ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

தமிழனுக்கு பாசிச இந்தியா விடுக்கும் சவால்-"அடுத்து என்ன?"


கூடங்குள அணு உலையை எதிர்த்து இது வரை அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது களங்கம் கற்பிக்கும் அராஜக அரசியல்வாதிகளை பார்த்து திருப்பி கேள்வி கேட்டால் "பிரதமரையே விமர்சிப்பதா?" என கேட்கிறது அவரின் கைத்தடி ஒன்று. 

அவரை பார்த்து நாம் கேட்பது "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்று ஒன்று உள்ளதே அது உனக்கு தெரியுமா?அதன் மையக் கருத்து என்ன என்பதாவது உனக்குத் தெரியுமா? அதன் முன் மக்கள் அனைவரும் சமம் என்பது தெரியுமா? மக்களால் மக்களுக்கு சேவை செய்யப்பட்ட பணியாள் தான் உனது முதலாளி என்பது உனக்கு தெரியுமா?

ஏன் இதுவரை உன் எசமானன் பொய்யே சொன்னது இல்லையா? அவர் என்ன அரிச்சந்திரனுக்கு அண்ணாத்தையா? இல்லே,சீசரின் சம்சாரமா?

மக்களின் வரி பணத்தில் ஊதியம் பெரும் காவல் துறையை அடியாளாக அமர்த்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களுக்கு எதிராக வன்முறையை மக்கள் மீது திணிகிறது.இது தான் இன்றைய சனநாயகத்தின் நெறிமுறை.

"கூடங்குளம் அணுஉலையை மூடக்கொரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த தமிழ் அடியார் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். கல்பாக்கத்தில் 2 அணுஉலைகளையும் மூட தமிழ் அடியார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஏற்கனவே தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு உள்ள நிலையில் மனுவை ஏற்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி இக்பால் , நீதிபதி அருணா ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளனர்"
மக்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் அணு உலையை மூட சொல்லி மனு அளித்தால்,ஏதோ இந்த அணு உலை வந்து தான் இருண்ட தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்த போவது போல,மனுவை விசாரிக்காமலே தள்ளுபடி செய்துள்ளனர் நீதி "அரசர்கள்".

இந்த அணு உலை வந்து முழுமையாக இயங்கினால் கூட 450MW கூட கிடைக்குமா என்பதே சந்தேகம். தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை 2500-3000MW.  பாமரனுக்கு தெரிந்த புள்ளி விவரம் கூடவா அவர்களுக்கு தெரியாமல் போனது?

இந்தியனும் சிங்களவனும் இணைந்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர்.இப்போது இந்தியன் ரசியனுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டு தமிழனை உயிரோடு புதைக்க திட்டம் தீட்டுகின்றனர்.




இந்திய ஏகாதிபத்தியம் தமிழனை பார்த்து நக்கலுடன் கேட்கிறது...



செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உருத்திரக்குமாரனுக்கு முன்னாள் பெண் போராளியின் விண்ணப்பம்

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! - ருத்திரகுமாரனிடம் ஒரு முன்னாள் பெண் போராளி உருக்கமான வேண்டுகோள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மாண்புமிகு வி. ருத்திரகுமாரன் அவர்கட்கு!

தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய தகுதியின் உரிமையோடும், இன்றுவரை தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிக்கும் உறுதியுடனும் ஊனமுற்ற நிலையிலும் உறுதியோடும், தமிழீழம் மலரும் என்ற எதிர்பார்ப்போடும் வாழும் பெண் என்ற வகையில் இதனைத் தங்களுக்கு எனது கண்ணீர் கொண்டு வரைகின்றேன்.

ஐயா!

முள்ளிவாய்க்கால் பேரழிவு விடுதலைப் புலிகளது பக்க வேர்களைச் சாய்த்திருந்தாலும், அதன் ஆணி வேர் இப்போதும் உறுதியாகவே இருக்கின்றது. அதை விழுதுகளாகத் தாங்கி நிற்கும் புலம்பெயர் தமிழர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தில் உறுதியாகவே உள்ளார்கள்.புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களின் வீச்சினால் மட்டுமே, நாங்கள் இன்னமும் உயிர் வாழும் அனுமதி பெற்றுள்ளோம்; என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. நாங்கள் மட்டுமல்ல, தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் உயிர்க் குடையாகப் புலம்பெயர் தமிழர்களே காத்து நிற்கின்றார்கள். இல்லையென்றால், முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் நிகழ்த்திய சிங்கள அரசு முற்றாக எங்கள் முகவரிகளைச் சாய்த்தேவிட்டிருக்கும்.

புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் எழுச்சி கொள்ளும்போதே எங்கள் பாதுகாப்பு மட்டுமல்ல, தமிழீழ விடுதலையும் உறுதிபடுகின்றது. அதை முன்கூட்டிய உள்ளுணர்வால் எங்கள் தேசியத் தலைவர் அவர்களும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இறுதிப் போர்க் களத்தில் வீழ்ந்த அத்தனை போராளிகளும், பொதுமக்களும் அந்த எதிர்பார்ப்புடனேயே மண்ணில் சாய்ந்தார்கள். நான்கூட, படுகாயமடைந்த நிலையில், நினைவு தடுமாறிய கணத்திலும் எங்கள் மண்ணினதும், மக்களதும் விடுதலைக்காக நீங்கள் எல்லோரும் போராடுவீர்கள். தமிழீழ விடுதலை என்ற மாவீரர்களது கனவுகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், 'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்' என்ற உச்சரிப்புடன் கண்களை மூடினேன்.

ஆனாலும், எப்படியோ நான் பிழைத்துக்கொண்டேன். அதில் எனக்கு சந்தோசமும் இல்லை, துக்கமும் இல்லை. களத்தில் என்னுடன் இணைந்து போராடிய தோழர்களது கல்லறைகளும் சிதைக்கப்பட்டுள்ள இந்தக் கணம் எனக்கு இயலாமை என்ற பெரும் வேதனையைத் தந்துகொண்டுள்ளது. இருந்தாலும், எனது பணி இன்னமும் இருப்பதனால், நான் உயிரோடு தப்பி இருக்கிறேன் என்ற நம்பிக்கையும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியாக தமிழீழ விடுதலைவரை நான் வாழவேண்டும் என்ற உறுதியும் என்னை வாழவைத்துக்கொண்டுள்ளது.


எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் தாயகத்தின் விடுதலைக்காகக் கழுத்தில் நஞசு மாலையை அணிந்து கொண்டவர்கள். எங்களது வாழ்வும். சாவும் தமிழீழ விடுதலைக்கானது. தற்போதைய கறுப்பு நாட்கள் அதற்கான சிறிய இடைவேளை மட்டுமே. எங்கள் கரிகாலனது வருகைவரை, எங்கள் காத்திருப்பு தவிர்க்க முடியாதது. அது போலவே, தேசியத் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பணியையும் நீங்கள் தவிர்க்க முடியாது. உலக ஒழுங்கு என்ற வரிசைப்படுத்தலில் எங்கள் மக்களது விடுதலை வேள்வியும் சிக்கிச் சீரழிந்து போனாலும், முள்ளிவாய்க்காலின் பின்னரான இன்றைய காலத்தில் உலக நாடுகள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள முனைகின்றன. ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் தங்போது உலக நாடுகளால் உணரப்பட்டு வருகின்றது. இந்த யதார்த்தத்தில் புலம்பெயர் தமிழர்களது பணி அதிகம் தேவைப்படுகின்றது.

எதிரியின் அத்தனை காய் நகர்த்தல்களையும் முறியடித்து, ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரல் புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே முடியக் கூடிய தேசியக் கடமை. அந்தப் போராட்டத்தின் ஒருமுகப்படுத்தலில் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பேணப்படவேண்டும். 'மக்கள் புரட்சி செடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்' என்ற திலீபன் அண்ணாவின் வார்த்தைகள் புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் திரட்டும் என்று இப்போதும் நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுக்காக நீதி தேவதை தன் கதவுகளைத் திறந்து வரும் வேளையில், புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் நிறுத்த வேண்டிய நீங்கள் எப்போதுமே தனிப் பயணம் மேற்கொண்டு வருகின்றீர்களே? அது ஏன் என்பது எனக்கு மட்டுமல்ல, எங்களில் யாருக்கும் புரியவில்லை. புலம்பெயர் தமிழர்களின் போர்க் களம் உங்களால் பிளவு படுவதை எப்படி அனுமதிக்கின்றீர்கள்? மாவீரர் தினத்துடன் உங்கள் போட்டி அரசியலை நிறுத்துவீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அதையும் பொய்யாக்கி, ஜெனிவா போராட்டத்தையும் பிளவு படுத்தி எதிரியின் மனதைக் குளிர வைக்க உங்களால் எப்படி முடிகின்றது?

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! தமிழீழ மக்களுக்கான நீதி திரண்டுவரும் நேரத்தில், புலம்பெயர் மக்களின் எழுச்சியைச் சிதைக்காதீர்கள். மார்ச் ஐந்தாம் நாள் ஜெனிவா ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள நீதி கோரும் எழுச்சி நிகழ்வில் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் பங்காளாகளாகக் கலந்துகொள்ளுங்கள். தமிழீழ விடுதலைப் போர்க்களம் உங்களது அரசியலுக்கான தளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழீழம் மலரும்வரை, அதன் வேருக்கு நீர் பாய்ச்சுங்கள். அதன் பின்னர் உங்கள் அரசியலைத் தொடருங்கள். மக்கள் ஏற்றுக்கொண்டால், தமிழீழத்தின் முதலாவது பிரதமரும் நீங்களே!

'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!'

அன்புடனும், தமிழீழ ஆவலுடனும்
க. தமிழ்விழி

புதன், 1 பிப்ரவரி, 2012

ஜெனீவா நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்!!!

மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது.
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது.
பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது.
கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.
ஞாயிறுக்கிழமை மாலை தமிழ்வர்தக மையமான லாசப்பல் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபயணத்தில் மேற்கொண்டுள்ள விடுதலைச் செயற்ப்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான இலக்கம் : 06 27 13 87 28
1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின்இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.
2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.
3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.
ஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.
நன்றி:மீனகம் 

ஜெனீவா நோக்கிய இந்த பயணத்திற்கு தலைவர்களின் வாழ்த்து செவ்விகள்

ஐ.நா. மன்றம் நோக்கிய நீதிக்கான நடைபயணம் - பெ.மணியரசன் செவ்வி! ஈழத்தமிழர் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ள தோழர்களை வாழ்த்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அளித்துள்ள நேர்காணல்!