சனி, 5 நவம்பர், 2011

பீனிக்ஸ் அகாடெமி-நாகப்பட்டிணம்-ஒரு ஏமாற்று நிறுவனம்

நாகப்பட்டிணத்தில் மேற்கண்ட கல்வி நிறுவனம் TALLY,ICWAI COACHING,
என சொல்லி பாமர மக்களை கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் கவருகின்றனர்.

எனது சொந்த கசப்பான அனுபவம் இது:-

இரு வருடங்களுக்கு முன்பு...எனது சித்தி மகன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர இருந்தான்.ஆங்கில புலமை வேண்டுமே என்று நாகப்பட்டினம் பெரிய சிட்டி என நினைத்து அவனும் வந்துவிட்டான்.நானும் அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள...தினமும் உள்ளூர் தொ.கா.வில் வரும் விளம்பரத்தை பார்த்து மேற்கண்ட நிறுவனத்திற்கு அழைத்து சென்றேன் அவனை.

உள்ளே நுழைந்தோம்...சிறிது நேரம் கழித்து உடைசலாக ஒருவர் வந்தார். என்ன படிக்கிறீங்க,எங்க வேலை பார்க்குறீங்க,வீடு எங்க என வரிசையாக கேள்வி கேட்க, "பயிற்சியில் சேர போவது அவன்,,நான் அல்ல என்று பதில் சொன்னேன்". சற்று மௌனித்து திரும்பவும் அதே கேள்வி கணைகள். எனது சகோதரனும் பொறுமையாக பதில் சொல்லி முடித்ததும்..."மேடம் வந்துடுவாங்க..பொறுங்க.."என்றான்.பின்பு ஒரு விளக்கமாற்றை எடுத்து பெருக்க ஆரம்பித்தார் அந்த நக்கீரனார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலானது...இன்னும் அவர் சொன்ன மேடம் வரவில்லை. பொறுமை இழந்து போகலாம் என்று எழுந்தோம்.."இல்லை..மேடம் இதோ கிளம்பிட்டாங்க...இன்னைக்கு உள்ளூர் தொ.கா.வில் நிகழ்ச்சி..அங்க போய்ட்டு இங்க வந்துடுவாங்க"என்று அந்த துடைப்பம் பதில் சொன்னது.

சரி என பொறுமை காத்தோம்.

இரண்டு மணித் தியாலங்கள் ஆனது. மேடம் வரவில்லை.வேறு ஒருவர் வந்தார்.
"எதற்கு வந்துருக்கீங்க"என கேட்டார்.
"SPOKEN இங்கிலீஷ் கோர்ஸ்" என தம்பி பவ்வியமாக பதில் சொன்னான்.
"ஹஹஹா..SPOKEN இங்கிலீஷ் இல்ல அது..ஸ்பீக்கிங் இங்க்லீஷ் கோர்ஸ்" என்று நக்கலாக சொன்னார்.
பின்பு..."W..A..T..E..R" என்ன,,,ஸ்பெல் பண்ணுங்க..என ஆரம்பித்து ஆப்பிள்,பனானா என அரிச்சுவடி ஆரம்பித்தார்..."சீ திஸ் பீப்ள்..என பீட்டர் விட்டு..உச்சரிப்பே சரி இல்லை பாருங்க" என என்னிடம் சொன்னார்...

"பொறியியல் கல்லூரியிலா? எங்களுக்கு சொந்தமா காரைக்கால்,பெங்களூர் எல்லா இடத்திலும் கல்லூரி உள்ளது. கோர்ஸ் முடிங்க..PLACEMENTக்கு நாங்களே வழிநடத்தி ஏற்பாடு செய்றோம்" என அவர் விட்ட பீலாவை அப்படியே நம்பினேன் வேள்ளேந்தியாய்.

ஆகா..அருமையான ஆரம்பம் என வியந்து..அங்குள்ள நான்கைந்து கணினிகள் இதெல்லாம் பார்த்து (பிறகு தான் தம்பி சொன்னான்...அந்த ஒரு கணிணி கூட இயங்கி அவன் பார்த்தது இல்லை என) "எவ்வளவு பீஸ்" என கேட்டேன்.

"ஜஸ்ட் 3800 ஒன்லி" என்றார்.

நான் அதிர்ந்து.."என்ன..வெளியில் எல்லாம் 1500 க்கே சொல்லி தருகிறார்களே"என்றதற்கு சில லேமினேட் செய்யப்பட்ட பக்கங்களுடன் கூடிய புத்தகத்தை காமித்து.."இதோ பாருங்கள்..இது UK கம்பெனி.இந்தியாவிலேயே நாங்கள் தான் லைசென்ஸ் வாங்கி நடத்தி வருகிறோம்" என அவர் வரிசையாக வண்டி வண்டியாக கட்டி அவிழ்த்த பொய் மூட்டைகளை நம்பி...

அந்த ரூ.3800/க்கு ஒரு சிறு பிட் நோட்டிஸ் கூட அவர்கள் தரவில்லை. வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை வேறு...ஆட்கள் ஒழுங்காக வருவது இல்லை. இப்படி வீணாகி போனது..நான் கொடுத்த மூன்றாயிரத்து எண்ணூறும்...

என்னை போல யாரும் சேர்ந்து ஏமாந்துடாதீங்க அப்பாவிகளே..
(avoid cheating phoenix academy,nagapattinam )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக