ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

கல்விக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு?


படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு என்று சொல்கின்ற கண்ணதாசன் , பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்றும் தன்நிலையை மாற்றுகிறார். 

64ஆவது நாயன்மாராக விளங்கக் கூடிய வாரியார் சாமிகள் அடித்து சொல்கிறார். அறிவு வேறு படிப்பு வேறு என்று. அப்படி என்றால் நாம் பாடசாலையில் படித்து உணர்வது அறிவு இல்லையா என்றால், .....இல்லை. நான் உமர்கய்யாம் பற்றி படிக்கிறேன். அவரை பற்றி படித்ததால் தான் அறிய முடிகிறது.. அவர் காலம் 1048-1131 என்று அறிகிறேன். இது அறிவு ஆகாதா என்றால் ஆகாது. இன்றைக்கு அவருடைய காலத்தை கணித்தவர்கள் நாளை அவர் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று சொன்னால், நாம் கற்றதனால் பெற்ற அறிவு தவறாகி போகிறது. 

அதே போல நமது பாடத்திட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் 1857 என்று படிக்கிறோம். ஆனால் அது பொய். திரிக்கப்பட்ட வரலாறு. ஆக படித்து அறிவது அறிவாகாது. அறிவு என்பது உள்ளொளி. அதை அறியாமை என்கிற புற இருள் மூடி உள்ளது. கல்வி என்பது அந்த புற இருளை நீக்கும் ஒரு சாதனம்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

அடிமையாக 75ஆண்டு. வா கொண்டாடலாம் தமிழா



ஒதுக்குப்புறமான பகுதியில் வசிக்கிறோம். ஒரு நாள் மழை பொழிந்தால் பத்து நாள்கள் வீட்டுச் சிறை தான். வடிகால் வசதி இல்லாததால் பகுதி முழுவதும் நீர் சூழ்ந்துவிடும்; சாலை வசதியும் இல்லை. இதற்கு முன்பு பஞ்சாயத்திடம் முறையிட்ட போது தேர்தல் நடக்காததால் தலைவர் இல்லையே என்று காரணம் சொன்னார்கள். தேர்தல் முடிந்து இன்றும் தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருநூறு மீட்டர் தொலைவு தான். நிலைமை இப்படி இருக்க, வீட்டுக்கு வீடு மூவர்ணக் கொடியை கொடுத்து விட்டு சென்றுள்ளான். கோவணம் கட்டுவதற்கா என்று தெரியவில்லை 

ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம். அதற்கு பிறகு இந்திக்காரனிடம். ஆண்டைகள் தான் மாறி உள்ளது. இன்னும் நம் கைவிலங்கு அப்படியே தான் உள்ளது. இந்த இலட்சணத்தில் விடுதலை நாள் கொண்டாட்டம் ஒரு கேடு 






வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தேய் நிலா

 

உடல் மெலிந்தது 
ஏனோ
நாள்தோறும் 
நடைபயிற்சியா
நீலவானில்?

கத்துக்குட்டி ஒப்பனையாளன்

 

கோவம் என்ன 
கிளியக்கா
உதட்டுச் சாயத்தை
மூக்கிற்கு
பூசிவிட்டானே என்றா?