திங்கள், 30 ஜனவரி, 2012

கவிதை:ஈழக் குழந்தையின் இறுதி நிமிடம்


தன் இறுதி மூச்சை எண்ணி விடுகிறது
போர் மேகம் காண விரும்பாது கண்ணை
மூடிக்கொள்ளும் பிஞ்சு நெஞ்சு.

ஏ சாவே..சீக்கிரம் அழைத்துக்கொள் இந்த பாவ சிசுவை
மரண வலி
இவனை தின்னும் முன்!!!

உயிர் கூட்ட பார்க்கிறார் ஒருவர்
ஈ கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் இதயத்திற்கு.
அத்துனை பாகமும் செயலிழந்தும்
இதயம் ஏதோ சொல்ல வருகிறது.
வார்த்தை...
வட்டமிடும் கொலைப் பறவையின்
சத்தத்தில் கரைகிறது.

இறுதி நேரத்தில் கூட தன் அன்னை மடி
கிட்டாது போக என்ன பாவம்
செய்தான் இவண்-
தமிழனாக பிறந்ததை தவிர?

குருதி தோய்ந்த கை ஒன்று சேதி சொல்கிறது
தீ நம்மை சேர்க்கப் போகிறது..
மீதி தமிழரை?

ஆடை களைந்த பெண் குழந்தை
வியட்நாம் போரை நிறுத்தினாளாமே...
இந்த அநீதிப் போரால் எங்கள் பலரின்
மூச்சு தான் நின்றது.
அவள் உலகின் தலை சிறந்த புகைப்படம் ஆனாள்..
நாங்கள் முழுநீள திரைப்படம் பல காட்டினோம்;ஓட்டினோம்...
ஆனால்?
ஓயவில்லை எம்மக்கள் ஓலங்கள் இம்மி அளவும்...

அமெரிக்கர்களின் இரக்கமும்! இந்திய மக்களின் நிராகரிப்பும்!

வணக்கம் இந்திய பெருங்குடி மக்களே! மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றியெறிய இந்த சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வந்தது, அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தார்கள் வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள் வியட்நாம் சுதந்திரம் பெற்றது.


ரத்த உறவும் இல்லை தன் நாட்டை சேர்ந்தவர்களும் இல்லை தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள் கொதித்தார்கள் ஆனால் சொந்த நாட்டின் சகோதரர்கள் இலங்கை வீதிகளில் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டு சிறுமிகள் கூட கற்பழிக்கப்பட்டு நடுவீதியில் பிணமாய் தூக்கியெறிந்த புகைப்படம், நகரும் படங்கள் கண்டும் பிற இந்தியர்கள் மௌனமாய் இருப்பதின் மர்மம் என்ன? அகிம்சை நாடு என கூறும் நாட்டில் வாழும் உங்கள் மனதில் ஈரம் என்பது இல்லையா? இல்லை தமிழனுக்காக நாம் வருந்தக் கூடாது என்கிற எண்ணமா? இந்தியாவில் தமிழன் தீணடத்காதவனா?

ஆஸ்திரேலியாவில் அடிபட்ட பணக்கார வடஇந்திய மாணவனுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார், கண்ணீர் உவர்க்கிறார் கண்டனம் தெரிவிக்கின்றன இந்திய பத்திரிக்கைகள் ஏழை தமிழன் உயிர் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா….இந்திய மக்களே இந்த தமிழ் சமுதாயம் உங்களிடம் கண்ணீருடன் கேட்கிறோம்

குஜராத் பூகம்பத்தில் அதிக நிதிகொடுத்த மாநிலம் தமிழநாடு. கார்கில் யுத்தத்தில் 
அதிக நிதி கொடுத்த தமிழ்நாடு, கன்னடர், ஆந்திரர் மலையாளி, என வந்தவரை வாழ வைத்த தமிழநாடு இன்று இவனுக்காக ஒரு எதிர்ப்பு குரல் இல்லாமல் போய் விட்டதே மற்ற மாநில மக்கள் மனதில் தமிழனுக்கு தரம் இல்லையா…வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து சுகமாக வாழும் நீங்கள் தமிழனுக்காக ஒரு குரல் கொடுக்க மாட்டீரா பிரதமரின் மனதை அசைத்திட தமிழனின் குரல் போதாது..போதாது ஒட்டு மொத்த இந்தியாவே பொங்கியெழுந்தால்தான் இத்தாலி ராணியின் கைப்பாவை மன்மோகன் சிங்கின் மனதில் துளியாவது ஈரம் சுரக்கும்.

இந்தியாவில் நாங்கள் இருக்கிறோம் என்று உங்களை நாங்கள் நம்ப வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் அங்கு வாழும் எம் சகோதரர்கள் அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடங்களை உருவாக்க நாம் முனைய வேண்டும் தமிழர்களை தவிர இந்தியர்கள் யாரும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது உங்கள் தேவைகளுக்கு என்றால் தமிழன் வேண்டும், ஆட்சி நிலைக்க தமிழன் வேண்டும் அப்படித்தானே…

அவனுடைய துயரங்களில் நீங்கள் எந்த பங்களிப்பும் செய்ய மாட்டீர்கள் பிறகு நாங்கள் எப்படி இந்தியர் என்று எப்படி கூறுவது? உங்கள் கொடியை நாங்கள் எப்படி தேசிய கொடியாக ஏற்றுக்கொள்வது...? எங்கோயோ பிறந்த தாகூரின் தேசியகீதத்தை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிந்தியுங்கள் தோழர்களே! எங்கள் கண்ணீருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

ஒரு இனத்தையே அழிக்க துணைபோன தமிழக அரசியல்வாதிகள் மிச்சமிருக்கும் 
தமிழ்மக்களை தீக்குளித்து காப்பற்ற போகிறார்களா….இல்லை..இல்லை நாங்கள் 
அவர்களை நம்பவில்லை, இந்திய மக்களே உங்களை தமிழர்களாகிய நாங்கள் நம்புகிறோம். உங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பு குரலே அவர்களை காப்பாற்றும் இந்திய சகோதர சகோதரிகளே உங்கள் சகோதரர்கள் நாங்கள் என்றால் எங்கள் ரத்த உறவுகள் உங்களுக்கு உறவுகள் இல்லையா? இலங்கையில் வாழ்வது..தமிழர்கள் என்று நினைக்க வேண்டாம் அவர்களும் மனிதர்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.

ராசபக்‌ஷே உதவமாட்டார் விடுதலைபுலிகளோ உதவும் நிலையில் இல்லை அப்படியே ராஜபக்ஸே பச்சாதாபம் காட்டுவது போலவும் பரிதாபம் கொள்வது போலவும் நடித்து அவர்களை ஏமாற்றி ஆடு மாடுகளைப்போல் அடிமைகளாக்கிவிடலாம் சொந்த மண்ணில் தான் உழுத மண்ணில் தான் வாழ்ந்த பிரதேசத்தில் அடிமைகளாக தமிழ்ச்சமுதாயம் மலர வேண்டுமா நாளை நம் குலப் பெண்கள் ஈழ வீதியிலே மானத்துடன் வாழ முடியுமா…?

ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்த நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா தமிழ்மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கைகுலுக்குவது என்ன நியாயம்? சோனியாவுக்கு இந்திய வரலாறு தெரியாது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரியாதா…..தமிழக பயணத்திலே மேலாடையில்லாமல் திரிந்த தமிழர்களைப் பார்தது கண்ணீர் விட்டாரே மகாத்மா இன்று அமிலங்களை தமிழர்கள் மேல் தெளித்து அவர்தம் தோலையே உரித்த காட்சி பார்த்து உங்களுக்கு கண்களில் கண்ணீர் வரவில்லையா இல்லை உங்கள் மனம்தான் கல்லாகிப்போனதா ஆளும் காங்கிரஸாரே…..!

இந்திய மக்களே! உலக மக்களே! உங்களின் குரல் தமிழர்களின் வாழ்வை காக்க வேண்டும் உண்மைக்கு குரல் தாரீர்! கல் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி அம் மொழி பேசும் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர குரல் தாரீர்! அவர்களின் வாழ்வு சிறக்க குரல் தாரீர்! ராஜபக்ஸேவை போர்க் குற்றவாளி என அறிவிக்க, மத்தியில் ஆளும் அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி குரல் தாரீர்! தாரீர்! தாரீர்!


கண்ணீருடன்....
தமிழக மக்கள் 

புதன், 25 ஜனவரி, 2012

மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்கம்!!!

இன்று திமுக சார்பில் எங்கள் ஊரில் நடந்த மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்க கூட்டத்திற்கு சென்று இருந்தேன். யார் நடந்தினால் என்ன, எதற்கான கூட்டம் என்பது தானே முக்கியம் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு பங்கேற்க சென்றேன், நம் மொழிக்காக இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம் செய்ய.

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி"..."பாம்பும் பல்லியும் படுத்து உறங்கும் பாளையங்கோட்டை சிறையில் வாடிய கலைஞர்" என ஹனீபா சிலாகித்து பாடிக் கொண்டு இருந்தார். மொழிப்போர் தியாகி பற்றியோ, தமிழின பெருமை சொல்லும் பாடலோ இல்லாமல் இது என்ன என்று என் மனதிற்குள் கேள்வி.

6மணிக்கு ஆரம்பம் என அறிவிப்பு செய்து, மணி 7.30ஆகியும் கூட்டமே இல்லையே..நாம் போய் இருக்கையில் அமர்ந்து ஆதரவு கொடுப்போம் என உள்ளே சென்றால் சாராய நெடி.நொறுக்கு தீனி விற்போர் அவசர அவசரமாக கடை விரிக்க ஆரம்பித்தனர்(தமிழின உணர்வு கூட்டம் என்றால்..அரங்கிற்கு வெளியே நூல்கள்,குறுந்தகடுகள் விற்பார்கள். ஆனால் கழக கூட்டங்களில் மட்டும் ஏன் நிலக்கடலையும் காரசாரமான முறுக்கும் விற்கிறார்கள் என அப்போது தான் புரிந்தது)

ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் கூட்டம் 8மணிக்கு ஆரம்பம் ஆனது. கரைவேட்டிகள் மேடை ஏறினர்.

"..வேண்டும் என்றே கைது நடவடிக்கைகள், பொய் "கேசுகள்" என ஜெயலலிதாவின் அட்டூழியம் பெருகிக் கொண்டே போகிறது,விரைவில் திமுக ஆட்சி மலரும்" என மொழிப்போர் தியாகிகள் கூட்டதிற்கு கழக உடன்பிறப்பு ஒன்று வரவேற்புரை நிகழ்த்தியது.

அடுத்து பேசியவர் "நீ ஏன் உன் கட்சி கூட்டத்தில் தலைவரின் தத்துவ பாடலை போடுகிறாய், 17வயசில இளநி விற்ற பாட்டை போடவேண்டியது தானே" என கூட்டத்தின் மையக்கருவிற்கு மக்களை இழுத்துச் சென்றார்.

இனி இங்கிருந்தால் "மொழிப் போர் என்றால் என்ன..அது எந்தெந்த கட்சிகளுக்கு இடையே,எந்த நூற்றாண்டில் யார் தலைமையில் நடந்தது" என்ற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழலாம் என அபாயம் உணர்ந்து கூட்டத்தை விட்டு கூடு நோக்கி பறந்தேன்.


முகநூலில் பின்னூட்டம் இட இதை சொடுக்கவும்:
  1. http://www.facebook.com/pulikkodi/posts/259004227505808
  2. http://www.facebook.com/groups/ulagath.tamilar.ondriyam/290716150984879/



மொழிப்போர் சிந்தனைக்காக,தன் உயிர்நீத்த ஈகிகள் நினைவேந்தளுக்காக கீழே சில கட்டுரைகள்

மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!

1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி மடிந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 25 அன்று 'மொழிப்போர் ஈகியர்' நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியரின் நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தி, தமிழ்மொழி காக்க சூளுரை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாண்டும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.



வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றிய​மையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்!” – காந்தி தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது! அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.
‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌர​விக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா? ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா?
தாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்​கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக! மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

இந்திய குடியரசு நாள் தமிழர்களுக்கு உரித்தானதா?

காவிரி,முல்லைபெரியாறு போன்ற பிரச்சனைகளில் தமிழகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறியும் அதை நடைமுறைப் படுத்த இயலாத இந்திய தேசியத்தால்...


2011-2012 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவுகள் 85685 கோடி ருபாய் இருந்தும் தமிழக திட்டங்களுக்கு நடுவண் அரசின் நிதி ஒதுக்கீடு வெறும் 23535 கோடி மட்டும்.மற்ற மாநிலங்களுக்கு நூறு விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யும்போது,தமிழ்நாட்டிற்கு வெறும் 27% மட்டும் ஒதுக்கீடு செய்து மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடக்கும் தமிழின விரோதி இந்தியாவால்..


580க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுண்டைக்காய் நாடால் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் எதிர்த்து பேச திராணியற்ற, மதுரை உயர்நீதி மன்றத்தில் அது போன்ற நிகழ்வு நடந்ததற்கு ஆதாரமே இல்லை என பதில்மனு தாக்கல் செய்த பயனற்ற இந்திய தேசியத்தால்..

தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் விவசாய நிலங்களை அபகரித்து எழுப்பப்பட்ட நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தனது அண்டை மாநிலத்திற்கு விநியோகித்து தமிழ்நாட்டை இருட்டில் ஆழ்த்தும் ஓரவஞ்சனை செய்யும் இழிந்த இந்தியாவால்...

தமிழ் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்கும் இந்தி வெறிபிடித்த இந்திய தேசத்தால்...

தமிழனுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்காத நிலையில் நான் ஏன் குடியரசு தினத்தை கொண்டாட வேண்டும்?


இப்படிக்கு
சிந்திக்க ஆரம்பித்துள்ள செந்தமிழன் 

உங்கள் எண்ணக் குமுறல்களை முகநூலில் பதியுங்கள்-
http://www.facebook.com/photo.php?fbid=257648320974732&set=a.167620739977491.43547.100001886993662&type=1

(INDIAN REPUBLIC DAY -A MEANINGLESS DAY TO TAMIL PEOPLE)

செவ்வாய், 17 ஜனவரி, 2012

சாந்தவேலுவை கொன்ற மலையாளிகளை திருப்பி அடி



அடங்கி கிடந்தவன் தமிழன் என்ற நிலை மாற 
அடிமை விளங்கை அறுத்தெறி-வீதி தோறும் 
வீறு கொண்டு நீ எழு
வீழ்ந்த இனம் வாழத் தலைப்படு!!!

ஏய் இந்திய இயலாமையே..மன்னிக்கவும் 
இந்திய இறையாண்மையே 
அடித்தவனை திருப்பி அடிப்பது வன்முறை என்றால் 
திருப்பி அடித்தவனை சிறையில் தள்ளும் முன்
ஆரம்பித்து வைத்தவனுக்கும் சிறையில் அறை ஒதுக்கு!!!

அப்பாவி தமிழர்க்குதிரு.சாந்தவேலுவிற்கு இழைக்கப் பட்ட இந்த அநீதியை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் (தினமணி,சத்தியம் தொ.கா.தமிழன் தொ.காவை தவிர) புறக்கணித்துவிட்ட நிலையில் இந்த மலையாள இனவெறியர்களின் படுபாதக கொலையை மக்களிடம் கொண்டு செல்வோம்!!!

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி
மலையாள இனவெறியார்களால் வெந்நீர் ஊற்றி கொல்லப்பட்ட, தமிழக அய்யப்ப பக்தர் சாந்தவேலு அவர்களுக்கு வீரவணக்கங்கள்!

திருவேற்காடில் அமைந்துள்ள தோழரின் வீட்டு எண்: 5, திருவேங்கடம் நகர்(திருவேற்காடு பேருந்து நிலையம் அருகில்)

மலையாள இனவெறிக்கு பலியான தோழருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் அவரது இல்லத்தில் திரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!

சபரிமலை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் ஒருவரை, தேநீர் பாய்லரில் இருந்த கொதி நீரை ஊற்றிக் கொன்றுள்ளனர் மலையாள இனவெறியர்கள்! அவரது உடல் கோட்டயம் மருத்துவமனையிலிருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது! அங்கு தற்போது, பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது...!

கீழ்ப்பாக்கத்தில் பணிபுரியும் மலையாள இன்ஸ்பெக்டர் ஒருவர் இவ்வழக்கை விபத்தாக பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்! சென்னை தமிழ் உணர்வாளர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைய வேண்மென கேட்டுக் கொள்கிறோம்!

தொடர்புக்கு: வழக்கறிஞர் கோகுல் 9444849484,
 9841949462



தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள்


சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது,பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது. கோட்டையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவருடைய மனைவியும் உறவினர்களும் ஆம்புலன்சு வண்டியில் கொண்டுவந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11.1.2012 அன்று சேர்த்துள்ளனர்.

அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை இறந்துவிட்டார். விபத்து என்ற அடிப்படையில் இவருக்குக் கோட்டையத்திலும் சென்னையிலும் சிகிச்சை அளித்துள்ளனர். இனி இதைக் கொலை வழக்காக (302) மாற்றி, வெந்நீர் ஊற்றிய மலையாள நபரையும், அதில் இன்னும் தொடர்புள்ள மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். 

சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்திரன் என்ற மலையாளி குருசாமியாக இருந்து மேற்படி சாந்தவேல் உள்ளிட்ட 80 பேரை சபரி மலைக்கு அழைத்துப்  போயுள்ளார். மேற்படி சந்திரன் உண்மை விவரங்களை முழுமையாகச் சொல்ல மறுத்து வருகிறார். சந்திரனை காவல்துறை விசாரித்து நடந்த உண்மைகளைப் பெற வேண்டும். மேலும் சாந்தவேலுடன் தமிழகத்திலிருந்து சென்ற இதர ஐயப்ப பக்தர்களையும் விசாரிக்க வேண்டும். 

இரு மாநிலங்களைச் சேர்ந்ததாக இவ்வழக்கு இருப்பதால் தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இதில் தலையிட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து, சாந்தவேல் மீது வெந்நீர் ஊற்றி சாவுக்குக் காரணமான காயங்களை உண்டாக்கிய மலையாளத் தேநீர்க் கடைக்காரர்  உள்ளிட்ட நபர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கைது செய்து வழக்கு நடத்த கேரள அரசை வலியுறுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கேரளாவில் அண்மைக் காலமாக ஐயப்ப பக்தர்கள் உள்பட அப்பாவித் தமிழர்கள் பலர் மலையாளிகளால் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது கேரள அரசு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. கேரள அரசின் இவ்வாறான மலையாள இனச் சார்பு நிலை, மலையாளிகள் மேலும் மேலும் தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதைத் தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, சாந்தவேல் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


பம்பையில் சுடுநீர் ஊற்றப்பட்ட ஐயப்ப பக்தர் சாவு




பம்பையில் சுடுநீர் ஊற்றப்பட்டு காயத்துடன் சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் சாந்தவேல் (39). இவருக்கு சித்ரா (30) என்ற மனைவியும், தக்சனா (12), சஞ்சனா (9) ஆகிய மகள்கள் இருக்கின்றனர். பிளம்பராக பணியாற்றிவந்த சாந்தவேல், முதன்முறையாக சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்தார்.
இந்நிலையில் முகப்பேரைச் சேர்ந்த சந்திரகுருசாமி தலைமையில் சாந்தவேல் உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழுவினர் ஜனவரி 6-ம் தேதி சபரிமலை புறப்பட்டனர். ஜனவரி 7-ம் தேதி பம்பையில் உள்ள டீக்கடையில் ஏற்பட்ட தகராறில் சாந்தவேல் மீது டீக்கடைக்காரர்கள் சுடுநீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த சாந்தவேல் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கேரள மாநில போலீஸார் ஜனவரி 8-ம் தேதி சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் ஜனவரி 9-ம் தேதி சித்ரா உள்பட உறவினர்கள் கோட்டயம் சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த சாந்தவேலை அழைத்து வந்த உறவினர்கள் கடந்த 11-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜனவரி 15-ம் தேதி சாந்தவேல் உயிரிழந்தார்.
இதற்கிடையில் சந்திரகுருசாமி தலைமையில் சபரிமலைக்குச் சென்ற மற்றவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர். அவர் சென்ற குழுவில் சாந்தவேல் புது நபர் என்பதால் அந்தக் குழுவில் உள்ள யாரையும் இதற்கு முன்பு தெரியாதாம். இதனால் உடன் வந்த அவரைக் குறித்த தகவல் அறியாமலேயே மற்ற ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பிவிட்டதாகவும் கூறப்
படுகிறது.
இந்நிலையில் சாந்தவேலின் அண்ணன் பொன்வேல் கொடுத்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமியிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து பம்பையில் விசாரணை நடத்தும் வகையில் தேனியில் இருந்து 3 பேர் கொண்ட போலீஸ் குழு அனுப்பப்பட உள்ளதாகவும் மேற்கொண்டு கேரள போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

(SANDHAVELU MURDER,SAANDHAVELU MURUDERED)