ஞாயிறு, 25 நவம்பர், 2018

கஜா புயல்- கள ஆய்வும் மக்களின் தேவையும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விழைகிறதா மனம்? உங்கள் உதவி முழுமையானதாக இருக்க, ஒரு மூன்று நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படித்து உங்கள் சேவை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள் 

இயற்கை சீற்றம் : கஜா புயல்
நாள் : 15.11.2018 இரவு 11.30 - 16.11.2018 காலை 4.30 வரை 
காற்றின் வேகம்: தகவல் இல்லை
சேதம்: கீற்று வீடுகள், நாட்டு ஓட்டு வீடுகள், மரங்கள், மின்சாரம்
கள ஆய்வு பாதை : வேளாங்கண்ணி, பிரதாபராமாபுரம், காமேசுவரம், விழுந்தமாவடி (தென்பாதி, ஆதி திராவிடர் குடியிருப்பு), புதுப்பள்ளி (கீழையூர் ஒன்றியம்), வேட்டைக்காரன்இருப்பு(கண்டியன்காடு, போலிசு சாலை)



நான் வேளாங்கண்ணியில் இருந்து பிரதாபராமபுரம் (PR PURAM) (காமேஸ்வரம் போகும் வழிக்கு கிழக்காக) , பாரதி நகர் என்கிற ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதிக்குச் சென்றேன். அங்கு பெரும்பாலான கீற்று வீடுகள் சுவர் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளன. மரங்கள் இன்னும் அப்புறப்படுதப்படவில்லை. மேற்கொண்டு மழை பொழிந்தால் தங்கள் உடைமைகளை தற்காலிகமாக காக்க அவர்களுக்கு தார்பாய் தேவைப்படுகிறது. அங்கு 64 வீடுகள் உள்ளதாக சொன்னார்கள். அதில் பாதி வீட்டிற்காவது தேவைப்படும். 

தொடர்பு கொள்ள: 


  1. திரு. சங்கர் (9789397952)- பாரதி நகர், PR புரம் 
  2. திருமதி செல்வி - 9976430840 -பிரதாபராமபுரம் 
  3. திருமதி சந்திரோதயம் - 9585934718 கிராமத்து மேடு

விழுந்தமாவடி தென்பாதி கிராமம்-ஆதி திராவிடர் குடியிருப்பு -75 குடும்பங்கள். நான் சென்ற சமயம் தான் மரம் அறுக்கும் இயந்திரம் தொண்டு நிறுவனம் ஒன்றால் அளிக்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள், ஆடைகள் சேதம்.  
தொடர்பு : திரு குமார் - 9994042425


தென்பாதி-விழுந்தமாவடி 

புதுப்பள்ளி- கீழையூர் ஒன்றியம்
இந்த புதுப்பள்ளி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளதாம். 
தொடர்பு : மரு. ராமமூர்த்தி - 9787653543

புதுப்பள்ளி 


முகாமில் இருந்து உணவை வீட்டிற்கு வாங்கிச் செல்லும் பெரியவர் 


கண்டியான்காடு- வேட்டைக்காரன் இருப்பு. இது உள்ளார்ந்த பகுதி. மரங்கள் முக்கிய வீதிகளில் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மரம் அறுக்கும் இயந்திரம் இருந்தால் நாங்களே சீர் செய்து கொள்வோம் என்றார் திரு. அன்பு செழியன்- ஆசிரியர்- தொடர்பு :9488015289. எரிபொருள் கொண்டு மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்றின் விலை ரூ. 8500/-
 
இந்த பகுதியில் 150 வீடுகள் உள்ளன. இங்கு தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்ட உதவிப் பொருள்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, நான் அங்கு சென்ற நேரத்தில்தான், அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள் அவர்களே.

இந்த கண்டியன்காடு பகுதியில் நூற்றாண்டுகால பழமையான பொதுவெளியில் அமைந்த கட்டிடத்தில் ஓடுகள் உடைந்து கிடக்கிறது. அதற்கு தற்காலிகமாக தார்பாய் கேட்டிருந்தனர். இதோ கொண்டுவருகிறேன் என்று சொல்லிச் சென்ற அரசு அதிகாரிகள் இதுவரை வரவில்லையாம்.

வேட்டைக்காரன் இருப்பு -போலிசு சாலை 


வேளாங்கண்ணி- வேதாரண்யம் பிரதான சாலைகளில் செல்வோர் அந்த பாதைகளை தவிர்த்து உள்பகுதி வழியாக செல்லவும். இல்லை என்றால் வரும் வண்டிகளை மறிக்க இது போல சில மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு தேவையானது கிடைத்து விட்டால் தேவைப்படுவோர்களுக்கு நிவாரணம் செல்ல விடுங்கள் என்று கூறினேன். அப்படித் தான் செய்கிறோம் என்றார்கள். நம்புவோம். நாலுவேதபதி, தேத்தாக்குடி போன்ற பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் ஒவ்வொரு வீட்டிலும் தேவைக்கு மிகுதியாக இருக்கிறதாம். இதுவரை நிவாரணம் செல்லாத பகுதிகளை அடையாளம் கண்டு கொண்டு சென்று உதவுங்கள்

திருக்குவளை, கொளப்பாடு போன்ற பகுதிகளில் இதுவரை யாரும் செல்லவில்லை என்று நியு இந்தியா அச்சுரன்சை சேர்ந்த திரு. தங்கமணி கூறினார். அங்கு சூரிய ஒளி விளக்குகளும், தார்ப்பாயும் தேவை என்றார்
தொடர்பு : 9443603354

நாகப்பட்டினம்- ஆலமரம்- கஜாவின் கோரம்





நிறைய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு பஞ்சமின்றி வழங்கப்படுகிறது. ஆனால் தங்குவதும், இருட்டில் விடியலை எண்ணி உறக்கத்தை தொலைத்த மக்களும் எதிர்கால அச்சம் பீடிக்கப்பட்டவர்களுமாக காணப்பட்டனர்
திருப்பூண்டி சாலை 
இங்கு பெரும்பாலும் தண்ணீர் குடுவைகள் யாருக்கும் தேவைப்படுவது இல்லை. நிலத்தடி நீரை புழங்கும் மக்கள். ஆங்காங்கு குளங்களும் உள்ளன 
பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பிற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் வந்துள்ளார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள் பணியில் உதவுவது வேலையை விரைவு படுத்தும். 
திருப்பூண்டி அருகே. புயல் மழையின் போது நனைந்த பாடப்புத்தகங்களை காயவைத்துக் கொண்டிருந்தனர். அடுத்து கல்லூரி திறக்கும் போது கட்டணம் செலுத்துவது எப்படி இயலும், எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிவிட்டதே என அழும் மக்கள். உதவிகள் பணமாக கிடைத்தால் அது முழுமை அடைய வாய்ப்பு உள்ளது .
நாட்டு ஓட்டு வீடுகள் ஓரளவு புயலில் தப்பித்துவிட்டது. சீமை ஓடு எனப்படும் தட்டு ஓட்டு வீடுகள் முழுதும் சேதம் ஆகிவிட்டது. ஒரு வீட்டை சரி செய்ய குறைந்தது ரூ. 25000 முதல்
ரூ. 50000 வரை ஆகும்.

நிறைவாக :

உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எது தேவை என்பதை விடுத்து நமக்கு எது கிடைக்கிறதோ அதை வண்டிகளில் வாங்கி நிரப்பி மக்களுக்கு உதவுகிறோம் என்று உங்கள் உழைப்பையும் வீண் செய்வதைக் காட்டிலும், அந்த மக்களுக்கு அடிப்படை கட்டுமானங்களுக்கு தேவையானதை (அனைத்தையும் ஒரே ஆளோ, இயக்கமோ செய்ய இயலாது) கூட்டு முயற்சியால் எதாவது ஒரு வீட்டை தத்து எடுத்து புனர் நிர்மாணம் செய்து தரலாம். கூறை வேயலாம்; அடுத்த மழையில் இருந்து காக்க தற்காலிக தார்பாய்கள், பாத்திரங்கள், போர்வை, பாய் போன்றவைகளை வழங்கலாம்.


ஞாயிறு, 28 அக்டோபர், 2018

புலிகள் காலம் பொற்காலம்-இதோ வாழும் சாட்சி




"தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் ஒரு சிறு திருட்டு கூட நிகழாது; கீழே ஒரு ரூபாய் நாணயம் கிடந்தால் கூட அதை எடுத்துப் போய் காவல் இல்லத்தில் ஒப்படைப்பார்கள்; புலிப்படைகள் எங்கும் காவலுக்கு இருப்பர்; கிஞ்சான்றும் ஒழுக்கம் தவறிலர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர்" என்று நேரில் நான் சந்தித்த ஈழ மக்கள் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் கம்பவாரிதி ஈழம் செயராஜ் ஐயாவே அதற்கு சான்றாக இருந்து அதை ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை நிகழ்ச்சியில் பொது மேடையில் உரக்கச் சொன்னபோது (இந்த காணொளியின் 20ஆம் நிமிடத்தில் ஆரம்பிக்கும் அந்த உரையை கேளுங்கள்) மெய்சிலிர்த்துப் போனேன் 

சனி, 22 செப்டம்பர், 2018

அப்படி என்ன யாருக்கும் இல்லாத சிறப்பு தமிழனுக்கு?

ஐந்தாயிரம் ஆண்டாக ஆரிய இனத்தைத் தொடர்ந்து எதிர்த்து அது தமிழினத்தை அழித்து தன் வசப்படுத்திக்கொள்ளாமல் தன்னைக் காத்துக்கொள்வதோடு நில்லாமல் அதனுள் ஐக்கியப்படாமல் தன தனித் தன்மையை காத்து இன்றளவும் தமிழ் வீறுநடை போடுகிறாள். 

ஜெர்மானியர்கள், குர்து இனம் என எல்லாம் தான் மற்றொரு இனத்தை எதிர்த்து போரிடுகிறது. இதில் என்ன பெருமை?



கண்ணுக்கு தெரிகிற ஓர் எதிரியை எதிர்த்துப் போராடலாம். ஆனால் ஆரிய இனம் அப்படி அல்ல. அது நீ பலசாலி என்றால் உன்னை மறைந்திருந்து தாக்கும்; நீ வித்தைக்காரன் என்றால் உன் கட்டைவிரலை காவு கேக்கும்; நீ செய்த அறம் உன்னைக் காக்கும் என்றால் அதை தானாமாக வாங்கிக்கொள்ளும் தந்திரமாக; தனக்கு அடிபணியாவிட்டால் மூன்றடி மண் கேட்டு உன்னை மண்ணோடு மண்ணாக்கும். இப்ப சொல்லு, தமிழினம் உண்மையில் பெருமை உடைத்து தானே? 

சனி, 10 மார்ச், 2018

ஏர்செல்லில் இருந்து பி எஸ் என் எல் க்கு மாற..(NUMBER PORTABILITY FROM AIRCEL TO BSNL)

நீண்டகால ஏர்செல்(Aircel) வாடிக்கையாளர்களும் அந்த இணைப்பை விட்டு வேறு இணைப்பிற்கு செல்லவேண்டும் என்பதே மனதிற்கு ஒவ்வாத ஒன்றே. ஆனால் மாறியே ஆகவேண்டிய கசப்பான கட்டாயம். வேறு வழியில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றிலும் மறைந்து போகும். அதற்குள் நாம் அதே எண்ணை தக்கவைத்துக் கொள்ள வேறு இணைப்பிற்கு மாறியே ஆகவேண்டும். மாற வேண்டிய இணைப்பு எது என்பது தான் கேள்வி. வோடபோனும் ஏர்டெல்லும் போட்டி போட்டு ஏர்செல் வாடிக்கையாளர்களைக் கவர திட்டங்களை அறிவிக்கிறார்கள்...முள்ளில் புழுவை வைத்து மீனைப் பிடிப்பது போல. 

என்னைக் கேட்டால் பி எஸ் என் எல்(BSNL) க்கு மாறுவதே சாலச் சிறந்தது என எண்ணுகிறேன். ஓரளவு நியாயமான விலைகள்; வெளிப்படைத் தன்மை; தனியாருடன் போட்டி போடும் அளவிற்கு நல்ல திட்டங்கள். மேலும் தமிழ்நாட்டில் அங்கு  வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். அவர்கள் நட்டத்தின் காரணமாக ஆள்குறைப்பு, பணி இடமாற்றம் என்கிற அச்சுரத்தல்களில் இருக்கிறார்கள். சேலம் உருக்காலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட நிலை பி.எஸ்.என்.எல்லிற்கு ஏற்படாமல் காக்க பொதுத்துறையை காக்கின்ற ஒரு கடமையை நாம் செய்தவர்களாகவும் ஆவோம்.

பி எஸ் என் எல் க்கு மாற..PORT XXXXXXXXXX  என்று 1900 க்கு அனுப்பவும். (XXXXXXXXXX - உங்கள் 10 இலக்க அலைபேசி எண்) போர்ட் எண் வந்ததும் அதையும் அது வந்த தேதியையும் குறித்துக்கொண்டு உங்கள் ஆதார் எண்ணை (ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கிவிட்டார்கள்) எடுத்துக் கொண்டு பி எஸ் என் எல் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும்.

குறிப்பு:
1. உங்கள் ஏர்செல் யார் பேரில் இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் யாருடைய ஆதார் அட்டையை கொண்டு செல்கிறீர்களோ அவர் பெயருக்கு புதிய பி எஸ் என் எல் அதே எண்ணுடன் ஆதார் அட்டை கொடுத்த நபரின் பெயரில் பதிவு ஆகிவிடும்.  புகைப்படம் எதுவும் தேவை இல்லை.
2. ஆதார் அட்டைதாரர் பி எஸ் என் எல் அலுவலகத்திற்கு நேரில் சென்று கைரேகை வைக்க வேண்டும். 
3. ஒரு சிம்மின் விலை ரூ.60.மட்டுமே.
4. பி எஸ் என் எல் சிம்மை நீங்கள் உங்கள் கைப்பேசியில் போட்டே வைத்து இருக்கலாம். ஒரு வார காலத்திற்கு பிறகு பி எஸ் என் எல் செயலுக்கு வரும்.
5. செயலுக்கு வந்த பிறகு ரூ.25 க்கு கடையில் சென்று (இணையதளத்தில் அல்ல ) ரீ சார்ஜ் (செறிவு) செய்யவேண்டும். பிறகு தான் உங்கள் புது பி எஸ் என் எல் செயலுக்கு வரும். அது வரை உள் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மட்டுமே வரும்.
5. தரவு சேவையை செயல்படுத்த "START" என 1925க்கு அனுப்பவேண்டும்.
6. வாடிக்கையாளர் சேவைக்கு எண் 1503 ஐ அழைக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- உலகில் தகுதியானவர்கள் நிலைபெறுவார்கள் என்பதும் வலிமையற்றவர்கள் அழிவார்கள் என்கிற பரிணாம கோட்பாடு சற்று மாறி பலம் குன்றியவர்களை அழித்து வலிமை பொருந்தியவர்கள் மட்டுமே ஆள்வார்கள் என்கிற முதலாளித்துவ பொருளியல் முறைமைக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு ஜியோ, ஏர்டெல்லின் ஏகாதிபத்திய நிலைபெறுத்தலும் யூனிநார், எம்.டி.எஸ். மற்றும் தற்போதைய  ஏர்செல் அழிப்பும்.

1ஜிபி தரவை ரூ.197க்கு விற்று நம்மை ஏமாற்றியவர்களை ஜியோ அடையாளம் காட்டியதற்கு நன்றி என்றாலும், களத்தில் இருப்பவர்களை காலி செய்து அனைவரும் இல்லாத முடியாட்சி நிலைக்கு வந்த பிறகு தான் சொல்வது தான் விலை, அதை வாங்கியே தீரவேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் என்கிற மோசமான கட்டத்தை நோக்கி நம்மை காய் நகர்த்தி இட்டுச் செல்லும் ஜியோவின் இந்த பாணி 1994இல் ஓர் அழைப்பு ரூ.8 என்கிற நிலையில் இருந்த போது வெறும் 40காசுகள் என மூலை முடுக்கு எல்லாம் விளம்பரம் செய்து கால் ஊன்றிய அவரின் தந்தை திருபாய் அம்பானியின் சூத்திரமே இது என்பது ஆரம்ப கால அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு நன்கு விளங்கும்.

தமிழன் கையில் இருந்த  ஏர்செல்லின் பங்குகளை  திருட்டு திராவிடம் முறைகேடாக குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்று, அந்த நிறுவனம் இப்பொதி திவால் ஆகிவிட்டது என கடையை மூடிச் சென்றது தான் நிலவரம்.


ஞாயிறு, 21 ஜனவரி, 2018

திமுக+பாஜக=ஆண்டாள்

அரியாசனம் துறந்த இராமனை வைத்து அறியாசனங்களுக்கிடையே பகை மூட்டி அரியணை ஏறிய பாஜக, தமிழர்களால் நோட்டோவால் அவமானப்படுத்தப்பட்டு  இனி தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது என்கிற சூழ்நிலையில் அதே சூத்திரத்தை பயன்படுத்தி தமிழர்களுக்குள்ளே பிளவு உண்டாக்கி உள்ளே நுழைய எத்தனிக்கும் முயற்சி தான் இந்த ஆண்டாள் பிரச்சனை.

இது ஏதோ திராவிட ஆரியப் போர் என நினைத்தால் நீயும் நானும் முட்டாள். இது இந்த இருவரின் கூட்டு சதி முயற்சியே. திருக்குறளை முன்னிறுத்தி இதே வைரமுத்துவை வைத்து தருண் விஜய் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் அவர்கள் திட்டம் சுக்குநூறாகிப் போனது தமிழர் பாதியில் விழித்துக் கொண்டதால்; மதச் சண்டைக்கும் இந்த தமிழர்கள் ஒத்துழைக்கவில்லை. எனவே தான் இறுதி அஸ்திரத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் தமிழக அரசியல் பிதாமகர். கட்டுமரத்தை வைத்து கரையை உடைக்கும் முயற்சி. 

வைரமுத்துவிற்கு வக்காலத்து என்கிற மாய மானை வைத்து சீதை என்கிற தமிழ்நாட்டு சிம்மாசனத்தை அபகரிக்க அற்ப பதர்கள் நம் உணர்சிகளை வைத்து விளையாடும் ஆடு புலி ஆட்டம். இதில் நாம் தமிழர்கள் விழித்துக் கொண்டு ஒற்றுமை காத்திட வேண்டும். 

சகாராவில் கூட தாமரை மலரலாம்; ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டில் முடியாது.

சனி, 20 ஜனவரி, 2018

உரை ஓவியம்: மீன் தொட்டி

ஒவ்வொரு இல்லத்திலும்
ஒரு
சிறிய சிறைக் கூடம்