சனி, 10 மார்ச், 2012

தமிழின விரோதி-ஈ.வெ.ராமசாமி




தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்


- தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் 
மக்கள் சீறியெழுந்து தெருவுக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டால், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய திசையை சரியாகத் தீர்மானித்துக் கொள்வார்கள். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு!
ஈழத்தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்றழித்த இராசபட்சே கும்பலை இனப் படுகொலைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்று எழுந்த மக்கள் போராட்டம், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடித்த இந்திய அரச்சைத் தடுத்து நிறுத்தி மூன்று தமிழர் உயிர்காக்க மூண்டெழுந்தப் போராட்டம், முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்கக் கிளர்ந்தெழுந்த மக்கள் பேரழுச்சி கேரளத்தில் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கிய மலையாளி களுக்குப் பாடம் புகட்டத் தமிழகத்தில் தந்த பதிலடி போன்றவை அனைத்தும் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்களின் இன உணர்ச்சி அணை உடைத்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்த வெளிப்பாடுகள் ஆகும்.
எதிரி நம்மை இன அடிப்படையில் தாக்கும் போது நாமும் இன அடிப்படையில்தான் எதிரியோடு போராடவேண்டும். இந்த உண்மையை நம் மக்கள் புரிந்து கொண்டு போராடினார்கள். நாற்காலி நாயகர்கள் நடத்தும் தேர்தல் கட்சிகளால் நம் மக்களைப் பிளவுபடுத்த முடியவில்லை. அவர்களின் அறிக்கைகள் அடை யாளப் போராட்டங்கள், மக்கள் எழுச்சியை மடை மாற்றவோ, நீர்த்துப்போகச் செய்யவோ முடியவில்லை.
முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்பது மட்டுமின்றி, மலையாளிகளிடம் நாம் இழந்த தமிழ் மண்ணையும் மீட்க வேண்டும் என்று தமிழ்மக்கள் முழக்கமிட்டனர். முதல் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை மீட்க வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தனர். கூடலூர் லோயர் கேம்ப், கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம்,  எண்பதாயிரம் எனக் குவிந்த மக்கள் ‘எங்கள் சொந்த மண்ணான இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்போம்’ என்று எழுப்பிய முழக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அதிரச் செய்தது. அம்மலைத் தொடர்களுக்கு அப்பால்  இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் ‘இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணை’’ என்று எதிரொலித்துப் பேரணிகள் நடத்தினர்.
ஏற்கெனவே தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழின உணர் வாளர்களும், இன உணர்வு ஏடுகளும் தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இப்பொழுது அது மக்கள் முழக்கமாகியுள்ளது. மூணாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, தேக்கடி, கண்ணகி கோயிலின் ஒரு பகுதி, முல்லைப்பெரியாறு அணை முதலிய அனைத்துத் தமிழ்ப் பகுதிகளும் இடுக்கி மாவட்டத்தில்தான் உள்ளன.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது, இந்தியா தமிழினத்தை வஞ் சித்து விட்டது. மொழிவழி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க அமைத்த ஆணை யத்தில் மலையாளியான கே.மா தவப் பணிக்கரை(சர்தார் கே.எம். பணிக்கர்) ஓர் உறுப்பினராய் பிரதமர் நேரு அமர்த்தியதே தமிழினத்திற்கெதிரான நோக்கம் கொண்டதாகும்.
மூன்று பேர் கொண்ட அவ்வாணையத்தில் இன்னொரு உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ. அதன் தலைவர் பீகாரியான பசல் அலி.
திருவிதாங்கூர்- கொச்சி சமஸ் தானத்தில் மலையாளிகளின் ஆளுகையின்கீழ் நொய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தோவாளை அகத்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு ஆகிய தமிழ்ப்பகுதிகள் சிக்கியிருந்தன. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான இயக்கமும் 1945-இல் திருவி தாங்கூர் சமஸ்தானத் தமிழர் களிடம் வடிவமெடுத்தன.
திருவிதாங்கூர்- கொச்சி மாநில (கேரள)க் காங்கிரசில் பொறுப்பு வகித்த, உறுப்பு வகித்த தமிழர்கள் இன அடிப் படையில் மலையாளிகளின் தலைமையில் இயங்கிய திருவி தாங்கூர்-கொச்சி காங்கிரசி லிருந்து விலகி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நாகர்கோவிலில் திருவி தாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது.
இதன் இலட்சியம்: திருவி தாங்கூர் சமஸ்தானப் பகுதியில் உள்ள தமிழக நிலப்பரப்பைத் தாய்த்தமிழ்நாட்டுடன் இணைப்பது என்பதாகும்.
இதன் நோக்கங்கள்: 1. தமிழ்மொழி வளர்ச்சி, 2. அனைத்திந்தியக் காங்கிரசின் வேலைத்திட்டங்களை ஒட்டி இந்திய விடுதலைக்குப் பாடு படுவது. 3. திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் சிறு பான்மையாக. உள்ள தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பது. இவ்வமைப்பு தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட் டுடன் இணைக்க வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத் தியது.
மொழிவழி மாநில எல்லைகளைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிட்டது. தமிழ்நாடு பற்றி அதன் பரிந்துரை வருமாறு:
சென்னை மாநிலத்தில் உள்ள  மலபார் மாவட்டத் தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை மைசூரோடும் சேர்த்துவிட வேண்டும்.
திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வட்டங்களை (தாலுகாக்களை) சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும் சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிக்க வேண்டும்.
சென்னை நகரம் தமிழ் மாநிலத் திற்கே உரியதாய் அதன் தலை நகரமாய் இருக்க வேண்டும்.
சென்னை மாநில-ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென அமர்த்தப் பட விருக்கும் எல்லை ஆணையம் கிராம அடிப் படையில் திருத்தி அமைப்பதை (பசல் அலி) ஆணையம் ஏற்றுக் கொள்கிறது.
தேவிகுளம், பீரிமேடு, பாலக் காடு, நெய்யாற்றின்கரை, நெடு மங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வில்லை.
இப்படி சேர்க்கப்படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் ஆத்திரப் படவுமில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவுமில்லை. அமைதி நிலவியது.
செங்கோட்டை வட்டம் முழுவதையும் பசல் அலி ஆணையம் தமிழகத்திற்கு வழங்கியிருந்தது. தமிழகத்தின் அசைவற்ற நிலையைப் பார்த்த மலையாளிகள் இந்திய அரசில் செல்வாக்கு செலுத்தி வளமான காட்டுப்பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை வட்டம் கேரளத்திற்கும் செங்கோட்டை நகர் மட்டும் தமிழகத்திற்கு என்றும் மாற்றிவிட்டனர். அதன்பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை.
பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே பெரி யாரிடம் தினத்தந்திச் செய்தி யாளர் இது குறித்து நேர் காணல் நடத்தினார். தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தி யாளர் கேள்வியும் பெரியார் அளித்த விடையும் வருமாறு:
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
பசல் அலி அறிக்கை வெளி யானவுடன் தி.மு.க குறிப்பிடும் படி எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. காமராசரும் காங்கி ரசும் எதிர்ப்புப் காட்டாதது ஒரு செய்தியே அன்று. தெற் கெல்லை மீட்புப் போராட்டம் காமராசரின் விருப்பத்திற் கெதிராகவே கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை காம ராசர் எதிர்த்தே வந்தார்.
"பசல் அலி அறிக்கை தமிழினத்திற்கு அநீதி இழைத்து விட்டது’" என்று உடனடியாக செய்தியாளர்களிடம் கூறினார் ம.பொ.சி. அத்தோடு நில்லாமல் பெரியார், அண்ணா ஆகி யோரையும் மற்ற தலைவர் களையும் தனித்தனியே நேரில் சந்தித்து தேவிகுளம், பீரிமேடு வட்டங்களை மீட்க அனைத் துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைத்தார்.
மா.பொ.சி.யின் முயற்சியால் 27.1.1956 அன்று சென்னை ஏழு கிணறு ஜி. உமாபதி இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முதலில் வர ஒப்புக் கொண்ட பெரியார், கூட்டத் திற்கு வரவில்லை. அண்ணா கலந்து கொண்டார்.
ம.பொ.சி. கூட்டிய அனைத் துக் கட்சிக் கூட்டத்திற்கு வரமுடியாததற்கான காரணங்களைத் தெரிவித்து அடுத்தடுத்து மூன்று அறிக்கை கள் வெளியிட்டார் பெரியார். அவை விடுதலை ஏட்டில் 25.1.1956, 26.1.1956, 27.1.1956 ஆகிய நாள்களிட்டு பெரியார் கையொப்பமிட்ட அறிக்கை களாக வந்தன. அவற்றின் சாரம் இதுதான்:
தேவிகுளம்- பீரிமேடு வட்டங் களை இணைக்கும் ஒற்றை கோரிக்கையாக மட்டும் அனைத்துக் கட்சிப் போராட் டம் நடக்கக் கூடாது.
1) எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு ( தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
2) இந்தி மொழியை யூனிய னுக்கு ஆட்சி மொழி யாகவும், இந்தியாவுக்குத் தேசிய மொழி யாகவும் ஆக்கப்படாமல் தடுப் பது.
3) தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் படிச் செய்தல் (தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்குப் பாத கமில்லாமல் இக்கோரிக்கையை வைக்கிறோம்).
4) தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சென்னை, மதராஸ் என்ற பெயர்களை நீக்கல்.
5) தென்மண்டலம்   (தட்சி ணப்பிரதேசம்) அமைக்க உள்ள தை எதிர்த்தல்.
மேற்கண்ட ஐந்து கூறுகளும் ஒருங்கிணைக்கப்படாததால் ம.பொ.சி. கூட்டிய கூட்டத்திற்கு போகவில்லை என்று பெரியார் கூறுனார். இவை பற்றி ம.பொ.சியிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகவே இத்தனை கோரிக்கைகளையும் பெரியார் இணைத்திருப்பார் என்று நாம் கருதப் பல காரணங்கள் உண்டு.
அனைத்துக் கட்சிப் போ ராட்டம் நடத்த வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டது, இரண்டு காரணங்களுக்காக 1) பசல் அலி குழு தமிழகத்திற்கு இழைத்த அநீதியைப் போக்கி, குறைந்தது தேவிகுளம் பீர்மேட்டையாவது தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே. 2) சென்னை ராஜ்ஜியம் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று பசல் அலி குழு பரிந்துரைத் திருந்தது. அதை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத் தை இராசாசி தவிர மா.பொ.சி. உள்ளிட்ட அனைவரும் எதிர்த் தனர்.
இந்த உடனடிக் கோரிக் கைகளுடன் நீண்டகாலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது என்பவற்றை பெரியார் இணைத்தது சரியா?
எடுத்துக்காட்டாக முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இப்பொழுது கூட்டுப் போராட் டமாகவும் நடக்கிறது. அந்தந்த அமைப்பின் போராட்ட மாகவும் நடக்கிறது. இதற்கான கூட்டுப் போராட்டத்தில் நெய்யாற்றின் கரை, நெடு மங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு, தேவிகுளம், பீரிமேடு ஆகிய அனைத்துப் பகுதி களையும்,  தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கையில் சேர்த்துக் கொண்டால்தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேரும் என்று நிபந்தனை போடலாமா? கூடாது. கூட்டுப் போராட்டத்திற்கான உத்தி அதுவன்று. மேற்கண்ட தமிழ் நிலப்பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பது த.தே. பொ.க. வின் உறுதியான கொள்கை. அதைத் த.தே.பொ.க. வின் தனிப்போராட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அந்த நிலமீட்புக் கோரிக்கைக்கும் கூட்டுப் போராட்டம் நடத்தும் காலம் வரும். ஆனால் இப்பொழுது முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில் முதற்பெரும் கவனம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கூட்டுப் போராட்டம் நடத்த ஒத்து ழைப்பு நல்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க 21.12.2011 அன்று ம.திமு.க. முன்னெடுத்தக் கூட்டுப் போராட்டத்தில் த.தே.பொ.க.வும் பங்கேற்றது.
ம.பொ.சி. தேவிகுளம் பீரி மேட்டை மீட்பதற்கு அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய நிபந்தனை களைப் போட்டார் பெரியார். காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க அவர் இந்த நிபந்தனை களை போட்டாரா? இல்லை..
1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க மேற்கண்ட நிபந்தனைகளைப் போட்டாரா? 1965-இல் மாண வர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை எதிர்த்தாரே பெரியார் ஏன்? காங்கிரசு ஆதரவு நிலை யிலிருந்து கொண்டு தான் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை எதிர்த்தார்.
மாணவர்கள் உள்ளிட்ட தமிழர்களை முந்நூறுக்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி 1965-இல் சுட்டுக் கொன்றது. அப்போதும் காங்கிரசு ஆட்சியைத்தான் பெரியார் ஆதரித்தார். ஆனந்த விகடன் ஏடு அப்போது பெரியாரிடம் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன். அது வருமாறு:
சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்ட மெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?
பெரியார்: அப்படியா? மன்னிக் கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்குறேன். சொல்லுங்கோ?
சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..
பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?                                    
- ஆனந்தவிகடன் 11.4.1965
1965 மொழிப்போர் நடந்து முடியும் தருவாயில் பெரியார் கூறிய கருத்துகள் இவை. அப்போழுது எங்கே போயிற்று அவரது இந்தி ஆதிக்க எதிர்ப்பு? தனித் தமிழ்நாட்டுக் கோரிக் கைக்குப் பாதகமில்லாமல் அவர் ம.பொ.சி.யிடம் கேட்ட மாநில சுயாட்சிக் கோரிக்கை காங்கி ரசை ஆதரித்த போதெல்லாம் எங்கே போயிற்று? இந்தியா ஒன்றாக இருக்க வேண்டு மெனில் இந்தி ஆட்சி மொழி யாக இருப்பதுதான் சனநாயக மென்று 1965-இல் பேசுகிறார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் தேவிகுளம், பீரிமேடு மீட்புப் போராட் டத்திற்கு வருகிறேன் என்று கூறிய பெரியார், பசல் அலி ஆணைய அறிக்கை வந்த போது 10.10.1955 அன்று தேவிகுளம், பீரிமேடு வட்டங்கள் கேரளத் துடன் சேர்க்கப் பட்டது ’’சரிதான்’’ என்று ஆதரித்தார் என்பதை முன்னர் பார்த் தோம்(தினத்தந்தி, 11.10.1954).
ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகள் இணைந்திருந்த சென் னை மாகாணத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்து, தமிழ் நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் 1948-இல் பெரியார் எதிர்த்தார்.
‘சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழி யாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டு வார்களானால், வலியுறுத்து வார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச் சாரத்துக்கும் திராவிட சமுதா யத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடு மென்று எச்சரிக்க விரும்பு கிறேன்" -_ பெரியார், விடுதலை 1. 8. 1948.
மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைவதை-, அதற் காகக் கோரிக்கை வைப்பதை இங்கு எதிர்க்கிறார் பெரியார். மொழிவழி மாநிலம் கோரு வோர் காட்டுமிராண்டிகளின் பிரதிநிதிகள் என்று இராசாசி 1956-இல் பேசினார்.
1948இல் மொழிவழி மாநிலப் பிரிவினையை எதிர்த்த பெரி யார் 1955-இல் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என் கிறார். என்னே தன் முரண்பாடு! அத்தோடு அவர் நிற்கவில்லை. 1948-இல் அவர் போற்றிய திராவிடச் சமுதாயத்தின் திராவிடக் கலச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மலையாளி களை என்ன சாடு சாடுகிறார் பாருங்கள். 1956-இல் அவர் பேசியது:
“ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும் மலையாளக்குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப் பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப் பனனைப் போலவே மலை யாளிகள் மான ஈன மில்லா தவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக் காது. எதற்கெடுத்தாலும் திமி ராகப்பேசவும், பார்ப்பனர் களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும்.’’
_- வேலூரில் பெரியார் உரை 29. 1. 1956 (இதை விடுதலை நாளேடு- 18. 1. 2012இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டுள் ளது)
பெரியார் சொற்களில் சொன்னால் பார்ப்பனர்களைப் போன்ற மலையாளிகளையும் சேர்த்துக்கொண்டது தானே அவர் கூறி வந்த திராவிடம், அவர் உரத்துப்பேசிய திராவிட சமுதாயம் மற்றும் திராவிடக் கலாச்சாரம். சென்னை மாகாணத்திலிருந்து மலபார் மாவட்ட மலையாளிகளை பிரித்து அனுப்பக் கூடாது என்றுதானே மொழிவழித் தமிழக அமைப்பை 1948 -இல் எதிர்த்தார்!
அன்றன்றைக்கு அவர் எடுத்த அரசியல் நிலைபாட்டிற் கேற்ப வெவ்வேறு வரையறுப்புகளைக் கூறிவந்துள்ளார் பெரியார்.
தமிழ்த் தேசிய இனம் குறித்து சமூக அறிவியல் வழிப்பட்ட வரையறுப்பு அவரிடம் இல்லை.
சென்னை மாகாணத்தி லுள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் பிரிந்து போகக் கூடாது என்று 1948-இல் கூறிய பெரியார், இந்த நான்கு மாநிலங்களையும் சேர்த்து நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத்தை அவர் ஆதரித் திருக்க வேண்டும்.
சென்னை மாகாணத்தி லிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகளைப் பிரித்துவிடக் கூடாது என்று பேசிய பெரியார் 1956-இல் அந்த இனங்களோடு தமிழர்களும் சேர்ந்து ஒரே மாநிலமாக இருப்பதை ஏன் எதிர்த்தார்?
அப்படி ஒரு மாநிலம்- அதாவது தட்சிணை பிரதேசம் அமைந்து விட்டால் திராவிடர் கழகம் தமிழர்களிடம் மட்டும் உள்ள சின்னஞ் சிறு அமைப் பாக சிறுத்துப் போயிருக்கும். திராவிடத்தையும் பெரியாரை யும் ஏற்காத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளே தட்சிணப்பிரதேசத்தில் பெரும் பான்மையாக இருந்திருப் பார்கள்.
மொழிவாரி மாநிலத்திற்குக் குரல் கொடுக்காத காமராசர், தெற்கெல்லை வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களை ஆதரிக்காத காமராசர், தட்சி ணப் பிரதேசம் அமைவதை மட்டும் ஏன் எதிர்த்தார்? தட்சிணப்பிரதேசம் அமைந்து விட்டால் அதில் காமராசர் முதலைமைச்சராகத் தொடர முடியாது. பெரும்பான்மை இனமான தெலுங்கர்களே பெரும்பாலும் முதலமைச்சர் ஆவர். அதுமட்டுமல்ல, தங்க ளுக்குள் முரண்பாடுகள் இருந் தாலும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளி களும் தமிழரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவேதான் காமராசர், தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தார்.
எனவே, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்ததில், பெரி யாருக்கும், காமராசருக்கும் அவரவர் எதிர்காலம் சார்ந்த பார்வை இருந்ததே தவிர, தமிழ்த் தேசிய இனம், தனி இனம் என்ற சரியான பார்வை இல்லை.
தி.மு.க. ஏன் தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தது? 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள வேளையில் தட்சி ணப் பிரதேசம் முன் மொழியப் பட்டது. தி.மு.க. கூறிவந்த "திராவிடப் பொன்னாடு’’ தானே தட்சிணப் பிரதேசம்! அதை ஏன் எதிர்க்க வேண்டும்? முதலில் திராவிட இன ஒற்றுமையை உருவாக்கி, அடுத்து திராவிட நாட்டு விடுதலைக்குப் போராடு வதுதானே தி.மு.க.வின் திட்ட மாக இருந்திருக்க வேண்டும். திராவிடர்கள் ஒன்றிணைக் கப்படுவதைக் கண்டு அண்ணா ஏன் அஞ்சினார்? தட்சிணப் பிரதேசத்தில் தி.மு.க. ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது.
1956-இல் தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் பெற்றிருந்த செல்வாக்கும் அவர் களின் கழகங்கள் பெற்றிருந்த வளர்ச்சியும் திராவிடத் தட் சிணப் பிரதேசம் அமைந்தால் சடசடவெனச் சரிந்து சிறுபான் மை ஆகிவிடும் என்பதை உணர்ந்து அவர்கள் அஞ்சி னார்கள்.
ஏமாளித் தமிழர்களிடம், இவர்கள் திராவிட இன உறவுகளை-, திராவிடக் கலாச் சாரத்தைப் பேசினார்கள். இந்திய அரசே திராவிடர்களை ஒரே மாநிலமாக இணைக்கப் போகிறது என்று வந்தவுடன் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள். இதற்குப் பெயர் இனக்கொள்கையா?
இவர்களிடம் தேசிய இனங்கள் குறித்த வரையறுப்பும் தமிழ்த் தேசிய இனம் குறித்த புரிதலும் இல்லை. ஆனால் ‘இன அரசியல்’ நடத்தினார்கள். தமிழர்கள் தங்களின் மரபு இனமாகவும் தேசிய இன மாகவும் விளங்கும் தமிழ் இனத்தை உள்ளது உள்ளபடி உணரவிடாமல் இவர்கள் குழப்பிவிட்டார்கள்! இன்றைக்கும் தி.மு.க.வும் தி.க.வும், மற்ற பெரியாரியல் வாதிகளும் திராவிடத்தைச் சொல்லி தமிழர்களைக் குழப்பு கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி இன் றும் ‘திராவிடம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறார். "இனத்தால் திராவிடன் மொழியால்தான் தமிழன்" என்று கூறிக்கொள்கிறார். இவ்வாண்டு நடந்த பெருங்கேடாக தி.க. தலைவர் கி.வீர மணி, தமிழர் திருநாள் விழாவை "திராவிடர் திருநாள் விழா" என்று பெயர் மாற்றி மூன்று நாள் கொண்டாடினார். திராவிடச் சீர்குலைவு இன்னும் ஓயவில்லை. தமிழர்கள் இன உணர்ச்சி பெற்று எழும் போதெல்லாம் "திராவிடத் தலைவர்கள்" தங்கள் சீர்குலைவு வேலையைத் தொடங்கி விடு கிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணைப் போராட்டத்தில் மக்களின் எழுச்சியைப் பார்த்த கருணாநிதி, அம் மக்களைத் தமது தேர்தல் அரசியலுக்கு ஈர்த்துக் கொள்வதற்காக தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறார். மலை யாள அரசு, தமிழர்களின் பொங்கல் விழாவுக்கு விடுமுறை விடாத நிலையில், தமிழ் நாட்டில் ஐந்து மாவட் டங்களில் மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டு தமிழினத் துரோகம் புரிந்தவர் இதே கருணாநிதி தான். ஆந்திரப் பிரதேச முதல மைச்சர் இராசசேகரரெட்டி விமானவிபத்தில் இறந்ததற்கு தமிழ்நாட்டில் விடுமுறைவிட்டு, தி.மு.க. கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டவர் இதே கருணாநிதிதான். அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். இறந்த போது ஆந்திரம் விடுமுறை விடவில்லை.
1956 பிப்ரவரி 20 -இல் அனைத்துக் கட்சி நடத்திய தமிழகப் பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பில் கலந்து கொண்ட தற்கப்பால் தமிழ்நாட்டில் தேவிகுளம் பீரிமேடு மீட்பிற்காக தனியே ஒரு போராட்டத் தைக்கூட தி.மு.க. நடத்த வில்லை. குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் திரு.தமிழ்நாடு காங்கிரசு நடத்திய போராட் டங்கள் சிலவற்றில் அப்போது கலந்துள்ளனர். கருணாநிதி தமது அறிக்கையில் தமிழக முழுஅடைப்பில் தி.மு.க. கலந்து கொண்டதைக் குறிப்பிட் டுள்ளார். மற்றவையெல்லாம் கழகத்தின் தீர்மானங்களும் அறிக்கைகளும் தாம்!
பெரியார் தி.க. என்ன கூறுகிறது? முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் இந்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டுமே தவிர கேரளத்தையோ மலையாளிகளையோ எதிர்த்துப் போராடக்கூடாது என்கிறது. கேரளம் 'சண்டித்தனம்" செய்கிறதாம்! கேரளத்தில் தமிழர்கள் தாக்கப் பட்ட தெல்லாம் சண்டித்தனம் தானோ?
’’முல்லைப்பெரியாறு அணை மீண்டும் எரியத் தொடங் கியுள்ளது. கேரள அரசின் சண்டித்தனம் தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது.
‘ஒன்றுபட்ட இந்தியா தோல்வி அடைந்து விட்டது. இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தீர்வு கிடைக் காது என்ற நிலையில், தமிழர் களின் பிரதான எதிரியாக நிற்பது பார்ப்பன-பன்னாட்டுச் சுரண்டலுக்காக மட்டும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்திய ஆட்சிதான்’’
_-புரட்சிப் பெரியார் முழக்கம் (பெ.தி.க. ஏடு) 15. 12. 2011
தமிழ்நாட்டு விடுதலையைத் தனது முதன்மை இலட்சிய மாகக் கொண்டுள்ள இயக்கம் போல் காட்டிக்  கொண்டு, கேரளத்திற்கும் மலையாளி களுக்கும் பதிலடி கொடுக்கும் தமிழ் மக்களைத் திசை திருப்பி விட இந்திய அரசை எதிர்த்து போராடுங்கள் என்று மடை மாற்றுகிறது பெ.தி.க.
1956  சனவரியில் ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் போக மறுத்த பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு ஊனம் ஏற்ப டாமல் மாநில சுயாட்சிக் கோரிக்கையை இணைத்துக் கொண்டால், இந்தி எதிர்ப்பை இணைத்துக் கொண்டால் தேவிகுளம் பீரிமேடு போராட் டத்திற்கு வருவேன் என்று காரணம் காட்டித் திசை திருப்பினாரல்லவா! அதே உத்தியைத்தான் இப்பொழுது பெ.தி.க.வும் கையாள்கிறது.
அய்யப்ப கோயிலுக்குப் போன தமிழர்களை மலையா ளிகள் அடித்து விரட்டியதை எளிமைப்படுத்தி மலையாளிகள் மீது தமிழர்களுக்குச் சீற்றம் வராமல் அவர்களுக்குத் தற் காப்புப்பணி புரிகிறது பெ.தி.க.
“சூத்திரத்தமிழர்களை அடித்து விரட்டி விட்டதாலேயே ‘சூத்திர’ மலையாளிகள் அய்யப்பனுக்கு முழு உரிமை கோரவும் முடி யாது. அவர்களால் அய்யப் பனை நெருங்கிவிடவும் முடி யாது. அங்கே நம்பூதிரிப் பார்ப்பான் சூத்திர மலையாளிகளை மட்டுமல்ல பெண்களையும் சேர்த்து கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே விரட்டி அடிக்கிறான்.                   - புரட்சிப்பெரியார் முழக்கம் 15.12.2011
வர்ணாசிரம எதிர்ப்பு, பெண் ணுரிமை என்ற முற்போக்குச் சொல்லாடல்கள் மூலம் மலை யாளிகளைப் பாதுகாக்கும் ‘திராவிட உத்தி’ இது.
பத்துநாள்களாகக் கேரளத்தில் கேள்வி கேட் பாரற்று மலையாள இன வெறி யர்கள் அப்பாவித் தமிழர்களை  அடித்தார்கள். தமிழ்ப் பெண் களைச் சிறைப்படுத்தி மான பங்கப் படுத்தினார்கள். அதன் பிறகே தமிழ்நாட்டில் மலை யாளிகளுக்குப் பதிலடி கொடுத் தோம். தமிழ்நாட்டில் நடந்த பதிலடி என்பது மலையாளி களின் நிறுவனங்களை மூடச் செய்ததாகத்தான் அமைந்தது. இதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை பெரியார் தி.க.வால்! அவர்களின் திராவிட பாசம் தமிழர் களுக்கு எதிராக உள்ளது.     மலையாள இனவெறியர்களைப் பாதுகாக்க முனைகிறது. இதற்காகத் தமிழர்களிடம் சூத்திர பாசத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறது பெ.தி.க.
அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கவில் லையே என்று கவலைப்படும் பெ.தி.க.வுக்கு, தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்கள் மலையாளி களால் கடத்தப்பட்டு மான பங்கப் படுத்தப்பட்டது பெரிதாக உறுத்தவில்லை. திராவிட பாசம் மனச்சசான்றை மரத்துப் போகச் செய்கிறது.
அடிக்கும் மலையாளிகளும் ஆடுகளாம் அவர்களால் அடிக்கப்படும் தமிழர்களும் ஆடுகளாம்! இரு ஆடுகளும் மோதிக் கொண்டால் இந்திய அரசு என்ற நரிதான் இரத்தம் குடிக்குமாம்! திசை திருப்பு கிறது பெ.தி.க.
“ஆனாலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமை யைக் கைகழுவிவிட்டு, தமிழர் -கேரள மோதல்களைக் கூர் தீட்டி விட்டு ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல், "ஒருமைப் பாடு', "தேச பக்தி' பேசிக் கோண்டு உரிமை களைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்”. - -புரட்சிப் பெரியார் முழக்கம், 22. 12. 2011.
இந்திய அரசு ஓர் ஏகாதி பத்திய அரசு. பல்வேறு இனங் களுக்கிடையே எழும் முரண் பாடுகளைத் தீர்க்காமல் மோத விடுவது அதன் பொதுவான உத்திதான். அந்த இந்திய அரசின் உயர் அதிகார மையங் களில் மலையாளிகள் தாம் முகாமையான பொறுப்புகளில் உள்ளார்கள். ஈழத் தமிழர்களை அழிக்கும் போரை இந்தியா மறைமுகமாக நடத்தியதற்கு முகாமைக் காரணிகளாக இருந்தவர்கள் அந்த மலையாளிகள் தாம் என்பது ஊரறிந்த உண்மை. இதே பெ.தி.க.வும் அக்குற்றச்சாட் டைத் தனது ஏட்டில் எழுதி யுள்ளது. தமிழகத் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப்படும் போது மட்டும், மலையாளிகள் அப்பாவி ஆடுகள் என்றும்  அவர்களை ஏவுவது இந்திய அரசுதான் என்று தான் என்றும் கண்டுபிடித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு எங்கிருந்து வந்தது? திராவிட பாசத்தி லிருந்து வந்தது.
இரண்டு ஆடுகளையும் இந்திய அரசு கூர் தீட்டி விட்டது என்றால், தமிழர்களை மலையாளி களுக்கு எதிராக அது கூர் தீட்டிவிட்டதா?
தமிழர்களைப் பார்த்துக் கேட்கிறோம். தமிழர்களே, மலையாளிகளோடு மோதுங்கள் என்று உங்களை இந்திய அரசு கூர்தீட்டி விட்டதா? மலையாளிகளைத் தாக்கும்படி தமிழர்களை இந்திய அரசு தூண்டி  விட்ட தா? இல்லை. தம்மின அப்பாவி மக்கள் மலையாள இனவெ றியர்களால் அன்றாடம் தாக்கப் படுவதைக் கண்டு நெஞ்சு குமுறிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் இன உணர்ச்சி தூண்டியதால் மலையாளி களுக்குப் பதிலடி கொடுத்தார்கள். இந்திய அரசு தமிழர் களைத் தூண்டிவிட்ட தாக ஏன் பெ.தி.க. பிழைபடப் பேச வேண்டும்-? 
தமிழர்கள் தாக்கப்பட் டார்கள். மலையாளிகள் தாக்கி னார்கள். இதை “தமிழர் - கேரள” மோதல் என்று வர்ணிக் கிறது பெ.தி.க. நம்மைச் சொல்லும் போது தமிழர் என்று குறிப்பிடும் அக்கட்சி மலையாளிகளைக் குறிப்பிடும் போது மட்டும் இனப்பெயரைக் குறிப் பிடாமல் ”கேரள” என்று மாநிலப் பெயரைக் குறிப் பிடுகிறது.
“தமிழக-கேரள” மோதல் என்று குறிப்பிட்டிருந்தால் கூட அதுவும் சரியில்லை. தமிழகம் கேரளத்தோடு மோதியதா? இல்லை, கேரளம் தான் தமிழகத் தோடு மோதியது. மோதிக் கொண்டுள்ளது.
இந்திய அரசை உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் தமிழக விடுதலையை தனது முதன்மை இலட்சியமாக அறிக்கை வடிவில் பெ.தி.க. அறிவித்து இயங்க வேண்டும். அதை விடுத்து முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் மலையாள இனவெறி யர்களுக்கு எதிராக ஏற்பட் டுள்ள தமிழர் இன எழுச்சியை மடை மாற்றுவதற்காக இந்திய அரசு எதிர்ப்பினைப் பயன் படுத்தக் கூடாது.
அடிபட்டு, அடிபட்டு, உரிமை இழந்து இழந்து, மலையாள இனவெறியர்களுக்கு எதிராகச் சீறிச் சினந்து எழுந்துள்ள தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் திசை திருப்பும் வகையில்,    ஆடுகளின் மோதல், இரத்தம் குடிக்கும் நரிக்கதை, சூத்திரர், பெண்ணுரிமை சொல்லா டல் போன்றவற்றை பெ.தி.க. பயன் படுத்துவது சரியன்று.
திராவிட இயக்கத்தின் திராவிட இனக்கொள்கை அன்றும் தமிழர் உரிமைகளுக்கு எதிராக இருந்தது இன்றும் எதிராக உள்ளது.
இன எழுச்சி பெற்றுள்ள தமிழர்கள் தமிழ்த்தேசியம் என்ற தமிழினத்திற்குரிய தத்து வப் பதாகையை ஏந்தினால் தான் நம் போராட்டங்களும் எழுச்சிகளும் மீண்டும் விரைய மாகாமல் தமிழின உரிமைகளை மீட்கப் பயன்படும்!
முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்கும் போராட் டத்துடன் முதற் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை இணைக் கவும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒன்று திரள்வோம்! போராடுவோம்! தாக்குபவனைத் திருப்பித் தாக்குவோம்!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

தமிழனுக்கு பாசிச இந்தியா விடுக்கும் சவால்-"அடுத்து என்ன?"


கூடங்குள அணு உலையை எதிர்த்து இது வரை அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது களங்கம் கற்பிக்கும் அராஜக அரசியல்வாதிகளை பார்த்து திருப்பி கேள்வி கேட்டால் "பிரதமரையே விமர்சிப்பதா?" என கேட்கிறது அவரின் கைத்தடி ஒன்று. 

அவரை பார்த்து நாம் கேட்பது "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்று ஒன்று உள்ளதே அது உனக்கு தெரியுமா?அதன் மையக் கருத்து என்ன என்பதாவது உனக்குத் தெரியுமா? அதன் முன் மக்கள் அனைவரும் சமம் என்பது தெரியுமா? மக்களால் மக்களுக்கு சேவை செய்யப்பட்ட பணியாள் தான் உனது முதலாளி என்பது உனக்கு தெரியுமா?

ஏன் இதுவரை உன் எசமானன் பொய்யே சொன்னது இல்லையா? அவர் என்ன அரிச்சந்திரனுக்கு அண்ணாத்தையா? இல்லே,சீசரின் சம்சாரமா?

மக்களின் வரி பணத்தில் ஊதியம் பெரும் காவல் துறையை அடியாளாக அமர்த்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களுக்கு எதிராக வன்முறையை மக்கள் மீது திணிகிறது.இது தான் இன்றைய சனநாயகத்தின் நெறிமுறை.

"கூடங்குளம் அணுஉலையை மூடக்கொரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த தமிழ் அடியார் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். கல்பாக்கத்தில் 2 அணுஉலைகளையும் மூட தமிழ் அடியார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஏற்கனவே தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு உள்ள நிலையில் மனுவை ஏற்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி இக்பால் , நீதிபதி அருணா ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளனர்"
மக்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் அணு உலையை மூட சொல்லி மனு அளித்தால்,ஏதோ இந்த அணு உலை வந்து தான் இருண்ட தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்த போவது போல,மனுவை விசாரிக்காமலே தள்ளுபடி செய்துள்ளனர் நீதி "அரசர்கள்".

இந்த அணு உலை வந்து முழுமையாக இயங்கினால் கூட 450MW கூட கிடைக்குமா என்பதே சந்தேகம். தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை 2500-3000MW.  பாமரனுக்கு தெரிந்த புள்ளி விவரம் கூடவா அவர்களுக்கு தெரியாமல் போனது?

இந்தியனும் சிங்களவனும் இணைந்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர்.இப்போது இந்தியன் ரசியனுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டு தமிழனை உயிரோடு புதைக்க திட்டம் தீட்டுகின்றனர்.




இந்திய ஏகாதிபத்தியம் தமிழனை பார்த்து நக்கலுடன் கேட்கிறது...



செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உருத்திரக்குமாரனுக்கு முன்னாள் பெண் போராளியின் விண்ணப்பம்

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! - ருத்திரகுமாரனிடம் ஒரு முன்னாள் பெண் போராளி உருக்கமான வேண்டுகோள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மாண்புமிகு வி. ருத்திரகுமாரன் அவர்கட்கு!

தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய தகுதியின் உரிமையோடும், இன்றுவரை தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிக்கும் உறுதியுடனும் ஊனமுற்ற நிலையிலும் உறுதியோடும், தமிழீழம் மலரும் என்ற எதிர்பார்ப்போடும் வாழும் பெண் என்ற வகையில் இதனைத் தங்களுக்கு எனது கண்ணீர் கொண்டு வரைகின்றேன்.

ஐயா!

முள்ளிவாய்க்கால் பேரழிவு விடுதலைப் புலிகளது பக்க வேர்களைச் சாய்த்திருந்தாலும், அதன் ஆணி வேர் இப்போதும் உறுதியாகவே இருக்கின்றது. அதை விழுதுகளாகத் தாங்கி நிற்கும் புலம்பெயர் தமிழர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தில் உறுதியாகவே உள்ளார்கள்.புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களின் வீச்சினால் மட்டுமே, நாங்கள் இன்னமும் உயிர் வாழும் அனுமதி பெற்றுள்ளோம்; என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. நாங்கள் மட்டுமல்ல, தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் உயிர்க் குடையாகப் புலம்பெயர் தமிழர்களே காத்து நிற்கின்றார்கள். இல்லையென்றால், முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் நிகழ்த்திய சிங்கள அரசு முற்றாக எங்கள் முகவரிகளைச் சாய்த்தேவிட்டிருக்கும்.

புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் எழுச்சி கொள்ளும்போதே எங்கள் பாதுகாப்பு மட்டுமல்ல, தமிழீழ விடுதலையும் உறுதிபடுகின்றது. அதை முன்கூட்டிய உள்ளுணர்வால் எங்கள் தேசியத் தலைவர் அவர்களும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இறுதிப் போர்க் களத்தில் வீழ்ந்த அத்தனை போராளிகளும், பொதுமக்களும் அந்த எதிர்பார்ப்புடனேயே மண்ணில் சாய்ந்தார்கள். நான்கூட, படுகாயமடைந்த நிலையில், நினைவு தடுமாறிய கணத்திலும் எங்கள் மண்ணினதும், மக்களதும் விடுதலைக்காக நீங்கள் எல்லோரும் போராடுவீர்கள். தமிழீழ விடுதலை என்ற மாவீரர்களது கனவுகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், 'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்' என்ற உச்சரிப்புடன் கண்களை மூடினேன்.

ஆனாலும், எப்படியோ நான் பிழைத்துக்கொண்டேன். அதில் எனக்கு சந்தோசமும் இல்லை, துக்கமும் இல்லை. களத்தில் என்னுடன் இணைந்து போராடிய தோழர்களது கல்லறைகளும் சிதைக்கப்பட்டுள்ள இந்தக் கணம் எனக்கு இயலாமை என்ற பெரும் வேதனையைத் தந்துகொண்டுள்ளது. இருந்தாலும், எனது பணி இன்னமும் இருப்பதனால், நான் உயிரோடு தப்பி இருக்கிறேன் என்ற நம்பிக்கையும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியாக தமிழீழ விடுதலைவரை நான் வாழவேண்டும் என்ற உறுதியும் என்னை வாழவைத்துக்கொண்டுள்ளது.


எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் தாயகத்தின் விடுதலைக்காகக் கழுத்தில் நஞசு மாலையை அணிந்து கொண்டவர்கள். எங்களது வாழ்வும். சாவும் தமிழீழ விடுதலைக்கானது. தற்போதைய கறுப்பு நாட்கள் அதற்கான சிறிய இடைவேளை மட்டுமே. எங்கள் கரிகாலனது வருகைவரை, எங்கள் காத்திருப்பு தவிர்க்க முடியாதது. அது போலவே, தேசியத் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பணியையும் நீங்கள் தவிர்க்க முடியாது. உலக ஒழுங்கு என்ற வரிசைப்படுத்தலில் எங்கள் மக்களது விடுதலை வேள்வியும் சிக்கிச் சீரழிந்து போனாலும், முள்ளிவாய்க்காலின் பின்னரான இன்றைய காலத்தில் உலக நாடுகள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள முனைகின்றன. ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் தங்போது உலக நாடுகளால் உணரப்பட்டு வருகின்றது. இந்த யதார்த்தத்தில் புலம்பெயர் தமிழர்களது பணி அதிகம் தேவைப்படுகின்றது.

எதிரியின் அத்தனை காய் நகர்த்தல்களையும் முறியடித்து, ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரல் புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே முடியக் கூடிய தேசியக் கடமை. அந்தப் போராட்டத்தின் ஒருமுகப்படுத்தலில் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பேணப்படவேண்டும். 'மக்கள் புரட்சி செடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்' என்ற திலீபன் அண்ணாவின் வார்த்தைகள் புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் திரட்டும் என்று இப்போதும் நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுக்காக நீதி தேவதை தன் கதவுகளைத் திறந்து வரும் வேளையில், புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் நிறுத்த வேண்டிய நீங்கள் எப்போதுமே தனிப் பயணம் மேற்கொண்டு வருகின்றீர்களே? அது ஏன் என்பது எனக்கு மட்டுமல்ல, எங்களில் யாருக்கும் புரியவில்லை. புலம்பெயர் தமிழர்களின் போர்க் களம் உங்களால் பிளவு படுவதை எப்படி அனுமதிக்கின்றீர்கள்? மாவீரர் தினத்துடன் உங்கள் போட்டி அரசியலை நிறுத்துவீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அதையும் பொய்யாக்கி, ஜெனிவா போராட்டத்தையும் பிளவு படுத்தி எதிரியின் மனதைக் குளிர வைக்க உங்களால் எப்படி முடிகின்றது?

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! தமிழீழ மக்களுக்கான நீதி திரண்டுவரும் நேரத்தில், புலம்பெயர் மக்களின் எழுச்சியைச் சிதைக்காதீர்கள். மார்ச் ஐந்தாம் நாள் ஜெனிவா ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள நீதி கோரும் எழுச்சி நிகழ்வில் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் பங்காளாகளாகக் கலந்துகொள்ளுங்கள். தமிழீழ விடுதலைப் போர்க்களம் உங்களது அரசியலுக்கான தளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழீழம் மலரும்வரை, அதன் வேருக்கு நீர் பாய்ச்சுங்கள். அதன் பின்னர் உங்கள் அரசியலைத் தொடருங்கள். மக்கள் ஏற்றுக்கொண்டால், தமிழீழத்தின் முதலாவது பிரதமரும் நீங்களே!

'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!'

அன்புடனும், தமிழீழ ஆவலுடனும்
க. தமிழ்விழி

புதன், 1 பிப்ரவரி, 2012

ஜெனீவா நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்!!!

மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது.
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது.
பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது.
கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.
ஞாயிறுக்கிழமை மாலை தமிழ்வர்தக மையமான லாசப்பல் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபயணத்தில் மேற்கொண்டுள்ள விடுதலைச் செயற்ப்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான இலக்கம் : 06 27 13 87 28
1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின்இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.
2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.
3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.
ஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.
நன்றி:மீனகம் 

ஜெனீவா நோக்கிய இந்த பயணத்திற்கு தலைவர்களின் வாழ்த்து செவ்விகள்

ஐ.நா. மன்றம் நோக்கிய நீதிக்கான நடைபயணம் - பெ.மணியரசன் செவ்வி! ஈழத்தமிழர் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ள தோழர்களை வாழ்த்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அளித்துள்ள நேர்காணல்!




திங்கள், 30 ஜனவரி, 2012

கவிதை:ஈழக் குழந்தையின் இறுதி நிமிடம்


தன் இறுதி மூச்சை எண்ணி விடுகிறது
போர் மேகம் காண விரும்பாது கண்ணை
மூடிக்கொள்ளும் பிஞ்சு நெஞ்சு.

ஏ சாவே..சீக்கிரம் அழைத்துக்கொள் இந்த பாவ சிசுவை
மரண வலி
இவனை தின்னும் முன்!!!

உயிர் கூட்ட பார்க்கிறார் ஒருவர்
ஈ கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் இதயத்திற்கு.
அத்துனை பாகமும் செயலிழந்தும்
இதயம் ஏதோ சொல்ல வருகிறது.
வார்த்தை...
வட்டமிடும் கொலைப் பறவையின்
சத்தத்தில் கரைகிறது.

இறுதி நேரத்தில் கூட தன் அன்னை மடி
கிட்டாது போக என்ன பாவம்
செய்தான் இவண்-
தமிழனாக பிறந்ததை தவிர?

குருதி தோய்ந்த கை ஒன்று சேதி சொல்கிறது
தீ நம்மை சேர்க்கப் போகிறது..
மீதி தமிழரை?

ஆடை களைந்த பெண் குழந்தை
வியட்நாம் போரை நிறுத்தினாளாமே...
இந்த அநீதிப் போரால் எங்கள் பலரின்
மூச்சு தான் நின்றது.
அவள் உலகின் தலை சிறந்த புகைப்படம் ஆனாள்..
நாங்கள் முழுநீள திரைப்படம் பல காட்டினோம்;ஓட்டினோம்...
ஆனால்?
ஓயவில்லை எம்மக்கள் ஓலங்கள் இம்மி அளவும்...

அமெரிக்கர்களின் இரக்கமும்! இந்திய மக்களின் நிராகரிப்பும்!

வணக்கம் இந்திய பெருங்குடி மக்களே! மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றியெறிய இந்த சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வந்தது, அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தார்கள் வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள் வியட்நாம் சுதந்திரம் பெற்றது.


ரத்த உறவும் இல்லை தன் நாட்டை சேர்ந்தவர்களும் இல்லை தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள் கொதித்தார்கள் ஆனால் சொந்த நாட்டின் சகோதரர்கள் இலங்கை வீதிகளில் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டு சிறுமிகள் கூட கற்பழிக்கப்பட்டு நடுவீதியில் பிணமாய் தூக்கியெறிந்த புகைப்படம், நகரும் படங்கள் கண்டும் பிற இந்தியர்கள் மௌனமாய் இருப்பதின் மர்மம் என்ன? அகிம்சை நாடு என கூறும் நாட்டில் வாழும் உங்கள் மனதில் ஈரம் என்பது இல்லையா? இல்லை தமிழனுக்காக நாம் வருந்தக் கூடாது என்கிற எண்ணமா? இந்தியாவில் தமிழன் தீணடத்காதவனா?

ஆஸ்திரேலியாவில் அடிபட்ட பணக்கார வடஇந்திய மாணவனுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார், கண்ணீர் உவர்க்கிறார் கண்டனம் தெரிவிக்கின்றன இந்திய பத்திரிக்கைகள் ஏழை தமிழன் உயிர் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா….இந்திய மக்களே இந்த தமிழ் சமுதாயம் உங்களிடம் கண்ணீருடன் கேட்கிறோம்

குஜராத் பூகம்பத்தில் அதிக நிதிகொடுத்த மாநிலம் தமிழநாடு. கார்கில் யுத்தத்தில் 
அதிக நிதி கொடுத்த தமிழ்நாடு, கன்னடர், ஆந்திரர் மலையாளி, என வந்தவரை வாழ வைத்த தமிழநாடு இன்று இவனுக்காக ஒரு எதிர்ப்பு குரல் இல்லாமல் போய் விட்டதே மற்ற மாநில மக்கள் மனதில் தமிழனுக்கு தரம் இல்லையா…வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து சுகமாக வாழும் நீங்கள் தமிழனுக்காக ஒரு குரல் கொடுக்க மாட்டீரா பிரதமரின் மனதை அசைத்திட தமிழனின் குரல் போதாது..போதாது ஒட்டு மொத்த இந்தியாவே பொங்கியெழுந்தால்தான் இத்தாலி ராணியின் கைப்பாவை மன்மோகன் சிங்கின் மனதில் துளியாவது ஈரம் சுரக்கும்.

இந்தியாவில் நாங்கள் இருக்கிறோம் என்று உங்களை நாங்கள் நம்ப வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் அங்கு வாழும் எம் சகோதரர்கள் அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடங்களை உருவாக்க நாம் முனைய வேண்டும் தமிழர்களை தவிர இந்தியர்கள் யாரும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது உங்கள் தேவைகளுக்கு என்றால் தமிழன் வேண்டும், ஆட்சி நிலைக்க தமிழன் வேண்டும் அப்படித்தானே…

அவனுடைய துயரங்களில் நீங்கள் எந்த பங்களிப்பும் செய்ய மாட்டீர்கள் பிறகு நாங்கள் எப்படி இந்தியர் என்று எப்படி கூறுவது? உங்கள் கொடியை நாங்கள் எப்படி தேசிய கொடியாக ஏற்றுக்கொள்வது...? எங்கோயோ பிறந்த தாகூரின் தேசியகீதத்தை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிந்தியுங்கள் தோழர்களே! எங்கள் கண்ணீருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

ஒரு இனத்தையே அழிக்க துணைபோன தமிழக அரசியல்வாதிகள் மிச்சமிருக்கும் 
தமிழ்மக்களை தீக்குளித்து காப்பற்ற போகிறார்களா….இல்லை..இல்லை நாங்கள் 
அவர்களை நம்பவில்லை, இந்திய மக்களே உங்களை தமிழர்களாகிய நாங்கள் நம்புகிறோம். உங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பு குரலே அவர்களை காப்பாற்றும் இந்திய சகோதர சகோதரிகளே உங்கள் சகோதரர்கள் நாங்கள் என்றால் எங்கள் ரத்த உறவுகள் உங்களுக்கு உறவுகள் இல்லையா? இலங்கையில் வாழ்வது..தமிழர்கள் என்று நினைக்க வேண்டாம் அவர்களும் மனிதர்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.

ராசபக்‌ஷே உதவமாட்டார் விடுதலைபுலிகளோ உதவும் நிலையில் இல்லை அப்படியே ராஜபக்ஸே பச்சாதாபம் காட்டுவது போலவும் பரிதாபம் கொள்வது போலவும் நடித்து அவர்களை ஏமாற்றி ஆடு மாடுகளைப்போல் அடிமைகளாக்கிவிடலாம் சொந்த மண்ணில் தான் உழுத மண்ணில் தான் வாழ்ந்த பிரதேசத்தில் அடிமைகளாக தமிழ்ச்சமுதாயம் மலர வேண்டுமா நாளை நம் குலப் பெண்கள் ஈழ வீதியிலே மானத்துடன் வாழ முடியுமா…?

ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்த நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா தமிழ்மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கைகுலுக்குவது என்ன நியாயம்? சோனியாவுக்கு இந்திய வரலாறு தெரியாது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரியாதா…..தமிழக பயணத்திலே மேலாடையில்லாமல் திரிந்த தமிழர்களைப் பார்தது கண்ணீர் விட்டாரே மகாத்மா இன்று அமிலங்களை தமிழர்கள் மேல் தெளித்து அவர்தம் தோலையே உரித்த காட்சி பார்த்து உங்களுக்கு கண்களில் கண்ணீர் வரவில்லையா இல்லை உங்கள் மனம்தான் கல்லாகிப்போனதா ஆளும் காங்கிரஸாரே…..!

இந்திய மக்களே! உலக மக்களே! உங்களின் குரல் தமிழர்களின் வாழ்வை காக்க வேண்டும் உண்மைக்கு குரல் தாரீர்! கல் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி அம் மொழி பேசும் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர குரல் தாரீர்! அவர்களின் வாழ்வு சிறக்க குரல் தாரீர்! ராஜபக்ஸேவை போர்க் குற்றவாளி என அறிவிக்க, மத்தியில் ஆளும் அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி குரல் தாரீர்! தாரீர்! தாரீர்!


கண்ணீருடன்....
தமிழக மக்கள்