Monday, January 30, 2012

கவிதை:ஈழக் குழந்தையின் இறுதி நிமிடம்


தன் இறுதி மூச்சை எண்ணி விடுகிறது
போர் மேகம் காண விரும்பாது கண்ணை
மூடிக்கொள்ளும் பிஞ்சு நெஞ்சு.

ஏ சாவே..சீக்கிரம் அழைத்துக்கொள் இந்த பாவ சிசுவை
மரண வலி
இவனை தின்னும் முன்!!!

உயிர் கூட்ட பார்க்கிறார் ஒருவர்
ஈ கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் இதயத்திற்கு.
அத்துனை பாகமும் செயலிழந்தும்
இதயம் ஏதோ சொல்ல வருகிறது.
வார்த்தை...
வட்டமிடும் கொலைப் பறவையின்
சத்தத்தில் கரைகிறது.

இறுதி நேரத்தில் கூட தன் அன்னை மடி
கிட்டாது போக என்ன பாவம்
செய்தான் இவண்-
தமிழனாக பிறந்ததை தவிர?

குருதி தோய்ந்த கை ஒன்று சேதி சொல்கிறது
தீ நம்மை சேர்க்கப் போகிறது..
மீதி தமிழரை?

ஆடை களைந்த பெண் குழந்தை
வியட்நாம் போரை நிறுத்தினாளாமே...
இந்த அநீதிப் போரால் எங்கள் பலரின்
மூச்சு தான் நின்றது.
அவள் உலகின் தலை சிறந்த புகைப்படம் ஆனாள்..
நாங்கள் முழுநீள திரைப்படம் பல காட்டினோம்;ஓட்டினோம்...
ஆனால்?
ஓயவில்லை எம்மக்கள் ஓலங்கள் இம்மி அளவும்...

அமெரிக்கர்களின் இரக்கமும்! இந்திய மக்களின் நிராகரிப்பும்!

வணக்கம் இந்திய பெருங்குடி மக்களே! மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றியெறிய இந்த சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வந்தது, அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தார்கள் வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள் வியட்நாம் சுதந்திரம் பெற்றது.


ரத்த உறவும் இல்லை தன் நாட்டை சேர்ந்தவர்களும் இல்லை தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள் கொதித்தார்கள் ஆனால் சொந்த நாட்டின் சகோதரர்கள் இலங்கை வீதிகளில் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டு சிறுமிகள் கூட கற்பழிக்கப்பட்டு நடுவீதியில் பிணமாய் தூக்கியெறிந்த புகைப்படம், நகரும் படங்கள் கண்டும் பிற இந்தியர்கள் மௌனமாய் இருப்பதின் மர்மம் என்ன? அகிம்சை நாடு என கூறும் நாட்டில் வாழும் உங்கள் மனதில் ஈரம் என்பது இல்லையா? இல்லை தமிழனுக்காக நாம் வருந்தக் கூடாது என்கிற எண்ணமா? இந்தியாவில் தமிழன் தீணடத்காதவனா?

ஆஸ்திரேலியாவில் அடிபட்ட பணக்கார வடஇந்திய மாணவனுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார், கண்ணீர் உவர்க்கிறார் கண்டனம் தெரிவிக்கின்றன இந்திய பத்திரிக்கைகள் ஏழை தமிழன் உயிர் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா….இந்திய மக்களே இந்த தமிழ் சமுதாயம் உங்களிடம் கண்ணீருடன் கேட்கிறோம்

குஜராத் பூகம்பத்தில் அதிக நிதிகொடுத்த மாநிலம் தமிழநாடு. கார்கில் யுத்தத்தில் 
அதிக நிதி கொடுத்த தமிழ்நாடு, கன்னடர், ஆந்திரர் மலையாளி, என வந்தவரை வாழ வைத்த தமிழநாடு இன்று இவனுக்காக ஒரு எதிர்ப்பு குரல் இல்லாமல் போய் விட்டதே மற்ற மாநில மக்கள் மனதில் தமிழனுக்கு தரம் இல்லையா…வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து சுகமாக வாழும் நீங்கள் தமிழனுக்காக ஒரு குரல் கொடுக்க மாட்டீரா பிரதமரின் மனதை அசைத்திட தமிழனின் குரல் போதாது..போதாது ஒட்டு மொத்த இந்தியாவே பொங்கியெழுந்தால்தான் இத்தாலி ராணியின் கைப்பாவை மன்மோகன் சிங்கின் மனதில் துளியாவது ஈரம் சுரக்கும்.

இந்தியாவில் நாங்கள் இருக்கிறோம் என்று உங்களை நாங்கள் நம்ப வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் அங்கு வாழும் எம் சகோதரர்கள் அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடங்களை உருவாக்க நாம் முனைய வேண்டும் தமிழர்களை தவிர இந்தியர்கள் யாரும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது உங்கள் தேவைகளுக்கு என்றால் தமிழன் வேண்டும், ஆட்சி நிலைக்க தமிழன் வேண்டும் அப்படித்தானே…

அவனுடைய துயரங்களில் நீங்கள் எந்த பங்களிப்பும் செய்ய மாட்டீர்கள் பிறகு நாங்கள் எப்படி இந்தியர் என்று எப்படி கூறுவது? உங்கள் கொடியை நாங்கள் எப்படி தேசிய கொடியாக ஏற்றுக்கொள்வது...? எங்கோயோ பிறந்த தாகூரின் தேசியகீதத்தை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிந்தியுங்கள் தோழர்களே! எங்கள் கண்ணீருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

ஒரு இனத்தையே அழிக்க துணைபோன தமிழக அரசியல்வாதிகள் மிச்சமிருக்கும் 
தமிழ்மக்களை தீக்குளித்து காப்பற்ற போகிறார்களா….இல்லை..இல்லை நாங்கள் 
அவர்களை நம்பவில்லை, இந்திய மக்களே உங்களை தமிழர்களாகிய நாங்கள் நம்புகிறோம். உங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பு குரலே அவர்களை காப்பாற்றும் இந்திய சகோதர சகோதரிகளே உங்கள் சகோதரர்கள் நாங்கள் என்றால் எங்கள் ரத்த உறவுகள் உங்களுக்கு உறவுகள் இல்லையா? இலங்கையில் வாழ்வது..தமிழர்கள் என்று நினைக்க வேண்டாம் அவர்களும் மனிதர்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.

ராசபக்‌ஷே உதவமாட்டார் விடுதலைபுலிகளோ உதவும் நிலையில் இல்லை அப்படியே ராஜபக்ஸே பச்சாதாபம் காட்டுவது போலவும் பரிதாபம் கொள்வது போலவும் நடித்து அவர்களை ஏமாற்றி ஆடு மாடுகளைப்போல் அடிமைகளாக்கிவிடலாம் சொந்த மண்ணில் தான் உழுத மண்ணில் தான் வாழ்ந்த பிரதேசத்தில் அடிமைகளாக தமிழ்ச்சமுதாயம் மலர வேண்டுமா நாளை நம் குலப் பெண்கள் ஈழ வீதியிலே மானத்துடன் வாழ முடியுமா…?

ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்த நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா தமிழ்மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கைகுலுக்குவது என்ன நியாயம்? சோனியாவுக்கு இந்திய வரலாறு தெரியாது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரியாதா…..தமிழக பயணத்திலே மேலாடையில்லாமல் திரிந்த தமிழர்களைப் பார்தது கண்ணீர் விட்டாரே மகாத்மா இன்று அமிலங்களை தமிழர்கள் மேல் தெளித்து அவர்தம் தோலையே உரித்த காட்சி பார்த்து உங்களுக்கு கண்களில் கண்ணீர் வரவில்லையா இல்லை உங்கள் மனம்தான் கல்லாகிப்போனதா ஆளும் காங்கிரஸாரே…..!

இந்திய மக்களே! உலக மக்களே! உங்களின் குரல் தமிழர்களின் வாழ்வை காக்க வேண்டும் உண்மைக்கு குரல் தாரீர்! கல் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி அம் மொழி பேசும் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர குரல் தாரீர்! அவர்களின் வாழ்வு சிறக்க குரல் தாரீர்! ராஜபக்ஸேவை போர்க் குற்றவாளி என அறிவிக்க, மத்தியில் ஆளும் அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி குரல் தாரீர்! தாரீர்! தாரீர்!


கண்ணீருடன்....
தமிழக மக்கள்