அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது?
அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்டுச் சட்டை தைத்துக் கொடுப்போம் – என்று பட்டாசு வெடிக்கிறார்களா? இவர்களை எந்த இடத்தில் எட்டி உதைப்பது என்பது கூட தெரியாத சொரணைகெட்ட இனமாகவா மாறிவிட்டிருக்கிறது தமிழினம்!
தங்கள் சொந்தமண்ணில், தாங்கள் ஆண்ட மண்ணில் சிங்களருக்கு முன்பே வாழ்ந்த மண்ணில் உரிமை கேட்டுப் போராடியவர்கள், மானம் மரியாதையோடு வாழ்ந்த ஈழத்துச் சொந்தங்கள். பெரியார் திடல் மேனேஜர்கள் மாதிரியோ, அறிவாலயத்து டேமேஜர்கள் மாதிரியோ டம்மி புலிகள் இல்லை அவர்கள். எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளாமல் சுயமரியாதையோடு போராடிய நிஜப் புலிகள். நண்பன் இலங்கையோடு சேர்ந்து நேரடியாகவே அவர்களை நசுக்க முயன்று இதே இந்தியா மூக்குடைபட்டது உண்மையா இல்லையா என்று கோபாலபுரத்துக்கு ஒரு கடுதாசி எழுதிப் பாருங்கள். ‘அந்தக் கூலிப்படையை வரவேற்கச் செல்லாத மாவீரன் நான்’ என்று, காங்கிரஸோடு உறவு முறிந்த மறுநாளே உங்களுக்கு பதில் வராவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.
உண்மையில் விடுதலைப் புலிகளிடம் தோல்விகண்டு அவமானத்தோடு திரும்பியது இந்திய ராணுவம் அல்ல…. ராஜீவ் காந்தியின் பக்குவமற்ற பரிதாபகரமான ராஜதந்திரம். ராஜீவ் காந்தி என்கிற மாஜி பைலட், தனது அறியாமையின் காரணமாக, திட்டமிட்டு தம்மைத் தவறாக வழிநடத்திய அசட்டு அம்பிகளை நம்பிக் கெட்ட வரலாறு அது. தேசப்பற்று ஒன்றே ஆக்சிஜனாக இருக்கும் வெள்ளிப் பனிமலைகளின் மீது நின்று எல்லை காக்கப் போராடும் ஈடு இணையற்ற இந்திய வீரர்களுக்கு ‘கூலிப்படை’ என்கிற வில்லையைக் கட்டி, விபரீத விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள் அவர்கள். தேசம் காக்கும் எங்கள் வீரர்களைக் கூலிப்படை ரேஞ்சுக்குக் கொண்டுசெல்லாதே – என்று குரல் எழுப்பக்கூட துணிவின்றி மௌனம் சாதித்தது நாடு. ராஜீவ் காந்தி என்கிற ஒரு அரசியல்வாதியின் தவறான முடிவுக்கு, ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் விலைகொடுக்க வேண்டியிருந்தது.
‘ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கும் பலனில்லை, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் பலனில்லை. வேறு யாருக்காக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது’ என்று பீல்டுமார்ஷல் மானெக் ஷா போன்றவர்கள் கேட்டது ராஜீவின் காதில் விழவில்லை. ஜெயவர்தனே என்கிற கிழட்டு நரியின் ஊளைச்சத்தம் மட்டும் தான் அவரது காதில் விழுந்தது. தனித்த பண்புகளும் அடையாளங்களும் உள்ள ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, பாரம்பரியம் மிக்க தன் ராணுவத்தை இரவல் கொடுக்கப்போய், வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டது இளிச்சவாய் இந்தியா. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது – என்று சொல்லாமல் இதை வேறெப்படித்தான் விவரிப்பது!
இன்று இதைச் சொல்லும்போது காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரலாம். ஆனால், ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்லத் துணை நின்ற குற்றத்துக்காக காங்கிரஸை நாம் விரட்டி விரட்டி அடிக்கும்போது, தோசையை அப்படியே திருப்பிப் போடுவார்கள்… இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறான முடிவுகளை எடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் காரணமல்ல என்பார்கள்.
இதெல்லாம் கற்பனையல்ல. காங்கிரஸின் எதிர்காலத் தலைவராக 1975ல் முன்நிறுத்தப்பட்டவர், ராஜீவின் தம்பி சஞ்சய் காந்தி. (அப்போதெல்லாம் விமானத்தை விட்டால் சோனியா, சோனியாவை விட்டால் விமானம் என்பதுதான் ராஜீவின் வாழ்க்கையாக இருந்தது) அன்று, அடுத்த தலைவராக முன்நிறுத்தப்பட்ட சஞ்சய்காந்தியின் முன் காங்கிரஸின் மூத்த தலைவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள். இன்று, அதே சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை கால தவறுகளுக்குக் காரணம் என்று கூசாமல் அறிவிக்கிறது காங்கிரஸ். இன்னும் சில ஆண்டுகளில், இலங்கைப் பிரச்சினையில் எடுத்த தவறான முடிவுகளுக்கு ராஜீவ்தான் காரணம் என்று அறிவிக்காமலா போய்விடப் போகிறது காங்கிரஸ்! சஞ்சய்காந்தியின் நிலை ராஜீவுக்கு வராமல் போய்விடப் போகிறதா என்ன?
அன்று ராஜீவ் காந்தி என்கிற விவரமில்லாத திடீர்த் தலைவர் செய்த இமாலயத் தவறுக்கான விலையை, தமிழினம் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி எங்கள் மரியாதைக்குரிய தலைவர் – என்று இன்றைக்குக் கடிதம் எழுதும் நமது பழைய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவாவது இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், பான்ஜூர் என்றெல்லாம் ஆரம்பித்து சோனியாகாந்திக்கு நண்பர்கள் கடிதம் எழுதட்டும்… ராஜீவ் காந்தியை மலர்மாலையோ வேறு மாலையோ போட்டு அவர்கள் மதிக்கட்டும். அவர்களுடைய தனிப்பட்ட வியாபாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை. அதே சமயம், நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டதால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியும் என்கிற அவர்களது அசட்டு நம்பிக்கைகளை நாம் அங்கீகரிக்கப் போவதுமில்லை.
நண்பர்களே இப்படியென்றால், பார்டரில் பாஸ் செய்து பாராளுமன்றத்துக்குள் போனவர்கள் சும்மா இருப்பார்களா? 1991மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளுக்கும் காங்கிரஸுக்கும் எந்த