி அரசால் நடத்தப்படவில்லை. ஐ.நா. மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பின் கீ்ழ் ஈழத்தில், துயர் துடைப்புப் பணிகளை செயல்படுத்தி எஞ்சியுள்ள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும்; 
  3. இராசீவ் கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு, சாவுத் தண்டனை வழங்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடத் துடிக்கும் இந்திய அரசின் தமிழினப் பகை முயற்சியை முறியடித்து, அம்மூவரையும் காப்பாற்ற வேண்டும்.

மேற்கண்ட மூன்று முகாமையான கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாநாடு நடைபெறுகிறது. கைக்கு எட்டியத் தொலைவில் இருந்தும் நம் இனம் இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையோடு இலங்கை அரசால், அழிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும், ஆறாத காயமும் தமிழர்கள் நெஞ்சில் அப்படியே உள்ளன.

இப்பொழுது முழுவீச்சில் நாம் செயல்பட்டு, நம் இன மக்களை ஈழத்திலும், தூக்குக் கொட்டடியில் உள்ள தமிழர்களை இங்கும் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை நமக்கு உள்ளது. சாவுத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து முற்றாக நீக்க வேண்டும் என்ற மனித உரிமைக் கடமையும் நம் முன் உள்ளது.

எனவே, தமிழின உணர்வாளர்கள், மனித உரிமையில் அக்கறையுள்ளோர் அனைவரும் கோவையில் பெருந்திரளாகக் கூட வேண்டும். நமது கோரிக்கைகளில் உள்ள ஞாயம் அக் கோரிக்கையை ஏந்தி நிற்கும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மதிக்கப்படும். எனவே, மாநாட்டுக்கு வாருங்கள் தமிழர்களே!

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


eezha thamilar vazhvurimai maanadu,coimbatore,covai november 6 v.o.c.park மூவர் உயிர் காப்போம் 

சனி, 22 அக்டோபர், 2011

2012 ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்


அடுத்த ஆண்டுக்கான (2012) பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது;

2012ம் ஆண்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நாட்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
1. புத்தாண்டு தினம்  ஜனவரி 1 (ஞாயிறு)
2. பொங்கல்  ஜனவரி 15 (ஞாயிறு)
3. திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 (திங்கள்)
4. உழவர் திருநாள்  ஜனவரி 17 (செவ்வாய்)
5. குடியரசு தினம்  ஜனவரி 26 (வியாழன்)
6. மிலாடி நபி  பிப்ரவரி 5 (ஞாயிறு)
7. தெலுங்கு வருட பிறப்பு  மார்ச் 23 (வெள்ளி)
8. வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு  ஏப்ரல் 2 (திங்கள்)
9. மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 5 (வியாழன்)
10. புனித வெள்ளி  ஏப்ரல் 6 (வெள்ளி)
11. தமிழ் புத்தாண்டு தினம்  ஏப்ரல் 13 (வெள்ளி)
12. டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம்  ஏப்ரல் 14 (சனி)
13. மே தினம்  மே 1 (செவ்வாய்)
14. சுதந்திர தினம்  ஆகஸ்டு 15 (புதன்)
15. ரம்ஜான்  ஆகஸ்டு 20 (திங்கள்)
16. கிருஷ்ண ஜெயந்தி  செப்டம்பர் 8 (சனி)
17. விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 19 (புதன்)
18. வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு  செப்டம்பர் 29 (சனி)
19. காந்தி ஜெயந்தி  அக்டோ பர் 2 (செவ்வாய்)
20. ஆயுத பூஜை  அக்டோ பர் 23 (செவ்வாய்)
21. விஜய தசமி  அக்டோ பர் 24 (புதன்)
22. பக்ரீத்  அக்டோ பர் 27 (சனி)
23. தீபாவளி  நவம்பர் 13 (செவ்வாய்)
24. முகரம்  நவம்பர் 25 (ஞாயிறு)
25. கிறிஸ்துமஸ்  டிசம்பர் 25 (செவ்வாய்)
மேற்கண்ட பொது விடுமுறை தினங்கள், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேஷன்களுக்கும், வாரியங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(PUBLIC HOLIDAYS IN TAMILNADU 2012 List of Holidays)

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு! நேரடி ஒளிபரப்பு


ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு! பதிவு, சங்கதி, தளங்களில் நேரடி ஒளிபரப்பு



ஓசூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஆறாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து (25.09.2011) காலை 9 மணியளவில் தமிழினத் தற்காப்பு மாநாடு நடக்கிறது. ஓசூர் வசந்த் நகர் தாயப்பா திருமண மண்டபத்தில் நடக்கும் மாநாட்டிற்கு தமிழகமெங்குமிருந்து இன உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் தொடக்க நிகழ்வாக காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கத்தில், தழல் ஈகி செங்கொடியின் படத்திறப்பு நடக்கிறது. த.தே.பொ.க. ஓசூர் தோழர் முருகப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் அறிவரசன் செங்கொடியின் படத்தைத் திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, போர்ப்பறை என்ற தலைப்பில், பாவலர் மு.வ.பரணர் தலைமையில் நடக்கும் பாக்களம் நடக்கிறது. அதில், கவிஞர்கள் கவிபாஸ்கர் வர்ண சாதியிலிருந்து விடுதலை என்ற தலைப்பிலும், ப.செம்பரிதி இன விடுதலை குறித்தும், இரா.சு.நடவரசன் மொழி விடுதலை குறித்தும், இராசா இரகுநாதன் பெண் விடுதலை குறித்தும் கவிதைகள் படிக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம் என்ற தலைப்பில் தமிழக மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. மக்கள் கண்காணிப்பகத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் குடிமை உரிமைக் கழகத் தோழர் கண.குறிஞ்சி, இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழக ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அமரந்தா ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர். பிற்பகலில் காஞ்சி மக்கள் மன்றத்தின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மதியம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில், வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம் நடக்கிறது. அதில், இலக்கியத்திற்காக தோழர் தி.க.சி., தமிழர் மெய்யியல் ஆய்வுக்காக முனைவர் க.நெடுஞ்செழியன், ஓவியத்துறை சாதனைக்காக ஓவியர் மருது ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் சிறப்பு செய்கிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தமிழர் தாயகத்தில் அயலார் ஆதிக்கம் என்ற தலைப்பில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், மக்கள் இயக்குநர் வெ.சேகர், முனைவர் த.செயராமன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, பொறியாளர் க.அருணபாரதி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டுத் தீர்மானங்களை த.தே.பொ.க. முன்னணி தோழர்கள் அறிவிக்கின்றனர்.

மாநாட்டின் நிறைவுக் களத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். த.தே.பொ.க. ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் பி.சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை அறிக்கை:


"வரலாற்றில் முதன்முதலாகத் தமிழ்நாடு நேரடியாக வடஇந்திய ஆட்சித்தலைமையின் கீழ் வந்தது 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் ஆகும். வெள்ளைபிரித்தானிய ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, ஆரிய இந்தியஏகாதிபத்தியதின் அடிமை நுகத்தடியில் சிக்கியது தமிழ்நாடு. இந்த அடிமைநிலையே தமிழினத்தின் அடையாளத்தை மறைக்கிறது. தமிழகத்தில் நிலவும்பொருளியல் சுரண்டல், வர்ணசாதி ஆதிக்கம், சூழலியல் சீர்கேடு, சனநாயகமறுப்பு போன்ற அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்தஅடிமை நிலையே ஆகும். இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுதனக்கான இறையாண்மையுள்ள குடியரசை நிறுவிக் கொள்வதே தமிழ்த் தேசிய இனத்தின் முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்"


கவிபாஸ்கர்-வர்ண-சாதியிலிருந்து விடுதலை கவிதை, காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறை முரசு, உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தனின் கவி முரசு, தோழர் கி.வெங்கட்ராமன் மற்றும் தோழர் பெ.மணியரசன் அவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பும் உரைகள்..இவற்றை கேட்க கீழே உள்ள காணொளிகளையை சுட்டுங்கள்...

சனி, 24 செப்டம்பர், 2011

கவிதை:நவீன அடிமைகள்



இயக்கத்தை முடக்கும்
குண்டுகள் இல்லை கால்களில்...
மாறாக
குரல்வளையை நெறிக்கும்
"டை" மட்டும்
அடையாளமாய் எங்கள் கழுத்தில்...