செவ்வாய், 29 நவம்பர், 2011

முல்லை பெரியாறு அணை-த.நா.பொறியாளர் சங்கத்தின் குறும்படம்

முல்லை பெரியாறு அணை 
பிரச்சனையும் தீர்வும் 


  • 30ஆண்டு கால இப்பிரச்சனையின் உண்மை பின்னணி என்ன?
  • என்னதான் தீர்வு?
    இவற்றை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் தமிழக மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி
"தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க"த்தால் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தை அனைவரும் பாருங்கள்.

தமிழன் இந்திய ஏகாதிபத்தியத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப் படுவதை உணர்ந்து இழந்த,இழக்கப்போகும் உரிமைகளை மீட்டு எடுக்க பொங்கி எழுவோம்!!
The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.


நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.

கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மேலும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் இறங்கியுள்ளார்கள்.டெல்லியில் டேம் 999  என்னும் விஷமப் படத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கேரள அரசும் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராய் மறைமுகப் போரில் இறங்கியுள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.


எண்ணற்ற முறை,பல மட்டங்களில்,கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழர்களுக்கு உரிய,நியாயமான தீர்வு கிட்டவில்லை என்ற நிலையில் வேறு வழியின்றித் தான், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து காலங்கள் பல கடந்தும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் எண்ணற்ற மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பல வழிகளில் புதிய விஷமப் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது.


இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்கு எந்தச் சேதமும் இல்லை என அணையை ஆராய்ந்த பின்பு மத்திய புவியியல் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.கடல் மட்டத்தில் இருந்து முல்லை பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடியில் இருக்கிறது.ஆனால் அணை உடைந்தால் அழிந்து போகும் என கேரளத்த்தினர் கூறும் குமுளிப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடியிலும்,வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடியிலும்,பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடியிலும் இருக்கிறது.இது ஒன்றே போதும் மலையாளிகள் தண்ணீரில் வடிகட்டிய பொய்யை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு.


தென்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் நலனில் எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயன் பென்னிக்குக்கிற்கு இருந்த அக்கறையில் துளியளவு கூட கூப்பிடு தூரத்தில் உள்ள கேரள மக்களுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.மாறாக வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம்,மீன்,கறி,அரிசி,உப்பு,புளி,மணல் என தொடர்ந்து சுரண்டிக் கொழுக்கின்றனர்.அங்கிருந்து கொழுத்தது போதாது என்று இங்கு வந்தும் சுரண்டுகின்றனர்.ஆனால் பதிலுக்கு தமிழக விவசாயிகளின் வாழ்விற்குத் தேவையான தண்ணீரைத் தர மறுக்கின்றனர்.தண்ணீரைத் தர மறுப்பவர்கள் தான் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களினால் உயிர் வாழ்கின்றனர்.


சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள்ஆட்சி செய்தாலும் சரி,இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக்காரன் ஆட்சி செய்தாலும் சரி,இது தான் நிலை.கேரள மக்கள் தன்னை திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கருதுவதில்லை. மலையாளிகளாகக் கருதுகின்றனர்.


இதே நிலை நீடித்தால் அவர்களது கொட்டத்தை அடக்க இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும்,அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் அதிவிரைவில் நடத்த நாம் தமிழர் கட்சி தயங்காது என எச்சரிக்கிறோம்.
*******************************************************

முல்லைப் பெரியாறு; கேரளத்தின் பிடிவாதமும், தமிழகத்தின் நியாயமும்!

ந.ஜீவா-நன்றி:தினமணி -11 Dec 2011



ஒன்றுபடுங்கள்!

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http//player.vimeo.com/video/18283950/autoplay/1)காணக் கிடைக்கிறது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளிலும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
29.11.2011 தினமணி தலையங்கத்தில் ஒரு பகுதி.
142 அடி தண்ணீர் தேக்குவதை உறுதி செய்யுங்கள்!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமிக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரின் பரிந்துரைப்படி 1980 முதல் 1994 வரை முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் மிகச் சிறப்பாக பராமரித்து வந்தது. இதனால் அணை புதியதுபோல உள்ளது. அதனால் தான் 2006-ஆம்
ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி அணையின் உறுதித்தன்மை குறித்துப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்காக தமிழக அரசு ரூ. 1.38 கோடி ஒதுக்கியது.
மேலும் உங்கள் கடிதத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்திய வானியல் மையத்தின் தகவல்களின்படி கடந்த நான்கு மாதங்களில் அந்தப் பகுதியில் நான்கு லேசான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல வெள்ளத்தாலும் அணை உடையும் ஆபத்து இல்லை. எந்த விதத்தில் பார்த்தாலும் அணை வலுவாக உள்ளது என்பதே உண்மை.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. எனவே, உண்மை நிலைக்கு மாறாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது நமது கடமையாகும்.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட
ஒத்துழைப்புத் தரும்படி கேட்டு கேரள முதல்வர் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய பதில் கடிதத்தின் ஒரு பகுதி.

அ.வீரப்பன்
முன்னாள் தலைமைப் பொறியாளர்,
பொதுப்பணித்துறை

முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பின்பு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அணை பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 1981 முதல் 1994 வரை மூன்று முறை அணை பலப்படுத்தப்பட்டது.
24 அடி அகலம், 3 அடி உயரத்தில் 1200 நீளத்துக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கீரிட் போடப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் 3 லட்சம் டன் கான்கீரிட் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்படும் என்ற பயத்தைப் போக்கும் வகையில் அணையின் 1200 அடி நீளத்தில் 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு, அதிலிருந்து கம்பிகளை இழுத்து அணையின் கீழ்மட்டத்தில் 30 அடி கீழே உள்ள பாறைகளின் உள்ளே சொருகி, அதைக் கான்கீரிட் கலவையைக் கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாங்கும் அளவுக்கு இறுக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டால் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அணைக்குப் பாதிப்பு வராது. எனவே அணை முன்பைவிட 3 மடங்கு வலுவாக உள்ளது. அணை பலவீனமாக உள்ளது என்ற கேரள அரசின் கூற்று அப்பட்டமான பொய்யாகும்.
நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம்
2002 - இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப்பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.
இங்கே கவனிக்க வேண்டியது பெரியாறு அணை கடல் மட்டத்திலிருந்து 2861அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பாம்பனார் 3402அடி, ஒலப்பாறை 3648 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கீழே இருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மேலே உள்ள பகுதிகளுக்குப் பாயும் என்று நீரியல் விதியையே கேரளம் மாற்றிக் கூறுகிறது.
மேலும் அணையின் பலம் பொறியியல் ரீதியான ஒன்று. பொறியாளர்கள் பார்வையில் அணை உடையவே உடையாது. கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர்களிடம் விவாதிக்கவும் தயாராகவும் இருக்கிறோம்.
1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.
ஆனால் இடுக்கி அணை நீர்ப்பாசன அணை அல்ல. புனல் மின்சாரம் தயாரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள அணை. ஆனால் அதற்குத் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்துதான் வர வேண்டும். தண்ணீர் வராவிட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தைக் குறைத்தால்தான் இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்கும். இதற்காகவே பல பொய்யுரைகளை கேரள அரசு பல காலமாகப் பரப்பி வருகிறது.
23.10.1979 மலையாள மனோரமா இதழில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.
அதற்குப் பின்பு அணையின் நீர்மட்டம் 152 அடி உயரத்திலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை இவ்வளவு பலமாக இருந்தாலும், கேரள அரசு அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறது. வழக்கும் தொடர்ந்தது.
27.2.2006 இல் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக கேரள அரசு தனது சட்டப் பேரவையில் "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (சட்ட திருத்த) மசோதா 2006' என்ற பெயரில் நிறைவேற்றி உள்ளது. இதன்படி கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது. இது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய உரிமையைப் பறிக்க வேண்டும் என்பதற்காக அது 3 விதமான தடைகளை எழுப்ப முயற்சி செய்கிறது.
1886}இல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தத்தை செல்லாததாக்குவது.
இரண்டாவதாக, நிலநடுக்கம் உள்ள பகுதி என்று கூறி அணையை உடைக்க முயற்சிப்பது. அல்லது நீர்மட்டத்தைக் குறைக்க நினைப்பது.
மூன்றாவதாக, பெரியாறு பகுதியில் வனவிலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுவது.
இதில் பிரிட்டிஷார் காலத்திய 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் அரசியல் சட்டப்படி சுதந்திரம் அடைந்த பின்பும் தொடரும் என்பதே உண்மை.
சுற்றுச் சூழல் அமைச்சகம் செய்த ஆய்வின்படி முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள மரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மேம்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆனந்த் கமிட்டியிடம் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் கீழே புதிய அணை ஒன்று கட்டப் போவதாகத் திட்ட அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அணையில் இருந்து போதுமான தண்ணீர் இருக்கும்பட்சத்தில் தண்ணீர் பிறமாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பக்கம் 23 இல் கூறப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 37 இல் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் எந்தவிதமான பாரம்பரிய உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது. இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் தமிழகத்துக்குப் பாரம்பரியமாகக் கிடைத்துவந்த நீரைத் தராமல் தடுத்து நிறுத்துவதற்கான சதித் திட்டத்தை கேரள அரசு தீட்டியுள்ளது என்பதுதான்.
இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீரின்றிப் போய்விடும். 10 லட்சம் மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் போய்விடும்.
தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி இந்தப் பிரச்னையில் ஒன்றுபட்டு தங்களுடைய எதிர்ப்பை வலிமையாகக் காட்டுவதுதான் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே வழி.
வைகோ
பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடையாத அளவுக்குப் பலம் வாய்ந்தது. கேரளத்துக்கு அரிசி உள்பட அனைத்து உணவுப் பொருள்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளம் இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை. முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என கேரளம் கூறுகிறது. அப்படி உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
ஆர்.காந்தி
நிலம், நீர் சங்கம்

கேரள அரசியல்கட்சிகளின் சுயநலத்துக்காக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை அரசியலாக்கப்படுகிறது. கேரளத்தவர் பரப்பும் பொய்ப் பிரச்சாரத்தை தகர்க்க நாம் தயங்கக் கூடாது. இறுதிவரை தமிழர்கள் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.
பழ.நெடுமாறன்
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் இரு மாநில அதிகாரிகள் மத்தியில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கேரள முதல்வரை வலியுறுத்தி இருப்பதும் சூழ்ச்சிகரமானது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டால், அதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க இருப்பதைத் தடுத்துவிடலாம் என்ற திட்டத்துடன் கேரளம் விரித்த வலையில் சிக்க மறுத்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் முதல்வர்களுக்கு இடையிலோ, அதிகாரிகள் மட்டத்திலோ, எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இணங்கக் கூடாது.
செல்வா
பொறுப்பாளர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்.

முல்லைப் பெரியாறு அணை, கம்பம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதாகும். அந்த அணை இருக்கும் இடம் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதற்கான வரலாற்றுச் சான்று உள்ளது. எனவே அந்த இடத்தை மீட்க அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன் தமிழ்நாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்து வரலாற்றுப்பூர்வமான நமது தமிழக பகுதிகளை மீட்க வேண்டும்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
கேரள மக்கள் பலர் தமிழகத்தில் வணிகம் செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், மீன், இறைச்சி, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெற்றுக்கொள்ளும் கேரளம், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் நதிநீர்ப் பிரச்னைகளில் நடந்துகொள்வதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
(Mullai periyar dam problem and solution Documentary Film by Tamilnadu Engineers Association Mullai periyar real problem)

1 கருத்துகள்:

  1. மாநிலத்தில் ஒரு பிரச்சினை என்றால் அனைத்துக் கட்சி சாதி, மதம் என்று பாராமல் தமிழர்க்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதில் மற்ற மாநிலங்கள் முன்னிற்கின்றன...ஆனால் தமிழகத்தில் மட்டும் அந்த ஒற்றுமை காணப்படுவதில்லையே ஏன்? இங்கு தமிழன் என்ற போர்வையில் வாழ்பவர் பெரும்பாலோர் கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் ஆவான்...ஆகவேதான் மற்ற மாநிலங்களுக்கு எதிராக போராடுவதில்லை..முதலில் தமிழகத்தில் இருக்கும் இந்த தமிழன் மாதிரிகளை போட்டால் எதிர்ப்புகள் தானாக அடங்கிவிடும்...அதிலும் சிக்கல் உண்டு.. தமிழக காவல்துறையிலும், ஆட்சி அதிகாரத்திலும் தமிழனைத்தவிர அனைத்து மொழிக்காரனும் அதிக அளவில் உள்ளனர்...அவர்களால் போராடும் குணங்களும் வீழ்த்தப் படுகின்றன... ஒற்றுமையற்றுபோன தமிழன் நாதியற்றுப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது...
    .

    பதிலளிநீக்கு