Tuesday, February 21, 2012

உருத்திரக்குமாரனுக்கு முன்னாள் பெண் போராளியின் விண்ணப்பம்

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! - ருத்திரகுமாரனிடம் ஒரு முன்னாள் பெண் போராளி உருக்கமான வேண்டுகோள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மாண்புமிகு வி. ருத்திரகுமாரன் அவர்கட்கு!

தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய தகுதியின் உரிமையோடும், இன்றுவரை தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிக்கும் உறுதியுடனும் ஊனமுற்ற நிலையிலும் உறுதியோடும், தமிழீழம் மலரும் என்ற எதிர்பார்ப்போடும் வாழும் பெண் என்ற வகையில் இதனைத் தங்களுக்கு எனது கண்ணீர் கொண்டு வரைகின்றேன்.

ஐயா!

முள்ளிவாய்க்கால் பேரழிவு விடுதலைப் புலிகளது பக்க வேர்களைச் சாய்த்திருந்தாலும், அதன் ஆணி வேர் இப்போதும் உறுதியாகவே இருக்கின்றது. அதை விழுதுகளாகத் தாங்கி நிற்கும் புலம்பெயர் தமிழர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தில் உறுதியாகவே உள்ளார்கள்.புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களின் வீச்சினால் மட்டுமே, நாங்கள் இன்னமும் உயிர் வாழும் அனுமதி பெற்றுள்ளோம்; என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. நாங்கள் மட்டுமல்ல, தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் உயிர்க் குடையாகப் புலம்பெயர் தமிழர்களே காத்து நிற்கின்றார்கள். இல்லையென்றால், முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் நிகழ்த்திய சிங்கள அரசு முற்றாக எங்கள் முகவரிகளைச் சாய்த்தேவிட்டிருக்கும்.

புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் எழுச்சி கொள்ளும்போதே எங்கள் பாதுகாப்பு மட்டுமல்ல, தமிழீழ விடுதலையும் உறுதிபடுகின்றது. அதை முன்கூட்டிய உள்ளுணர்வால் எங்கள் தேசியத் தலைவர் அவர்களும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இறுதிப் போர்க் களத்தில் வீழ்ந்த அத்தனை போராளிகளும், பொதுமக்களும் அந்த எதிர்பார்ப்புடனேயே மண்ணில் சாய்ந்தார்கள். நான்கூட, படுகாயமடைந்த நிலையில், நினைவு தடுமாறிய கணத்திலும் எங்கள் மண்ணினதும், மக்களதும் விடுதலைக்காக நீங்கள் எல்லோரும் போராடுவீர்கள். தமிழீழ விடுதலை என்ற மாவீரர்களது கனவுகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், 'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்' என்ற உச்சரிப்புடன் கண்களை மூடினேன்.

ஆனாலும், எப்படியோ நான் பிழைத்துக்கொண்டேன். அதில் எனக்கு சந்தோசமும் இல்லை, துக்கமும் இல்லை. களத்தில் என்னுடன் இணைந்து போராடிய தோழர்களது கல்லறைகளும் சிதைக்கப்பட்டுள்ள இந்தக் கணம் எனக்கு இயலாமை என்ற பெரும் வேதனையைத் தந்துகொண்டுள்ளது. இருந்தாலும், எனது பணி இன்னமும் இருப்பதனால், நான் உயிரோடு தப்பி இருக்கிறேன் என்ற நம்பிக்கையும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியாக தமிழீழ விடுதலைவரை நான் வாழவேண்டும் என்ற உறுதியும் என்னை வாழவைத்துக்கொண்டுள்ளது.


எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் தாயகத்தின் விடுதலைக்காகக் கழுத்தில் நஞசு மாலையை அணிந்து கொண்டவர்கள். எங்களது வாழ்வும். சாவும் தமிழீழ விடுதலைக்கானது. தற்போதைய கறுப்பு நாட்கள் அதற்கான சிறிய இடைவேளை மட்டுமே. எங்கள் கரிகாலனது வருகைவரை, எங்கள் காத்திருப்பு தவிர்க்க முடியாதது. அது போலவே, தேசியத் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பணியையும் நீங்கள் தவிர்க்க முடியாது. உலக ஒழுங்கு என்ற வரிசைப்படுத்தலில் எங்கள் மக்களது விடுதலை வேள்வியும் சிக்கிச் சீரழிந்து போனாலும், முள்ளிவாய்க்காலின் பின்னரான இன்றைய காலத்தில் உலக நாடுகள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள முனைகின்றன. ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் தங்போது உலக நாடுகளால் உணரப்பட்டு வருகின்றது. இந்த யதார்த்தத்தில் புலம்பெயர் தமிழர்களது பணி அதிகம் தேவைப்படுகின்றது.

எதிரியின் அத்தனை காய் நகர்த்தல்களையும் முறியடித்து, ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரல் புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே முடியக் கூடிய தேசியக் கடமை. அந்தப் போராட்டத்தின் ஒருமுகப்படுத்தலில் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பேணப்படவேண்டும். 'மக்கள் புரட்சி செடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்' என்ற திலீபன் அண்ணாவின் வார்த்தைகள் புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் திரட்டும் என்று இப்போதும் நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுக்காக நீதி தேவதை தன் கதவுகளைத் திறந்து வரும் வேளையில், புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் நிறுத்த வேண்டிய நீங்கள் எப்போதுமே தனிப் பயணம் மேற்கொண்டு வருகின்றீர்களே? அது ஏன் என்பது எனக்கு மட்டுமல்ல, எங்களில் யாருக்கும் புரியவில்லை. புலம்பெயர் தமிழர்களின் போர்க் களம் உங்களால் பிளவு படுவதை எப்படி அனுமதிக்கின்றீர்கள்? மாவீரர் தினத்துடன் உங்கள் போட்டி அரசியலை நிறுத்துவீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அதையும் பொய்யாக்கி, ஜெனிவா போராட்டத்தையும் பிளவு படுத்தி எதிரியின் மனதைக் குளிர வைக்க உங்களால் எப்படி முடிகின்றது?

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! தமிழீழ மக்களுக்கான நீதி திரண்டுவரும் நேரத்தில், புலம்பெயர் மக்களின் எழுச்சியைச் சிதைக்காதீர்கள். மார்ச் ஐந்தாம் நாள் ஜெனிவா ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள நீதி கோரும் எழுச்சி நிகழ்வில் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் பங்காளாகளாகக் கலந்துகொள்ளுங்கள். தமிழீழ விடுதலைப் போர்க்களம் உங்களது அரசியலுக்கான தளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழீழம் மலரும்வரை, அதன் வேருக்கு நீர் பாய்ச்சுங்கள். அதன் பின்னர் உங்கள் அரசியலைத் தொடருங்கள். மக்கள் ஏற்றுக்கொண்டால், தமிழீழத்தின் முதலாவது பிரதமரும் நீங்களே!

'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!'

அன்புடனும், தமிழீழ ஆவலுடனும்
க. தமிழ்விழி